COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 4, 2017

தலையங்கம்

ஜெயலலிதா அரசியலின் விளைபொருளே
பன்னீர்செல்வம் - சசிகலா ஆட்சி

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

தமிழ்நாட்டு மக்கள். அவர்களது வாழ்க்கை. அவர்களது வேலை. அவர்களது வருமானம். அவர்களது விவசாயம். அவர்களது வியாபாரம். தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம். தமிழ்நாட்டின் மின்தேவையும், அளிப்பும். தமிழ்நாட்டின் மருத்துவம், கல்வி. தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சாதியாதிக்கம். தமிழ்நாட்டின் மதச் சிறுபான்மையினரும் பெண்களும் அச்சமற்ற சுதந்திரத்துடன் வாழ முடியாத நிலை. தமிழ்நாட்டில் தொடரும் இயற்கை வளக் கொள்ளை. தமிழ்நாட்டில் அணு உலை,
பட்டாசு, கட்டுமானம், கழிவகற்றல் என நீண்டு விரியும் கொலைக் களங்கள். தமிழ்நாட்டின் அரசுத் துறை, காவல்துறை அராஜகங்கள். தமிழ்நாட்டின் தள்ளிப் போன உள்ளாட்சித் தேர்தல். மேலே உள்ள பட்டியலில் உள்ள விசயங்கள், தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரலாகி இருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனை சென்றதில் இருந்து அவரது உடல்நிலை, பின்னர் அவரது மரணம், அடுத்து கட்சி மற்றும் ஆட்சியில் அதிகார மாற்றம், இவற்றோடு கூடவே மருத்துவமனை மர்மங்கள், சதிகள் பற்றிய கதைகள்... இவையே ஊடக கவனத்தைக் கவர்ந்துள்ளன.
ஸ்டாலின் திமுக மீது இன்னமும் தமது கட்டுப்பாட்டை முழுமையாக நிறுவ முடியவில்லை. அறிக்கைகள் விடுவது தாண்டி, சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் எதிர்க்கட்சி யாக, திமுக செயல்படுவதில்லை. வைகோ, தான் அமைப்பாளராக இருந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, தானே முதல் ஆளாக வெளியேறிவிட்டார். அவர் பாஜக பாசத்துடன், அஇஅதிமுக எதிர்ப்பை பிளக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, அவரே, அவரது நடவடிக்கைகளால் வலுச் சேர்க்கிறார். ரூ.1000 ரூ.500 நாணய மதிப்பகற்றியதற்காக, மோடியை வாயாரப் புகழ்கிறார். திருமாவளவன் ஒருபுறம் மோடி கூட்டாளிகளை, இந்துத்துவா ஜோதியில் கரைந்த ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அதாவலே, உதித் ராஜ் என்ற மத்திய அமைச்சர் களைத் தம் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்; மறுபுறம், புதுச்சேரியில், மதச்சார்பின்மை நலன் கருதி, காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமியை ஆதரிக்கிறார். சசிகலாவைச் சந்தித்து அவரது தன்னம்பிக்கையைப் புகழ்கிறார். இககவும் இகக(மா)வும் திருமாவளவனோடு, மக்கள் நலக் கூட்டணி தொடர்வதாக உறுதியாகச் சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் அஇஅதிமுகவின் பொதுக் குழு டிசம்பர் 29 அன்று சென்னையில் நடைபெற்றது.
அதற்கு முன்பான, பரபரப்பான விஷயங்கள் என்றால், அவை சேகர் ரெட்டியின் கைதும், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டிலும் அலுவலகத்திலும் நடந்த சோதனைகளும்தான். பன்னீர்செல்வத்தின் உற்ற நண்பர் (உடன்பிறவா சகோதரரா என நமக்குத் தெரியாது) சேகர் ரெட்டி, பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர். ரூ.34 கோடி மதிப்புடைய புதிய ரூ.2000 நோட்டுகள் உட்பட ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்க நகை ஆபரணங்கள், இவர் வீட்டில் கைப்பற்றப்பட்டன. இவரும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவும் பேசிய அலை பேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், ராம மோகன ராவ் ஜெயலலிதா உடலுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு, சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பது பற்றி ஆலோசனை தந்ததாகவும் சொல்லப்படுகிறது. தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும், மத்திய துணை இராணுவப் பாதுகாப்பில் நடந்த சோதனையைதமிழ்நாட்டின் மக்கள், மத்திய, மாநில அரசு உறவுச் சிக்கலாகக் காணவில்லை; மாறாக, ஓர் ஊழல் அதிகாரி சிக்கினார் எனவே மகிழ்ந்தனர். ஊழல் எந்த அளவுக்குப் புரையோடிப் போயுள்ளது, சூறையாடும் கூட்டம் ஒன்றின் பிடியில் தமிழ்நாடு சிக்கியுள்ளது என்பதற்கான வெளிப்பாடே இந்தச் சோதனை எனப் பார்த்தனர். ஊழல் எதிர்ப்பு - ஊழலுக்கு தண்டனை வழங்கும் லோக் ஆயுக்தா சட்டம் வேண்டாம் என்பதில், மாநில அரசு உரிமைகள் என்ற கோணத்தில், அஇஅதிமுக - திமுக ஒற்றுமை இருந்தது. 2016 மே தேர்தலில், இரண்டு கழகங்களும், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவதாக வாக்குறுதி தந்தன. ஆனால், சட்டமன்றத்தில் அதுபற்றிப் பேசப்படவில்லை. 2017ல், விரைந்து லோக் ஆயுக்தா சட்டம் வேண்டும், அன்புநாதன் -சேகர் ரெட்டி - ராம மோகன ராவ் ஊழல் சங்கிலியில் அவர்களோடு அவர்களது அரசியல் கூட்டாளிகளும் லோக் ஆயுக்தா சட்டம் மூலம் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக எழுந்துள்ளது. குறிப்பாக, ஆற்று மணலில் இருந்து இயற்கை வளங்கள் கொள்ளை வரை விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதா சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை கிஞ்சித்தும் இல்லை. அவரது சிகிச்சை ஏதோ போயஸ் தோட்டத்து விவகாரம் போல், அஇஅதிமுக விவகாரம் போல், சசிகலா சொற்படி நடக்க வேண்டிய விஷயமாகக் கருதப்பட்டது. மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு, தெரிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு கடமை உண்டு என்ற ஜனநாயகக் கோட்பாட்டை அரசுகள் மீறின. நீதிமன்றமும், வழக்கு வந்தும், அப்போது கேள்வி கேட்கவில்லை. அதனால், இப்போது, சதி, புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுப்பது பற்றி எல்லாம் பேசப்படுகிறது. சசிகலா வகையறாக்கள் கையாண்ட ரகசியம், இப்போது அவர்களுக்கு எதிரான கோபமாக, வெறுப்பாக, சாபங்களாக மாறுகிறது. அஇஅதிமுக தொண்டர்களும், இயல்பாக இரக்க குணம் கொண்ட சாமான்ய மக்களும், குறிப்பாக பெண்களும், கொள்ளைக் கூட்டம் ஒன்றின் பிடியில் ஜெயலலிதா சிக்கி இறந்தார், இப்போது அவர்களே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி விட்டார்கள் எனப் பேசுகிறார்கள். இந்தப் பின்னணியில் நடந்த அஇஅதிமுக பொதுக் குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்றத்திலும் அதன் மேலவையிலும், தமிழ்நாட்டு மக்கள் தந்த 50 எம்பிக்களை வைத்திருக்கிற அந்தக் கட்சி, 14 தீர்மானங்களில் ஒரு தீர்மானத்தில் கூட, தமிழ்நாட்டு மக்களைப் பற்றிப் பேசவில்லை. ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா, நோபல் பரிசு, மகசேசே விருது வழங்குவது, ஜெயலலிதா பிறந்த நாள் விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் போன்றவற்றைக் கோரிய அந்தக் கட்சி, சின்னம்மா சசிகலாவை தற்காலிகமாக பொதுச் செயலாளராக நியமித்த அந்தக் கட்சி, வர்தா புயல் பாதிப்புகள் பற்றியோ, நிவாரணங்கள் பற்றியோ, நாளும் சாகும் விவசாயிகள் பற்றியோ, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை பற்றியோ, ரூ.1000 ரூ.500 நாணய மதிப்பு அகற்றுதலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியோ, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நாட்டை ஆளும் கட்சிக்கு, மக்களைப் பற்றிப் பேச ஏதும் இல்லை. மக்களுக்காக நான் மக்களால் நான் என்றவரின் அரசியல் பாரம்பரியம், வழிமரபு, அவர் மரணத்தை அடுத்து நடந்த பொதுக் குழுவில் நன்றாகவே அம்பலமானது. ஜெயலலிதாவின் கட்சிக்கு, ஊழல் ஒடுக்குமுறை கூட்டாளி சசிகலா பொதுச் செயலாளர் ஆவதும், காலில் விழும் பன்னீர்செல்வம் முதல்வராக இருப்பதும் பொருத்தமானதே.
தமிழக அரசின் மீது, அஇஅதிமுக கட்சியின் மீது, பாஜகவும் மத்திய அரசும் செல்வாக்கு செலுத்துவது நாடறிந்த இரகசியம். அன்புநாதன், நத்தம் விசுவநாதன் மீது நடந்த சோதனைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அஇஅதிமுக பிரமுகர்கள் வைத்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துக்கள் ஆகியவற்றால், அஇஅதிமுக, பாஜகவுக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். மற்றபடி, வெங்கைய்யா நாயுடு சொல்வது போல், அந்த இரண்டு கட்சிகளும் ஒத்த இயல்பு கொண்டவை. பாஜகவுக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50 எம்பிக்கள் இருக்கும் ஒரு கட்சி, கைப்பிடிக்குள் இருப்பது, மிக மிக வசதியாகவே உள்ளது.
அஇஅதிமுகவில், எடப்பாடி பழனிச்சாமி எதிர் பன்னீர்செல்வம் முரண் உள்ளது, சசிகலா, எடப்பாடி முதல்வராக விரும்பினார், ஆனால் பாஜக பன்னீர்செல்வத்தைத் திணித்தது, சசிகலாவே பொதுச் செயலாளராகவும் முதல மைச்சராகவும் முயற்சி எனப் பல அரசியல் கிசுகிசுக்கள் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அஇஅதிமுகவினரை, அதிகாரம் என்ற பசை பிணைத்துள்ளது என்பதுதான் அடிப்படையான விஷயமாகும். அவர்கள் பாஜகவைப் பகைத்துக் கொண்டு ஆட்சியை இழக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் திமுகவுக்குப் போய் முக்கியத்துவம் இழக்க  விரும்பமாட்டார்கள். 4ணீ ஆண்டுகள் பதவியில் இருக்கும், சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்கும் அளவுக்கு, அவர்களிடம் எந்தக் கொள்கையும் எந்த தியாக உணர்வும் கிடையாது. உடனடி எதிர்காலத்தில் அஇஅதிமுகவினர் தமக்குள் ஒரு சமரசத்திற்கு வந்து, பாஜகவுக்கு, மத்திய அரசுக்கு இணக்கமான ஓர் ஆட்சி நடத்தவே நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

ஜெயலலிதா மறைந்துவிட்டார். 2016 முடிந்து விட்டது. முடியும்போது, 70 விவசாயிகள் வரை விவசாய நெருக்கடிக்கு பலியாகியுள்ளனர். டிசம்பர் 31 அன்று மோடியின் நாணய மதிப்பகற்றுதலுக்கு எதிராக போராடிய இகக மா மற்றும் அவர்களது இளைஞர், பெண்கள் அமைப்பு தோழர்கள் காவல்துறையினரால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டுள்ளனர். 2017ல், மக்களின் வாழ்வாதார விஷயங்களை, ஜனநாயக கோரிக்கைகளை, மக்கள் போராட்டங்களை இடதுசாரிகள் முன்னுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். மக்களின் நலன்கள் அடிப்படையிலான, இடதுசாரிகளின் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக, 2017அய் மாற்றியாக வேண்டும்

Search