COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 4, 2017

தோழர் பி.வி.சீனிவாசன் நினைவேந்தல் கூட்டம்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

சென்னையில் 21.12.2016 அன்று தோழர் பி.வி.சீனிவாசன் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்திருந்த முன்னணிகள் கலந்துகொண்டனர். இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தோழர் ஸ்வதேஷ், தோழர் கார்த்திக் பால், மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் புவனா, புதுச்சேரியிலிருந்து தோழர் பாலசுப்பிரமணியன், மார்க்சிய - லெனினிய இயக்கத்தின் மூத்த தோழர் கோவை ஈஸ்வரன், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் .எஸ்.குமார் ஆகியோர்
அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ, தோழர் பி.வி.சீனிவாசன், தோழர் இன்குலாப் ஆகியோர் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். கூட்ட அரங்கில் இருந்தவர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
தலைமையுரையாற்றிய இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஆதர்சமாக விளங்குகிற தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ, மக்கள் கவிஞராக விளங்கிய தோழர் இன்குலாப் பற்றி குறிப்பிட்டு பேசினார். தோழர் பி.வி.சீனிவாசன் தனது வாழ்நாளின் இறுதி நேரம் நெருங்கும் வரை தனது வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் தனது லட்சியத்துக்காக செலவழித்ததையும், இணைய தொடர்புகள் மூலம், சமூக, பொருளாதார, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் தோழர்களுடன் பரிமாறிக் கொண்டதையும் விவரித்தார். மோடி அரசின் நாணய மதிப்பகற்றும் நடவடிக்கையால் மக்கள் படும் துன்பங்கள் பற்றி குறிப்பிட்ட அவர் மோடி அரசு கருப்புப் பணம், ஊழல் என்பதிலிருந்து இப்போது ரொக்கமற்ற பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது என்றார். தமிழகத்தில் ஜெயலலிதா மறைவையொட்டி சவால்களும், சந்தர்ப்பங்களும் இடதுசாரிகளுக்கு காத்திருக்கின்றன என்றார். தமிழக அரசியலில் பாஜகவின் பிடி இறுகி வருவதை குறிப்பிட்டுக் காட்டிய அவர், இப்போது தமிழக முதல்வராய் இருக்கிறவர் வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாய் ரூபாய் நோட்டுக்களுடன் மாட்டிய சேகர் ரெட்டியுடன் இணைந்து மொட்டையடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்திருப்பதை சுட்டிக்காட்டினார். இந்தப் பின்னணியில் வலதுசாரிகளோடு நேருக்கு நேர் மோதக் கூடிய சக்தியாக நாம் எழுந்து நிற்பதுதான் மறைந்த தோழர்களுக்கு செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும் என்றார்.
ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவரும், இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் .எஸ்.குமார் சென்னை தொழிலாளர் வர்க்க இயக்கத்துக்கு தோழர் பி.வி.சீனிவாசன் ஆற்றிய பணி மகத்தானது என்று குறிப்பிட்டார். ஹோட்டல் தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்கள், வியட்நாம் போருக்கு எதிராக மேரா நாம், துமாரா நாம், வியட்நாம் என்று தொழிலாளர்கள் முழக்கமிட்டுச் சென்றது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். மக்கள் கவிஞர் தோழர் இன்குலாபின் மனுசங்கடா, கண்மணி ராஜம் போன்ற பாடல்களின் பின்புலத்தை, சிம்சன் போராட்டத்தைத் தொட்டுக் காட்டினார். தோழர் கோவை ஈஸ்வரன் பேசும்போது அன்றைய மார்க்சிய - லெனினிய இயக்கத் தோழர்கள் கடும் ஒடுக்குமுறையிலும் மக்களிடம் பணியாற்றி அவர்களை போராட்டக் களங்களிலும் நிறுத்தியதைக் குறிப்பிட்டார். தோழர் பி.வி.சீனிவாசனுடனான நீண்ட கால தனது உறவை நினûவு கூர்ந்து, சளையா போராளியாக இறுதிவரை தோழர் பி.வி.எஸ். வாழ்ந்தார் என புகழாரம் சூட்டினார்.
இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஸ்வதேஷ், டெல்லி அலுவலகத்துக்கு வரும் அனைவரிடமும் அன்பு பாராட்டும் அரிதான குணம் தோழர் பி.வி.எஸ்க்கு இருந்தது என்றார். அவர் தோழர் பி.வி.எஸ் டெல்லியில் தங்கியிருந்தாலும் தமிழ்நாட்டு அரசியல்பால் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார் என்றார். தோழர் இன்குலாப் போன்ற ஆளுமைகள் இல்லாதது பேரிழப்பு என்று குறிப்பிட்ட தோழர் ஸ்வதேஷ், புரட்சிகர இயக்கத்தில் ஒருவர் சமையல்காரராக இருக்கலாம், ஒருவர் படைத் தளபதியாக இருக்கலாம், ஆனால் அவரவர் அதற்கேற்ப இயக்கத்துக்கு அவர் பங்களிப்பை அளிக்கிறார் என மாவோ குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். போராட்டங்கள் மூலம் தோழர் கணேசனை (பி.வி.எஸ்) உயிர்ப்புடன் வைத்திருப்போம் எனக் கூறினார். இறுதியாக நம்மையெல்லாம் வீதியில் நிற்க வைத்த மோடிக்கு வீதியில் திரண்டு பதிலடி கொடுப்போம் என்றார். இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கார்த்திக் பால் அஞ்சலி உரையாற்றினார்.
தோழர் பி.வி.சீனிவாசனுடன் சேர்ந்து பணியாற்றிய, வேறுவேறு அமைப்புகளில் செயல்படுகிற தோழர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Search