COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 26, 2017

சுயஉதவிக் குழுக்கள் மூலம் தமிழக கிராமப்புற வறிய பெண்கள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
தமிழக அரசின் இலக்கிய விருதுகள் விழா வில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நலம்தானா பாடலைப் பாடி அசத்தினாராம். தமிழ்நாட்டின் கிராமப்புற பெண்கள் மத்தியில் இந்தப் பாடலை அவர் பாடினால் எதிர்மறை பதிலே அவருக்குக் கிடைக்கும். 

ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழக பெண்களின் வாழ்வை சுயஉதவிக் குழுக்கள் மூலம் முன்னேற்றி விட்டதாக பெருமை பேசினார்கள். அந்தப் பெண்கள் தங்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் நிரந்தரக் கடனாளிகளாக தாங்கள் இருப்பதாகவும் 2017 துவக்கத்தில் சொல்கிறார்கள். 
விவசாயிகள் சாவுகளை ஒட்டி தமிழக அமைச்சர்கள் கண்துடைப்பு ஆய்வு நடத்தினார்கள். ஆய்வின்போதே, விவசாயிகள் சாவு களை கொச்சைப்படுத்தினார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத்திலும் வறட்சியே காணக் கிடைக்கிறது. 
மறுபுறம், வறட்சியால் விவசாயிகள் உயிரிழப்பது, விவசாயத் தொழிலாளர்கள் சந்திக்கிற நெருக்கடிகள் ஆகியவை பற்றி தோழர்கள் இளங்கோவன், அரிகிருஷ்ணன், அமிர்தலிங்கம் ஆகியோர் கொண்ட அவிகிதொச குழு ஆய்வு நடத்தியது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றி யத்தில் புளியந்துறை ஊராட்சியில் விவசாயிகளிடமும் விவசாயத் தொழிலாளர்களிடமும் வறட்சியின் பாதிப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, சுயஉதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் நிறுவனங்களில் பெற்ற கடன்களை திருப்ப முடியாமல் அவர்கள் பெரும்துன்பத்தில் இருப்பது தெரிய வந்தது. பொதுவாகவே அந்தக் கடன்களை அடைக்க அவர்கள் மிகவும் சிரமப்படுவது தொடர்கிற நிலையில் மோடியின் பண மதிப்பகற்றும் நடவடிக்கை அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளது என்பதையும் அந்தப் பெண்களும் அங்குள்ள ஆண்களும் சொன்னார்கள்.
இந்தப் பிரச்சனை விவசாயிகள் சாவு போல் பெரிதாக வெடித்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கப் போவதில்லை. அதனால் இது சாதாரணமான பிரச்சனையும் இல்லை. பல்வேறு பிரச்சனைகள் நாளும் மக்கள் வாழ்வை சுழற்றி அடித்துக் கொண்டிருப்பதைப் போல், இந்தப் பிரச்சனையும் கிராமப்புற வறிய மக்களின் வாழ்வை தொடர்ந்து அரித்துக் கொண்டிருக்கும். அவர்கள் வாழ்வில் சற்றும் மகிழ்ச்சியோ, நிம்மதியோ வந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களும் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டத்தானே வேண்டும் என்று நியாயம் பேசுவார்கள். 
புளியந்துறை ஊராட்சியின் வறிய மக்களும் அப்படித்தான் பேசுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் லட்சம் லட்சம் கோடிகள் கடன் வாங் குகிறார்கள், திருப்பித் தருவதில்லை, அந்தக் கடன்கள் வாராக்கடன்கள் என்று ஆகிவிடுகின்றன, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்றெல்லாம் பேசிப் பார்ப்பது, அவர்கள் மத்தியில் எடுபடுவதில் சிரமம் உள்ளது. சாமானிய, வறிய மக்கள் அநியாயத்துக்கு நியாயமானவர்கள் என்பதால் இந்தப் பிரச்சனை அவர்கள் மத்தியில், ஒற்றுமை காக்க வேண்டிய நேரத்தில், பிளவுகளைக் கூட உருவாக்குகிறது. 
புளியந்துறை பெண்கள் தங்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அருகில் உள்ள பல்வேறு நுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து ஆளுக்கு ரூ.25,000 வரை கடன் வாங்கியிருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.4,885 வட்டி செலுத்துகிறார்கள். இந்தக் கடனுக்கு நடைமுறைச் செலவுகளுக்கு ரூ.300ம், காப்பீட்டுக்கு ரூ.700ம் துவக்கத்தில் செலுத்துகிறார்கள். கிட்டத்தட்ட ரூ.6,000 அவர்கள் கைகளை விட்டுப் போய் விடுகிறது. ஆயினும் அவசரத்துக்குக் கிடைக்கிற ரூ.25,000 பெரிதாகத் தெரிவதால் கடன் வாங்குகிறார்கள்.
நுண்கடன் நிறுவனங்கள் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கடன் தருவதில்லை. 50 வயதுக்கும் குறைவானவர்களே, கடன் வாங்குபவர்களுக்கு, அடுத்து பொறுப்பேற்பவர்களாக இருக்க முடியும் என்ற விதியை வைத்துள்ளன. கடன் வாங்கும்போது ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களையும் கடன் வாங்குபவர்கள் கட்டாயமாக வாங்க வேண்டியுள்ளது. இந்தப் பொருட்களை விறகு அடுப்பில் பயன்படுத்த முடியாது. இருப்பினும் அவசரத்துக்கு பணம் கிடைக்கிறதே என்று தங்களுக்கு பயன்படாத பொருட்களை வாங்கி பரண் மேல் போட்டு வைத்துள்ளனர். 
கடனுக்கு காப்பீடு தரும் நிறுவனங்களையும் கடன் தரும் நிறுவனங்களே வேறு பெயர் களில் நடத்துகின்றன. ஓர் ஊராட்சியில் 500 பேர் கடன் வாங்குகிறார்கள் என்று கொண்டால் கூட ஒரு நுண்கடன் நிறுவனம் காப்பீட்டு வகையிலேயே மூன்றரை லட்சம் எடுத்து விடுகிறது. ஓர் ஊராட்சியில் 5 நுண்கடன் நிறுவனங்கள் கடன் தரும் தொழில் செய்கின்றன என்றால் அவற்றுக்கு மட்டுமே மக்கள் ஆண்டுக்கு பதினேழரை லட்சம் ரூபாய் அழுதுவிடுகிறார்கள். அது எள்ளாய் போகும் பணம். கடந்த 10 ஆண்டுகளில், காப்பீடு செலுத்தியவர்களில் ஒரே ஒருவர்தான் இறந்திருக்கிறாராம். அவர் வாங்கிய கடன், வட்டி போக மீதமுள்ள தொகை இறந்தவரின் குடும்பத்துக்கு திருப்பித் தரப்பட்டது. கிராமப்புற வறுமையை காசாக்கி நுண்கடன் நிறுவன கும்பல் கொழுக்கிறது.
மோடியின் மோசடி அறிவிப்பால், வேலை, வருமானம், வாழ்க்கை எல்லாம் தட்டுகெட்டுப் போக, கைமாற்றுக் கடன் கூட வாங்க முடியாத நிலை உருவானது. சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் தந்த நுண்கடன் நிறுவனங்கள் கறாராக கடன் வசூல் செய்ய வந்தன. வீட்டில் கிடந்த பழைய அலுமினியப் பாத்திரங்களை நொறுக்கி விலைக்குப் போட்டு அந்தப் பணத்தில் கடன் திருப்பிய அனுபவத்தைக் கூட, அந்த வறிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்து பெண்கள் சொன்னார்கள். அந்தக் கடனை குறித்த காலத்தில் திருப்பித் தர அவர்கள் எடுக் கிற பல்வேறு முயற்சிகளுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு மட்டுமே. வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் கூட அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் கடனைக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்யும் அளவுக்கு, அந்த நிறுவனங்கள் கடன் வசூலில் கெடுபிடி காட்டுவதாக பகுதியின் ஆண்கள் சிலர் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்கள் மத்தியில் கூட்டங்கள் நடத்திய இகக மாலெ தோழர்கள், நுண்கடன் நிறுவனங்களின் கடன்களை செலுத்த அவர்களிடம் ஆறு மாதங்கள் அவகாசம் கேட்கலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளாமல் கடன் வசூலில் உறுதியாக நின்றால், அவர்களை முற்றுகை யிட்டு நியாயம் கேட்கலாம் என்றும் முன்வைத்தார்கள். பெண்களும் தயாரானார்கள்.
ஜனவரி 12 அன்று கடன் வசூல் செய்ய வருபவர்களிடம் அவகாசம் கேட்பது, அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அவர்களை சிறை பிடிப்பது என்று ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தச் செய்தி கசிந்ததால் ஜனவரி 12 அன்று பலரும் வரவில்லை. செய்தி தெரியாத ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒரு வரை அனுப்பியிருந்தது. அவருடன் ஊடகத் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவிகிதொச மாநிலச் செயலாளர் தோழர் இளங்கோவன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். கடன் வசூல் செய்ய வந்தவர் தனது நிறுவனத்திடம் பேசி விட்டு வருவதாக திரும்பினார். 
ஜனவரி 13 அன்று ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 10 பேர் வந்து கடன் நிலுவை தர நிர்ப்பந்தித்தனர். அன்று இகக மாலெ தோழர்கள் யாரும் அங்கு இல்லை. கடன் செலுத்த வேண்டியவர்கள் அனைவரிடமும் கூட்டாக ஒரே நாளில் கடன் வசூல் செய்யும் நடைமுறை உள்ளதால், மறுநாள் கடன் தந்தாக வேண்டும் என்று ஒரே ஒரு நாள் அவகாசம் மட்டும் தந்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அவிகிதொச தோழர்கள் திட்ட மிட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது எந்த அளவுக்கு அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கையோ அதே அளவுக்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புற வறிய பெண்கள் வாங்கியுள்ள கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதும் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை.
- இளங்கோவன்

Search