COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 26, 2017

அக்கரைச் சீமையில்: 
பின்லாந்து, இங்கிலாந்து, அய்க்கிய அமெரிக்கா
எஸ்.குமாரசாமி
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
பின்லாந்தில் ஒரு புதிய பரிசோதனை
நோக்கியா, பின்லாந்திலிருந்து பிறந்து புறப்பட்ட ஒரு பன்னாட்டு நிறுவனம். தமிழ்நாடு, நோக்கியாவுக்கு நிறைய தந்தது. நோக்கியாவிடம் ஆகக் குறைவாகப் பெற்றுக் கொண்டது. அது ஒரு கசப்பான அனுபவம்.

ஆனால் 55 லட்சம் என்ற மக்கள் தொகை கொண்ட பின்லாந்து, உலகம் போற்றும் பொது கல்வி முறையை, தாய்மொழி கல்வி முறையை, அறிவியல் கல்வி முறையை, மாணவர்களின் அனைத்தும் தழுவிய வளர்ச்சிக்கான கல்வி முறையை, கொண்டுள்ளது. 
அந்த பின்லாந்தின் 55 லட்சம் மக்களில் 8.1%பேர், 2,13,000 பேர் வேலையில்லாமல் உள்ளனர். இப்போது, பின்லாந்து உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை ஊதியம் என்ற ஒரு திட்டத்தை 01.01.2017 முதல், இரண்டு வருடங்களுக்கு, தேர்ந்தெடுக்கப்படும் 2,000 பேருக்கு அறிமுகப்படுத்த உள்ளது. 
வெள்ளுடை, நீலஉடைப் பணியாளர்களுக்கு, மூளை உழைப்பாளிகளுக்கு, உடல் உழைப்பாளிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். இந்தத் திட்டப்படி, வேலை கிடைக்காதவர்களுக்கு, அரசு, மாதம் 560 யூரோ (அல்லது) 587 டாலர், அதாவது ரூ.38,155 அடிப்படை வருமானத்தை உத்தரவாதம் செய்யும். இந்த இரண்டு ஆண்டுகளில், அவர் மேற்கொண்டு படித்தாலோ, வேறு தொழில் திறமைகள் பெற பயிற்சி எடுத்தாலோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் தரும் வேலைகள் செய்தாலோ, அவருக்கு உத்தரவாத அடிப்படை மாத வருமானம் ரூ.38,155 தொடர்ந்து கிடைக்கும். இப்படி உத்தரவாதமான அடிப்படை மாத வருமானம் ரூ.38,155 பெறுபவர், ஆர்வத்துடன் பயனுள்ள விதத்தில் வேறு வேலைகள் தேடிச் செல்வாரா அல்லது சோம்பித் திரிவாரா என பின்லாந்திலும் சிலர் கேள்வி கேட்கிறார்கள். 
இந்த கேள்விக்கான பதிலை, பனி உறைந்து கிடக்கும், ஆர்க்டிக் வட்டத்திற்கு 100 மைல் கீழே உள்ள ஒவ்லு நகரத்தின் 3 மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளிலிருந்து தேடுவோம். 
இந்த நகரம் 2 லட்சம் மக்கள் தொகை கொண்டது. இங்கே வேலையின்மை 16% ஆகும். நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு, அங்கிருந்த 5,000 வேலைகள் 2,500 ஆகக் குறைந்தன. இங்கே பல பொறியாளர்கள் உள்ளனர். இவர்கள் கம்பியில்லா தொலை தொடர்பிலும், கண்டுபிடிப்புகளிலும் வல்லவர்கள். இப்போது பின்லாந்தில் ஒரு நலம்புரி சமூகப் பாதுகாப்பாக வேலை இல்லாக் காலப் படி உள்ளது. இந்தப் படி பெற படிவம் நிரப்பி ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இப்போது அரசு அறிவித்துள்ள உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை வருமானம் ரூ.38,155, வேறு வேலைக்குப் போய்ச் சம்பாதித்தாலும் நிறுத்தப்படாது.
சால்ரோன்டா. 35 வயது. இவர் அஸ்மோ சொலுஷன்ஸ் நிறுவனம் நடத்துபவர். காதில் வளையம் மாட்டி இருப்பார். தலை முடியை குதிரைவால் கொண்டை போட்டு முடிந்திருப் பார். இவரால், 10லிருந்து 20 தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை தர முடியும். பகுதி நேர வேலை செய்பவர்கள் இவருக்கு போதும். மாதம் 2,000 யூரோ அல்லது 2,090 டாலர் சம்பளம் தர முடியும். இதற்கு முன் வேலை இல்லாக் காலப்படி வாங்கியவர்கள், இவர் நிறுவனத்துக்கு வர மாட்டார்கள். இவர் தரும் 2,000 யூரோ அவர்களுக்குக் கட்டுப்படியாகாது. அவர்கள் பெறும் வேலை இல்லா காலப்படியும் பறி போகும். ஆனால் மாதம் ரூ.38,155 உத்தர வாதப்படுத்தப்பட்ட அடிப்படை ஊதியம் பெறும் ஒருவர், அதனை இழக்காமல், இவரிடம் மாதம் 2,090 டாலர் சம்பளம் பெற்று வேலை செய்ய முடியும். இது, இரு தரப்புக்கும் வசதி என்கிறார் சால்ரோன்டா.
அடுத்து 29 வயது நிரம்பிய ஜானா மட்டில்லா என்ற பெண் பற்றிப் பார்ப்போம். இவர் கம்ப்யூட்டிங்கில் மூன்று பட்டங்கள் பெற்றவர். இவர் ஒரு மென்பொருள் ஆர்வலர். வருமானம் ஏதும் தராத மூன்று பயிற்சிகளை இவர் முடித்துள்ளார். இவருக்கு முழுநேர வேலை கிடைக்கவே இல்லை. ஒவ்லு நகர தொழில்நுட்ப அரங்கில், தமக்கென ஒரு இடம் தேடிக் கொள்ள பேரார்வம் கொண்டுள்ளார். இவர், வயது வந்தவர்களுக்கு நீச்சல் கற்றுத் தருவது, ஒரு முடி திருத்தும் நிலையத்துக்கு இணையதளம் அமைத்துத் தருவது, கிடைக்கும் வேலைகளைச் செய்வது என்றே காலம் தள்ளுகிறார். வேலை இல்லா காலத்தில் மாதம் 700 யூரோ அல்லது 732 டாலர் அதாவது ரூ.47,580 வேலை இல்லாக் காலப்படி பெறு கிறார். ஒரு மாதம், ஒரே ஓர் ஆவணம் தாக்கல் செய்யாததால், இவரது வேலை இல்லாக் காலப்படி நிறுத்தப்பட்டது. சாப்பாட்டிற்காக ஆண் நண்பரிடம் மாதாமாதம் ஏதாவது பணம் கொடு எனக் கேட்பது, வெறுப்படைய வைப்பதாக சலித்துக் கொள்கிறார். இவருக்கு, உத்தரவாதப்படுத்தப்பட்ட மாத வருமானம் ரூ.38,155 கிடைத்தால், எந்தக் கவலையும் இன்றி, கூடுதலாக, அஸ்மோ சொலுஷன்ஸ் போன்றவர்கள் தரும் மாதம் 2,090 டாலர் (ரூ.1,35,850) வேலையும் பார்க்க முடியும்.
அடுத்தவர் 36 வயது நிரம்பிய எலக்ட்ரிஷியனான திரு.வில்ஜாலா. இவர் மைனஸ் 35 டிகிரி உறை பனியிலும் கட்டுமான வேலைகள் செய்வார். இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கை நெடுக பச்சை குத்தியுள்ளார். எவரும் விரும்பாத, எந்த அசிங்கம் பிடித்த வேலையையும் தாம் முன் வந்து செய்ததாகச் சொல்கிறார். 3,450 டாலர் (ரூ.2,24,250) மாத வருமானம் வரை சம்பாதித்த இவர், வேலை இழந்து, வேலை இல்லா காலப் படி 680 டாலர் (ரூ.44,200) பெற்று வந்தார். இவருடைய கார் பழுது பார்க்கப்பட வேண்டி உள்ளது. இவர் வீட்டு வாடகை கட்டாமல் பாக்கி வைத்திருக்கிறார். உடல் வலு உள்ள, வேலை பார்க்கும் திறனும் நிர்ப்பந்தமும் உள்ள இவர், குடும்ப நலன் கருதி, வேலை இல்லா காலப்படியை இழக்க விரும்பவில்லை. மகள்களுக்கு சமைத்துப் போட்டு, துணி துவைத்துக் கொண்டு, வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். உத்தரவாதப்படுத்தப்பட்ட மாத வருமானம் கிடைக்கும் 2,000 பேரில் தாமும் ஒருவரானால், திரு.வில்ஜாலா, நிம்மதியாய் வேறு ஒரு வேலையும் தேடிக் கொள்வார்.
பின்லாந்தின் காகித தயாரிப்பு தொழிலும், டேப்லட், ஸ்மார்ட் போன் வருகையால் முடங்கிவிட்டது. தானியங்கி முறையும், இயந்திர மனிதர்களும் களத்திற்கு வந்து விட்டனர். இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக் கழக அரசியல் பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஸ்கிடல்ஸ்கி, மேற்கத்திய உலகில், அடுத்த 20 வருடங்களில், தானியங்கி முறையால், மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி வேலைகள் போய்விடும் என்கிறார். 
1797ல் உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான தாமஸ் பெய்ன், விவசாய நீதி என்ற தம் பிரசுரத்தில் எழுதுகிறார்: ‘நில உடைமையாளர்களிடம் இருந்து நில வரி வசூலித்து ஒரு தேசிய நிதி உருவாக்க வேண்டும். அந்த நிதியிலிருந்து, ஒருவர் 21 வயது அடையும்போது, உலகில் தம் வாழ்வைத் துவக்க அவருக்கு 15 பவுண்ட் மானியம் தர வேண்டும், அதேபோல் ஒருவர் வயதான காலத்தில் அவதிக்கும் சிறுமைக்கும் ஆளாவதைத் தவிர்க்கவும், ஒருவரது மரண நேரம் கவுரவத்துடன் இருக்கவும், அவர் 50 வயது அடையும் போது 10 பவுண்ட் உதவித் தொகை தரப்பட வேண்டும்’. (அந்த கால 10 பவுண்ட், 15 பவுண்ட் 2017ல் ரூபாய் கணக்கில் நிச்சயம் ஒரு நல்ல தொகையாய் இருக்க வேண்டும்). டாலியா ஆய்வு மய்யம், 28 அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தியது. அதன்படி, இத்தகைய உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை வருமானத்தை, ஒரு வேளை ஆதரித்தாலும் ஆதரிப்பேன், நிச்சயம் ஆதரிப்பேன் என 68% பேர் சொல்லியுள்ளனர். 
ஏகாதிபத்திய சகாப்தத்தில், முதலாளித்துவம் ஒட்டுண்ணி முதலாளித்துவம் ஆகி வருகிறது. 19ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் ஏகாதிபத்தியம் துவங்கிய போதே, முதலாளிகளுக்கும் உற்பத்திக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லாமல் போனது. இப்போதும், லெனினால் கூப்பன் கிழிப்பவர்கள் என அழைக்கப்பட்ட ஒட்டுண்ணி முதலாளிகள், எந்த வேலையும் செய்யாமல் ஏராளமாய்ச் சம்பாதிக்கிறார்கள். அய்க்கிய அமெரிக்காவில் உருவாகும் வருமானத்தில், பத்து டாலரில் ஒரு டாலர், எந்த உழைப்பிலும் ஈடுபடாத, பணக்காரர்களின் 1% பேருக்கே செல்கிறது. அப்படி இருக்க, உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை வருமானம் என்ற கோரிக்கை நியாயமானது தானே? 
இந்த நடவடிக்கை, ஒரு சோசலிச நடவடிக்கை அல்ல. வேலை இன்மை பற்றிய அச்சம், இந்த நடவடிக்கைக்கு இட்டுவந்துள்ளது. உழைக்கும் மக்களை கவிதை எழுத வைக்க, பின்லாந்து இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. கூடுதல் வேலைகளை உருவாக்கவும், கூடுதல் மனிதர்களை வேலைகளில் ஈடுபடுத்தவும், முதலாளித்துவத்திற்கு ஒரு புத்துணர்வு தரவுமே பின்லாந்து, உத்தரவாதப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச வருமானத்தை, சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி உள்ளது. 
நிச்சயம், இந்த நடவடிக்கை, செல்வமும் வருமானமும் சிலரிடம் மலைபோல் குவிவதில் ஒரு சிறு மாற்றம் நோக்கிய நடவடிக்கையே. 

இங்கிலாந்து நாட்டு தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் என்ன சொல்கிறார்?
ஜெர்மி கோர்பின், அய்க்கிய ராஜ்ஜிய பணக்காரர்களால் வெறுக்கப்படுபவர். அவரது சொந்த தொழிலாளர் கட்சி எம்பிக்களால் எதிர்க்கப்படுபவர். ஆனால், மக்களாலும் தொழிலாளர்களாலும் ஆதரிக்கப்படுபவர். அதனால்தான், இரண்டாம் முறையாக தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் போரை எதிர்ப்பவர். இவர் நவதாராளவாதத்தை எதிர்ப்பவர். தனித்த பண்புகளுடைய, மிகவும் மாறுபட்ட அய்ரோப்பிய அரசியல்வாதி. 
அய்ரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பிரிட்டனின் எதிர்காலம் பற்றி பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனிடம் (பிபிசி), கோர்பின் பேசினார்: ‘நாம் மேலும் மேலும் மோசமான சமத்துவமற்ற நிலைமை களை உருவாக்கிக் கொண்டே போக முடியாது. அதிகபட்ச வருமான வரம்பு ஒன்று வைப்பதுதான் நியாயமாக இருக்கும்’. 
அடுத்து ஸ்கை நியூஸ், நேர்காணலில், அதிகபட்ச வருமான வரம்பு எங்கு இருக்க வேண்டும் எனக் கேட்டது. அவர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தமக்குத் தரப்படும் 1,32,000 பவுண்ட் (ரூ.10,95,600) என்ற ஆண்டு வருமானத்தை விட, அது சற்று கூடுதலாக இருக்கும் என்றார். மேலும் கேட்டதற்கு, ஆண்டு வருமானம் 50 மில்லியன் பவுண்ட் எனச் சிலருக்கு இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது எனக் கேட்டார். 
அக்டோபர் 2016ல் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட கணக்குபடி, நாட்டின் குறைந்தபட்ச சம்பள அளவு பொதுவாக எங்கும் உயர்த்தப்பட்டதால், வருமான படிநிலை வரிசையில் மேலே உள்ள 10% பேருக்கும் கீழே உள்ள 10% பேருக்கும் இடையிலான சம்பள வேறுபாடு குறைந்திருந்தது. ஆனால் உயர் சம்பளங் கள் பற்றிய ஓர் ஆய்வின்படி, நாட்டின் சில தலைமை நிர்வாக அலுவலர்கள் 2017ன் முதல் 2ணீ நாட்களில் சம்பாதித்த வருமானத்தை, நாட்டின் சராசரி தொழிலாளர்கள் ஒரு வருடத்தில் சம்பாதிக்கின்றனர். அதாவது சராசரி தொழிலாளியைவிட, தலைமை நிர்வாக அலுவலர்கள் 146 மடங்கு கூடுதலாய்ச் சம்பாதிக்கிறார்கள். 
இந்த 146 மடங்கை, வெகுவாகக் குறைக்கச் சொல்கிறார், ஜெரிமி கோர்பின். கோர்பினின் கோரிக்கை, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எழுப்பப்பட வேண்டியதே. 
2016ல் டெக் மஹிந்திரா தலைமை அலுவலர் சி.பி.குர்னானி, ரூ.165.6 கோடி சம்பாதித்தார். சன் தொலைக்காட்சியின் செயல் தலைவரான கலாநிதி மாறன் சம்பளம் ரூ.13.14 கோடி, போனஸ் ரூ.58.33 கோடி என மொத்தம் 2015 - 2016ஆம் ஆண்டு ரூ.71.47 கோடி சம்பாதித்தார். செயல் இயக்குநரான காவேரி கலாநிதியும் அதே போல் ரூ.71.47 கோடி சம்பாதித்தார். (இது போக இருவரும் தலா ரூ.458.12 கோடி டிவிடன்ட் ஈவுத் தொகை பெற்றனர்). 2017ல் தமிழக அரசு பெரும்பாலான தொழில்களுக்கு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச சராசரி மாத சம்பளம் ரூ.8,000 இருக்கும். கலாநிதியும் காவேரியும் தமிழ்நாட்டு மக்கள் சற்று சுமாராகப் பெறும் சம்பளத்தை விட 477 மடங்கு கூடுதலாய்ச் சம்பாதிக்கிறார்கள். (ஈவுத் தொகை, கணக்கில் எடுக்கப்படவில்லை). கலாநிதியும் காவேரியும் அல்லது அவர்களைப் போன் றவர்கள், அப்படி என்ன கூடுதலான மூளை உழைப்பு, உடல் உழைப்பு தந்திருப்பார்கள்? நிச்சயமாக, அவர்கள் உடல் உழைப்பு தந்திருக்க முடியாது. அவர்களது மூளை, செயற்கை அறிவைக் காட்டிலும், கணினிகளைக் காட்டிலும் மேலாக வேலை செய்தது என வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும், சாதாரணத் தொழிலாளர்களை விட 477 மடங்கு கூடுதலாக அவர்கள் சம்பளம் இருக்க என்ன நியாயம் உள்ளது?
‘பலர் வாடிட சிலர் வாழ்ந்திடும் கொடுமையைத் தகர்ப்போம்’ என கருணாநிதி உருவாக்கிய முழக்கம், மாறன் குடும்பத்திற்குப் பொருந்துமா? குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.20,000 என்ற கோரிக்கையோடு, ஒரு நிறுவனத்தின் உயரதிகாரிக்கும் கடைசி படியில் இருக் கும் தொழிலாளிக்கும் இடையிலான சம்பள உச்சவரம்பு வேறுபாடு 25 மடங்கு தாண்டக் கூடாது என்ற கோரிக்கையும் எழுப்பப்பட வேண்டும்.
அய்க்கிய அமெரிக்காவில் துவங்க உள்ள டிரம்ப் ராஜ்ஜியம்
மறக்கப்பட்ட அமெரிக்கர்களுக்காக தமது ஆட்சி அமையும் என்றார் டொனால்ட் டிரம்ப். கொழுத்த நிதி பிரபுக்களுக்கு எதிராக, வால் ஸ்ட்ரீட் பண மூட்டைகளுக்கு எதிராக, தமது அரசு செயல்படும் என்றார் டொனால்ட் டிரம்ப். அய்க்கிய அமெரிக்காவை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும், அதாவது உரியவர்கள், உரியவர்கள் அல்லாதவர்களிடம் இருந்து, திரும்பப் பெற வேண்டும், திரும்பப் பெற்று, மீண்டும் அய்க்கிய அமெரிக்காவை மகத்தானதாக்க வேண்டும் என்றும் முழங்கினார் டிரம்ப். அவரது அரசாங்கம், புனைகதைகள் அடிப்படையில் நிறுவப்பட்ட அரசாங்கம். வாய்வீச்சும் நாடகங்களும் நிறைந்ததாகவே அது இருக்கும். கொஞ்சம் உண்மை, நிறைய பொய்கள் கொண்டதாக இருக்கும். 
அவர் முன்வைத்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் ‘பாதிக்கப்பட்ட’ ‘மறக்கப்பட்ட’ ஓர் அய்க்கிய அமெரிக்கர் கூட இல்லை. முதல் தலைமுறை பணக்காரர்கள் கூட இல்லை. பரம்பரைப் பணக்காரர்கள் நிறைந்துள்ளனர். பில்லியனர்கள், அதாவது ரூ.6,500 கோடிக்கும் மேல் செல்வம் உள்ளவர்கள் நிறைந்துள்ளனர். அவரது அமைச்சரவையில் ஒரு பாதியினரின் சொத்து மதிப்பு 14.5 பில்லியன் டாலர். (ரூ.94,250 கோடி). இது ஜார்ஜ் புஷ்ஷின் மொத்த அமைச்சரவையின் சொத்துக்களை விட 30 மடங்கு அதிகமானதாகும். வெள்ளையின தொழிலாளர்களின் சம்பளம் திருடப்படுகிறது, சில பத்தாண்டுகளாக உண்மைச் சம்பளம் உயரவே இல்லை, குடியரசு கட்சியையே தொழிலாளர் கட்சியாக மாற்றி விடுவேன் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப், ஒரு பெரும் பணக்கார அமைச்சரவையை, புளுட்டோகிரசியை உருவாக்கி உள்ளார். பணக்காரர்களுக்காக, பணக்காரர்களின் ஆட்சியை பணக்காரர்களே நடத்த உள்ளனர். 
இந்த உண்மையை, பின்வரும் யதார்த்த விவரங்களில் இருந்து நிறுவலாம்.
 இந்த பூமியின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான எக்சான் மொபில் தலைவர் ரெக்ஸ் டில்லர்சன்தான் டிரம்பின் அயல் விவகாரத்துறை அமைச்சர். 
 2.9 பில்லியன் டாலர் (ரூ.18,850 கோடி) சொத்து மதிப்புடைய ‘திவால் ராஜா’ வில்பர் ராஸ், வர்த்தக அமைச்சராக உள்ளார். இந்த திவால் ராஜாவுக்கு உதவும் துணை அமைச்ச ராக, 5.3 பில்லியன் டாலர் (ரூ.34,450 கோடி) சொத்து மதிப்புடைய தள்ளுபடி புரோக்கரேஜ் நிறுவன வாரிசு டாட் ரிக்கர்ட்ஸ் இருக்கப் போகிறார்.
 கருவூல அமைச்சராக, கோல்ட் மேன் சாக்ஸ் என்ற வால்ஸ்ட்ரீட் நிறுவனத்தில் பணியாற்றிய 46 மில்லியன் டாலர் (ரூ.3,000 கோடி) சொத்துடைய ஸ்டீவன் முனுக்கின் இருப்பார்.
 ஜேபி மோர்கன் சேஸ், பிளாக் ராக், டிஸ்னி, வால் மார்ட், அய்பிஎம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர்களைக் கொண்ட குழுவை ஸ்குவார்ஸ்மேன் என்பவர் கூடுதலாக, வழி நடத்துகிறார். அவரது சொத்து மதிப்பு 9.9 பில்லியன் டாலர் (ரூ.64,350 கோடி). இவருக்கு, அமைச்சரவைக்கு அழைக்கப்படும் எதிர்பார்ப்பு உள்ளது. இவரும், இவரது குழுவும், கட்டற்ற சந்தை ராஜ்ஜியம், வரியில்லா ராஜ்ஜியம் வேண்டும் என்பவர்கள். இவர்களது வருகையை எதிர்பார்த்து, அய்க்கிய அமெரிக்க பங்குச் சந்தை காளைப் பாய்ச்சலில் மேலே செல்கிறது. 
 மனித வளங்கள் தொடர்பான துறை களிலும், சாமான்ய மக்கள் தொடர்பான கூருணர்வு இல்லாதவர்கள், பகை உணர்வு உள்ளவர்களே அமைச்சர்களாக வாய்ப்புண்டு. 5.1 பில்லியன் டாலர் (ரூ.33,150 கோடி) சொத்து மதிப்புடைய ஆம்வே நிறுவன வாரிசு பெட்சி டிவோஸ் கல்வி அமைச்சராக வாய்ப்பு உண்டு. இவர் பொது கல்வி முறை வேண்டாம், கல்வியில் தனியார் முயற்சியே அதிகம் தேவை எனக் கருதுபவர்.
 26 மில்லியன் டாலர் (ரூ.1,690 கோடி) சொத்து மதிப்புடைய, ஆப்பிரிக்க அமெரிக்கரான பென் கார்சன், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக வாய்ப்புள்ளது. இவர் வீட்டுவசதி உள்ளிட்ட சமூக நலம்புரி நடவடிக்கைகள், வறியவர்களின் சுயசார்பைப் பாதிக்கும், அரசு நலப் பயன்களை வெட்டிச் சுருக்க வேண்டும் எனக் கருதுபவர்.
இவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான், டிரம்ப், தான் ஆண்டு சம்பளம் 4 லட்சம் டாலர் பெறப் போவதில்லை, ஒரு டாலர் சம்பளம் மட்டுமே வாங்குவேன் எனச் சொல்கிறார். அதிபர் - தொழிலதிபர் என்ற நலன்களின் மோதல்/முரண் தவிர்க்க, தமது சொத்துக்களை அறக்கட்டளையில் வைக்கப் போவதாக சொல்கிறார். 
டிரம்ப் அமைச்சரவையின் மறுபக்கமும் அச்சுறுத்துகிறது. முக்கியப் பதவிகளில், இராணுவ தளபதிகள் வர உள்ளனர். சுலபமாக, இராணுவ - தொழில் அச்சு பலப்பட்டுள்ளது என எவராலும் சொல்ல முடியும் நிலை வந்துள்ளது. களத்தில் கால் பதியாமல், கட்டுப்பாட்டு அறையில் இருந்து போர்களை வழிநடத்திய ‘மாவீர தளபதிகள்’ அமைச்சர்கள் ஆகிறார்கள். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பிளின் நியமிக்கப்பட உள்ளார். அதிரடி கடற்படைத் தளபதி ஜான் கெல்லி உள்நாட்டு பாதுகாப்புக்கு பொறுப்பெடுக்க உள்ளார். அதிரடி கடற்படை (மரைன்ஸ்) தளபதி ஜேம்ஸ் ‘மேட் டாக்’ மேட்டிஸ் ராணு வத்திற்கு பொறுப்பேற்க உள்ளார். சிஅய்ஏ தலைவராக, மைக் பாம்போ பொறுப்பேற்க உள்ளார். இன்னும் சில தளபதிகள் பதவியேற்க வாய்ப்பு உண்டு. உலகில் சாவு வியாபாரிகள் விசுவரூபம் எடுப்பார்கள். உள்நாட்டில், தேசபக்த போர் வெறி கூப்பாடு அதிகரிக்கும். துப்பாக்கித் தோட்டாச் சத்தம், குண்டு வெடிச் சத்தம் உலகெங்கும் ஓயாமல் கேட்கும். 
மொத்தத்தில் டிரம்ப் அமைச்சரவை, இராணுவ தளபதிகளின், நிதி மூலதன உலகின் தளபதிகளின் நேரடிப் பங்களிப்புள்ள அமைச்சரவையாக விளங்கும். அய்க்கிய அமெரிக்காவில் முக்கிய அமைச்சரவைப் பொறுப்புக்கள் செனட்டால் உறுதி செய்யப்படும். டிரம்ப் தமது அமைச்சரவை கூட்டாளிகள் மூலம், அவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் அதிகாரம் உண்டு என்று காட்ட முயற்சி செய்கிறார். நடைமுறைக்கு ஒத்து வராத தமது தேர்தல் உரை வீச்சுக்களில் இருந்து பின்வாங்க, தமது அமைச்சர்கள் சுதந்திரமாக முடிவு எடுப்பதாகச் சொல்லி தப்பிக்க முயற்சிக்கிறார். 
டிரம்ப், ஈரானுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்கினார். ஆனால் இராணுவ அமைச்சர் மேட்டிஸ், அய்க்கிய அமெரிக்கா தனது வாக்குறுதிகள் படி நடக்கும், கூட்டாளிகளோடு சேர்ந்து நிற்கும் என்றார். டிரம்ப் மிகவும் கடுமையான கொடூரமான சித்திரவதை விசாரணை முறைகள் கொண்டு வருவேன், தொடர்வேன் என்றார். பாதுகாப்புக்கு பொறுப்பேற்க உள்ள ஜார்ஜ் கெல்லி, சிஅய்ஏ பொறுப்பேற்க உள்ள மைக் பாம்போ, தண்ணீரில் மூழ்கடிக்கும் சித்திரவதை போன்றவை இருக்காது, சட்டம் தடுப்பதைச் செய்ய மாட்டோம் என்கின்றனர். 
டிரம்ப், இசுலாமியர் குடியேற்றம் தடுப்பேன் என்றார். தலைமை வழக்கறிஞராகப் பொறுப்பேற்க உள்ள ஜெஃப் செஷன்சும், அயல் விவகாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள ரெக்ஸ் டில்லர்சனும், இசுலாமியர் குடியேற்றத்தைத் தடுக்க முடியாது என்கின்றனர். டிரம்ப், நேடோவுக்குப் பணம் தந்து பலப்படுத்த முடியாது, பருவ நிலை மாற்றங்கள் என்ற பேச்சே மோசடி, ஆசிய பசிபிக் ஒப்பந்தம் வேண்டாம் என்றார். டில்லர்சன் இந்த மூன்று விஷயங்களிலும் ட்ரம்ப்பிடம் இருந்து மாறுபடுகிறார். 
ட்ரம்ப் குடியரசுத் தலைவராய் பதவி ஏற்ற உடனேயே ஆட்டம் விறுவிறுப்பாகி விடும். ஒன்று மட்டும் நிச்சயம். டிரம்ப் அய்க்கிய அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுகிறாரோ இல்லையோ, அவரை ஆதரித்தவர்கள் உட்பட, டிரம்ப் எங்கள் அதிபர் அல்ல என ஆகக் கூடுதல் எண்ணிக்கையில், அடுத்தடுத்து மக்கள் சொல்லப் போகிறார்கள்.

Search