COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 26, 2017

மோடியின் ஊழல், கருப்புப் பண எதிர்ப்பு போர் 
எவ்வளவு தூரம் சென்றுள்ளது?
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)

மலையைத் தூக்கி வைத்து, எலியை, இல்லை இல்லை, கொசுவைக் கூடப் பிடிக்கவில்லை என்பது, தெளிவாகிவிட்டது. நவம்பர் 8க்குப் பிறகு 50 நாட்கள் அல்ல, 60 நாட்களே தாண்டிவிட்டன. மோடியிடம், நாட்டு மக்களுக்குச் சொல்ல பதில் ஏதும் இல்லை. மோடி செல்லாது என அறிவித்த ரூ.15.44 லட்சம் கோடியும் கருப்பாய் எங்கேயோ சிக்கி தங்கி விடாமல்,
வங்கிகளுக்கு அப்படியே திரும்ப வந்துவிட்டது. பணக்காரர்கள் சூறையாடியதால் திவாலான வங்கிகள் மக்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பணத்தால் நிரம்பி வழிகின்றன.
மக்கள்தான் இன்னமும், தங்கள் சொந்தப் பணம், வருமானம், வேலை, வாழ்வாதாரம் நாசமானதாகக் கொதிக்கின்றனர். ரொக்கமற்ற பொருளாதாரம் என, மீண்டும் நிதி தொழில்நுட்ப கார்ப்பரேட் கம்பெனிகளைக் கொழுக்க வைக்க, மோடி திட்டமிட்டுள்ளதைப் புரிந்து கொள்கின்றனர். 
இப்போது மோடி குரல் தழுதழுக்கப் பேசுகிறார். ‘நான் நாட்டிற்காக வீட்டையும் குடும்பத்தையும் தியாகம் செய்து வந்துள் ளேன்’. (அதனால் அவரை எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாதா?) ‘இந்த மோடி வெறுமனே மற்ற அரசியல்வாதிகள் போல் வந்து போவார் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்’ (இது வெறும் வாய்ச்சவடால்). உதடு துடிக்க, தொண்டை அடைக்க, ‘அவர்கள் என்னை விட்டுவைக்க மாட்டார்கள். அவர்கள் என்னை அழித்துவிடுவார்கள். அவர்கள் நினைத்த படி செய்யட்டும்’ என்கிறார். 125 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டின் பிரதமரைக் கொல்ல முயன்றதாக, தேசிய புலனாய்வு முகமை (என்அய்ஏ) இதுவரை எவர் மீதும் வழக்கு போட்டதாகத் தெரியவில்லை. 
மோடியும் கார்ப்பரேட் முதலாளிகளும், நவம்பர் 8 முடிந்து 60 நாட்கள் ஆனதை, குஜராத்தில் ஜனவரி 10 அன்று கொண்டாடினார்கள். ‘மோடியைப் போல் அடிப்படை மாற்றங்கள் செய்யும் ஒரு தலைவரை உலகம் கண்டதில்லை. இத்தனை குறுகிய காலத்தில், எத்தனை கோடி பேரின் மனோநிலையை இந்த மாபெரும் தலைவர் மாற்றி விட்டார்’ என முகேஷ் அம்பானி பாராட்டினார். டாடா, குஜராத் வந்து மோடியின் கீழ் தாம் கார் கம்பெனி நடத்துவது, தமது பாக்கியம், அதிர்ஷ்டம் எனப் புகழ்மாலை சூட்டினார். 
மோடி பதிலுக்குச் சும்மா விடுவாரா? ‘உலகிலேயே முதலீடு செய்ய சுலபமான இடமாக இந்தியாவை மாற்றுவேன், முதலீடு செய்வோர்க்கு இந்தியாவில் வானமே எல்லை என்றாக்குவேன், முதலீடுகளை ஈர்ப்பதே எனது உச்சபட்ச முன்னுரிமை’ என உத்தரவாதம் தந்தார். 
அமைச்சரவையை சட்டை செய்யாமல் ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதிக்காமல், நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களை மோடி காலில் போட்டு மிதிக்கும்போது, அவரது பக்தர்கள், அவர் புகழ் பாடும்போது, நமக்கு 1948லும் 1949லும் அம்பேத்கர் சொன்னவை நினைவுக்கு வருகின்றன.
‘இந்தியாவில் ஜனநாயகம் என்பது ஓர் அலங்கார மேல்பூச்சே ஆகும். இந்திய மண், அதன் சாரத்தில் ஜனநாயக விரோதமானது’.
அம்பேத்கர், நவம்பர் 4, 1948 
‘மதத்தில், பக்தி என்பது ஆன்மா மோட் சம் அடைவதற்கான பாதையாகும். ஆனால், அரசியலில் பக்தியோ கதாநாயக வழிபாடோ, சீரழிவுக்கான, இறுதியில் சர்வாதிகாரத்துக்கான, நிச்சயமான பாதையாகவே அமையும்’.
அம்பேத்கர், 1949

Search