COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 4, 2017

நவம்பர் மற்றும் நக்சல்பாரி
வழிமரபுகளை நினைவுகூர்வதும்
அவற்றில் இருந்து கற்றுக்கொள்வதும்

திபங்கர்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

வரலாறு பற்றிய உணர்வு கொண்ட முற்போக்கு இந்தியர்களுக்கு 2017 இரண்டு மகத்தான வரலாற்று நினைவுகளை தூண்டும். 2017 மே 25, நக்சல்பாரி எழுச்சியின் 50ஆவது ஆண்டு தினத்தையும் நவம்பர் 7 மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டையும் குறிக்கும்.
நக்சல்பாரி எதைச் சாதிக்க வேண்டும் என்று துவங்கியதோ அதைச் சாதிப்பதில் வெற்றியடையவில்லை; 1970கள் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களை விடுதலை செய்யும் பத்தாண்டாக மாறவில்லை. உண்மையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதான ஒரு கொடூரமான ஒடுக்குமுறையை அது எதிர்கொண்டது; அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஜனநாயகம் நசுக்கப்பட்டது; அதன் பிறகு காங்கிரஸ் வரலாறு கண்டிராத வீழ்ச்சியடைந்து நாடாளுமன்ற ஜனநாயகம் பரந்த விதத்தில் மீட்டெடுக்கப்பட்டது. மறுபுறம், நவம்பர் புரட்சி உலக வரலாற்றில் நடந்த வெற்றிகரமான முதல் சோசலிசப் புரட்சி; இது ஒரு புதிய சோசலிச நாடு உருவாவதற்கு இட்டுச் சென்றது; அந்த சோசலிச நாடு, சமூக மாற்றத்தின் சக்தியை கட்டவிழ்த்துவிட்டது; உலகின் இரண்டாவது பெரிய அரசியல் - ராணுவ, பொருளாதார சக்தியாக அது எழுந்தது; ஆயினும் இருபதாம் நூற்றாண்டு முடிகிற நேரத்தில், அனைத்தும் காற்றில் கரைந்து போனது.
கடந்த நூற்றாண்டின் இந்த இரண்டு மகத்தான நிகழ்வுகளை, உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமான நவம்பர் புரட்சியையும், இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக இருந்த நக்சல்பாரி எழுச்சியையும் நினைவு கூருவது, பழைய நினைவுகள் பற்றிய வெறும் கொண்டாட்டம் என்று தோற்றம் தரக் கூடும். அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போராட்டம், மறந்து விடுவதற்கு எதிரான நினைவுகொள்ளுதலின் போராட்டத்தையும் அவசியப்படுத்துகிறது என்பது நமக்குத் தெரியும். எனவே, கடந்த காலத்தை நினைவு கூருவதும் அதில் இருந்து கற்றுக்கொள்வதும் நீதிக்கான, சமூக மாற்றத்துக்கான, மானுட விடுதலைக்கான ஒவ்வொரு தேடலிலும் ஓர் உணர்வுபூர்வமான செயலாகும். ஆனால், உலகெங்கும், முதலாளித்துவத்தின், முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிறுவப்பட்ட வடிவமைப்பிலும் வழித்தடத்திலும், ஒவ்வொரு நாடும் அடுத்தடுத்து புதிய சீர்குலைவுக் கட்டங்களை எதிர்கொள்ளும்போது, தகர்வுகளின் அறிகுறிகளை எதிர்கொள்ளும்போது, நவம்பரும் நக்சல்பாரியும் ஒரு மாறுபட்ட அதிர்வலையை உருவாக்குகின்றன.
நவம்பர் புரட்சியை திரும்பிப் பார்ப்பது
நவம்பர் புரட்சியை நினைவுகூரும்போது, சோவியத் யூனியனின் சிதைவும் வீழ்ச்சியும் நமக்கு நினைவுக்கு வருகிறது. நிச்சயமாக, இது உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்கிற சோவியத் யூனியனின் இறுதி காட்சி பற்றிய தற்போதைய உண்மை. புதிதாகப் பிறந்த சோசலிச அதிகாரம், ஓர் உலகப் போரின் மத்தியில் வெற்றிகரமாக எழுந்த சோசலிச அதிகாரம், தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு, உலகில் இன்று வரை காணாத மிகவும் மோசமான பாசிச அதிகாரத்தை வீழ்த்தி, ஏழு பத்தாண்டுகளுக்கு தாக்குப் பிடித்தது என்பதும் முக்கியமானது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட புரட்சிகர கருத்து, நடைமுறையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட, எழுபது ஆண்டுகளே ஆயின என்பதும் குறிப்பிடத்தக்கது. மானுட வரலாற்றின் முன்னோக்கிய பயணத்தில் பத்தாண்டுகள் வெறும் தருணங்களே. புரட்சிகர வெடிப்புகள் அதில் நிறுத்தக் குறியீடுகள்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவத்துக்குள் இருக்கிற அடிப்படை பிழைகளை அடையாளப்படுத்தியிருக்கிறது; கம்யூனிஸ்ட் எதிர்காலத்தின், முதலாளித்துவத்தின் முரண்பாடுகளுக்குள் இருந்து எழும் என எதிர்ப்பார்க்கப்படுகிற எதிர்காலத்தின், பரந்த வரையறைகளை சுட்டிக்காட்டுகிறது. நவம்பர் புரட்சி நடந்தபோது, இந்த பரந்த வரையறைகளுக்கு வரலாறு பல்வேறு ஸ்தூலமான திருத்தங்களை செய்ய வேண்டியிருந்தது. புரட்சி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உலகில் நடக்கவில்லை; முதலாளித்துவ வளர்ச்சியின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்தித் தீர்த்த பிறகு நடக்கவில்லை; கணிசமான நிலப்பிரபுத்துவ எச்சங்களின் சுமைகளை சுமந்துகொண்டிருந்த ஒரு பின்தங்கிய நாட்டில் நடந்தது. சோவியத் யூனியனின் எழுச்சி, சோசலிசத்தின் பிரம்மாண்டமான உள்ளாற்றலை துவக்கத்தில் நிகழ்த்திக் காட்டியது; மறுபுறம், அய்க்கிய அமெரிக்க முதலாளித்துவம் மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது; அய்ரோப்பிய முதலாளித்துவம் அடுத்தடுத்த இரண்டு உலகப் போர்களால் ஏற்பட்ட அழிவை சமாளிக்க வேண்டியிருந்தது; ஆனால் தாக்குப்பிடிக்க முடியாத ஓர் ஆயுதப் போட்டியில் சோவியத் யூனியனைச் சிக்க வைத்து, சர்வதேச முதலாளித்துவம் இறுதியில், போட்டியில் வெற்றி பெற்றது. சோவியத் யூனியன் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூற ஏற்பட்ட அழுகல், அதிகாரத் துவ சீரழிவு ஆகியவற்றுக்கு உட்பட்டு அழிந்து போனது; அதன் அனைத்து பொருளாதார செயலூக்கத்தையும் சமூக ஆதரவையும் அரசியல் அங்கீகாரத்தையும் இழந்தது; உலக வரைபடத்தில் இருந்து மறைந்தது; பங்கேற்பு ஜனநாயகம், பொருளாதார செழுமை என்ற, மேலும் ஓர் உயர்ந்த தளத்தில், சோசலிசத்தின் எதிர்கால புத்தெழுச்சி சவாலை, அடுத்து வருகிற தலைமுறைக்கு விட்டுச் சென்றது. சீனம் இன்னும் கூடுதலான பொருளாதாரரீதியாக தாங்கும் திறனை வெளிப்படுத்தியது; ஆனால், இந்த இயக்கப்போக்கில், முதலாளித்துவத்துடன் விரிவான சரிக்கட்டுதல்களை செய்ய நேர்ந்தது; சோசலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலான போட்டியின் நீடித்த, தீர்மானிக்க முடியாத இயல்பு பற்றி மாவோ சொன்னது தீர்க்கதரிசனம் என்று காட்டுவதாகவே இது அமைந்துள்ளது.
நக்சல்பாரியின் உணர்வும் செய்தியும்
ரஷ்யப் புரட்சி நடந்து அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சீனப் புரட்சி நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நக்சல்பாரி நடந்தது. புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவுடனும் சீனத்துடனும் ஒப்பிடுகையில் இந்திய அரசு மற்றும் இந்திய சமூகத்தின் சேர்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாறுபாடுகள் உள்ளன; பொருளாதார உள்ளடக்கம் என்ற பொருளில் 1960களின் இந்தியாவுக்கும் அரைநிலப்பிரபுத்துவ புரட்சிக்கு முந்தைய சீனத்துக்கும் கணிசமான ஒற்றுமைகள் உள்ளன. அந்த காலகட்டத்தில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் மாபெரும் விவாதம் நடந்துகொண்டிருந்தது. சோவியத் முகாம் மற்றும் அதன் அந்நிய உதவி, அந்நிய கொள்கை என்ற பொருளில் சோவியத் ஆதரவுடன் மூன்றாவது உலகில் அமைதி வழி மாற்றம் என்ற அதன் கொள்கைக்கும், உள்நாட்டு வர்க்கப் போராட்டத்தின் மீது, குறிப்பாக புரட்சிகர விவசாயப் போராட்டத்தின் மீது, அதைத் திறவுகோலாகக் கொண்டு, சார்ந்திருப்பது என்ற சீன மாதிரிக்கும் இடையிலான துருவச் சேர்க்கையில், உலகம் முழுவதும் இருந்த கம்யூனிஸ்டுகள் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நக்சல்பாரி, இந்தியாவில் சீன மாதிரியை அமலாக்கும் ஒரு தற்காலிக அதிரடி முயற்சியல்ல.
இந்திய கிராமப்புறத்துக்கு, ரஷ்யப் பாதை என்று அழைக்கப்பட்டதை விட சீன அனுபவம் கூடுதல் பொருத்தப்பாடு கொண்டது என இந்திய புரட்சிகர கம்யூனிஸ்டுகள் நீண்ட காலத்துக்கு உறுதியாக கருதியது உண்மைதான். தெலுங்கானா விவசாயப் போராட்டத்தின் போது, இந்தியாவில் விவசாயப் புரட்சியை முன்னகர்த்துவதில் சீன அனுபவத்தின் பொருத் தப்பாட்டை ஆந்திர கம்யூனிஸ்டுகள் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார்கள்; ஆனால், கம்யூனிஸ்ட் தலைமை தெலுங்கானா போராட்டத்தைத் திரும்பப் பெற்றது; சீன விவசாய கெரில்லா போரின் எந்த அடையாளத்தின் சுவடும் இன்றி அதில் இருந்து விலகி, அய்ரோப்பிய கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் வழியில் திறன்மிக்க நாடாளுமன்ற பாதையை தழுவியது. தெலுங்கானாவுக்கு முன்பே, பிளவுபடாத வங்கத்தில் தெபாகா இயக்கத்தில் சாகுபடியாளர்களின் போர்க்குணமிக்க அணிதிரட்டலும் அறுதியிடலும் நடந்தே றியது. தோழர் சாரு மஜ÷ம்தாரும் பல நக்சல்பாரி முன்னோடிகளும் தெபாகா இயக்கத்தின் மூத்த தோழர்கள். நக்சல்பாரியின் வசந்தத்து இடிமுழக்கம் தனது வருகையை முதலில் அறிவித்த தெராய் பிராந்தியம்தான் 1940களில் தெபாகா இயக்கத்தின் முக்கியமான மய்யமாக இருந்தது.
நக்சல்பாரியின் பிறப்பை புரிந்துகொள்ள அந்த கால கட்டத்தின் அரசியல் சூழலை, இந்திய கம்யூனிச இயக்கத்துக்குள் நிகழ்ந்த மாற்றங்களை நாம் நினைவு கொள்ள வேண்டும். சீனத்துடனான போர் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குள் நேரு மரணமுற்றார். அவருக்கு அடுத்து வந்த லால் பகதூர் சாஸ்திரியும் 1965 இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு மரணமுற்றார். இந்திரா காந்தி அப்போதுதான் ஆட்சிக்கு வந்திருந்தார். அடுத்தடுத்த இரண்டு போர்களால் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருந்தது; நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் பிடியில் இருந்தது; இது விவசாய அரங்கில், குறிப்பாக உணவு முனையில், மிகவும் தீவிரமாக உணரப்பட்டது. 1967 தேர்தல்களில் இது வரை இல்லாத அளவுக்கான குறைந்த இடங்களே காங்கிரஸ் பெற்றதில் வியப்பில்லை. கிட்டத்தட்ட ஒன்பது மாகாணங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிகள் அமைந்தன. அதேநேரம், இககவுக்குள் நடந்த ஒரு முக்கியமான உட்கட்சி கருத்தியல் - அரசியல் கடைசல், 1964ல் இககமா உருவாவதற்கு இட்டுச் சென்றது; ஆனால் இககமாவும் ஒரு மய்யவாத நிலை எடுத்தபோது, இககமாவுக்குள்ளும் நாட்டின் கம்யூனிஸ்ட் அணிகள் மத்தியிலும் விவாதம் தொடர்ந்தது. 1960களின் மத்தியில் நடந்த உணவுப் போராட்டங்களும் மேற்கு வங்கத்தின் முன்னணி தேர்தல் சக்தியாக இடதுசாரிகள் எழுந்ததும், வர்க்கப் போராட்ட உயர்அலைகளை உருவாக்குவதில் ஒரு புதிய உணர்வையும் ஓர் அவசரத்தையும் கொண்டு வந்தன. வறிய விவசாயிகள் மத்தியிலான பல ஆண்டு கால புரட்சிகர கம்யூனிஸ்ட் பணியும் வர்க்க சமரசம், வர்க்க சரணாகதி ஆகியவற்றுக்கு எதிரான கூர்மையான கருத்தியல் போராட்டமும் நக்சல்பாரி விவசாய எழுச்சிக்கு இட்டுச் சென்றது.
காலனிய, காலனி ஆட்சிக்குப் பிந்தைய இந்தியாவின் விவசாய மக்களின் பழங்குடி மக்களின் புகழ்மிக்க போராட்ட வரலாற்றில், மற்றுமொரு விவசாய எழுச்சியாக மட்டும் நக்சல்பாரியை பார்த்துவிட முடியாது. நிலம் மற்றும் விளைச்சல் மீதான உரிமை என்ற நிகழ்ச்சி நிரலை, அரசு அதிகாரம் என்ற மட்டத்துக்கு நக்சல்பாரி உயர்த்தியது. புரட்சிகர நிகழ்ச்சிநிரல், வெளியில் இருந்து உணர்வுபூர்வமாக உட்புகுத்தப்பட்டது என்றாலும் புரட்சிகர பணி தீவிரமானதாக இருந்தது; மக்களுடனான கட்சியின் (நக்சல்பாரியின் சிற்பிகளும் செயல்வீரர்களும் இன்னும் இககமாவுக்குள் இருந்தனர்) பிணைப்புகள் மிகவும் ஆழமானவையாக இருந்தன; ஒரு புரட்சிகர தாக்குதல் நடத்த சூழல் கனிந்திருந்தது; புரட்சிக்கான கனவும் அறைகூவலும் மக்களின் கற்பனையை பற்றிக்கொண்டன. அது கிராமப்புற இந்தியா முழுவதும் ஒரு காட்டுத் தீயை மூட்டிய புரட்சிகர தீப்பொறிகளில் ஒன்று.
வடக்கு வங்கத்தில் ஒரு மூலையில் இருந்த ஒரு பகுதியில் துவங்கிய விவசாயிகள் - தொழிலாளர்கள் எழுச்சி என ஆரம்பத்தில் துவங்கிய ஒன்று (உள்ளூர் விவசாய செயல் வீரர்களுடன் பழங்குடியின தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் முக்கிய முன்னோடிப் பாத்திரம் ஆற்றினார்கள்மாணவர் மத்தியிலும் அறிவாளிப் பிரிவினர் மத்தியிலும் ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர விழிப்புணர்வை உருவாக்கியது. நாடு முழுவதும் போர்க்குண மிக்க விவசாய போராட்ட அலை வீசியது; தொழிலாளர்களின் கம்யூனிஸ்ட் அணிகளின் முன்னேறிய பிரிவினரை ஈர்த்தது; இந்திய கம்யூனிஸ்டுகளின் ஒரு புதிய புரட்சிகர மய்யத்துக்கான நிறுவன மேடையாக மாறியது. நக்சல்பாரியின் எழுச்சியில், 1969 ஏப்ரலில் உருவான புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உருவாவதற்கான அடுத்த அடியை எடுத்து வைத்தது.
ஆக, இகக செங்குத்தாக பிளவுற்று இககமா உருவானதுபோல் இககமாலெ உருவாகவில்லை. நக்சல்பாரியின் முன்னோடிகள் பலரும் இககமாவின் மாவட்ட மட்ட அமைப்பாளர்கள்; ஆயினும் புதிய கட்சி வடிவெடுத்தபோது அது இககமாவுக்குள் மிகப்பெரிய பிளவை உருவாக்கியது. ஒன்றுபட்ட இகக சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்களில் பங்கேற்பதற்கு முன், போராட்டத்தை அதிகா ரபூர்வமாக திரும்பப் பெற்ற தெலுங்கானா அனுபவம்போல் அல்லாது, நாடு முழுவதும் இயக்கத்தின் தீயை பரவச் செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான கட்டளையுடன், இகக மாலெ நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படையில் உருவானது. விவசாய கெரில்லா போரை அதிஉயர்ந்த உடனடி முன்னுரிமையாகக் கொண்டு இககமாலெ தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்த இந்திய அரசுடனான மோதலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது; கடுமையான அரசு ஒடுக்குமுறையால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது.
இந்த ஒடுக்குமுறை, மேற்குவங்கத்தில் மிகவும் கொடூரமானதாக இருந்தது. எஸ்எஸ்ரேயின் கொடூரமான ஆட்சி, பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்டது. 1975 - 1977 நெருக்கடி நிலையின்போது நாடு முழுவதும் நடந்த ஒடுக்குமுறையின் முன்னோடி இந்த பயங்கரம்தான். ஏட்டில் இருக்கும் கலகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தன; பின்னாளில், பஞ்சாப், ஆந்திரா, சட்டிஸ்கர், மணிப்பூர் மற்றும் காஷ்மீர் மாநிலங் களில் இதுவே வழக்கமான உத்தியானது. இகக மாலெ அரசியல் தலைமைக்குழுவின் குறிப்பிடத்தக்க கவிஞரும் எழுத்தாளருமான தோழர் சரோஜ் தத்தா, 1971 ஆகஸ்ட் 5 அன்று கொல்லப்பட்டார். (இன்றும் இது அதிகாரபூர்வமாக காணமல் போனார் என்றே இருக்கிறது). 1972 ÷லை 28 அன்று லால் பஜார் காவல்நிலைய லாக்கப்பில் தோழர் சாரு மஜ÷ம்தார் கொல்லப்பட்டார்.

இந்த கொடூரமான ஒடுக்குமுறையால் நக்சல்பாரியின் உணர்வையோ செய்தியையோ கொன்றுவிட முடியவில்லை. இந்திய ஆளும் வர்க்கத்தின் அதிகாரபூர்வ சொல்லகராதி, நக்சலிசத்தை தீவிரவாதத்தின் ஒரு பயங்கரமான வகையாக குறுக்கிக் காட்டுகிறது. வடிவங்களை, முழக்கங்களை மட்டுமே நக்சல்பாரி என்று கொண்டுவிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு நீரோட்டமும் ராணுவவாதத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆனால் நக்சல்பாரியின் செய்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில், ஒரு மூர்க்கமான, உள்நுழைகிற அரசுக்கு எதிரான, சமூக பிற்போக்கு சக்திகளின் தாக்குதலுக்கு எதிரான மாணவர் களின், அறிவாளிப் பிரிவினரின் அறுதியிடலில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. நக்சல்பாரியின் தீயில் உருவான கட்சி, சாம்பலில் இருந்து மீண்டு எழுந்து, ஒவ்வொரு தோல்வியையும் ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு, வாழ்வின் அனைத்து தளங்களிலும் நீதியை, ஜனநாயகத்தை வெல்வதற்கான இந்திய மக்களின் புரட்சிர தேடலை முன்னகர்த்த ஒரு துணிச்சலான, தீர்மானகரமான பாதையை வகுக்க, முன்னெப்போதும் காணாத விதத்தில் தாங்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

Search