COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 4, 2017

பணமதிப்பகற்றும் நடவடிக்கையால் சம்பளமிழந்த பீடித் தொழிலாளர்கள் சாலை மறியல்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பால் இன்று அனைத்துத் தரப்பு மக்களும் கையில் பணம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கிகளில் பணம் இல்லை. ஏடிஎம்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. நெல்லை மாவட்டத்தில் பீடித் தொழிலாளர்களுக்கு 8 வாரச் சம்பளம் கிடைக்கவில்லை. பீடித் தொழிலாளர்களின் பணம் 400 கோடி ரூபாய் வழங்கப்படாமல்
உள்ளது. பீடி கம்பெனிகள் சம்பளத்தை பீடித் தொழிலாளர்கள் கையில் பணமாக வழங்க மறுக்கிறார்கள். தமிழக அரசும் தொழிலாளர் துறையும் பீடித் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில்தான் சம்பளத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். வங்கியில் பீடி நிறுவனங்கள் பணத்தைப் போட்டாலும் அவை பீடித் தொழிலாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அப்படியே வரவு வைத்தாலும் வங்கியில் பணம் இல்லாததால் தொழிலாளர்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் லட்சக்கணக்கான பீடித் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் பீடித் தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் இனிமேல் வங்கி மூலம்தான் வழஙகப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தொழிலாளர் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மோடி அரசு அவசரச் சட்டம் மூலம் சம்பளப் பட்டுவாடா சட்டத்தில் திருத்தம் செய்து தொழிலாளர்களின் சம்பளப் பணம் அவர்கள் கையில் கிடைக்காமல் செய்ய முயற்சித்து வருகிறது. அம்பானி, அதானி, டாடா, பிர்லா, மல்லய்யாக்களுக்கு வங்கிக் கடன் பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்துவிட்டு வங்கியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்த உழைக்கும் மக்கள் பணத்தை ஒட்டச் சுரண்டுகிறது மோடி அரசு. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது. இதைக் கண்டித்தும்
தொழிலாளர்களின் கையில் சம்பளப்பணம் ரொக்கமாக வழங்கப்பட வேண்டும்.
பணமில்லா பரிவர்த்தனை கைவிடப்பட வேண்டும்.
அவசரச் சட்டம் மூலம், சம்பளப் பட்டுவாடா சட்டத்தில் திருத்தம் செய்வது கைவிடப்பட வேண்டும்.
வங்கியில் போதிய பணம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணமதிப்பகற்றுதல் நடவடிக்கையால் ஏற்பட்ட நெருக்கடி காலத்திற்கு கல்வி, மருத்துவக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
கடன் நிலுவை வைத்திருக்கிற கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.
அம்பானி, அதானி, மல்லய்யாக்கள் வாங்கிய பல லட்சம் கோடிக் கடனை வட்டியுடன் வசூல் செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
ஜன்தன் கணக்குகளில் தலா ரூ.1 லட்சம் செலுத்தப்பட வேண்டும்.
என வலியுறுத்தி 23.12.2016 அன்று திருநெல்வேலி பேட்டை செக்கடி சாலையில் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு தலைமையில் மறியலில் ஈடுபட்டார்கள். மறியலுக்கு ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கா.கணேசன் தலைமை தாங்கினார். சிபிஅய்(எம்எல்) மாவட்டச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் ஜி.ரமேஷ், மாவட்டத் தலைவர் தோழர் சுந்தர்ராஜ், சிபிஅய்(எம்எல்)மாவட்ட குழு தோழர்கள் கருப்பசாமி, ராமையா, ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் ஆறுமுகம், மாரிமுத்து, ஜானகிராமன், சுப்பிரமணியன், அந்தோனி, பீடிச் சங்கத் தோழர்கள் செல்வி, சின்னம்மாள், மாரியம்மாள், சுப்புலட்சுமி, பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலுக்கு முன்பு காவல்துறையினரும் வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பீடிப் பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு கையில்தான் சம்பளப் பணம் தரப்பட வேண்டும் என்றார்கள். வங்கி மேலாளரோ, வங்கியில் பணம் இருப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மறியல் செய்வதை முறியடிக்க மூன்று நாட்களாகவே காவல்துறை மிரட்டல் உருட்டல் செய்து வந்ததை மீறி தொழிலாளர்கள் மறியல் செய்து கைது ஆனார்கள். தோழர் ரமேஷ் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். 18 பெண் தோழர்களும் 9 ஆண் தோழர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக, வெளியில் இருந்த தோழர்களை வரவழைத்து ஜாமீன் போட்டதற்குப் பின்பே மாலையில் 27 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்மோடி அரசின் பணமில்லா பரிவர்த்தனையின் கொடுமைக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க தமிழகத்தில் உள்ள ஊழல் பிடித்த, பினாமி அதிமுக அரசு ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது.


Search