‘என்ன செய்ய வேண்டும்?’
லெனின்
‘பொதுவாகவே தொழிலாளர் குழுக்கள்’ (ஆம், அப்படித்தான் உள்ளது!) ‘அரசியல் பணிகளை (இச்சொற்களை அவற்றின் உண்மையான, நடைமுறை வழிப்பட்ட அர்த்தத்தில் - அதாவது, அரசியல் கோரிக்கைகளுக்காக நடத்தும் சந்தர்ப்பப் பொருத்தமான, வெற்றிகரமான நடைமுறைவழிப்பட்ட போராட்டம் எனும் அர்த்தத்தில் - பயன்படுத்துகிறோம்) சமாளிக்க முடியாமல் இருக்கின்ற’ (ரபோச்சியே தேலோ அளித்த பதில் பக்கம் 24) என்று இந்தப் போலி அறிஞர்கள் பிளெஹானவிடம் வாயளந்தபோது காட்டிய இணையற்ற, உண்மையிலே ‘நார்ட்ஸீஸ் போன்ற’ அகம்பாவத்தை நினைத்துப் பாருங்கள். சீமான்களே, குழுக்களில் பலவகை உண்டு! உண்மை, ‘தேர்ச்சிநயமற்றவர்களைக்’ கொண்டிருக்கும் குழுக்கள் தம் தேர்ச்சி நயமின்மையை உணர்ந்து அதைக் கைவிடாதவரை அரசியல் பணிகளைச் சமாளிக்க முடியாததுதான். இது தவிர, இந்தத் தேர்ச்சி நயமற்றவர்கள் தம் பக்குவமின்மையிலேயே மோகித்துப் போய்விட்டால், ‘நடைமுறை வழிப்பட்ட’ என்கிற சொற்களைக் கொட்டை எழுத்தில்தான் போடுவோம் என்று பிடிவாதம் பிடித்தால், நடைமுறைவழிப்பட்டதாய் இருப்பதற்கு ஒருவருடைய பணிகள் மக்களின் மிகப் பிற்பட்டப் பகுதிகளில் அறிவின் தரத்துக்குத் தாழ்த்தப்பட வேண்டியதே என்று நினைத்தால், அவர்கள் கதி மோட்சமில்லாத தேர்ச்சி நயமற்றவர்களேயாவர். நிச்சயமாக அவர்களால் எந்த அரசியல் பணிகளையும் பொதுவாகவே சமாளிக்க முடியாதுதான். ஆனால் அலெக்சேயிவ், மீஷ்கின், ஹால்தூரின், ழெலியாபொவ் போன்ற தலைவர்களைக் கொண்ட ஒரு குழு அரசியல் பணிகளை (இச் சொற்களை அவற்றின் உண்மையான, மிகவும் நடைமுறைவழிப்பட்ட, அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம்) சமாளிக்க முடிகிறது; அவர்களின் ஆவேசமிக்க பிரச்சாரம் தன்னியல்பாக விழித்தெழுந்து வரும் மக்களிடையே எடுபடுகிறது, அவர்களின் ஒளிவிடும் சக்திக்கு புரட்சிகரமான வர்க்கத்தின் சக்தி ஈடுகொடுத்து ஆதரிக்கிறது என்பதே அதற்குக் காரணம், அந்த அளவுக்கே அக்குழுவால் சமாளிக்கவும் முடிகிறது. பிளெஹானவ் இந்த புரட்சிகரமான வர்க்கத்தைச் சுட்டிக்காட்டி அதன் தன்னியல்பான விழிப்பு தவிர்க்க முடியாதது என்று நிரூபித்ததோடல்லாமல் ‘தொழிலாளர் குழுக்களுக்குங் கூட’ ஓர் உன்னதமான மாபெரும் அரசியல் பணி வைத்தது மிகவும் சரி. அக்காலத்திற்குப் பின் தோன்றியுள்ள வெகுஜன இயக்கத்தை நீங்கள் குறிப்பிடுவது இப்பணியைத் தாழ்த்துவதற்காகத்தான், ‘தொழிலாளர் குழுக்களின்’ சக்தியையும் நடவடிக்கையையும் பரப்பெல்லையையும் வெட்டிக் குறுக்கிவிடுவதுதான். உங்கள் பக்குவமற்ற வழிமுறைகளில் நீங்களே மோகித்துப் போன தேர்ச்சிநயமற்றவர்களாக இல்லாவிட்டால் பிறகு நீங்கள் வேறுயார்? நீங்கள் நடைமுறை வழிப்பட்டவர்கள் என்று ஜம்பம் அடிக்கிறீர்கள், ஆனால் ஒவ்வொரு ருஷ்ய நடைமுறை ஊழியருக்கும் தெரிந்திருக்கிற விஷயத்தை-அதாவது, ஒரு குழுவின் சக்தி மட்டுமல்லாமல் ஒரு தனி நபரின் சக்தியுங்கூட புரட்சி லட்சியத்திற்காகச் சாதிக்கக் கூடிய அருஞ்செயல்களை - பார்க்கத் தவறுகிறீர்கள். அல்லது, 1870களில் இருந்தவர்கள் போன்ற தலைவர்களை நம் இயக்கம் தோற்றுவிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? முடியாது என்று சொன்னால், நீங்கள் அப்படி நினைக்கக் காரணம் என்ன? நமக்கு பயிற்சி இல்லையென்பதினாலா? அதற்கென்ன, நாம் பயிற்சி பெற்று வருகிறோம், தொடர்ந்து பயிற்சி பெற்று வருவோம், பயிற்சி பெற்றுத் தீருவோம்! துரதிர்ஷ்டவசமாக, ‘முதலாளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான பொருளாதாரப் போராட்டம்’ எனும் தேங்கிய குட்டையில் பாசி படர்ந்து விட்டிருப்பது உண்மை; தன்னியல்புக்கு மண்டியிட்டுத் துதிபாடும் பேர்வழிகள், ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் ‘பிட்டத்தை’ (பிளெஹானவின் சொல்லைப் பயன்படுத்துகிறோம்) பயபக்தியுடன் ஏறிட்டுப்பார்க்கும் பேர்வழிகள், நம்மிடையே தோன்றியிருக்கிறார்கள். எனினும் இந்தப் பாசியை நாம் வழித்திடுவோம். ருஷ்யப் புரட்சியாளர்கள் ஓர் உண்மையான புரட்சிகரமான தத்துவத்தால் வழிகாட்டப்பட்டு உண்மையிலேயே புரட்சிகரமான, தன்னியல்பாக விழிப்புற்றுவரும் வர்க்கத்தை ஆதாரமாகக் கொண்டு கடைசியிலே-நெடுங்காலத்துக்குப்பின் கடைசியிலே! - அசுர
பலத்துடன்
குன்றென நிமிர்ந்து
நிற்க
முடிகிற
நேரம்
வந்துவிட்டது.
அதற்குத் தேவையானதெல்லாம் இதுதான்: திரள்திரளான நம் நடைமுறை ஊழியர்களும் சரி, பள்ளிப்பருவத்திலேயே நடைமுறைப் பணி குறித்துக் கனவு கண்டுவந்திருக்கும் மேலும் பெரும் திரளான மக்களும் சரி, நம் அரசியல் பணிகளைத் தாழ்த்தி நம் அமைப்புத் துறைப் பணியின் பரப்பெல்லையைக் குறுக்கித் தடுக்கச் சொல்லக்கூடிய எந்த யோசனையையும் எள்ளி நகையாடி விரட்ட வேண்டும். சீமான்களே, இதை நாங்கள் சாதிப்போம், உறுதியோடு நம்புங்கள்!
தொடரும்