எல்லோரும் இந்நாட்டு மக்கள்!
மஞ்சுளா
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பணியில் தமிழகக் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. பிற மாநில தொழிலாளர்
பற்றிய தீவிரமான கணக்கெடுப்பு நடக்கிறது. தமிழ்நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட
பிற மாநிலத் தொழிலாளர்கள் இருப்பதாக தி
இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை ஊரகக் காவல்துறையினர் 30 காவல்நிலைய எல்லைகளில், இது வரை 19,000 பிற மாநிலத்தவர் விவரங்களைச் சேகரித்துள்ளனர். இந்த விவரங்கள் கட்டுமானப் பணிகள்
நடக்கும் இடங்களில் தங்கியுள்ள கட்டுமானத்
தொழிலாளர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சொல்கின்றனர். கோவை நகரக் காவல்துறையினர் 10,000 பேர்
விவரங்களை, அலைபேசி எண் உட்பட, சேகரித்துள்ளனர். வாடகைக்குக் குடியிருப்பவர் விவரங்கள் வர வேண்டும்.
இந்த விவரங்களைக் காவல்துறையினரே
வெளியிட்டிருக்க, காவல்துறை தலைவர்
மாநில காவல்துறை தலைமையகத்தில் இருந்து
ஆணை ஏதும் வெளியிடப்படவில்லை என்றும்
தமிழகக் காவல்துறைக்கு பிற மாநில தொழிலாளர், மாணவர் பற்றிய விவரங்கள் எடுக்கும்
முயற்சி ஏதும் இல்லை என்றும் சொல்கிறார். கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்
தொழிலாளர் விவரங்களை மட்டும் அவர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களைச்
சேர்ந்தவர்கள் வைத்திருக்க வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளதாகச் சொல்கிறார். பிற
மாநில மாணவர்கள் விவரங்களை கல்லூரிகள்
வைத்திருக்குமாம். சொந்த வீட்டுக்காரர்கள்
வாடகைக்குக் குடியிருப்பவர்கள் பற்றி
விவரங்கள் வைத்திருக்க வேண்டுமாம். இப்படி எல்லாம் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இதற்கெல்லாம் கணக்கெடுப்பு என்பதல்லாமல் வேறென்ன பொருள்? கோவை காவல்
துறை இதுபோன்ற ஒன்றைத்தானே செய்து
கொண்டிருக்கிறது? திருப்பூர் காவல்
துறையினர் ஒரே நாளில் ஆயிரம் பிற மாநிலத் தொழிலாளர் கைரேகைகளைப் பதிவு செய்ததற்கு
என்ன பெயர் சொல்வது?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குழப்பமில்லாமல் ரேசன் அட்டை
கூட தர முடியாத ஆட்சிகள் மாறிமாறி தமிழகத்தை வாட்டி வதைக்கும்போது, இப்போது தமிழக மக்களுக்கு புதியதொரு
பிரச்சனை புறப்பட்டுள்ளது. வீடு வாடகைக்குத் தருபவர்கள், தங்கள் வீடுகளில்
வாடகைக்கு வசிப்பவர்கள் பற்றிய முழு
விவரங்களையும் காவல்துறையிடம் தெரிவிக்க
வேண்டும். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், புதிதாகக் குடி
வருபவர்கள், முன்பே குடியிருப்பவர்கள் என
அனைத்து விவரங்களும் தர வேண்டுமாம். முழு விவரங்கள் என்றால், வீட்டில்
எத்தனை பேர், பெயர், வயது, வேலை, பழைய
முகவரி, அடையாள அட்டை, புகைப்படம்
போன்றவை. பாகிஸ்தான், பங்களாதேஷ்
அமெரிக்கா போன்ற அந்நிய நாடுகளுக்குச்
செல்லும்போது இந்தியர்கள் எவ்வளவு
கவனமாக இருக்க வேண்டுமோ, அவ்வளவு
கவனமாக தமிழ்நாட்டுக்கு வரும்போதும்
இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழக மக்கள் அனைவரும்
தங்கள் சொந்த வீடுகளில், பிற மாநிலத்
தொழிலாளர் மட்டுமே வாடகை வீடுகளில்
வசிக்கிறார்களா? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏகப்பெரும்பான்மை தமிழர்களுக்கு
வீடு இல்லை, மனை இல்லை, வீடு கட்ட, வாடகை கொடுக்க வசதி இல்லை என்பதை
நன்கறிந்திருப்பதால்தான் பசுமை வீடு தேர்தல்
வாக்குறுதியானது. வீடற்ற, மனையற்ற, வீடு
கட்ட வசதியற்ற அந்த மக்கள் அனைவருமே
வாடகை வீடுகளில்தான் இன்னும் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்வில் எந்த அதிசயமும்
நிகழ்ந்துவிடவில்லை.
பிற மாநிலத் தொழிலாளர், மாணவர், பிரச்சனை என்று மட்டும் இது சுருங்கி விடாது. தமிழ்நாட்டுக்குள் தமிழ் மொழி பேசும் மக்கள்
மாவட்டம் விட்டு மாவட்டம் பஞ்சம்
பிழைக்கச் செல்கிறார்கள். ஜெயலலிதா
சென்னையில், கொடநாட்டில், அய்தராபாதில்
என்று செல்லும் இடங்களில் எல்லாம்
பங்களாக்கள் வைத்திருப்பதுபோல், அவர்கள்
செல்லும் இடமெல்லாம் சொந்த வீடுகள்
வைத்திருப்பதில்லை. ஹ÷ண்டாய் போன்ற
பலப்பல பன்னாட்டு, உள்நாட்டு ஆலைகளில்
வேலை தேடி தமிழக கிராமப்புற வறிய
இளைஞர்கள் சென்னை நோக்கி பிற நகரங்கள் நோக்கி வருகிறார்கள். அவர்கள் சொந்த வீடு
வைத்திருப்பவர்கள் அல்ல.
இவர்களில் சிலர் எங்கெங்கோ அலைந்து
திரிந்து ரேசன் அட்டை வாங்கிவிட்டார்கள். திருமணமாகாத இளைஞர்கள், நண்பர்கள்
எனச் சேர்ந்து தங்கி இருக்கிற பலருக்கு எப்படி
அலைந்தாலும் அரசாங்கத்தின் அடையாள
அட்டைகள் கிடைப்பதில்லை. ஏனென்றால், பலருக்கு முகவரி என்ற ஒன்றே கொடுக்க
முடிவதில்லை. வீடு என்ற ஒன்று நிரந்தரமாக
இருப்பதே இல்லை. அவர்கள் சந்தேகத்துக்கு
உரியவர்கள் என்று சொல்லிவிட முடியுமா?
என்ன அடையாளம் வேண்டும் தமிழக
அரசுக்கு? 60 கிலோ எடையுடன் சொந்த
ஊரில் இருந்து புறப்பட்டு, சென்னை வந்து
வேலை செய்த சில நாட்களிலேயே, ஊனும்
உயிரும் உருகி அய்ந்து கிலோ எடை குறைந்து
விடுகிறார்கள். அந்த அடையாளம் போதாதா? வண்ணக்கனவுகளுடன் ரயிலேறி, பஸ் ஏறி, அனைத்தையும் ஆலைச் சக்கர ஓட்டத்தில்
தொலைத்துவிட்டு, மதிப்பிழந்து, சுயமரியாதை
இழந்து, ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டும்
என்பதால் பதில் ஏதும் பேசாமல் வேலை
பார்த்து, அகம் செத்த வெளிப்பாடாய் முகம்
செத்துக் காட்சியளிக்கிறார்கள். வெளிறிப்
போன அந்த அடையாளம் போதாதா?
இந்த நிலைமைகளுக்கெல்லாம் என்ன
பதில் வைத்திருக்கிறது தமிழக அரசு? பிற
மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவைதான்
அடையாளங்கள். அவர்கள் படும் துன்பமும்
சற்றும் குறைவல்ல. மாலை 6 மணிக்கு மேல்
சாதாரணமாக வெளியே போகும் பிற மாநிலத்
தொழிலாளர்கள் காவல்துறையினர் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மொழி
தெரியாமல் காவல்துறையினரிடம் அவர்கள்
படும் பாடு பற்றி ஜெயலலிதா என்றாவது
கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பாரா?
வேளச்சேரி வேட்டை முடிந்த இரண்டு
நாட்களில் பள்ளிக்கரணையில் வடமாநிலத்தைச்
சேர்ந்த ஒருவர் திருட வந்திருக்கலாம் என்று
சந்தேகப்பட்ட உள்ளூர்வாசிகள் அவரை
அடித்துத் துவைத்தனர். விசாரித்த போது அவர்
ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும் மனநலம்
குன்றியவர் என்பதும் தெரிய வந்தது. மார்ச் 9 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில்
இரண்டு வட மாநிலத் தொழிலாளர்கள்
‘சந்தேகத்துக்குரிய’ விதத்தில் நடமாடியதால்
உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டனர். பிற மாநிலத் தொழிலாளர்களை சந்தேகத்துடன்
பார்க்கத் தமிழர்களை பயிற்றுவிக்கிறார்கள். திருப்போரூரில் பிற மாநிலத்தவரை தாக்கிய
உள்ளூர்வாசிகள் தங்களுக்குள் திருடர்களைப்
பிடிக்க, கண்காணிப்புக் குழுக்கள் அமைத்துக்
கொண்டிருக்கிறார்களாம். மிகத் தெளிவாக, ‘நாங்கள் எதிர் அவர்கள்’ என்கிற பாசிச மனநிலையை, அணுகுமுறையை மக்கள் மத்தியில்
உருவாக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தாரை
சாகடிக்கும், பின் நோகடிக்கும் தமிழகமாக
உருமாறுகிறது. இதுபோன்ற கண்காணிப்புக்
குழுக்கள் உயர்மட்ட ஊழலை, பெருநிறுவனக்
கொள்ளையை, சூறையாடலை எதிர்க்க
உருவானால் வரவேற்கலாம்.
திருப்பூர் நகைக்கடை கொள்ளை
வழக்கில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று
பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி
வெளியாகியுள்ளது. இவர்களில் ஒருவரைப்
பார்க்க மனநிலை குன்றியவர் போல்
தெரிகிறார். காலும் ஊனம் போல் தெரிகிறது. தன்னைப் பிடித்து வைத்துள்ள காவல்
துறையினரைப் பார்த்து கைகூப்பி ஏதோ
சொல்ல முற்படுகிறார். இவை புதிய தலை
முறை தொலைக்காட்சி காட்சிகள். சன்
செய்தியில், இவர்களில் ஒருவர் கைரேகை
கொள்ளையடிக்கப்பட்ட கடையில் கிடைத்த
கைரேகைகளுடன் ஒத்துப்போகவில்லை என்று
நொடிப் பொழுதுக்கு வந்த செய்தி பிறகு
ஒளிபரப்பாகவில்லை. இர்ஷத் ஜெஹான்
கதைகளுக்கு நாட்டில் பஞ்சமில்லை.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று
இந்திய ஒடுக்கப்படும் மக்களை பாடினான்
பாரதி. எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற
உணர்வை உருவாக்க வேண்டிய துரதிர்ஷ்ட
வசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
‘எங்களை கணக்கெடுங்கள்’ என ஆந்திர
பிரதேசத்தில் இருந்து வந்த முன்னூறுக்கும்
மேற்பட்ட வெங்காயக் கூடை முடையும்
தொழிலாளர்கள் ஆண்டுக்கணக்காக கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள். ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அவர்கள் தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், நல்லூர்
ஊராட்சியில் வசிக்கிறார்கள் என்பதற்கு ஓர்
அடையாள அட்டை வேண்டுமெனக் கேட்டுப்
போராட்டங்கள் பல நடத்திக் கொண்டிருக்
கிறார்கள். ஆனால் இன்று வரை அவர்கள்
குரல் நேற்று இருந்த, இன்று இருக்கிற தமிழக ஆட்சியாளர்கள் காதுகளில் விழவில்லை.
தமிழ்நாட்டில் வெவ்வேறு தொழில்களில்
வெந்து சாகிற பிற மாநிலத் தொழிலாளர்
பற்றிய விவரங்கள், வாழ்நிலைமை, வேலை
நிலைமை பற்றி வெள்ளை அறிக்கை வேண்டும் என்று ஏஅய்சிசிடியு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுவும் தமிழக ஆட்சியாளர்கள்
காதுகளுக்கு கேட்கவில்லை.
இப்போது தமிழ்நாட்டை வளமானதாக்க
உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருகிற
அந்தத் தொழிலாளர்களைத் திருடர்கள், கொலைகாரர்கள் என்று முத்திரை குத்த கணக்கெடுக்கிறார்கள். கேரள மீனவரை சுட்டுக்
கொன்ற இத்தாலியர்களைக் கூட மரியாதையுடன்தான் விசாரிக்கிறார்கள். நாகர்கோவிலில்
தங்கியிருந்த ஜெர்மானியர் ஹெர்மானை
காரில் சென்னை விமான நிலையத்துக்கு
அழைத்து வந்து விமானம் ஏற்றினார்கள். அவை
சர்வதேச விவகாரங்கள். ஏகாதிபத்திய சக்திகளுக்கு கோபம் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் சொந்த நாட்டு உழைக்கும்
மக்களை கிள்ளுக்கீரையாய் நடத்துகிறார்கள்.
சோனியா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தின் மேன்மை பற்றி பேசிக்
கொண்டிருந்தபோது, குற்றவாளிகள் திருந்தி
வாழ வேலை உறுதித் திட்டம் உதவுவதாகச்
சொன்னார். மாநில சுயாட்சி கேட்பவரும்
தேசிய ஒருமைப்பாடு காப்பவரும் வேறு வேறு
மொழிகளில் ஒரே விசயத்தை பேசுகிறார்கள். நகைக்கடைகளாய் ஊர்வலம் வந்தவர்கள்
முதல் வானத்தையே 2ஜியாய் வளைத்துப்போடப் பார்த்தவர்கள் வரை, விசாரணைக்குச்
சென்றாலும், சிறை சென்று திரும்பினாலும்
வளம் நலம் பெற்று வாழ்கிற தமிழ்நாட்டில்
தொழிலாளர்கள், ஏழை எளியவர்கள் மீது
சாதாரணமாக குற்றம் சுமத்திவிட முடிகிறது.
பிற மாநிலத் தொழிலாளர் விவரங்களைக்
கணக்கெடுக்கச் சொல்கிறார்களே? பிற மாநில, பிற நாட்டு முதலாளிகளைக் கணக்கெடுக்க
வேண்டாமா? தமிழக முதலாளிகளுடன்
சேர்ந்து, அவர்கள் தமிழக, பிற மாநில
தொழிலாளர்களை அடிமாட்டுச் சுரண்டலுக்கு
ஆளாக்கி அடிக்கும் கொள்ளை பற்றி, தமிழக
மக்களுக்கு எப்போதாவது, ஏதாவது கணக்கு
காட்டியிருக்கிறார்களா? அந்த முதலாளிகள், நிறுவனங்கள் பெறும் சலுகைகள், விலக்குகள்
பற்றி எப்போதாவது அறிவித்திருக்கிறார்களா? அவர்கள் மீது எந்தச் சட்டமாவது பாயுமா? அவர்கள் சட்டத்தை மீறியதாகத் தெரிய
வந்தால் எந்த காவல்துறை துப்பாக்கியாவது
அவர்களை நோக்கி நீளுமா?
வாடகை வீடுகளில் இருப்பவர்கள்
மட்டும்தான் கொள்ளை, கொலை போன்ற
குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்று
தமிழக அரசு நம்மை நம்பச் சொல்கிறது. அவர், பெரிய மனிதர், அதனால் அந்தக் கொலையை
செய்திருக்க மாட்டார் என்று வெண்மணி
வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பின்
நிலப்பிரபுத்துவ சாரம் இன்னும் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் பிழைப்பு தேடி பிற
மாநிலத் தொழிலாளர்கள் வருவது போல், தமிழக தொழிலாளர்களும் பிழைப்புக்காக பிற
மாநிலங்கள் செல்கிறார்கள். கேரளாவில் உள்ள
பிற மாநிலத் தொழிலாளர்களில் தமிழக
தொழிலாளர் எண்ணிக்கைதான் அதிகம். பிற
மாநிலத் தொழிலாளர்களை தமிழ்நாடு
அரசாங்கம் உள்ளாற்றல்மிக்க குற்றவாளிகளாக
கருதுவது போல், பிற மாநில அரசாங்கங்கள், அங்குள்ள மக்கள் கருதினால் உருவாகக்கூடிய
பிரச்சனைகளுக்குத் தீர்வே கிடையாது.
இந்த நடவடிக்கை ஆபத்தானது. உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கம்
கொண்டது. மக்கள் மத்தியில் முரண்பாடு
களை உருவாக்கி அதில் குளிர்காய முயற்சி
செய்வது. அடுத்து நடக்கும் எந்த குற்றத்துக்கும்
காரணம் காட்ட வெள்ளாடுகளை தயார்
செய்வது. தமிழகத்தில் காவல்துறையின்
ஆட்சியை நிறுவ அடித்தளம் உருவாக்குவது.
இந்த அத்தனை தீங்குகளுக்குப் பிறகு ஒரு
நன்மை நடக்கலாம். கோவை காவல்துறை
வெளியிட்டுள்ளது போல் உண்மையில் பிற
மாநிலத் தொழிலாளர் எண்ணிக்கை என்ன என
தெரிய வரும். அரசு அவர்கள் தொடர்பான
தன் கடமைகளில் இருந்து முழுவதுமாக தவறுவது தெரிய வரும்.
உண்மையில், பிற மாநிலத் தொழிலாளர்
பற்றி, தமிழகம் எங்கும் மாவட்டம் விட்டு
மாவட்டம் சென்று வேலை செய்யும் தமிழகத்
தொழிலாளர்கள் பற்றி விவரங்கள் வெளியிடு
என்ற கோரிக்கையை, காவல்துறை நடத்தும்
கணக்கெடுப்புப் போல் அல்லாமல் அவர்கள்
கவுரவம் காப்பதற்கான, அவர்கள் அடிப்படை
உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கணக்கீடு
வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும்
வலுவாக எழுப்ப இன்றைய தமிழக சூழல்
வாய்ப்பு உருவாக்கியுள்ளது.