COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 3, 2012

Mar-1-6

கட்டுரை

இந்திய தொழிலாளர் மாநாட்டில் முதலாளிகள் குரல்

உபயம்: திரு.மன்மோகன்

கே.ஜி.தேசிகன்

அனைத்து மய்ய தொழிற்சங்கங்களும் இணைந்து பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்துள்ள பின்னணியில் பிப்ரவரி 14 மற்றும் 15 தேதிகளில் 44ஆவது இந்திய தொழிலாளர் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, முதல் இந்திய தொழிலாளர் மாநாடு 1940ல் நடைபெற்றிருக்கிறது. 1940களில் நடைபெற்ற 4 மாநாடுகளில் திரு.பி.ஆர்.அம்பேத்கார் தலைமை தாங்கியிருக்கிறார். பிரதமர், மத்திய தொழிலாளர் அமைச்சர், மாநில தொழிலாளர் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட மய்ய தொழிற்சங்க பிரதிநிதிகள், முதலாளிகளின் அமைப்பு பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பை சேர்ந்தவர்கள் இம் மாநாடுகளில் பங்கு பெறுவர்.

மாநாடுகள், பல கட்டங்களில் பல பரிந்துரைகளை வழங்கினாலும், சில மட்டுமே அமலுக்கு வருகின்றன. இம்முறை ஏஅய்சிசிடியு தரப்பில் முன்வைக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு ஆகிய விசயங்கள் மீது தீர்மானகரமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

குறைந்தபட்ச ஊதியம்

1957 ஆண்டு தொழிலாளர் மாநாட்டில் தான் குறைந்தபட்ச கூலி என்ற கருத்துரு உருவாக்கப்பட்டது. 2 பெரியவர், 2 சிறுவர்கள் கொண்ட குடும்பத்தை 3 யூனிட்டுகளாக வரையறுத்தது.

ஒரு யூனிட்டுக்கு 2700 கலோரி உணவு தேவையென்றும் ஒரு வருடத்திற்கு 72 கெஜம் துணி தேவைப்படும் என்றும் அரசு வீட்டு வசதி திட்ட வீட்டின் அளவுக்கு வாடகை எனவும் எரிபொருள், மின்சாரத் தேவைகளுக்கு ஊதியத்தில் 20% என்ற அம்சங்கள் கூலி நிர்ணயம் செய்வதற்கு அடிப்படைகளாக சொல்லப்பட்டது.

பின்னர் 1992 ரெப்டகாஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் மருத்துவம், பண்டிகை செலவினங்கள், குழந்தைகளின் கல்வி இவற்றிற்கு 25% கொள்ள வேண்டும் என்று சொன்னது. 1988ல் குறைந்தபட்ச கூலியோடு மாறி வரும் பஞ்சப்படி இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 1996ல் ரூ.35 ஆக இருந்த கூலி படிப்படியாக உயர்த்தப்பட்டு 01.04.2011 அன்று ரூ.115 தேசிய தரைமட்ட குறைந்தபட்ச கூலியாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் இது அட்டவணையில் பட்டியல் இடப்பட்ட 45 தொழில்களுக்கு மட்டும் பொருந்தும். மத்திய அரசுக்கு ஓர் அட்டவணை வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு அட்டவணை மற்றும் வெவ்வேறு தொழில்களுக்கு வெவ்வேறு கூலி என பெரும் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்குகள் நடந்து கொண்டும் இருக்கின்றன. கிராமப்புற வேலை உறுதித்திட்ட கர்நாடகா வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் 100 நாள் வேலையில் குறைந்தபட்ச கூலிஅமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு அட்டவணைத் தொழில்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலி குறைந்தபட்சம் ரூ.81 ஆகவும், அதிகபட்சம் ரூ.222.35 ஆகவும் உள்ளது. விசைத்தறிக்கான குறைந்தபட்ச கூலி ரூ.88.29 ஆக மிகக் குறைவாக உள்ளது. அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கான 6ஆவது சம்பள கமிஷன் ஒரு குடும்பம் பிழைத்திருக்க ரூ.6670 வேண்டும் என்று சொன்னது.

கடுமையான விஷம் போல் ஏறியிருக்கும் விலைவாசி, கூலி விசயத்திலுள்ள பாரதூரமான வித்தியாசங்கள் இவற்றை கணக்கில் கொண்டு தேசிய தரைமட்ட குறைந்தபட்ச கூலி மாதம் ரூ.10,000 என்ற கோரிக்கை முன்னுக்கு வந்துள்ளது. ஏஅய்சிசிடியுவும், பிற சங்கங்களும் கூட கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம் உட்பட உழைப்பவர் அனைவருக்கும் மாதம் ரூ.10,000 உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என கோருகின்றன.

பிரச்சினை என்ன வென்றால் மாநாட்டை நடத்துகிற அரசாங்கமே அதன் பரிந்துரைகளை கண்டு கொள்வதில்லை. கடந்த 2 மாநாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளர் சம்பந்தமாக பரிந்துரைக்கப்பட்ட எதுவும் அமலுக்கு வரவில்லை. குறைந்தபட்சக் கூலி அமல்படுத்தப்படுவதும், அமல்படுத்தாத முதலாளிகள் மீது சட்டப்பிரிவு 22 மற்றும் 22 படி தண்டனை நடவடிக்கையும் அவசியமானவை. தண்டனை காலம் மற்றும் அபராதத் தொகையை உயர்த்த மாநாடு பரிந்துரைக்கிறது. தேசிய தரைமட்ட குறைந்தபட்ச கூலிக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றும், பணியிடத்தில் குறைந்தபட்சம் இவ்வளவு பேர் பணிபுரிய வேண்டுமென்ற வரம்பு அகற்றப்பட்டு இது அனைவருக்கும் பொருந்தும் விதத்தில் இருக்க வேண்டுமென மாநாடு பரிந்துரை செய்திருக்கிறது. பரிந்துரைகளின் அமலாக்கத்தை போராட்ட இயக்கங்களே உத்தரவாதப்படுத்த முடியும்.

சமூகப் பாதுகாப்பு

உழைக்கும் மக்களில் 94% அதாவது 44 கோடி பேர் அமைப்புச்சாரா தொழிலாளர்கள். இன்னும் கணிசமான எண்ணிக்கையில் நிரந்தர வேலைகள் காணாமல் போய் இந்தப் பட்டாளம் பெருகிக் கொண்டே போகிறது. செல்வந்தர்களுக்கு பல லட்சம் கோடிகள் வரிச் சலுகை, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் குவிப்பு, மகா ஊழல்களில் பல லட்சம் கோடிகளில் சூறையாடல் என்பது நடக்கும்போது அமைப்புச்சாரா தொழிலாளியின் சமூக பாதுகாப்புக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஒதுக்க அரசு மறுத்து வருகிறது. சமூக பாதுகாப்பு என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக சலுகை அளிப்பது அல்ல. அது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 100ஆவது அமர்வு பரிந்துரைப்படி அடிப்படை மனித உரிமை என்ற வாதம் ஏஅய்சிசிடியுவால் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. அமைப்புச்சாரா தொழிலாளியின் குடியிருப்பு, மருத்துவம், கல்வி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது.

அரசாங்கம் சமூக பாதுகாப்பில் ராஷ்ட்ரிய ஸ்வஸ்தய பீம யோஜனா என்ற திட்டத்தை மெச்சிப் புகழ்கிறது. இத் திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு ரூ.30,000க்கு மருத்துவ காப்பீடு கிடைக்கிறதாம். இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமாம். இதுவரை 12 கோடி பேர் இணைந்திருப்பதாகவும் 2.5 கோடி பேர் பயனடைந்திருப்பதாகவும் புள்ளி விபரம் சொல்கிறார்கள். இணைவதற்கு ஒருவர் ஒரு வருடத்திற்கு ரூ.30 பிரிமீயத் தொகை செலுத்த வேண்டுமாம். இதேபோல் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டம் அரசாங்கத்தால் சிலாகித்தும் பேசப்படும் திட்டமாகும். ஆனால் ஒரு சில ஈஎஸ்அய் மருத்துவமனைகள் தவிர பெரும்பாலானவை முறையாக இயங்கவில்லை. போதுமான மருத்துவர்களோ, உபகரணங்களோ கிடையாது. போதிய பராமரிப்பு இல்லை. ஈஎஸ்அய் திட்டத்தின் மூலம் அரசுக்கு வருôய்தான் பெருகுகிறது. பல்வேறு உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைகளோடு ஈஎஸ்அய் உடன்பாடு செய்திருந்தாலும் அவர்கள் நோயாளிகளை அனுமதிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. வருங்கால வைப்பு நிதியை எடுத்துக் கொண்டாலும் அமைப்புச்சாரா தொழிலாளியின் பணம் அவரிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் அனாமத்தாகவே கிடக்கிறது. இதைத்தான் பங்குச் சந்தை கபளீகரம் செய்யபுறப்பட்டிருக்கிறது. இதை அனுமதிக்கக் கூடாது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.500 ஓய்வூதியம் பெறுபவர்கள் 14 லட்சம் பேர். தமிழகத்தில் முதியோர், ஆதரவற்றோர் பெறும் ஓய்வூதியம் ரூ.1000. இதுதான் வருங்கால வைப்புநிதி சமூக பாதுகாப்பின் லட்சணம். ஏஅய்சிசிடியு தரப்பில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு ரூ.7500 ஓய்வூதியம் வேண்டுமென கேட்கி றோம். மாநாட்டில் இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்த பின்னணியில்தான் வருங்கால வைப்புநிதி வாரியம் கூடி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 பற்றி பரிசீலித்து வருகிறது.

பேறுகால விடுப்பு அதிகரிப்பு

உழைப்பு பெண் மயமாகி வரும் சூழலில் பேறுகாலப் பயன் சட்டத்தின்படியான பேறுகால விடுப்பை 12 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக மாற்றப்பட வேண்டும் என்று மாநாடு பரிந்துரைத்திருப்பது தொடர்ந்த இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி. அமலாக்கத்தை கண்காணிப்பது தொழிற்சங்க இயக்கத்தின் கடமையாகிறது.

மன்மோகனுக்கு பதிலடி தரப்படும்

44வது தொழிலாளர் மாநாட்டில் பேசிய பாரத பிரதமர் மன்மோகன் சிங், இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர்களை அதிகமாக பாதுகாக்கின்றன என்றும், சட்டங்களில் திருத்தம் வேண்டும் என்றும் சொன்னார். வளைந்து கொடுக்கக் கூடிய சட்டங்கள் இல்லாததால் முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அச்சப்படுவதாகவும், அதனால் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் கவலைப்பட்டார்.

பொருளாதார நெருக்கடி காலங்களில் தொழிலாளர்களை வெளியேற்ற முடியாமல் முதலாளிகள் சிரமப்படுகிறார்கள் என்றும், இருக்கிற தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற முடியாமல் போவதால் வேலை கிடைக்காமல் இருக்கும் கோடிக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் அதனால் அந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

அப்படியானால் வெளியேற்றப்படும் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பங்கள் என்ன செய்யும்? அவர்கள் அடுத்த நாள் வாழ்க்கைக்கு என்ன செய்வார்கள்? தூக்குப் போட்டுக் கொள்ள வேண்டுமா? புதிதாக உள்ளே வந்த தொழிலாளர்களுக்கும் நாளை அதே நிலைமைதானே? ஆக, தொழிலாளர்கள் ஷிஃப்ட் ஷிஃப்ட்டாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற மகத்தான கொள்கை அல்லவா மன்மோகனின் கொள்கை? ஏற்கனவே இந்திய விவசாயிகள் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்?

ஹூண்டாய் நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, அங்குள்ள நிரந்தர தொழிலாளர்களைப் போல ஆலையின் உணவு விடுதியில் உணவு கிடைப்பதில்லை. வெளியே சென்று உணவருந்திவிட்டு திரும்பும் வரை உணவு இடைவேளையும் தரப்படுவதில்லை. அதனால் பல நேரங்களில் பட்டினியாய் வேலை பார்க்கிறார்கள். நிரந்தர தொழிலாளர்கள் குடித்துவிட்டு மிச்சம் இருந்தால் அவர்களுக்கு தேநீர் கிடைக்கும். அதையும் அந்த எச்சில் குவளைகளை எடுத்துச் சென்று கழுவிக் கொண்டு வந்து அந்த மிச்சத் தேநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டும். திரு.மன்மோகன் அவர்களே அவர்களது மவுன ஓலம் உங்கள் காதுகளுக்கு எட்டுகிறதா? அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? அந்நியர்களுக்கு அடிபணிவதும் அவர்களுக்கு பல்லக்கு தூக்குவதும் உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி தரலாம். ஆனால் இந்திய மக்கள், இந்திய தொழிலாளர்கள் அதுபோன்ற செயலை அவமானமாகக் கருதுபவர்கள்.

நவீன நாகரிக இந்தியாவை கட்டியெழுப்பும் இவர்கள் சமூகத்தின் ஓரஞ்சாரத்தில் இருக்கின்றனர். ஆனால் இந்திய தொழிலாளர் மாநாட்டில் மன்மோகன் சிங் பேசும் போது விரைவான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒவ்வொரு தொழிலாளர் மாநாட்டிலும் தொழிலாளர் தரப்பில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. அமைப்புச்சாரா தொழிலாளர் சமூகப்பாதுகாப்பிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஒதுக்கீடு, காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் (இகஅதஅ) சட்டத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்கள் பற்றி தொடர்ந்து மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

ஆனால் பரிந்துரைகள் எதையும் அமல்படுத்த மறுத்துவிட்டு தொழிலாளர் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டிருப்பதாய் பிதற்றுவதை இந்த நாட்டு மக்களும், தொழிலாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மன்மோகனும், அலுவாலியாவும், சிதம்பரமும் எப்போதுமே 9% வளர்ச்சி என்று கூக்குரல் இடுவார்கள். முதலாளித்துவ அறிவுஜீவிகள், மேல் மத்திய தர வர்க்கம், 9% வளர்ச்சி இருந்தால் வறுமை, பிணி போன்ற எல்லாவற்றையும் அது அடித்துக் கொண்டு போகும் என்று இந்தக் கூச்சலோடு இணைந்து கொள்வார்கள்.

1991ல் துவங்கிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு இன்று என்ன நிலைமை? இந்தியாவில் 42% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக உள்ளனர். இது மிகவும் பின்தங்கிய சூடான் போன்ற நாடுகளை காட்டிலும் அதிகம் என்று சர்வதேச குறியீடு சொல்கிறது. நம் மாணவர்கள் கணிதத்தில், அறிவியலில் மிகவும் பின்தங்கியிருப்பதும் சர்வதேச குறியீட்டு அறிக்கையில் தெரிய வந்தது. இது தேச அவமானம் என்று ஒத்துக் கொண்டார் பிரதமர். இது களையப்பட வேண்டுமென்றால் அன்றாடங்காய்ச்சிகளுக்கு, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வேண்டும்.

ஊழல் மலிந்த, காகிதத்தில் மட்டுமே உள்ள அரைகுறை சட்டங்கள், அதுவும் கூட ஏகப்பெரும்பான்மை தொழிலாளர்களை தொட்டுக் கூடப் பார்க்காத சட்டங்களான, ஊரக வேலை உறுதி சட்டம், ராஷ்ட்ரிய ஸ்வத்ய பீம யோஜனா, வருங் கால வைப்பு நிதி, கல்வி உரிமை சட்டம் போன்றவற்றை எல்லாம் அரசின் நடவடிக்கைகளாக மாநாட்டில் பிரதமர் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

இந்தச் சட்டங்கள் பற்றி, சட்டத்தை அமலாக்கும் துறை பற்றி, நிறுவனங்கள் பற்றி, அவற்றின் கேலிக்கூத்தான செயல்பாடு பற்றி நாடறியும்.

6% அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இருக்கக் கூடிய கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் ஒழித்துக்கட்ட 1948ம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்கிறார். ஏதோ ஏகப்பெரும்பான்மை தொழிலாளர்கள் இந்தச் சட்ட வரம்புக்குள் இருப்பது போல் பேசுகிறார்.

தொழிற்சாலை சட்டத்தில்தான் தொழிலாளர் பாதுகாப்புக்கான வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரமான குடிதண்ணீர், கழிவறை போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதனால்தான் விசைத்தறிக்கு இதை பொருத்த வேண்டும் என ஏஅய்சிசிடியு இயக்கம் நடத்துகிறது. ஆனால் பிரதமர் வேலையில் இருக்கும் தொழிலாளிக்கு இது ஆகக் கூடுதல் பாதுகாப்பை தருவதாக சொல்லி இதில் மாற்றம் வேண்டும் என்கிறார்.

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் பறிக்கின்ற மன்மோகனால் உழைக்கும் பெண்கள் மீது, இடம் பெயரும் தொழிலாளர் மீது கரிசனம் காட்ட முடியுமா? பெண்கள் குடும்பம், வேலை என்ற இரண்டு சுமைகளை சுமக்கிறார்கள் என்ற அவர் பெண்கள் வேலைக்கு வருவது அதிகரிக்க வேண்டும் பகுதி நேர வேலை என்பதை சட்டப்படியானதாக ஆக்க வேண்டும் என்று குறிப்பட்டார்.

கணக்கில் வராத கோடானுகோடி பெண் தொழிலாளர்கள் நாட்டில் இருக்கிறார்கள். நெல்லையில் பீடி சுற்றும் பெண்களில் சில லட்சம் பேர் அரசு கணக்கில் இல்லை. எனவேதான் பெண் தொழிலாளர் பற்றிய கணக்கெடுப்பு வேண்டும் என ஏஅய்சிசிடியு கேட்கிறது. ஆனால் பிரதமர் சொல்லும் பகுதி நேர வேலை குறைந்த அத்தக் கூலிக்கு பெண்களை சுரண்டவும், அதற்கு சட்ட வடிவம் கொடுக்கவும் அரசு தயாராகி வருவதையே காட்டுகிறது.

இடம் பெயரும் தொழிலாளர் விசயத்தில் அரசின் திட்டத்தில் உள்ளஆதார் அட்டை, அவர்கள் எங்கு வேலைக்கு சென்றாலும் பயன்களை பெற்றுக் கொள்ள வசதியானதாக இருக்கும் என்றார். இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டம் மற்றும் விதிகள் இருப்பதெல்லாம் அவர் மூளைக்கு உரைக்கவில்லை.

தொழிலாளர் திறன் வளர்ப்பு பிரச்சினை தான் மாநாட்டின் குவிமய்யம் எனக் குறிப்பிட்ட அவர், அரசு - தனியார் கூட்டில் 1500 தொழில் பயிற்சி நிறுவனங்களும் (அய்டிஅய்), 5000 திறன் மேம்பாட்டு மய்யங்களும் நிறுவப்படும் என்கிறார். இது ஒட்டுமொத்த வேலை வாய்ப்புப் பிரச்சினையை திசை திருப்பும் முயற்சி. ஒருபுறம் பொறியியலில் பட்டம், பட்டயப் படிப்பு, படித்தவர்களும், இன்னொரு புறம் தகவல் தொழில் நுட்பம் பயின்றவர்களும் சான்றிதழ்களோடு தெரு தெருவாக அலைந்து கொண்டிருப்பது மன்மோகனுக்கு தெரியாதா? தொழில் உறவை மேம்படுத்த வேண்டும் என்று வாய் கிழிய பேசிய அவர் தேசிய தரைமட்ட குறைந்தபட்ச ஊதியம் பற்றி வாய் திறக்க மறுத்துவிட்டார்.

தொழிலாளர் வர்க்க இயக்கம் மன்மோகனின் இந்த அனைத்துவித குற்றமய அலட்சியங்களுக்கும் நிச்சயம் பாடம் புகட்டும். பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தம் அதற்கு கட்டியம் கூறும்.

Search