COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, March 26, 2012

Mar-2-5

கட்டுரை

தனியார் மருத்துவத்தின் மற்றுமொரு முகம்

மஞ்சுளா

இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்கும் பக்திக்கும் உரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் மதகுருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

முதலாளித்துவம் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னைப் போலவே மாற்றி விடுகிறது. மருத்துவத்தையும் அப்படித்தான் மாற்றிவிட்டது. மருத்துவம் இனியும் உயிர் காக்கவோ, நோய் போக்கவோ இல்லை. சில நேரத்தில் சில நோய்களை மறுஉற்பத்தி செய்கிறது. அது லாபத்துக்கானது. இன்றைய சூழலில் கோடிகோடியாய் லாபம். அது சேவை என்ற நிலைமை மாறி, தொழில் என்ற நிலைமை வந்துவிட்டது. நின்றுவிட்டது. அது பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. பெருநிறுவனங்கள் மனது வைத்தால் சிகிச்சை. இல்லை என்றால் இல்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இஇஜி எடுக்கப் பணம் செலவழிக்கவக்கற்ற நோயாளிகள் மாதக் கணக்கில் காத்திருக்கிறார்கள். நாட்டு மக்கள் நல்வாழ்வு பற்றி சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் சோனியா காந்தி கூட மருத்துவத்துக்கு வெளிநாடு செல்கிறார். என்ன நோய், எங்கு செல்கிறார், என்ன மருத்துவம் என்ற விவரங்கள் கூட நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.

லாபம் வருகிறது என்றால் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஒரு மருத்துவமனை பெருகி பல்சிறப்பு மருத்துவமனையாகி பளபளப்பு பெறுகிறது. அந்த பளபளப்புக்கும் தொழிலாளிக்கும் தொடர்பில்லை என்று ஆகிறது. தொழிலாளி அவர் உருவாக்கிய செல்வத்தில் இருந்து அந்நியப்படுத்தப்படுவதை உணர நேர்கிறது. பின் போராட நேர்கிறது.

சங்கம், முழக்கம், பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை புருவம் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்த விமானிகள், பிற விமானப் பணியாளர்கள் தரையிறங்க நேர்ந்தது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு மனநிலை கொண்டிருந்த தனியார் மருத்துவமனை செவிலியர்கள் இன்று வீதியில் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். போராட்டமும் தன்னைச் சுற்றியுள்ளவர்களை போராட்டக் காரர்களாக மாற்றும்.

‘ஒய் திஸ் கொலைவெறி? இன்க்ரீஸ் தி சேலரி...’ மார்ச் 8 அன்று ஊதிய உயர்வு பணிநிலைமைகளில் மாற்றம் கோரி அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய பேரணியில் ஒலித்த முழக்கம் இது. அப்போலோ, ஃபோர்டிஸ் மலர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் போன்ற சென்னை தனியார் மருத்துவமனைகளின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த ஆண்டு சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்துக்கு அதன் உண்மையான பொருளில் பெருமை சேர்த்திருப்பவர்கள்.

பிரிக்கால் போராட்டத்தில், மாருதி தொழிலாளர் போராட்டத்தில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் சொல்லப்பட்டது போல் செவிலியர்கள் போராட்டத்திலும் வெளியாட்கள் சதி என்று அப்போலோ நிர்வாகம் சொல்கிறது. போராடுபவர்கள் ஏதும் அறியாதவர்கள் என்று போராட்டங்களை எதிர்ப்பவர்கள், மற்றவர்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். பொதுவாக இந்த முயற்சி தோற்றும் போகிறது.

வெறும் ரூ.6000 சம்பளம் பெற்று, நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்த செவிலியர்கள், போராட்டத்தில் இறங்கிய மூன்றாவது நாளே ரூ.12,000 பெற முடிகிறது. போராட்டம் சட்டவிரோதம் என அறிவித்துக் கொண்டிருந்த, புதிதாக செவிலியர்களை வேலைக்கு எடுக்க விளம்பரம் கொடுத்த, தங்கும் விடுதிகளை பூட்டி செவிலியர்களை வெளியேற்ற இருந்த அப்போலோ நிறுவனம், அடுத்த சில நாட்களில் ரூ.13,750 வரை ஊதிய உயர்வு அறிவிக்கிறது.

நிர்வாகம் வேறு வழியின்றி தருகிறது. தருவதற்கு நிர்வாகத்திடம் செவிலியர்கள், பிற மருத்துவ பணியாளர்கள் உருவாக்கிய செல்வம் குவிந்து கிடக்கிறது.

சம்பளம் குறைவாகக் கொடுப்பதுடன் அவர்கள் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வது, இத்தனை ஆண்டு காலம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்த ஒப்பந்தம், நிர்ப்பந்த ஒப்பந்தம் மீறப்பட்டால் மிகப்பெரிய தொகையொன்றை செவிலியர்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் என்ற கொத்தடிமை முறைகள் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் அந்த மூன்றே நாட்கள் போராட்டத்தில் திரும்பப் பெறப்பட்டன. தங்கும் இடம், போக்குவரத்து வசதி போன்றவற்றில் உள்ள குறைகள் களையப்பட வேண்டியுள்ளது. இனி அவர்கள் போகப் போகப் பார்த்துக் கொள்வார்கள்.

தற்போதைய பெருநிறுவன மருத்துவ உலகில் வசதியில்லாத மருத்துவர்கள் தனியாக ஒரு கிளினிக் வைத்துக் கொண்டு இந்தப் பெருநிறுவனங்களுடன் போட்டியில் இறங்க முடிவதில்லை. சின்ன மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுகின்றன. மருத்துவர்களும் பெருநிறுவன மருத்துவமனைகளில் தொழிலாளர்களாக மாறுகிறார்கள். அனுபவம், நிபுணத்துவம் பெற்ற பிறகே மதிப்பு மரியாதை எல்லாம். இதற்கு ஓரிரு பத்தாண்டுகள் ஆகும். அதுவரை அவர்கள் அந்த மருத்துவமனைகளில் கூலி அடிமைகள்.

தனியார், லாபம் என்றெல்லாம் ஆகிவிட்ட பிறகு மருத்துவம் புனிதப்பசுவாக இருக்க முடியாது. தனியார் மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம் தனியார் மருத்துவம், அது தொழிலாளர்களை நடத்துகிற விதம் பற்றிய பல்வேறு கேள்விகளை முன்னிறுத்துகிறது. பிரச்சனையின் பரப்பு விரிகிறது.

சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி, நாட்டின் மருத்துவத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தனியார் மருத்துவத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் இந்திய மருத்துவத் துறைக்கு முழுமையான உள்கட்டுமானத் துறை அந்தஸ்து வழங்குவது, அதை ஒரு மிகப் பெரிய வேலை வாய்ப்பு உருவாக்கும் துறையாக மாற்றும் என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தன் பங்கை கணிசமான அளவு உயர்த்தும் என்றும் மருத்துவத்தை சக்திவாய்ந்த பொருளாதார என்ஜினாக மாற்றும் என்றும் சொல்கிறார்.

உள்கட்டுமானத் துறையின் உபதுறைகள் பட்டியலில் மருத்துவமனைகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர்கள் குழு முடிவெடுத்துள்ளது. மருத்துவம் தனியார் பொறுப்பு என்று பொறுப்பாக முடிவெடுக்கிறார்கள் நமது அமைச்சர்கள். 12ஆவது அய்ந்தாண்டுத் திட்ட முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

டாக்டர் பிரதாப் ரெட்டியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் என்ன ஆகும்? பெரு வீத திட்டங்களுக்கு நீண்டகாலக் கடன் அளிக்கும் இந்திய உள்கட்டுமானத் துறை நிதிநிறுவனம் போன்ற நிறுவனங்களிடம் இருந்து தனியார் மருத்துவமனைகள் நிதி பெற முடியும். திருப்பிச் செலுத்தநீண்டகாலம்எடுத்துக்கொள்ளலாம்.

1000 பேருக்கு 300 படுக்கை வசதிகள் என்பது சர்வதேச மருத்துவ கழகத்தின் அளவீடு. இந்தியாவில் வெறும் 1.5 படுக்கை வசதிகள் தான் உள்ளன. 1000 பேருக்கு 0.5 மருத்துவர், 0.9 செவிலியர்தான் உள்ளனர். (மத்தியபிரதே சத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையை பன்றிக் கூட்டம் ஒன்று கவ்விக் கொண்டு போனது. அங்கேயே இன்னொரு அரசு மருத் துவமனைக்கு நாய் கடித்ததற்கு ஊசி போட தன் குழந்தையை எடுத்துச் சென்ற ஆதிவாசி தந்தையிடம், தங்கள் கோட்டா நிறைவேற குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்களாம்). அடுத்த பத்தாண்டுகளில் 8 லட்சம் படுக்கை வசதிகள் தேவைப்படும்.

ஏஅய்சிசிடியு தலைமையிலான காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் மருத்துவமனை சங்க நிர்வாகிகள் செவிலியர் போராட்டம் துவங்கியதிலிருந்து ஒருமைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் 7 அன்று அனைத்து செவிலியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில துணைத்தலைவர் தோழர் குமரேஷ் கண்டன உரையாற்றினார். மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தன்று இதுவரை தமிழ்நாடு காணாத அளவில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் வெள்ளை கோட் புரட்சி என்ற பதாகை தாங்கி நடத்திய பேரணியை ஏஅய்சிசிடியு மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் .எஸ்.குமார் துவக்கி வைத்து பேசினார். பேரணியின் இறுதியில் நடந்த கூட்டத்தில் ஏஅய்சிசிடியு அகில இந்திய செயலாளர் தோழர் புவனேஸ்வரி கண்டன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏஅய்சிசிடியு அனைத்து கிளை இணைப்பு சங்கங்களின் முன்னணி தலைமை தோழர்கள் பங்கேற்றனர். போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஏஅய்சிசிடியு, தமிழகம் முழுக்க சுவரொட்டி பிரச்சாரம் நடத்தியது.

இந்த நிலைமைகளை மாற்றத்தான் மருத்துவமனைகளுக்கு உள்கட்டுமான துறை தகுதி வேண்டும் என்கிறார் பிரதாப் ரெட்டி. செவிலியர்களை, மருத்துவர்களை, இன்ன பிற மருத்துவப் பணியாளர்களை கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கி லாபம் சம்பாதித்தது போக, நாட்டு மக்கள் பணத்தையும் பெற்றுக் கொண்டு, உள்கட்டுமான துறைக்கு வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு மிகச்சிறப்பாக மருத்துவசேவை செய்யலாம்.

புதிய மருத்துவமனை திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி விடுமுறை, மருத்துவமனை நிலத்தில் முதலீடு செய்த செலவை ஈடுகட்டும் விதம், மருத்துவ நில வர்த்தக முதலீட்டு அறக்கட்டளை நிலத்தில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தில் இருந்துவரும் வருமானத்தை கணக்கு காட்ட சலுகைகள் என இன்னும் சில சலுகைகளை தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் கேட்கின்றன.

மருத்துவம் உள்கட்டுமானத் துறையாகிவிட்ட பிறகு, இந்திய உள்கட்டுமானத் துறை நிதிநிறுவனம் மூலம் தாராளமாகப் புழங்கும் மக்கள் பணத்தில் வர்த்தகம் செய்யலாம் என்று ஆகிவிட்ட பிறகு, இப்போது மருத்துவ துறையில் வெறும் தகவல் தொழில்நுட்ப சேவையில் மட்டும் இருக்கிற டாடாவும், எல்லா துறையிலும் புகுந்து புறப்படுகிற அம்பானியும் மருத்துவத் துறையில் நுழைந்துவிட்டால்...? நோயாளி ஒருவர் வந்துவிட்டால், அவர் உடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆய்ந்து விடமாட்டார்களா? ‘எனது மகளுக்கு சிறுநீரகம் பழுதடைந்துவிட்டது. எங்கள் இருவ ரின் ரத்தங்களும் அவளுக்குப் பொருந்தாத வெவ்வேறு வகை. ஆனால் இப்போது அவள் நலமாக இருக்கிறாள் என்று ஒரு பெண் குழந்தையின் பெற்றோர்கள் சொல்வதாக மியாட் மருத்துவமனை விளம்பரம் ஒன்று வெளியாகி இருக்கிறது. மியாட் மருத்துவமனையில் சிறுநீரகம் கிடைக்கும். (காசிருந்தால் வாங்கலாம்). வாசன், ‘நாங்க இருக்கோம்என்று அழைத்துக் கொண்டே இருக்கிறார்.

ஆக, இவர்கள் எல்லாம் மருத்துவத்தை பெரிய வர்த்தகமாக்கி, வேலை வாய்ப்பைப் பெருக்கி, மருத்துவத்தை பொருளாதார என்ஜினாக்கி, மொத்த உள்நாட்டு உற்பத்திக்குபங்களித்துக் கொண்டிருக்கும் வேளையில், கிராமப்புற, நகர்ப்புற வறிய மக்கள் என்ன நோய் வந்தது என்று கூட தெரியாமல் சாவார்கள். மருத்துவம் சேவை இல்லை என்பதற்கு அரசு அங்கீகாரம், நிதிஉதவி, இன்ன பிற சலுகைகள் தரப்பட்டு தனியார் மருத்துவமனைகள் தயவில் தள்ளப்படுவார்கள். குஷ்வாஹா போன்ற ஊழல் அரசியல்வாதிகள் தேசிய ஊரக சுகாதாரத் திட்ட நிதியைக் கொள்ளையடிப்பார்கள்.

மறுபக்கம், ஆஷா தொழிலாளர்கள் நிலைமைகளுக்கு தனியார் மருத்துவமனை செவிலியர்கள், பிற பணியாளர்கள் தள்ளப்படுவார்கள்.

அப்போலோ செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரிய தங்கள் பேரணியில்தனியார் மருத்துவமனை ஆதிக்கம், செவிலியர்களை பாதிக்கும் என்று முழக்கம் எழுப்பினார்கள். தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம், அதற்கு அரசு வழங்கவுள்ள அங்கீகாரம், செவிலியர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள வறிய மக்கள் மருத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்.

சென்னை தனியார் மருத்துவமனைகள் செவிலியர் போராட்டம், ஊதிய உயர்வு, மேலான வேலை நிலைமைகளுக்கு அப்பால் மருத்துவம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்பவில்லை. செவிலியர் பிரச்சனைகளும் இத்துடன் தீர்ந்துவிடப் போவதில்லை. இந்த புதிய இளைய படித்த பிரிவினர் போராட்டத்தை முற்போக்கு சக்திகள் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

Search