கட்டுரை
தடை செய்யப்பட்ட புத்தகங்கள்
ஜி.ரமேஷ்
இந்தப் புத்தத்தை நீங்கள் படிக்க
முடியாது: சுதந்திர சகாப்தத்தில் தணிக்கை
(You can not read this Book:
In the age of Freedom) இது புத்தகத்தின் தலைப்பு. இதை எழுதியவர்
லண்டனைச் சேர்ந்த நிக் கோகென் (Nick Cohen). இந்த புத்தகத்தைப் பற்றிய பல
திறனாய்வுகள் பல்வேறு ஆங்கில நாளிதழ்களில், ஊடகங்களில் முக்கிய இடத்தைப்
பிடித்துள்ளன. அதோடு சேர்த்து உலகெங்கிலும் இந்தியாவிலும்கூட என்னென்ன
புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன
என்பது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
புத்தகங்களை ஆட்சியாளர்கள், அரசுக்கு
எதிராக உள்ளது என்றோ, ஆபாசமாக இருக்கிறது என்றோ, தனிமனித அந்தரங்கங்களை
வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றோ, மத
நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என்றோ
பல காரணங்களைச் சொல்லி உலகம் முழுவதும் தடை செய்து வந்துள்ளார்கள். வருகிறார்கள். புத்தகங்களைத் தடை செய்வது மட்டுமல்ல. அப்புத்தகங்களை எழுதியவர்களுக்கு
தண்டனையும் விதிக்கிறார்கள். எழுத்தாளர்களை நாடு கடத்துவது மட்டுமல்ல. அவர்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அரசர்கள், தன்னைப்
புகழ்ந்து பாடுபவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுப்பதும். இகழ்ந்து பாடுபவர்களை
சிறையிலிட்டு தண்டிப்பதும் ஆண்டான்
அடிமை காலத்தில் இருந்தது. அன்றைக்கு
அரசர்களுக்குப் பிடிக்காத இலக்கியங்களை
உருவாக்கிய புலவர்களுக்கு மட்டுமே தண்டனை. ஆனால் இன்றைக்கு புத்தகங்களை
எழுதியவர்கள், அப் புத்தகங்களை மொழிபெயர்த்தவர்கள், அவற்றின் வெளியீட்டாளர்கள் ஏன் அப்புத்தகங்களின் ஆதரவாளர்கள்
கூட தாக்கப்படுகிறார்கள். கொலை மிரட்டலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
சாத்தானின் வேதங்கள் எழுதிய சல்மான்
ருஷ்டிக்கு ஈரானின் கோமேனி இருபது
ஆண்டுகளுக்கு முன்பு “ஃபத்வா” எனும் மரண
தண்டனை விதித்தார் என்றால் இன்றைக்கும்
கூட அவர் இந்தியாவிற்கு, ஜெய்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவிற்கு வர முடியவில்லை என்பது புத்தகங்கள் தடை என்ற பெயரில்
நடக்கும் அராஜகங்கள், அட்டூழியங்கள்
இன்னும் தீவிரமாகி உள்ளது என்பதையே
காட்டுகிறது. லஜ்ஜாவை எழுதிய தஸ்லீமா
நஸ்ரீனை பங்களாதேஷ் பாடாய் படுத்தி விரட்டியத்தது என்றால், இந்தியாவில் இருந்தவர்கள்
அவருக்கு அடைக்கலம் தருவதாகச் சொல்லி
தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்
கொண்டவர்கள் பின்னர் ஆபத்து வந்தபோது
அவரை காக்கத் தயாராக இல்லை. இவர்கள்
இருவரும் தங்கள் புத்தகத்தில் அப்படி என்ன
எழுதி விட்டார்கள்? தாங்கள் உணர்ந்ததை, உண்மைகளை வெளிப்படுத்தினார்கள். இஸ்லாம் மத அடிப்படைவாதிகள் இவர்களை
எதிர்த்தார்கள் என்றால், இந்து மத அடிப்படைவாதிகள் இவர்களை தங்கள் ஆதாயத்திற்குப்
பயன்படுத்திக்கொண்டார்கள்.
1992 டிசம்பர் 6ல் பாபர் மசூதி பாரதிய
ஜனதா இந்துத்துவா வெறியர்களால் இடிக்கப்பட்டவுடன் பங்களாதேμல் சிறுபான்மையினராக இருந்த இந்துக்கள் மீது நடத்தப்பட்ட
அராஜகத் தாக்குதல்களை தஸ்லீமா நஸ்ரீன்
லஜ்ஜாவில் படம் பிடித்துக் காட்டினார். பாபர்
மசூதி இடிக்கப்பட்டதன் மூலம் பாரதிய
ஜனதா பங்களாதேஷில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்களை பலி கொள்ளச் செய்து விட்டது என்பதையும் அதில் அவர் பதிவு செய்யத்
தவறவில்லை. ஆனால், தன்னுடைய இந்து மதவெறி ஆதாயத்திற்காக, இரட்டை நாக்கு
பாஜக தஸ்லிமாவிற்கு குஜராத்தில் அடைக்கலம் கொடுப்போம் என்றது. பின்னர் அம்போ
என்று விட்டுவிட்டது. இதே வேலையைத்தான் மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கமும்
செய்தது என்பதுதான் கொடுமையிலும்
கொடுமை. ஏனென்றால் அவர்களுக்கும்
பெரும்பான்மையினரின் வாக்கு முக்கியம்.
தற்போது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், இஸ்லாத்திற்கு எதிரானது என்ற
பெயரில் எழுத்துச் சுதந்திரத்திற்கும் எண்ணத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கும்
எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால், அந்த
மத அடிப்படைவாதிகளை வளர்த்து விட்டது
யார்? இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று யார் இப்போது சித்தரிக்கிறார்களோ
அவர்கள்தான். அந்த அமெரிக்காதான் சோசலிச சோவியத் யூனியனுக்கு எதிராக இஸ்லாமியமத அடிப்படைவாதத்தை ஊட்டி விட்டது. பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து கலகம்
செய்ய வைத்து பின்லாடன்களை வளர்த்துவிட்டது. அமெரிக்கா வளர்த்துவிட்ட மத அடிப்படைவாதம் அதற்கு எதிராகவே திரும்பியது. இப்போது தன்னைக் காப்பற்றிக் கொள்ள
இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஓலமிடுகிறது. அந்தப் பின்னணியில்தான் இது போன்ற
புத்தகங்கள் வெளிவருகின்றன எனலாம்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்
கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இதுபோன்ற
செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இந்து
மத அடிப்படைவாதிகள்தான் கலாச்சாரக் காவலர்கள் என்ற பெயரில் ஓவியங்களை புத்தகங்களை எரிப்பது, தடை செய்யக் கோருவது, படைப்பாளிகளைத் தாக்குவது என்பதை
தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். எம்.எஃப்.உசைனின் ஓவியத்தை எரித்தார்கள். சென்னையில் பாரதி புத்தக நிலையத்திற்குள் சென்று அங்கிருந்த பகுத்தறிவு புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதற்கு
ஆட்சியாளர்களும் துணை நின்றார்கள். நிற்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு
முன்பும்கூட, மாக்ஸ் வீய்லி எழுதிய (Hindu Heaven) இந்து சொர்க்கம் (1934), கேத்ரின்
மயோ எழுதிய (The Face of Mother India) அன்னை இந்தியாவின் முகம் (1936), ஆர்தர்
மயோ எழுதிய லிங்கத்தின் நாடு (The Land of The Lingam) போன்ற புத்தகங்கள் பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டன. சுதந்திர இந்தியாவில் ஆப்ரே மேனன் எழுதிய
ராமாயனா (The Ramayana) 1956ல் தடை
செய்தார்கள். சிவாஜி: இஸ்லாமிய இந்தியாவில்
இந்து மன்னர் என்று அமெரிக்கர் ஒருவர்
எழுதிய புத்தகத்திற்கு 2004ல் மகாராஷ்ரா அரசு
தடை விதித்தது. 2010ல் உச்சநீதிமன்றம் அத்தடையை நீக்கியது என்பது வேறு விசயம். சமீபத்தில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக
உள்ளது என்று சொல்லி ஏ.கே. ராமனுஜம் எழுதிய பல ராமாயணங்கள் என்ற புத்தகத்தினை
டில்லி பல்கலைக் கழக பாடத்திட்டத்தில்
இருந்து தூக்கிவிட்டார்கள். அந்த புத்தகத்தில்
இராமாயணக் கதைகள் இந்தியா முழுவதும்
பலவாறு சொல்லப்பட்டுள்ளன என்பதை
ஆதாரபூர்வமாக அவர் விளக்கியுள்ளார்.
இதுபோன்ற புத்தகங்கள் மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பின் காரணமாகத்தான்
தடை செய்யப்படுகின்றன என்பது போன்ற
தோற்றத்தை ஆளும் அரசுகள் உருவாக்கப்
பார்க்கின்றன. உண்மையில், ஆளும் வர்க்கங்கள் அந்த வர்க்கங்களின் ஆட்சியாளர்கள்
இதுபோன்ற அடிப்படைவாதிகளின் குரல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்கு எதிரான எண்ணங்களை
மக்களிடத்தில் உருவாக்கும் என்று நினைத்தாலும், மக்களுக்கு ஆட்சியாளர்கள் பற்றிய
உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவும்
புத்தகங்களைத் தடை செய்து விடுவார்கள். பிரிட்டிஷ் அரசு அது போன்ற பல புத்தகங்களைத் தடை செய்துள்ளது. பகத்சிங்கின் நான்
ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற புத்தகத்தை
அன்றைய ஆங்கிலேய அரசு தடை செய்திருந்தது. அப்புத்தகத்தை தோழர் ஜீவானந்தம்
தமிழில் மொழி பெயர்க்க ஈ.வே.ரா. பெரியார்
அதை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம்
வெளியிட்டார். அதனால், அவர்களுக்கு
ஆங்கிலேய அரசு அபராதம் விதித்தது.
ஸ்டான்லி உல்பெர்ட் என்பவர் எழுதிய
ராமனுக்கு ஒன்பது மணி நேரம் (Nine Hours to Rama) என்ற புத்தகத்தில் கோட்சே காந்தியை
எவ்வாறு கொன்றார் என்று விவரித்து
இருந்ததால் 1962ல் இந்திய அரசால் தடை
செய்யப்பட்டது. பாதுகாப்பு குறைபாடே
அந்தக் கொலைக்குக் காரணம் என்றும் அதில்
கூறப்பட்டிருந்தது. மிக்கேல் எட்வர்ட் எழுதிய, நேருவின் அரசியல் வாழ்க்கை (Nehru: Political Biography)
என்ற புத்தகம் கண்மணி ராஜம்
கவிதை கருணாநிதியின் பாசாங்கைப் படம்
பிடித்துக் காட்டியதாலேயே இன்குலாப்
கவிதைகள் சென்னைப் பல்கலைக் கழகப்
பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. 2011ல் ஜோசப் லெலிவெட்டின் மகா ஆத்மா: மகாத்மா காந்தியும் இந்திய போராட்டமும்
(Great Soul:
Mahathma Gandhi and His Struggle with India) என்ற புத்தகத்தில் காந்தியின்
அந்தரங்க வாழ்க்கை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதற்காக குஜராத் அரசு
அப்புத்தகத்தைத் தடை செய்தது. இப்படி பல
காரணங்களைச் சொல்லி மக்களிடமிருந்து
உண்மையை மறைக்க ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு
வகைதான், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையே மாற்றி எழுத காவிக்கூட்டங்கள் தங்கள் ஆட்சியின்போது தயாரானதாகும்.
இதில் மிக முக்கியமாக கவனிக்க
வேண்டியது என்னவென்றால் ஹமிஸ் மெக்டொனால்ட் என்பவர் எழுதிய பாலியஸ்டர்
இளவரசர்: திருபாய் அம்பானியின் வளர்ச்சி
(Polyester
Prince: The Rise Dhirubai Ambani) என்கிற புத்தகம் அம்பானி எப்படி பல
ஆயிரங்கோடிகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்
என்பதைப் போட்டு உடைக்கும் புத்தகம். அவதூறு வழக்கு தொடருவேன் என்று
அம்பானி மிரட்டினார். 1988ல் அரசு அந்த
புத்தகத்தைத் தடை செய்தது.
ஆட்சியாளர்கள் இப்படி பல புத்தகங்களை விற்பனைக்கு வராமல் தடை செய்வது
என்பது ஒரு புறம். மற்றொரு புறம் சில
புத்தகங்கள் விற்பனையில் இருக்கும். ஆனால்
ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்க, தேவைக்கேற்ப அவை தடை செய்யப்பட்ட
புத்தகங்களாகிவிடும். பகத்சிங் இறுதியாக
படித்துக் கொண்டிருந்த லெனின் எழுதிய
என்ன செய்ய வேண்டும், கார்ல் மார்க்ஸின்
மூலதனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை போன்றவை ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது
தடை செய்யப்பட்ட புத்தகங்கள் ஆகிவிடும்.
மருத்துவர் பினாயக் சென் மீது சட்டிஸ்கர்
அரசாங்கம் தேசத் துரோக குற்றம் சாட்டியது. அவர் வீட்டில் கார்ல் மார்க்ஸின் தாஸ்
காபிடல் புத்தம் இருந்தது என்றும் மார்க்சியம் சமூகத்தை பிளவுபடுத்தி வன்முறையை
போதிப்பதாகும் என்றும் அரசு சார்பில்
நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ராய்ப்பூர் அமர்வு
நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்டு ஆயுள்
தண்டனை வழங்கியது. அதேபோல் தடா
சட்டத்தின் கீழ், ஜெகனாபாத் மாவட்டம், பதாசி கிராமத்தைச் சேர்ந்த இகக(மாலெ)யைச்
சேர்ந்த 14 பேருக்கு ஆயுள் தண்டனை 2004ம்
ஆண்டு வழங்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. அவர்களிடத்தில் மார்க்சிய இலக்கியங்கள், விவசாய சங்க துண்டு பிரசுரங்கள், இந்திய மக்கள் முன்னணி ஆவணங்கள்
இருந்ததே அவர்கள் பயங்கரவாதிகள் என்பதற்குச் சான்று என்று சொன்னார்கள். அதை
நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டு தண்டனை
கொடுத்துள்ளன.
இது உலகமய காலகட்டம். நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ அரசுகள்
தங்கள் வர்க்க எசமானர்களைக் காப்பதற்காக
என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வார்கள். மக்களை திசை
திருப்ப, போராட்டங்களை மழுங்கடிக்க
கவர்ச்சிகரமான விசயங்களை கையாளுவார்கள். விழிப்புணர்வு கொண்டு மக்கள் போராடாமல் இருக்க அரசியல்ரீதியான புத்தகங்களைத் தடை செய்வார்கள்.
ஆனால், என்ன தடைகள் ஏற்படுத்தினாலும் உண்மை ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். உரிமைகள் நிச்சயம் வென்று காட்டும்