மாறி வரும் தமிழக அரசியல் சூழல்
கேலிச் சித்திரம் தீட்டும் மதி ஊடக முதலாளிகளின்
ஊதுகுழலாக மாறிச் சித்திரம் தீட்டியுள்ளார். பகுதி உண்மையை சொல்லி முழு உண்மையை மறைக்கப் பார்க்கிறார். காங்கிரஸ், பாஜக, திமுக, இடதுசாரிகள் எல்லோருமே
கூடன்குளம் அணுமின் நிலையம் வேண்டும் என்பதாலேயே, அது நாட்டுக்கு நல்லதல்ல எனத் திருவாளர் பொதுஜனம்
சொல்வதாக அவரது தூரிகை சித்திரம் தீட்டுகிறது. காங்கிரஸ், பாஜக, திமுக மூன்று கட்சிகளுமே நாட்டுக்கு நன்மை
செய்பவர்கள் அல்ல என்பது பகுதி உண்மையே. இந்தப்
பட்டியலில் ஜெய்தாபூர் அணுமின் நிலையத்தை எதிர்க்கும்
இடதுசாரிகளும் சேர்ந்திருப்பது, இடதுசாரி/வலதுசாரி எல்லைக்
கோட்டை, சிங்கூர், நந்திகிராம் போல் மங்கச் செய்கிறது என்பதும் துரதிர்ஷ்டவசமான பகுதி உண்மையே. அஇஅதிமுகவை
இந்தப் பட்டியலில் இருந்து நீக்கி வைக்கும் தந்திரத்தை, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் நிச்சயம் உணர்கிறார்கள்.
ஜெயலலிதா இன்னும் எத்தனை நாட்கள், பாலுக்கும்
காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலை எடுக்க முடியும்? அவர் பூனைக்குத் தோழன் என்ற நிலை நோக்கி நகர்வது, இனியன் குழு மற்றும் காவல்துறை மூத்த அதிகாரி ஜார்ஜின்
தயாரிப்புக்களில் இருந்து அறிய முடிகிறது. கருணாநிதி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியோர், கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க ஆவன செய் என அஇஅதிமுக அரசின்
மீது அரசியல் நிர்ப்பந்தம் கொடுக்கப் பார்க்கிறார்கள். இந்திய
ஆளும் வர்க்கங்களின் அமெரிக்க அடிவருடித்தனம் அணு
வல்லரசு போர்த்தந்திரத்தில் இருந்து, ஜெயலலிதா விலகி நிற்பது
கடினம் என்ற அரசியல் புரிதலுடன், காய்கள் நகர்த்தப்படுகின்றன. போராட்ட இயக்கம் பற்றி அவதூறுகள் பரப்புவது, மக்களின் எதிர்ப்புணர்வில் ஒரு தடுமாற்றத்தை கொண்டுவரப்
பார்ப்பது என்பவை, அடுத்து வரவுள்ள ஒடுக்குமுறையின் ஒரு
பகுதியே.
இந்தச் சூழல், இடிந்தகரை மக்களின் எதிர்ப்புப்
போராட்டத்தில் துணை நிற்பதில், தமிழ்நாட்டின் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் கடமையின் அவசர அவசியத் தன்மையை, மேலும் கூடுதலாக்கி உள்ளது. அந்த மக்களும், இவ்வளவு
காலம் கட்டிக்காத்த போராட்டத்தை, அவ்வளவு சுலபமாக
முறியடிக்க விடமாட்டார்கள்.
அசாதாரண வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழகமெங்கும், தாம் விதைத்த முதலாளித்துவ சார்பு மற்றும் அரசு
ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் எதிர்ப்பு விளைச்சலை
சந்திக்கிறார். நடந்து முடிந்த அய்ந்து மாநில சட்டமன்றத்
தேர்தல்கள், குறிப்பாக, உத்தரபிரதேசத் தேர்தல்கள், இந்தியாவின் ஆகப்பெரிய இரண்டு வலதுசாரிக் கட்சிகளான
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பலத்த அடி தந்துள்ளன. மணிப்பூர், உத்தர்கண்ட் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கும், கோவா, பஞ்சாப் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் ஆறுதல் தர முடியாது. நாடெங்கும்
காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு அரசியல்
வெளியும் வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில், காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு
அரசியல், மிக இயல்பாக, அஇஅதிமுக, திமுக
எதிர்ப்பு என நீள்கிறது. பாமகவின் சமீப கால
அறிவிப்புக்களும், இகக மற்றும் இககமா கட்சிகளின் சமீபத்திய மாநில மாநாடுகள் அஇஅதிமுக
எதிர்ப்பு நிலை எடுத்திருப்பதும், இந்த
நீட்சிக்கு சான்று கூறுகின்றன.
தமிழ்நாட்டில், அஇஅதிமுக, மக்கள்
எதிர்ப்பைத் திசைதிருப்ப, எதிர்ப்பு அடியின்
தீவிரத்தைக் குறைக்க, சில எதிர்ப்புக்களின்
போது தந்திரமாகப் பின்வாங்குவது, தமிழக
மக்களின் சீற்றத்தை மத்திய அரசுக்கு எதிராகத்
திருப்புவது என்ற அணுகுமுறை கொண்டு, முயற்சி எடுக்கிறது. மூவர் தூக்கு, கூடன்குளம், இலங்கைப் பிரச்சனை தற்காலிக பின்வாங்குதலுக்கு உதாரணங்கள். மாநிலத்திற்கு
கூடுதல் நிதி, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய
முதலீடு, உணவுப் பாதுகாப்பு மசோதா, முல்லைப் பெரியாறு, பயங்கரவாதத் தடுப்பு
மய்யம், ரயில்வே போலீசுக்கு சட்டம் ஒழுங்கு
அதிகாரம் போன்ற பிரச்சனைகளில், மத்திய
அரசு எதிர்ப்புப் போராளியாகத் தன்னைக்
காட்டிக் கொள்ளப் பார்க்கிறது.
ஆனால், ஜெயலலிதாவின் இந்த முயற்சியும் தோற்றுப் போகிறது. மத்திய அரசின்
முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை அடி
யொற்றியே செயல்படும் மாநில அரசு, தன்னை
மத்திய அரசு எதிர்ப்பாளராகக் காட்டிக்
கொள்ளும் முயற்சியில், பிப்ரவரி 28 பொது
வேலைநிறுத்தத்தின்போது பெரிய தோல்வி
அடைந்தது. உலகமயக் கொள்கைகள் மற்றும்
அவற்றின் நாசகர அமலாக்கத்திற்கு எதிராக, பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தம், தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெற்றது. கடந்த
வேலை நிறுத்தங்களைக் காட்டிலும், பிப்ரவரி
28 வேலை நிறுத்தம் கூடுதலான வீச்சும்
விரிவாக்கமும் பெற்றது.
இலங்கையின் ராஜபக்சே அரசு ரத்தக்கறை படிந்த கைகள் கொண்டது என்ற விசயம்
கண்டனம் மற்றும் தண்டனைக்கு சர்வதேச
மன்றத்தில் உள்ளாக வேண்டும் என உலகம்
முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் விரும்புகின்றன. அது மிக நல்ல விசயம். மிகச் சரியானது. தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க
வேண்டும் என்று நாமும் கோருகிறோம். ஆனால், சர்வதேச போர்க் குற்றவாளியான
அமெரிக்காவுக்கு எவரை நோக்கியும் விரலை
நீட்ட தார்மீக உரிமை கிடையாது. அமெரிக்கா
ஜனநாயகம், சுதந்திரம், ஆட்சி மாற்றம் என்று
பேசினால் அதற்கு ஆக்கிரமிப்பு என்றுதான்
பொருள். அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் நலன்கள், சீனாவைக் கட்டுப்படுத்துவது, இந்த பிராந்தியத்தைத் தன் செல்வாக்கில்
கொண்டு வருவது ஆகிய நோக்கங்களை, நாம்
மறந்துவிட முடியாது.
இந்திய அரசு, வடகிழக்கு மக்கள், காஷ்மீர் மக்கள், பசுமை வேட்டைக்கு ஆளான
மக்கள் மற்றும் இலங்கை தமிழ் மக்களின்
ரத்தக் கறையை தன் கையில் படிய வைத்துள்ளது. ஆனபோதும் சர்வதேச மன்றத்தில், இந்திய அரசுதான், ராஜபக்சே அரசின் மீது
நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே நம்
விடாப்பிடியான கோரிக்கையாக இருக்க
வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை
அழகுபடுத்தப் பார்க்கும் இந்தியாவின் துணை
மேலாதிக்கக் கனவுகளுக்குத் துணைபோகும்
எந்த முயற்சியையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை மற்றும் அரசு
ஒடுக்குமுறைக்கு எதிரான, மக்கள் சார்பு
வளர்ச்சிப் பாதைக்கான, ஜனநாயகத்திற்கான, மக்கள் போராட்டங்கள், தமிழகத்தில் வலுப்
பெற வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பின்னணியில்தான், தமிழகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டின் 9ஆவது மாநில மாநாடு கோவையில்
மார்ச் 31 - ஏப்ரல் 1 தேதிகளில் நடக்கிறது.
மாநாட்டு முழக்கம்
முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை
நிராகரிப்போம்,
மக்கள் சார்பு வளர்ச்சித் திட்டங்களுக்காக, உழைக்கும் மக்கள் போராட்டங்களை
தீவிரப்படுத்துவோம்,
அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக
எதிர்ப்பு இடதுசாரி ஜனநாயக இயக்கத்தை
வலுப்படுத்தப் பாடுபடுவோம், என அமைந்துள்ளது.
மாநாட்டு முழக்கத்தை பிரபலப்படுத்தவும், முழக்கத்திற்கு வலுச் சேர்க்கவும் கட்சியும்
அதன் வெகுமக்கள் அமைப்புக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும், மேற்கொள்ளும் தலையீடுகளுக்கும், தமிழ்நாட்டின்
முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைத்து
விதங்களிலும் ஒத்துழைப்பு தர வேண்டும்