சர்வதேச
உழைக்கும் பெண்கள்
தின வாழ்த்துச்
சொல்ல மம்தா தகுதி
பெறுவாரா?
மஞ்சுளா
1993, ஜனவரி 7. காது கேளாத, வாய்பேச முடியாத, பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட, அதனால் கருவுற்றிருக்கிற ஒரு
பெண்ணுடன் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் கட்டிடத்துக்குச் செல்கிறார்.
அந்தப் பெண் மார்க்சிஸ்ட் கட்சியைச்
சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்முறைக்கு
உள்ளாக்கப்பட்டதாக மம்தா சொல்கிறார்.
மம்தா, அப்போது மேற்கு வங்கத்தில்
இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
முதலமைச்சர் அறையின் முன்பு மூன்று
மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அந்த
ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறையினர்
ஒடுக்குமுறை ஏவுகின்றனர். மம்தா வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்படுகிறார். கைது
செய்யப்படுகிறார். பத்திரிகையாளர் சிலரும்
தாக்கப்படுகின்றனர். ரைட்டர்ஸ் கட்டிடத்துக்கு இனி தான் வரப் போவதில்லை என்று
மம்தா சூளுரைக்கிறார்.
பாலியல் வன்முறைக்கு உள்ளான அந்தப்
பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அது
அரசு காப்பகத்தில் வளர்ந்தது.
அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து 2011ல்
தான் மம்தா மேற்கு வங்க முதலமைச்சராய்
ரைட்டர்ஸ் கட்டிடத்துக்குச் செல்கிறார்.
2012 பிப்ரவரி 6 அன்று 37 வயதான
ஆங்கிலோ இந்தியன் பெண் ஒருவர் ஓடுகிற
காரில், துப்பாக்கி முனையில், 5 பேரால்
பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார். அத்துடன் அவரை அந்த 5 பேரும் கடுமையாக
தாக்குகிறார்கள். பிப்ரவரி 9 அன்று சம்பவம்
பற்றி புகார் தர காவல்நிலையத்துக்குச்
செல்கிறார். புகார் பதிவு செய்ய அவர் போராட
வேண்டியிருக்கிறது. காவல்நிலைய அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் பாலியல்ரீதியாக
தாறுமாறான கேள்விகள் கேட்கிறார்கள். காவல்துறையினரின் கடும்சொற்களால் மீண்டும்
ஒருமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்
படுகிறார். பிப்ரவரி 14 அன்றுதான் மருத்துவ
பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறார்.
சம்பவம் பற்றி அறிய வந்தவுடன், 1993 மம்தா போல் அல்லாமல், 2012 மம்தா அந்தப்
புகாரே புனையப்பட்டது என்கிறார். மேற்கு
வங்க அரசாங்கத்தின் மீது களங்கம் சுமத்த
உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்று
சீறுகிறார். போக்குவரத்து அமைச்சர் மதன்
மித்ரா, இன்னும் ஒரு படி மேலே போய், கணவனை விட்டு பிரிந்த அந்தப் பெண் இரவு
நேர கேளிக்கை விடுதிக்கு ஏன் செல்ல
வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்
பாலியல் வன்புணர்ச்சியை வேண்டுமென்றே
அவராக வரவழைத்துக் கொண்டார் என்றார். அந்தப் பெண் சொல்கிற விவரங்கள் முன்னுக்
குப்பின் முரணாக இருப்பதாக காவல்துறையினர் சொன்னார்கள். புகார் சுமத்தப்பட்டவர்களில் ஒருவர் நான் அந்த நேரத்தில் கனடாவில்
இருந்தேன் என்று கனடாவில் இருந்து சொல்கிறாராம்.
இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. அந்தப் பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. மருத்துவ பரிசோதனையும் குற்றம் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இப்போது மம்தா என்ன செய்வார்? எங்கு
ஓடி ஒளிந்து கொள்வார்? கூருணர்வே சிறிதும்
இன்றி புகாரே பொய் என்று எப்படிச் சொன்னார்? அப்படியானால் 1993ல் நடத்தப்பட்டது
என்ன? இரண்டு மம்தாக்களும் நிஜம்தான்
என்றால், 1993ல் மம்தா காட்டிய எதிர்ப்பு
நிஜமா? அல்லது அரசியல் ஆதாயத்துக்காக
பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட
பெண் பயன்படுத்தப்பட்டாரா?
அய்முகூ அரசாங்கம் சம்பவம் பற்றி
மேற்கு வங்க அரசாங்கத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. மத்திய அரசாங்கத்துக்கு பெண்கள்
தொடர்பான பிரச்சனைகளில் அக்கறை
வந்துவிட்டது என்று தவறாக யாரும் எடுத்துக்
கொள்ள வேண்டாம். மம்தாவுக்கு ‘செக்’ வைக்கிறார்களாம்.
100 ஆண்டுகள் கடந்து, 2012ல் வருகிற
சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை
வரவேற்க இந்திய உழைக்கும் பெண்கள் தயாராகும்போது, மம்தாவும் மத்திய அரசாங்கமும்
அவர்களுக்கு தந்துள்ள பெரும்பரிசு இதுதான்.
பெண்களுக்கு சுதந்திரம் கூடாது என்று
மனு சொன்னதை மம்தாவும் அவரது அமைச்சரும் அவரது காவல்துறையினரும் இன்று மேற்கு
வங்கத்தில் அமலாக்கப் பார்க்கிறார்கள்.
புகாரே பொய் என்றது மம்தா செய்த
பெரிய குற்றம் என்றால், அந்தப் பெண்ணின்
நடத்தை, சொந்த வாழ்க்கை ஆகியவை பற்றி
பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அடுத்த ஒரு பெரிய குற்றம்.
ஜனவரி 25 அன்று கொல்கத்தா புத்தகக்
கண்காட்சியில் பேசிய மம்தா புத்தகங்களையும் மனைவிகளையும் கடன் தரக் கூடாது. ஏனென்றால் அவற்றை பயன்படுத்திவிட்டுத்தான் திருப்பித் தருவார்கள் என்றார். மம்தாவை பொறுத்தவரை, புத்தகம் போன்ற
ஒரு பொருள்தான் பெண்கள். மம்தாவிடம்
இவ்வளவு ஆழமாக ஆணாதிக்கக் கருத்துக்கள்
இருக்கும்போது, அவர் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கும், அவர் ஆட்சியின் காவல்துறையினருக்கும் பெண்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவதில் தயக்கம் என்ன இருக்க
முடியும்? பாலியல் வன்புணர்ச்சி பிரச்சனையில்
மம்தாவிடம்தான் வேறென்ன எதிர்ப்பார்க்க
முடியும்?
கணவனை பிரிந்த பெண் இரவு நேர
கேளிக்கை விடுதிக்குச் செல்லக் கூடாதா? கணவனை பிரியாத, இரவு நேர கேளிக்கை
விடுதிக்குச் செல்லாத பெண்கள் பாலியல்
வன்முறைக்கு, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்
படுவதே இல்லையா? கணவனை கள்வன்
என்று சொல்லி பிடித்துச் சென்ற காவல்
துறையினரிடம் இருந்து அவரை மீட்கச் சென்ற
பத்மினிக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்தது? சிதம்பரத்தை எரிக்கவா முடிந்தது? பத்மினி
அவர் கணவர் நந்தகோபால் கண்முன்தானே
காவல்துறையினரால் அடுத்தடுத்து பாலியல்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார். அத்தனை கொடுமையும் காவல்நிலையத்துக்குள்
தானே நடந்தது?
பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தை நியாயப்படுத்தத்தான், குற்றவாளிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நீதி
மன்றங்களும் இயல்பாக முயன்று பார்க்கிறார்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கிற காரணங்கள் அவர்கள் முயற்சியை மேலும் நியாயமற்றதாக்குகின்றன. பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தைப் போலவே படுபாதக குற்றங்களாக
இருக்கின்றன. பெண்களை மேலும்மேலும்
கொச்சைப்படுத்துவதாக, துன்புறுத்துவதாக, அச்சுறுத்துவதாக அமைந்துவிடுகின்றன. 1972ல்
மதுராவில் தொடங்கி 2012ல் மேற்குவங்கப்
பெண் வரை பாதிக்கப்பட்ட பெண்ணின்
நடத்தை சந்தேகத்துக்குரியது என்று சொல்லி
அவர்கள் மீதான அடுத்தத் தாக்குதலுக்கு
அடிபோட்டு விடுகிறார்கள்.
‘நடத்தை கெட்ட பெண்கள்’ இருக்கிற
சமூகத்தில் நடத்தை கெட்ட ஆண்கள் இல்லாமல் இருக்க முடியுமா? நடத்தை கெட்ட
ஆண்கள் இல்லை என்றால், அல்லது ஆண்கள்
நடத்தை கெடுவதில்லை என்றால் அந்த
சமூகத்தில் பெண்கள் மட்டும் எப்படி நடத்தை
கெட்டுவிட முடியும்?
ஒரு வாதத்துக்கு, அப்படியே ‘நடத்தை
கெட்ட பெண்கள்’ இருந்தாலும், அதைக் காரணம் சொல்லி அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிவிட முடியுமா? அந்த
வன்முறையை நியாயப்படுத்திவிட முடியுமா?
‘நடத்தை கெட்ட பெண்கள்’ மட்டுமின்றி
ஆண்களை தூண்டும்விதம் உடை அணியும்
பெண்களும் பாலியல் வன்புணர்ச்சிக்கு
ஆளாக்கப்படுவார்கள் என்று கும்பலாகக்
கூடிக் கத்துகிறார்கள். (அவளுக்கு இருக்கு.காட்றா. உன்னால முடிஞ்சா நீயும் சிக்ஸ் பேக், எயிட் பேக்குன்னு காட்டிட்டு போயேன்!). ஆண்களை தூண்டும் விதம் உடை அணியும்
பெண்கள் மட்டும்தானா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்? அல்லது பாலியல்
வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்கள் எல்லாம்
ஆண்களை தூண்டும்விதம் உடை அணிந்திருந்தார்களா? வாச்சாத்தி பெண்கள் 8 முழ
சேலையைத்தானே இறுக்கிக் கட்டி, சுற்றிக்
கொண்டிருந்தார்கள்? ஷோபியன் பெண்கள்
தலை முதல் கால் வரை அல்லவா மூடிக்
கொண்டிருந்தார்கள்? தங்ஜம் மனோரமா
ஆண்களைத் தூண்டும் ஆடை அணியவில்லையே?
பாலியல் வன்முறை குற்றவாளிகளைக்
காப்பாற்ற காலாகாலமாக ஏன் இப்படி பதறித்
துடிக்கிறார்கள்? அவர்கள் மீது நடவடிக்கை
எடுத்தால் சமூக ஒழுங்கில் என்ன பாதிப்புதான்
வந்துவிடும்?
இதுபோன்ற ஆணாதிக்கக்
காரணங்கள் அடிக்கடி சொல்லப்படுவதால்தான் பெண்கள்
தங்களுக்கு தெரிந்த விதத்தில்
எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை பயன்படுத்தி
மணிப்பூர் பெண்களை பாலியல்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய
ஆயுதப்படையினருக்கு எதிராக
பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தியதுபோல், நாங்கள்
அரைகுறை ஆடைதான் அணிவோம், நடத்தை கெட்ட நடைதான் நடப்போம் என்று
டொரொன்டோவில் இருந்து
டில்லி வரை பெண்கள் அரை
குறை ஆடைகள் அணிந்து
போராட்டம் நடத்தினார்கள்.
அதிகாரத்தை நிலைநிறுத்த, ஒரு பிரிவு மக்களையே இழிவுபடுத்த பாலியல் வன்புணர்ச்சி
இன்றும் ஆயுதமாக இருக்கிறது. ஆனால், உலகமய வேகத்தில் பாலியல் வன்புணர்ச்சிக்
குற்றங்கள் பொழுதுபோக்காக செய்யப்பட்டு
விடுகின்றன. உழைப்புச் சந்தைக்குள், அதிகார
வெளிக்குள் நுழைந்துவிட்ட பெண்கள், அவ்வாறு நுழைந்ததனாலேயே, மூலதனத்தின்
தாக்குதல்களை ஒருபுறம் எதிர்கொள்வதோடு
ஆணாதிக்க தாக்குதல்களையும் எதிர்கொள்ள
வேண்டியதாகிறது. உழைப்புச் சந்தைக்குள், அதிகார வெளிக்குள் ஆண்களைப் போல்
இயல்பாக இயங்க விலை தர வேண்டியதாகிறது.
இருப்பினும், பெண்கள் மீது வன்முறை
செலுத்த ஆண்களுக்கு அதிகாரமும், அந்த
வன்முறைக்கு அங்கீகாரமும் தரப்பட்ட
நாட்கள் பொய்யாய், பழங்கதையாய் மெல்லக்
கரைந்து போய்விட்டன என்பதை ஆண்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், பெண்கள் உணர்ந்து
கொண்டுவிட்டனர். பெண்களை வீடடுக்குள்
அடைக்க, அவர்கள் பொதுவெளியை சுருக்கிக்
குறுக்க முயற்சிகள் அதிகரிக்க அதிகரிக்க, பெண்களின் எதிர்ப்புக்களும் அதிகரிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் நடந்ததுதான் உத்தர
பிரதேசத்தில் நடக்கிறது. பீகாரில் நடக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு
கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் பெண்களை
பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கும் அதிகாரத்தையும் தாமாக சேர்த்துக் கொள்கிறார்கள். அதற்கான உரிமம் பெற்றதாகக் கருதிக்
விடுகிறார்கள். நடைமுறைப்படுத்துகிறார்கள்.
வருகிற சர்வதேச உழைக்கும் பெண்கள்
தினத்தன்று வாழ்த்துச் சொல்ல வரிசைகட்டி
நிற்கப் போகும் ஆட்சியாளர்களுக்கு, அவர்களுடைய ஆணாதிக்க தாக்குதல்களுக்கு
எதிராக, இந்திய உழைக்கும் பெண்கள் தங்கள்
போராட்டங்களின் மூலம் தெளிவானதொரு
செய்தி சொல்ல வேண்டும்.
பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு புகார் கொடுத்த அந்தப் பெண்ணிடம்
மம்தா அனைவரும் அறிய மன்னிப்பு கேட்க
வேண்டும். பாரதி பெண்களை பட்டங்கள்
ஆளச் சொன்னான். சட்டங்கள் செய்யச் சொன்னான். புதுச் சட்டம் போடலாம். பணியிடை
நீக்கம் முதலமைச்சருக்கும் இருக்கலாம். முதலமைச்சர் செய்த தவறை விட முதலமைச்சரை பணியிடை நீக்கம் செய்வது தவறாகிவிடாது. மம்தா செய்த தவறுக்கு அவர் விலை
கொடுத்தே ஆக வேண்டும். மதன் மித்ரா
பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பாதிப்புக்கு ஆளாகி, புகார் தர வந்த அந்தப் பெண்ணிடம் பாலியல்ரீதியாக தாறுமாறாக கேள்விகள் கேட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவை நடந்தால் மட்டுமே மம்தா மார்ச் 8 அன்று மேற்கு
வங்க பெண்களுக்கு சர்வதேச உழைக்கும்
பெண்கள் தின வாழ்த்துச் சொல்லவும்
வாழ்த்துப் பெறவும் தகுதி பெற்றவராவார்.