சர்வதேச பாட்டாளி வர்க்கத்துக்கு முறியடிக்க ஒரு பொது எதிரியும் வெல்வதற்கு ஓர் உலகமும் உண்டு!
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!
எஸ்.குமாரசாமி
2012 - 2013 அபாய அறிவிப்புக்கள்
மூலதனத்தின் சர்வதேச நிறுவனங்களில்
ஒன்றான சர்வதேச தொழிலாளர் அமைப்பு
(ILO) 2012 - 2013 ஆண்டு பற்றி அபாய
அறிவிப்பு தந்துள்ளது.
‘சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு பலவீனமான பொருளாதாரம் வேலைகளையும்
சமூகத்தையும் பாதிக்கிறது; அது தன் பங்கிற்கு
உண்மை முதலீட்டையும் நுகர்வையும், ஆக, பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்ற
விஷச்சுற்று செயல்படுகிறது.’ இந்த அறிக்கை, ‘விஷச்சுற்றில் இருந்து வெளியே வர, சந்தை
வேலைகளை உருவாக்க வேண்டுமே தவிர, சந்தையைச் சார்ந்து வேலைகள் இருக்கக்கூடாது’ என பரிந்துரைக்கிறது. கடல் அலைகளையும் முதலாளித்துவ சந்தை விதிகளையும்
கட்டுப்படுத்த முடியாது என்பது அய்எல்ஓவுக்கு சீக்கிரமே புரியும்.
அமெரிக்கா, அய்ரோப்பா, ஜப்பான்
நாட்டு பொருளாதாரங்கள் 2012 - 2013ல் அதிக
பட்சம் 1 1/2 அல்லது 2% வளர்ச்சிவீதத்தைத்
தொடுவதே கடினம் என்று சர்வதேச நிதி
நிறுவனம் சொல்கிறது. உலகப் பொருளாதார
நெருக்கடியின்போதும், ஆண்டு வளர்ச்சிவீதம்
10% என சாதித்து வந்த சீனாவிலும் ‘சிவப்புக்
குமிழ்’ எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனத்தில்
உருவாக்கப்பட்ட ஆற்றல் செயல்படுத்தப்பட
முடியாத ஆபத்து உள்ளது என்றும் பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.
நெருக்கடி, மீள நடவடிக்கைகள், மேலும்
ஆழமான நெருக்கடி என 1848ல் மார்க்ஸ்
சொன்னது, 2012லும் முதலாளித்துவம் பற்றிய
துல்லியமான விவரிப்பாகவே அமைந்துள்ளது.
முதிர்ச்சி அடைந்த பொருளாதாரங்களுக்கு இரண்டு சிக்கல்கள் இருப்பதாக ஜான்
பெல்லாமி ஃபாஸ்டர் சொல்கிறார். 1. அவை, தேக்க நிலையில் இருந்து மீண்டு வர, நிதிமயமாக்கலை சார்ந்திருக்கின்றன. ஆனால், விளைவு தவிர்க்க முடியாமல் நிதிக்குமிழ்
வெடிப்பதாகவே இருக்கும். 2. பெருநிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை அதிகரித்த அளவில்
வளரும் நாடுகளுக்கு மாற்றுகின்றன. கடந்த
சில பத்தாண்டுகளின் முதலாளித்துவ வளர்ச்சி, மய்ய நாடுகளில் (அமெரிக்கா, அய்ரோப்பா, ஜப்பான்) இல்லாமல் ஓரங்களில் உள்ள
எழுகின்ற பொருளாதாரங்களிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால், உலக உற்பத்தியின் லாபங்களின் பெரும்பகுதி, இந்த மய்ய நாடுகளிலேயே சென்று குவிகிறது. இவை, மூலதன
வளம் கொண்ட பொருளாதாரங்களில் முதிர்ச்சி மற்றும் தேக்கம் என்ற நிலையை மேலும்
மோசமாக்குகின்றன. நிதிமயமாக்கல் என்பதற்கு முதலாளித்துவ மொழியில் ஊக வணிகம், நிதி வர்த்தகச் சூதாட்டம் என்று பொருள். நிதிப் பொருளாதாரம், அதாவது, பொருளுற்பத்தி அல்லது சேவைத் துறை அல்லாத நிதிப்
பொருளாதாரம், நிஜ வளர்ச்சியைக் கொண்டு
வராது. மூலதனம், ஏகாதிபத்திய காலங்களில், இன்றைய உலகமயக் காலங்களில், லாபம்
பெறச் சூதாடுகிறது. செலவைக் குறைத்து, லாபம் குவிக்க, தனது பொருளுற்பத்தி மற்றும்
சேவைத் துறைகளை கூலி குறைவான கீழை
நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறது.
லாஸ் வேகாஸ் சூதாட்டத்தை பல மடங்கு
தாண்டிய வால் ஸ்ட்ரீட் சூதாட்டம்
v அமெரிக்க அரசாங்கத்தின் விவசாயத் துறை
அறிக்கைப்படி 2010ல் ஒரு கோடியே 72 லட்சம் அமெரிக்கக் குடும்பங்கள் தமது
தேவைக்கான உணவு வாங்க சக்தி
இல்லாது இருந்தன. மேலும் 64 லட்சம்
குடும்பங்கள் தமது உணவு உட்கொள்ளும்
அளவையும் தரத்தையும் கணிசமாகக்
குறைத்துக் கொண்டனர்.
v அமெரிக்காவின் விவசாயத் துறை அல்லாத
தனியார் துறை தொழிலாளர்களின் கூலி
விகிதங்கள் 1967ல் இருந்து 40 ஆண்டுகளுக்கு மேல் உயரவே இல்லை. (ஆனால் அவர்களது உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. அவர்கள் உருவாக்கிய செல்வம் பல மடங்கு
பெருகி உள்ளது.)
v அமெரிக்காவின் முதல் நிலை 1% பேர்
அமெரிக்காவின் மொத்த வருமானத்தில்
40%அய் தட்டிச் சென்றுவிடுகின்றனர்.
v நிஜப் பொருளாதாரம் ஆட்டம் காண் கிறது. வாங்கும் சக்தி இல்லாததால் நுகர்வு குறைகிறது.
v வாங்கும் சக்தியை செயற்கையாக உருவாக்
கும் முயற்சி நடக்கிறது. வீடு கட்டக் கடன், கார் வாங்கக் கடன், வேண்டியதை வாங்க
கிரெடிட் கார்டு வசதி, கல்விக் கடன் எனக்
கடன்கள் நாடெங்கும் பரவுகின்றன.
v கிரெடிட் கார்டு கடன் 1 டிரில்லியன் டாலர்
(ரூ.5 லட்சம் கோடி), கல்விக் கடன் 1 டிரில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) என வளர்கிறது.
v கடன்கள் நிதிநிறுவன சூதாட்டப் பத்திரங்களாக மாற்றப்படுகின்றன. லாஸ் வேகாசின் நிஜ சூதாட்டத்தை வெட்கித் தலைக்குனிய வைக்கும் அளவுக்கு, வால் ஸ்ட்ரீட்
நிதிநிறுவனங்கள் சூதாடுகின்றன. குமிழ்
பெரிதாக தோற்றம் தருகிறது. கடன்கள்
கட்ட முடியாமல் போனபிறகு குமிழ்
வெடிக்கிறது.
v குமிழ் வெடித்ததால் 1 கோடியே 20 லட்சம்
வீடுகள் கடனில் மூழ்குகின்றன. நீல உடை, வெள்ளுடைப் பணியாளர்கள் வாங்கியவற்றை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. வேலையின்மையும் குறைவருமானமும் விரட்ட, சமூக நுகர்வு சிக்கலாகிறது. பதட்டம் அதிகரிக்கிறது.
மூலதனம் மூன்றாம் பாகத்தில் மார்க்ஸ்
குறிப்பிடுகிறார்:
‘உற்பத்தி சக்திகளை வளர்ப்பதற்கான
முதலாளித்துவ உற்பத்தியின் உந்துதல், சமூகத்தின் ஒரு முழுமுற்றூடான நுகர்வுதான்
தன் எல்லை எனக் கொண்டிருப்பதற்கு
எதிராக, வெகுமக்களின் வறுமையும் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வுமே எல்லா உண்மை
நெருக்கடிகளுக்கும் இறுதிக் காரணமாகும்.’
அயர்லாந்து கிரீஸ் போல் மாறாமல் இருக்க
அய்ரோப்பா சொல்வது
அயர்லாந்து கிரீஸ் இரண்டு நாடுகளுமே
முற்றிப்போன நெருக்கடியில் சிக்கித் தட்டுத்
தடுமாறுகின்றன. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகள்
ஊதாரித்தனத்தைக் குறைத்து.
‘சிக்கன’ நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. வங்கிகள், நிதிநிறுவனங்கள் சூதாடலாம். தமது கடன்
சுமையை, இறையாண்மை கொண்ட அரசின்
கடனாக்கலாம். தவறில்லை. ஆனால் மக்கள்
வயிற்றைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தாக
வேண்டும். வேலைகள் குறைக்கப்படும். கூலி
வெட்டப்படும். ஓய்வூதியம் குறையும். சமூக
நலப் பயன்கள், சேவைகள் வெட்டப்படும். சமூக அய்ரோப்பா குழி தோண்டி புதைக்கப்பட்டு உலகமய, நவதாராளவாத அய்ரோப்பா
முன்னுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில்
வலதுசாரிகள், குறிப்பாக குடியரசுக் கட்சியினர், சாரமான பொருளாதார அரசியல்
விசயங்களில் இருந்து, மதம், பாலியல் தேர்வுகள், கருக்கலைப்பு போன்ற விசயங்களை
நோக்கி விவாதங்களை திசைதிருப்புவதுபோல், அய்ரோப்பாவில் இசுலாமிய எதிர்ப்பு, குடியேறியோர் எதிர்ப்பு நஞ்சு காற்றில் கலந்து
மூச்சு முட்ட வைக்கிறது.
அய்ரோப்பிய, அமெரிக்க மக்கள்
பொருளாதாரப் பறிப்புக்களுக்கும் சமூகரீதியான மூச்சுத்திணறலுக்கும் ஆளாகியுள்ளனர்.
அமெரிக்க, அய்ரோப்பிய பொருளாதாரங்கள் நிதிமயமாக்கலை நோக்கி, விளக்கை
நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகள் போல், நகரும் அதேநேரம், ராணுவ - தொழில் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் அச்சு, போர்ப்பொருளாதாரத்தை பலப்படுத்துகின்றது. ஈராக், ஆப்கன் போர்கள் பாகிஸ்தான் வரை பரவுகின்றன. லிபியா விழுங்கப்பட்டுவிட்டது. சிரியா மீது அத்துமீறல்கள் நடக்கின்றன. இஸ்ரேல் துணைகொண்டு ஈரான் அச்சுறுத்தப்படுகிறது. பொருளாதாரத்தைப் பற்ற வைக்கவும், புராதன மூலதனத் திரட்சி நடக்கவும்
தேவைப்படும் போர், பொருளாதாரத்துக்குச்
சுமையாகவும் மாறுகிறது.
உலக ராணுவச் செலவில் 41.5% மட்டுமே
செலவழிக்கும் அமெரிக்கா, 132 நாடுகளில் 702 ராணுவ தளங்கள் கொண்டுள்ள அமெரிக்கா, ஆளில்லா ட்ரோன் போர் நோக்கி நகர
முற்படுகிறது. அள்ளஅள்ள வழங்கும் அட்சயப்பாத்திரமோ, காமதேனுவோ அமெரிக்காவிடமோ, அய்ரோப்பாவிடமோ இல்லை.
உலகின் செல்வங்களின் 50%அய் பணக்கார 2% பேர் வைத்துள்ளனர். 48 நாடுகளின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கு ஈடான செல்வத்தை 3 பெரும்பணக்காரர்கள்
கொண்டுள்ளனர். கூலி உழைப்பிற்கும் மூலதனத்துக்கும் இடையிலான சமூக ஏற்றத்தாழ்வு
அதிகரிக்கிறது. அய் ஃபோன் தயாரிப்பில்
அமெரிக்க தொழிலாளிக்கு 100 டாலர் கூலி
என்றால், சீனத் தொழிலாளிக்கு 4 டாலர்தான்
கூலி என்பது அமெரிக்க லாபத்தைப் பெருக்கும். வீங்கிக் கொழுத்து வெடிக்கும் நெருக்கடி
அங்கே தோன்றினால், சீனத்தில், உலக
நாடுகளில் சமூகப் பதட்டமும் நிச்சயமின்மையும் கலகங்களும் 2012 - 2013ல் தவிர்க்க
முடியாதவை ஆகும்.
2011அய்த் திரும்பிப் பார்ப்போம்.
அய்ஜாஸ் அஹமது, 2011அய் ‘கலகமும்
பிற்போக்கும்’ என்று தொகுக்கிறார். ‘2011 நெடுக அய்ரோப்பாவில், அரபு உலகில்
மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள்
செயல்பட்டுள்ளனர். அவர்கள் ஆள்வோர் மீது
நம்பிக்கை இழந்துவிட்டனர். இன்னமும், தமது
காலங்களுக்குப் பொருத்தமானதொரு முதலாளித்துவ மாற்றை முன்வைப்பது தென்படவில்லை. ஆனால் எதிர்ப்புரட்சியிடம் முன்முயற்சி உள்ளது. பழையதற்கும் புதியதற்கும்
இடைப்பட்ட அரசியலில் பழையதன் இடத்தில் பதிலுக்கு எதை வைப்பது என்பதை 2011 கண்டறியவில்லை’ என அய்ஜாஸ் அஹமது
அங்கலாய்க்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரஸ் நகல் ஆவணம், சில கருத்தியல் பிரச்சனைகள் மீது தீர்மான முன்வைப்புக்கள்
தந்துள்ளது. பத்தி 3.16 பின்வருமாறு முடிகிறது: புறநிலைக் காரணி, நெருக்கடியின் ஸ்தூலமான
சூழல், ஒரு புரட்சிகர முன்னேற்றத்திற்கு
எவ்வளவுதான் தோதானதாக இருந்தாலும்
அகநிலைக் காரணியை பலப்படுத்தாமல், அந்த
அகநிலைக் காரணியை மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான தாக்குதலாக மாற்ற முடியாது. மாற்று இல்லை என்றால் பிற்போக்கு கைப்பற்றிவிடும், என்ற கவலை, சூழலைக் கைப்பற்றி
முன்னேறும் போர்க்குணமிக்க பாட்டாளிவர்க்க உலகப் பார்வைக்கு எப்படி உதவும்?
முதலில், நடந்தவற்றை நினைவுபடுத்திக்
கொள்வோம்.
2011 அரசியல்ரீதியாக எப்படித் துவங்கியது? துனிஷியாவில் சிகி பவுசித் நகரத்தில், வேலையில்லா பட்டதாரி இளைஞர் முகமது
பவாசிசி தள்ளுவண்டியில் காய்கறி, பழம்
விற்றுப் பிழைத்தார். காவல்துறை அவரது தள்ளுவண்டியை பறிமுதல் செய்தது. பவாசிசி
தன்னையே எரித்துக்கொண்டார். துனிஷியா
முழுக்க தீ பரவியது. குவியும் செல்வம். பரவும்
வறுமை. பெருகும் வேலையின்மை. தீவிரமடையும் ஒடுக்குமுறை. நடக்க வேண்டியது
நன்றாகவே நடந்தது. 75% பொதுமக்கள்
தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அரியணையில் அமர்ந்திருந்த கொள்கைகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த போராட்ட அறைகூவலை
ஏற்று 12.01.2011 அன்று 1,50,000 பேர்
அணிதிரண்டனர். சர்வாதிகாரி பென் அலி
ஓட்டம் பிடிக்க நேர்ந்தது.
எகிப்தில் தஹ்ரீர் சதுக்கம், கொடுங்கோல்
ஆட்சிக்கு எதிராக, லட்சோபலட்சம் மக்கள்
திரண்ட காட்சியைக் கண்டது. கெய்ரோ
எதிர்ப்பு எகிப்தெங்கும் பரவியது. போராடும்
சுதந்திர தொழிற்சங்கங்கள் பிறந்தன. தொழிலாளர் வர்க்க வேலை நிறுத்தப் போராட்ட
அலைகள் நாடெங்கும் பரவின. ஹோஸ்னி
முபாரக் பதவி துறக்க நேர்ந்தது. சிம்மாசனங்கள் தரையில் சரிந்தன. மகுடங்கள் மண்ணில்
உருண்டன. ஏகாதிபத்திய எதிர்ப்பு, இஸ்ரேல்
எதிர்ப்பு அறிகுறிகள் தென்படவில்லை. இசுலாமிய அமைப்புக்கள் பலம் பெற வாஷிங்டனும்
கூட்டாளிகளும் உதவுவது தெரிகிறது. சர்வாதிகாரிகள் ஆட்சி முடிந்தாலும், நவதாராளவாதம்
நீடிக்கிறது.
அய்ரோப்பாவில், ஸ்பெயின் சீற்றத்தை, லண்டன் வெடிப்புக்களை, இத்தாலி மோதல்களை, பிரான்ஸ் கலகங்களைக் கண்டன.
20 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன்
மாநகரில் மார்ச் 2011ல் தொழிற்சங்கங்கள் 4 லட்சம் பேரை அணிதிரட்டின. மே 15 அன்று
ஸ்பெயினில் சீற்றம் கொண்டோர் (இன்டிக்னா
டோஸ்) மாட்ரிட் நகரை முற்றுகையிட்டனர். ஸ்பெயின் வேலை நிறுத்தங்களில் உழைக்கும்
மக்களின் 50% பேர் நேரடிப் பங்கேற்றனர்.
சிலியில் 2011 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில்
மிகப்பெரிய பொது வேலைநிறுத்தம் நடந்தது. அதற்கு முன்னும் பின்னும், கட்டணமில்லா, தரமான கல்வி கேட்டு, எழுச்சியும் போர்க்
குணமும் கொண்ட போராட்டத்தை
மாணவர்கள் நடத்தினர். 55 பேருந்துகளில்
25,000 பேராசிரியர்கள் வாகன அணிவகுப்புடன் வந்து சேர்ந்தனர்.
மூலதன சந்நிதானமான வால் ஸ்ட்ரீட், ஆக்குபை வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டத்தை சந்தித்தது. லண்டனில், அன்று டேங்க்
கொண்டு, இன்று பேங்க் கொண்டு மக்கள்
மீது போர் என்று முழங்கினர். வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்டவர்கள், நாங்கள் 99%, நீங்கள் 1% எனப் பிரகடனம் செய்தனர். வருமானம், வீடு, வேலை, வாழ்க்கை இழந்த
தொழிலாளர்களுடன் கல்விக் கடன் சுமந்த, கல்விக் கட்டணம் தாங்க முடியாத மாணவர்கள் கரம் சேர்த்தனர். பெருநிறுவனப்
பேராசைக்காக, ஏகாதிபத்தியப் போர்களுக்காக எங்கள் நிகழ்காலத்தை, எதிர்காலத்தை
அடமானம் வைக்காதே என கண்டனம்
முழங்கினர்.
2 மாத கால முற்றுகைக்குப் பிறகு
நவம்பரில் அமெரிக்காவில், கனடாவில், பல
நகரங்களில் போராட்டம் வெடித்தது. ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஒரு வார காலம்
நீண்ட மாணவர் போராட்டங்கள் நடந்தன. ரோம் நகரில், மாணவர் – காவல்துறை
மோதல்கள் வெடித்தன. அய்ரோப்பாவில், ஜெர்மனியில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை உணர்வுக்கு, மக்கள் ஒருமைப்பாடு தெரிவித்தனர்.
எங்கும், மக்கள் ஆட்சியாளர்கள் மேல்
நம்பிக்கை இழந்துள்ளனர். நெருக்கடியோடு
எதிர்ப்பும் உலகமயமாகியுள்ளது. உலகரீதியாக
சிந்தனை செய், உள்ளூர் அளவில் செயல்படு
என எங்கும் முழக்கம் ஒலிக்கிறது. புதிய
தலைமுறையினர், புதிய தகவல் தொடர்பு
முறைகள், புதிய போராட்ட வடிவங்கள், எளிதான சர்வதேச வெளியில் (நல்ஹஸ்ரீங்) எளிதாக
நுழையும் வாய்ப்பு ஆகியவற்றால் குறிக்கப்படும் இந்தப் போராட்டங்களின் பின்னாலே
அரசியல் கட்சிகள் ஓடும் நிலைதான் இருந்தது.
பாட்டாளி வர்க்க போர்க்குணமிக்க
உலகக் கண்ணோட்டம் தேவை
மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதற்கு
நெருக்கமான கருத்தியலாளர்கள் மற்றும்
அரசியல் சிந்தனையாளர்கள் ஒரு சிக்கலான
முகாந்திரத்தில் தவறான சிந்தனைக்கும்
முடிவுக்கும் செல்கின்றனர். அவர்களது நகல்
தீர்மானம் 5.13, சர்வதேச முரண்பாடுகளின்
மய்யத்தன்மை ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டில்தான்
உள்ளது என்ற பழைய பல்லவியையே பாடுகிறது. ஒரு புறம் தனது மேலாதிக்கத்தை நிறுவ எடுக்கும் முயற்சிகள், மறுபுறம் வளரும் நாடுகளை தன் பிடிக்குள் கொண்டு வரும் முயற்சிகள் ஆகியவற்றால் ஏகாதிபத்தியத்திற்கும்
வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைகிறது எனச் சொல்லும் நகல்
தீர்மானம், ஏகாதிபத்திய நாடுகளில் கூலி
உழைப்பிற்கும் மூலதனத்துக்கும் இடையிலான
முரண்பாடு அடிப்படை தன்மை கொண்டது
என்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சி சர்வதேச அளவில்
சோவியத் இல்லாமல் கண்ணைக் கட்டிக்
காட்டில் விட்டதுபோல் தவிக்கிறது. சோவியத்
முகாம், சோசலிச முகாம் இருந்த காலத்தில்
அதற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான
முரண்பாடே மய்யமான சர்வதேச முரண்பாடு
என மனப்பாடம் செய்து ஒப்பிக்க ஆரம்பித்தவர்கள், இந்திய பெருமுதலாளித்துவத்தின்
இரட்டைத்தன்மை பற்றி விலாங்கு மீன் போல்
வழுக்குபவர்கள், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்
வேர்கள், வளரும் நாடுகளில் வேரறுக்கப்பட
வேண்டிய முக்கியத்துவத்தை உணரத் தவறுகின்றனர். மாற்று இல்லை எனத் தயங்கி
நிற்காமல், மாற்று உருவாக்க உணர்வுபூர்வ
முயற்சி எடுப்பதே கம்யூனிஸ்டுகள் வேலை. மார்க்சிஸ்ட் கட்சி மாற்று வரும் வரை
காத்திருக்கட்டும். அதுவரை, முதலாளித்துவ
கட்சிகள் பின் செல்லட்டும்.
மாலெ கட்சி திட்டவட்டமாகச் சொல்கிறது: ‘உற்பத்தியை அமைப்பாக்குவதில், உற்பத்தியின் கட்டமைப்பில் என்னதான்
மாற்றங்கள் நேர்ந்தாலும், உபரி மதிப்புக்
கொள்ளை தொடர்கிறது. சர்வதேச அளவில்
ஏகாதிபத்தியத்திற்கும் அதன் சார்பு நாடுகளுக்குமான ஏற்றத்தாழ்வு பெருகுகிறது. வளர்ந்த நாடுகளில், கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான பிளவு தீவிர
மடைகிறது. ஆகவே, அந்தப் பகைமை, வரலாற்றை உந்தித் தள்ளும் சக்தியாகத்
தொடர்கிறது.’
ஏகாதிபத்தியம் மற்றும் அதனுடைய
பல்வேறு நேச நாடுகளில் கூட்டாளிகளுக்கு
எதிரான பல நீரோட்ட போராட்டங்கள், மெதுவாக, ஆனால், நிச்சயமாக, சர்வதேச
கம்யூனிச புத்தெழுச்சிக்கான புறநிலை
நிலைமைகளை உருவாக்குகின்றன.