COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 3, 2012

Mar-1-2

தலையங்கம்

வலுவான மக்கள் போராட்டங்கள் மட்டுமே மாற்றங்கள் உருவாக்கும்!

தமிழ்நாட்டில் ரத்த வாடை வீசுகிறது. வீரப்பனைப் பிடித்த வீராங்கனையின் தற்போதைய ஆட்சியில் கொள்ளையர்கள் என்று சொல்லப்படுகிற 5 பேருக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. யார், என்ன, எப்படி என எந்தக் கேள்வியும் எழுப்பப்படாமல், எந்தக் கேள்விக்கும் விடையும் கிடைக்காமல் சுட்டுக் கொன்று விட்டார்கள். காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டுவதாக ஜெயா தொலைக் காட்சியில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனித உரிமை பற்றி ஜெயலலிதாவிடம் பேச முடியுமா?

யாரையும் எந்த விசாரணையும் இல்லாமல் சுட்டுக்கொல்ல ஜெயலலிதா அதிகாரம் அளித்துவிட்ட பிறகு காவல்துறையை யார்தான் கேள்வி கேட்க முடியும்? பரமக்குடி தலித் மக்கள், விழுப்புரம் இருளர் பெண்கள் வரிசையில் கொள்ளையர்கள் என்று இதற்குப் பிறகு காவல்துறையினரால் நடத்தப்படும் விசாரணையில் மெய்ப்பிக்கப்பட வேண்டிய இந்த அய்ந்து பேரும் சேர்ந்து கொள்வார்கள். தமிழக காவல்துறையினர் அடுத்த சட்டம் ஒழுங்கு காக்கும் பணிக்குத் தயாராவார்கள்.

தமிழக காவல்துறையினர் இவ்வளவு தீவிரமாக சட்டம் ஒழுங்கு காக்கும்போது தமிழ்நாட்டுக்கு தேசிய தீவிரவாத தடுப்பு மய்யத்தின் தலையீடுதான் எதற்கு? கொள்ளை அடித்ததாக சொல்லப்படுபவர்களுக்கே என்கவுன்டர் என்றால், தீவிரவாதிகள் என்று தமிழக காவல்துறையினருக்கு மனதில் பட்டாலே அவர்கள் யார் எப்படி என்று பார்க்காமலே சுட்டுத் தள்ளிவிட மாட்டார்களா?

இந்த மோதல் படுகொலை சம்பவத்தில் இருந்து தமிழக மக்கள் பெற வேண்டிய பெரும்பாடம், திருடுவது என்றால் இனி சில நூறு கோடிகள் திருட வேண்டும். அப்படிச் செய்தால் அரசு பாதுகாப்பு கூட கிடைக்கும். சில லட்சங்கள் திருடினால் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தெடுத்து விடும்.

ஒரு வகையில் வரவிருக்கும் நாட்களில் காவல்துறையினர் பணி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் ஒத்திகை. தமிழக அரசாங்கம்மக்கள் பிரச்சனைகளைஎப்படி சமாளிக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கொள்ளை அடித்தவர்களுக்கு ஆதரவாக மனித உரிமை என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள் என்று இன்று வேளச்சேரியில் குரல் கேட்கிறது. நாளை இது போன்ற வேறொரு சம்பவம் எப்படியும் வியாக்கியானப்படுத்தப்படலாம்.

இதுபோன்ற விசயங்களை ஊகங்களில் சொல்லிவிட முடியாதுதான். ஆனால் தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படிப்பட்டது என்பது தெரியும். இன்றுவரை பரமக்குடிக்கும் விழுப்புரத்துக்கும் பதில் கிடைக்கவில்லை. சென்னை என்கவுன்டர் பற்றி ஜெயலலிதா இன்னும் ஏதும் சொல்லவில்லை. பரமக்குடி, விழுப்புரம் அத்துமீறல்களிலேயே காவல்துறையினரைப் பாதுகாக்கும் ஜெயலலிதா இந்தப் பிரச்சனையிலும் அவர்களைப் பாதுகாப்பார்.

வடமாநில தொழிலாளர்களால் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறது என்ற வாதம் ஒரு புறம் வலுவாக எழுப்பப்பட்டு இன்னும் தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கிற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்கு வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் தமிழ்நாட்டுக்கு வருவதுதான் காரணம், அவர்கள் தான் இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற வாதம் சமீபத்தில் வலுவாக எழுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் படும் துன்பங்கள் பெரிய தனிக்கதை. அவர்கள் தமிழ்நாட்டை கட்டி எழுப்புவது பின்னுக்குத் தள்ளப்பட்டு தமிழக மக்கள் சந்திக்கிற துன்பங்களுக்கு அவர்கள் தான் காரணம் என்பதுபோல் ஒரு சித்திரம் முன் வைக்கப்படுகிறது.

சென்னையில் நடந்த என்கவுண்டர் திருப்பூரில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தாக்கம் செலுத்த, திருப்பூரில் ஒரே நாளில் விசாரணை என்ற பெயரில் 1000 வட மாநில தொழிலாளர்கள் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் அடுத்த கட்ட துன்பத்துக்கு இனி தயாராக வேண்டும்.

தமிழ்நாட்டின் மறுகோடியில் கூடன்குளம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. போராட்டத்தை ஒடுக்க, முடிவுக்குக் கொண்டுவர, அய்முகூ அரசாங்கத்துடன் எழுதாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஜெயலலிதா தயாராகி விட்டார். சங்கரன்கோயில் இடைத்தேர்தலோ, அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலோ கூட இந்த விசயத்தை சற்று தள்ளிப் போடவோ, மெதுவாகச் செல்லவோ எந்த அவசியத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அதிகாரபூர்வ இடதுகளும் அச்சம் போக்கு என பாடத் துவங்கிவிட்டார்கள்.

போராட்டத்துக்கு பகுதியில் உள்ள பெருந்திரள் மக்கள் ஆதரவு இருப்பதால் மத்திய, மாநில அரசுகள், வழக்கமான முறைகள் கையாளாமல், சுற்றி வளைத்து வேறுவேறு முயற்சிகள் எடுக்கிறார்கள். போராட்டத்துக்கு எதிராகப் போராட்டம், மின்வெட்டு சுமை, விஞ்ஞானிகளை, நிபுணர்களை அனுப்புவது, ஆய்வு செய்வது என்று போராட்டத்தின் வலிமையை குறைக்கப் பார்க்கிறார்கள். போராட்டத்தின் தலைமையை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திவிட்டால், அடுத்தடுத்த நடவடிக்கைகள் எளிது என்று கருது கிறார்கள்.

அணுஉலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.உதயகுமார் மன்மோகனுடன் நேருக்கு நேர் மோதத் தயாராகி இருந்தாலும் தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்கிறார். அணுஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட திரு.இனியன் தலைமையிலான குழுதான் ஜெயலலிதா செய்துள்ள தலையீடு. ஜெயலலிதாவின் நிலைப்பாடு சந்தேகத்துக்கு இடமற்றது. ஜெயலலிதா காங்கிரசுக்குத்தான் இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறாரே தவிர காங்கிரசின் கொள்கைகளுக்கு அல்ல. ஜெயலலிதா காங்கிரசின் அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமலாக்க அனைத்து முயற்சிகளும் எடுத்துக்கொண்டிருப்பவர். எனவே, வலுவான மக்கள் போராட்டங்களின் நிர்ப்பந்தம் ஏதும் இன்றி ஜெயலலிதா ஒரு போதும் கூடன்குளம் அணுஉலை வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை.

அதேபோல், தமிழக உழைக்கும் மக்களின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளிலும் வலுவான மக்கள் போராட்டங்கள் நிர்ப்பந்தம் செலுத்தாமல் ஜெயலலிதா எந்த குறைந்தபட்ச நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.

அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிற மாலெ கட்சி, நிலம், வாழ்வாதாரம், ஜனநாயகம் என்ற முழக்கங்களுடன் மார்ச் 30 - ஏப்ரல் 1 தேதிகளில் கோவையில் தனது 9ஆவது மாநில மாநாட்டை நடத்தவுள்ளது. மாநாட்டை நோக்கி மார்ச் 1 முதல் 30 வரை ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இயக்கம் கட்டமைக்கவுள்ளது.

மக்கள் விரோத ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்! உழைக்கும் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்போம்!

 

பிப்ரவரி 26 அன்று கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் சென்னையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Search