மார்க்சிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரஸ் நகல் அரசியல் தீர்மானம்
மறுப்பில் வாழ்வது
அரசியல் பார்வையாளர்
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, ஏப்ரல்
2012ல் கேரளா, கோழிக்கோட்டில் நடக்கவுள்ள அதன்
20ஆவது காங்கிரசின் நகல் அரசியல் தீர்மானத்தை
வெளியிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு
(மார்ச் 29 - ஏப்ரல் 3, 2008), தமிழ்நாட்டில், கோவையில்
அதன் முந்தைய காங்கிரஸ் நடந்தது. கோவை முதல்
கோழிக்கோடு வரையிலான இந்த நான்கு ஆண்டு
காலம், முன்னெப்போதும் இல்லாத அளவு, மார்க்சிஸ்ட்
கட்சியின் தேர்தல் பின்னடைவுகளின் காலமாக இருந்தது; மக்களவையில் கட்சியின் எண்ணிக்கை இதுவரை இருந்ததில் மிகவும் குறைவு; மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஒரே சமயத்தில் அது ஆட்சியை
இழந்தது. இந்தத் தேர்தல் பின்னடைவுகள் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென ஏற்படவில்லை. மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகராம் நிகழ்வுகளைத்
தொடர்ந்து, கட்சி மக்களிடம் இருந்து தனிமைப்பட்டதும், மக்களால் நிராகரிக்கப்பட்டதும்தான், கட்சி
ஆட்சியை இழந்ததில் உறுதி செய்யப்பட்டது.
மேற்கு வங்க தோல்வியை மார்க்சிஸ்ட் கட்சி
எவ்வாறு விளக்குகிறது? அந்தத் தோல்வியில் இருந்து
என்ன பாடங்களைக் கற்பதாகச் சொல்கிறது? நடக்கவிருக்கிற கோழிக்கோடு காங்கிரஸ் பதில்
சொல்லும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அணிகளும் நாடு
முழுவதும் உள்ள இடதுசாரி முகாமும் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், நகல் தீர்மானத்தில் ஒரு காத்திரமான
ஆய்வு அல்லது பதில் கிடைக்கும் என்று தேடுகிற
எந்த வாசகரும் ஏமாற்றமடைவார்.
நகல் அரசியல் தீர்மானம், மொத்தப் பிரச்சனையையும், மேற்குவங்கத்தில் கட்சியின் தற்போதைய
தோல்வியையும் வெறும் விவரங்கள் என்று சொல்லி
கடந்து சென்று விட முனைகிறது. ‘நவதாராளவாத
கொள்கைகளை, அமெரிக்காவுடனான போர்த்தந்திர
கூட்டை எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி வகித்த பாத்திரத்தின் விளைவால், கட்சி ஆளும் வர்க்கங்களின், ஏகாதிபத்திய வட்டங்களின் இலக்காகிவிட்டது; கட்சியின் வலுவான அடித்தளமான மேற்குவங்கம் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது’ என்று கட்சியின்
19ஆவது காங்கிரஸ் எழுப்பிய எச்சரிக்கை பற்றி குறிப்பிட்டிருப்பது மட்டுமே ஒரே ஒரு ‘பரிசீலனை’.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மேற்கு
வங்கத்தின் அத்தனை நிகழ்வுகளையும் ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய வட்டங்களும் திட்டமிட்டு
நடத்தின என்றும் கட்சி இந்த சச்சரவால் பாதிக்கப்பட்டது என்றும் மார்க்சிஸ்ட் கட்சி நம்மை நம்பச் சொல்கிறது. வரலாற்று நிகழ்வுகளின் யதார்த்தமான வழித்தடத்தை இப்படி ஒரு கற்பனையான விளக்கம் எப்படி
பொருந்தும்?
2004 முதல் 2008 வரையிலான காலகட்டம் மிக
சமீபத்தியதுதான். அது மக்கள் நினைவில் இருந்து
இன்னும் மறைந்துவிடவில்லை. இந்திய – அமெரிக்க
அணுஆற்றல் ஒப்பந்தத்தின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் இடதுசாரி கூட்டாளிகளும்
அய்முகூவின் முதல் ஆட்சிக்கு தங்கள் ஆதரவை
விலக்கிக்கொள்ளும் வரை காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட்
கட்சி மற்றும் அதன் இடதுசாரி கூட்டாளிகளுக்கும்
இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும்
ஒருங்கிணைப்பின் அடிப்படையில்தான் அய்முகூ 1 ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேற்கு வங்கத்தில் பெருநிறுவன ஊடகங்களால் எழுப்பப்பட்ட
‘பிராண்ட் புத்தா’ ஆரவாரக் கூச்சலால் உந்தித் தள்ளப்பட்டு 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி
பெருவெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி பெற்ற
பெரும்பான்மை மேலோங்கியதாக இருந்ததாலும்
பெருநிறுவன ஊடகங்களின் ஆதரவு வலுவாக
இருந்ததாலும், சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளால் எழுந்த எதிர்ப்புக்களை எளிதாக புறந்தள்ளிவிட முடியும் என்று கட்சி நினைத்தது.
ஆளும் வர்க்கங்களும் ஏகாதிபத்திய வட்டங்களும் பெருநிறுவன ஊடகங்களும் மார்க்சிஸ்ட்
கட்சிக்கு எதிராகத் திரும்பியது உண்மைதான்; ஆனால்
அது சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளுக்கு முன்
நடக்கவில்லை அந்த நிகழ்வுகளைத் தொடர்ந்துதான்
நடந்தது. அரசியல் பார்வை இழந்தவர்கள் தவிர மற்ற
அனைவருக்கும் சிங்கூர் நிலப்பறிக்கு எதிர்ப்பு
தீவிரமடைவது மிகத் தெளிவாக தெரிந்த பிறகுதான்
ஊடகங்கள் விமர்சனபூர்வ நிலை எடுக்கத் துவங்கின. அதற்குப் பிறகு நந்திகிராம் நிகழ்ந்தபோது, மாநிலத்தின்
மேலோங்கிய ஜனநாயக கருத்துக்களுடன் முரண்பட்டதால் மார்க்சிஸ்ட் கட்சி மேலும் நம்பகத்தன்மை
இழந்தது; தனிமைப்பட்டது. சிங்கூரும் நந்திகிராமும்
உருவாக்கிய எதிர்ப்பை நசுக்கிவிடப் பார்த்த
மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரத் திமிர் மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்விக்குப் பிந்தைய பரிசீலனைக்கு
தொடர்ந்து விவரங்கள் தருகிறது. நிலப்பறிக்கு எதிராக
போராட்டங்கள் என்ற பின்னணியில் நகல் தீர்மானம்
பல்வேறு மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடுகிறது. அந்தப் பட்டியலில் மேற்குவங்கத்தின் பெயர் இல்லை.
தோல்விக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கட்சி மூத்த
தலைவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளுடன்
சேர்த்து நகல் தீர்மானத்தை படிக்கும் போது நமக்கு
ஒரு விசயம் தெளிவாகிறது. உதாரணமாக, வரலாற்றியலாளர் ராமச்சந்திரா குஹாவுக்கு கேரவான் இதழில்
பிரகாஷ் காரத் சிங்கூர் பிரச்சனையில் என்ன பதில்
சொல்கிறார் என்று பார்ப்போம். ராமச்சந்திரா குஹாவின்
‘வீழ்ச்சிக்குப் பிறகு’
(தி கேரவான், ஜூன் 2011) என்ற
கட்டுரைக்கு பதில் சொல்லும் பிரகாஷ் காரத், சிங்கூர்
பற்றி சொன்ன திட்டவட்டமான கருத்து இது: ‘தவறு
ஏதாவது நடந்திருக்குமேயானால், அது நிலத்துக்கான
இடத்தை தேர்ந்தெடுத்ததுதான்; திரிணாமூல் காங்கிரஸ்
சட்டமன்ற உறுப்பினர் இருக்கிற ஓர் இடத்தை, பெரும்
பான்மையான கிராமப்புற ஊராட்சிகள் திரிணாமூல்
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிற ஓர் இடத்தை
தேர்ந்தெடுத்ததுதான். நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்ததில் 20% பேர், இழப்பீட்டை எவ்வளவு
அதிகரித்துக் கொடுத்திருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.’ (தி கேரவான், நவம்பர் 2011).
ஆக, சிங்கூர் பிரச்சனை, மார்க்சிஸ்ட் கட்சிக்கு
எதிராக, திரிணாமூல் காங்கிரசால் தூண்டி விடப்பட்ட
அரசியல் சதி என்று, அரசியல்ரீதியாக தவறான
இடத்தை தேர்ந்தெடுத்ததுதான் இடது முன்னணி
அரசாங்கத்தின் தவறு என்று குறுக்கப்பட்டுவிட்டது. இது தலையை மணலில் புதைத்துக் கொள்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறைக்கு, குதிரைக்கு முன்
வண்டியை கட்டுகிற மார்க்சிஸ்ட் கட்சியின் பரிசீலனை
முறைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. வெகுவிரைவாகவே மாநிலம் தழுவிய எழுச்சியாக மாறிய, நூற்றுக்கணக்கான ஏக்கர் பலபோக நிலம் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டதற்கு எதிரான விவசாய சமூகத்தின்
சீற்றமும் மிகச் சில பெண் விவசாயிகள் துவக்கிய
மகத்தான எதிர்ப்பும் தோழர் காரத்துக்கு பொருளற்றவையாக உள்ளன.
சிங்கூரில் முதலில் எதிர்ப்பு எழுந்தபோது, மே
2006 தேர்தல் வெற்றி மீது உயரத்தில் சவாரி செய்து
கொண்டிருந்தது; ரத்தன் டாடா உள்ளிட்ட பல பெருநிறுவன பெரும்புள்ளிகள் புத்ததேவை ஆரவாரத்துடன் வரவேற்றனர்; திரிணாமூல் காங்கிரஸ் முற்றிலும்
சோர்வுற்ற நிலையில் செயல்பாடின்றி இருந்தது; மக்களவையில் ஓர் இடம் மட்டுமே பெற்றது; மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படத் தேவையான 10% இடங்கள் (மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரை 30 இடங்கள்) கூட பெறவில்லை. சிங்கூர்
போராட்டம்தான் திரிணாமூல் காங்கிரசுக்கு புத்துயிர்
தந்தது; மம்தா பேனர்ஜியை முதலமைச்சர் இருக்கை
நோக்கி எடுத்துச் செல்லும் துவங்குதளமானது.
சிங்கூரைத் தொடர்ந்து நந்திகிராம் நிகழ்ந்த
போது, மார்க்சிஸ்ட் கட்சி சிங்கூரில் இருந்து பாடம்
ஏதும் கற்றுக்கொள்ளாதது ஏன் என்று பலருக்கு வியப்பாகவே இருந்தது. சிங்கூர் பற்றி அது ஒரு தவறான
அரசியல் தேர்வு என்று காரத் தெரிவித்த கருத்து
நமக்கு ஓர் அடையாள சமிக்கை காட்டுகிறது. சிங்கூர்
போராட்டத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி கற்ற பாடம்
என்ன என்றால் (நிலப்பறிக்கான) அடுத்த இடம்
மார்க்சிஸ்ட் கட்சி/இடதுசாரி வலுவாக உள்ள இடமாக
இருக்க வேண்டும்; அப்போது, திரிணாமூல் குறுக்கே
புகாது. நந்தி கிராம் மிகச்சரியாக அதுபோன்ற ஓர்
இடமே. அனைத்து தேர்தல் தளத்திலும் மார்க்சிஸ்ட்
கட்சியும் இடது முன்னணியும் மேலோங்கிய சக்திகளாக
இருந்த இடமே; மார்க்சிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த
பிடிக்கு ஆதாரமாக, 1940களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெபாகா போராட்ட நாட்களின் கம்யூனிஸ்ட்
அரசியலின் நீண்ட உள்ளூர் பாரம்பரியம் இருந்தது.
ஆயினும் சிங்கூர் நிகழ்வால் எச்சரிக்கை பெற்றிருந்ததால், நந்திகிராமில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி
அடித்தளம் நிலம் கையகப்படுத்தும் திட்டம் பற்றிய
அறிவிப்புக்கே எதிர்ப்பு தெரிவித்தது. (நந்திகிராமில்
நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்று தோழர்
காரத் சரியாகவே குறிப்பிடுகிறார். ஆனால் பெருமளவில் நிலம் கையகப்படுத்தும் திசையில் அரசாங்கம்
சென்றுகொண்டிருந்தது என்ற உண்மையை அவர்
மறுக்க முடியாது.) நாடு முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எதிர்ப்பின் அடையாளமாய் நந்திகிராம் மாறியது. மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய படுகொலைகள், தாக்குதல்கள், நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் எடுத்த வெட்கங்கெட்ட முயற்சிகள் கட்சி நிலைமையை மேலும் மோசமாக்கின. மேற்கு வங்கத்தில்
கட்சியின் நீண்ட, தங்குதடையற்ற ஆட்சியின் வரலாற்றில் வேறு எந்த நிகழ்வும் ஏற்படுத்தாத அளவுக்கு
கட்சி நம்பகத்தன்மை இழந்தது; தனிமைப்பட்டது.
‘நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்
என்றும் கட்டாய நிலப்பறி முயற்சிகளுக்கு எதிர்ப்பு
தெரிவிக்க வேண்டும்’ என்றும் நகல் அரசியல் தீர்மானம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதன் விவசாய மற்றும்
விவசாயத் தொழிலாளர் அமைப்புக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. சிங்கூரில், குறிப்பாக நந்திகிராமில்
மார்க்சிஸ்ட் கட்சியின் பாத்திரம், நிலப்பறிக்கு எதிராக
நாட்டில் நடந்த அனைத்து போராட்டங்களாலும் அனைத்தும் தழுவிய கண்டனத்துக்கு உள்ளானது. நந்திகிராமில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை
நியாயப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதிகள்
முயன்றபோது, பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிற
இதுபோன்ற போராட்டங்களில் இருந்து அவர்கள் பின்வாங்க நேர்ந்தது. கையகப்படுத்துதலுக்கு எதிரான
போராட்டங்களில் ‘முன்கை எடுக்க’ முனையும் முன்பு, சிங்கூர் மற்றும் நந்திகிராம் பற்றி நாட்டில் உள்ள
விவசாயிகளுக்கு இடதுசாரி இயக்கத்துக்கு மார்க்சிஸ்ட்
கட்சி பதில் சொல்ல வேண்டாமா?
சிங்கூர், நந்திகிராம் தவிர, நிலம் கையகப்படுத்துதல் என்கிற மொத்தப் பிரச்சனை பற்றிய மார்க்சிஸ்ட்
கட்சியின் புரிதல், இன்னும் பொருளாதாரவாதத்
தன்மை கொண்டதாக, பெருநிறுவனங்களால், நிலவர்த்தக சக்திகளால் விவசாய நிலங்கள் அவற்றின்
விருப்பம்போல கையகப்படுத்தப்படுவது, விவசாயத்துக்கும், விவசாய சமூகத்துக்கும் உணவுப் பாதுகாப்பு
மற்றும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்ற ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் என்ன பாதிப்பு கொண்டு
வரும் என்பவை பற்றிய மதிப்பீட்டில் இருந்து முழுவதும் துண்டிக்கப்பட்டதாக உள்ளது. விவசாயிகளும்
பழங்குடி மக்களும் என்ன விலை கொடுத்தாலும்
தங்கள் நிலத்தை தர தயாராக இல்லாதபோது, ‘போதுமான இழப்பீடு’ தருவது பற்றியே மார்க்சிஸ்ட்
கட்சி கவலைப்படுகிறது.
ராமச்சந்திர குஹாவுக்கு அளித்த பதிலில்
பிரகாஷ் காரத், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின்பால் கொண்டுள்ள ‘நம்பிக்கையால்’, சென்ற நூற்றாண்டு வரை கட்சி சுற்றுச்சூழல் பிரச்சனையை
புறக்கணித்துவிட்டது என்றார். இன்னுமொரு சமயம், சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2005அய்
நாடாளுமன்றத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்ற
ஜேஎன்யு மாணவர் கேள்விக்கு, கட்சி தொழில்மயமாக்கத்தின் வாய்ப்புக்கள் பற்றி மட்டுமே அக்கறை
கொண்டிருந்ததால் விவசாய சமூகத்தின் நோக்கு
நிலையில் இருந்து பிரச்சனையைப் பார்க்க வேண்டும்
என்று மார்க்சிஸ்ட் கட்சிக்குப் படவில்லை என்றார். பாதிக்கப்பட்ட மக்களின் நோக்குநிலையில் இருந்து
நிலம் மற்றும் பிற இயற்கை செல்வாதாரங்கள் பற்றிய
பிரச்சனைகளை மார்க்சிஸ்ட் கட்சியால் பார்க்க
முடியுமா என்பது கேள்வியே.
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்
பெரிய அச்சுறுத்தல் என்று முத்திரை குத்தப்படுகிற
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில்
இந்திய அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்கு
முறை இயக்கமான ‘பசுமை வேட்டை’ பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இந்தப் பின்னணியில்
மற்றுமொரு முக்கிய பிரச்சனையாகும். நகல் அரசியல் தீர்மானத்தில் மாவோயிஸ்ட் வன்முறை பற்றி பல
பத்திகள் இருந்தாலும், நகல் அரசியல் தீர்மானம்
இந்தப் பிரச்சனையில் மவுனம் காக்கிறது. மாவோயிஸ்டுகளின் அராஜகவாத நடவடிக்கைகள், மற்ற
கட்சிகளின் அரசியல் செயல்வீரர்கள் மாவோயிஸ்டுகளால் படுகொலை செய்யப்படுவது, பல்வேறு
முதலாளித்துவ கட்சிகளை ஆதரிப்பதன் மூலம்
மாவோயிஸ்டுகள் வெளிப்படுத்தும் அரசியல் திவாலாத்தனம், அதன் சமீபத்திய உதாரணமாக மேற்கு
வங்கத்தில் மாவோயிஸ்டுகள் திரிணாமூல் காங்கிரசை
ஆதரித்தது ஆகியவை விமர்சனத்துக்குரியவை, நாட்டில் உள்ள அனைத்து காத்திரமான இடது மற்றும்
ஜனநாயக இயக்கப் போக்குகளாலும் நிராகரிக்கப்பட
வேண்டியவை.
ஆனால், எந்த இடதுசாரி பிரிவும் பசுமை
வேட்டை பற்றி எப்படி மவுனம் காக்க முடியும்? மார்க்சிஸ்ட் கட்சியின் மய்யத் தலைமை வஞ்சகமான
இந்த இயக்கத்தில் இருந்து விலகி நிற்க முயற்சித்த
போது, மேற்கு வங்கத்தில் அதிகாரத்தில் இருந்த
மார்க்சிஸ்ட் கட்சி பசுமை வேட்டையின் செயலூக்கமிக்க ஆதரவாளராக இருந்தது.
வனப்பகுதிகளில் நடவடிக்கைகள் மீதான
கூடுதலான அழுத்தம் வைக்கிற மாவோயிஸ்டுகள், பல கனிம வளம் செறிந்த பகுதிகளில் ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ளனர். இந்தப் பகுதிகள்தான் பெருநிறுவன நிலப்பறி, சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகள் ஆகியவற்றின் களமாகவும் இருக்கின்றன. எனவே இயல்பாக, இதுபோன்ற பல பகுதிகள் பெருநிறுவனக் கொள்ளைக்கு எதிரான விவசாயிகளின்
பழங்குடி மக்களின் எதிர்ப்பு மய்யங்களாகவும்
மாறியுள்ளன. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் பற்றிய
மாவோயிஸ்டுகளின் ஈடுபாடு அல்லது தலையீடு
முறைகள் பற்றி (மேற்குவங்கத்தின் லால்கர் ஒரு சிறந்த
உதாரணம்) ஒருவருக்கு விமர்சனம் இருக்கலாம்; ஆனால், பசுமை வேட்டை இந்த எதிர்ப்பை நசுக்குவதை, இந்த எதிர்ப்பை ஆதரிக்கும் அனைத்து தீவிரமான சக்திகளையும் அச்சுறுத்துவதை, ஒடுக்குவதை
நோக்கமாகக் கொண்டது என்பதை மறுக்க முடியாது.
பசுமை வேட்டையின் படுபாதகமான ஜனநாயக
விரோத விளைவுகள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின்
நகல் தீர்மானம் மவுனம் காப்பது மட்டுமின்றி, ‘ஆயுத
நடவடிக்கைகள் மூலம் பழங்குடி மக்களை அரசுக்கெதிராக நிறுத்தி, அரசு ஒடுக்குமுறையின் மொத்த
தாக்கத்தையும் பழங்குடி மக்கள் மீது திருப்பி விடு
வதாக’ மாவோயிஸ்டுகளை குற்றம் சாட்டுவதன் மூலம்
பெருநிறுவனக் கொள்ளை, அதற்கெதிரான பழங்குடி
மக்கள் எதிர்ப்பு என்ற ஒட்டுமொத்த பிரச்சனை பற்றிய
அதன் மேலோட்டமான புரிதலை வெளிப்படுத்திவிடுகிறது. பிரச்சனைக்குள் மாவோயிஸ்டுகள் வருவதற்கு
நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே பழங்குடி மக்களுக்கு
எதிராகத்தான் இந்திய அரசு நிற்கிறது; நவதாராளவாத
கொள்கை காலங்களில், நாட்டின் இயற்கை வளங்கள்
அனைத்தையும் கைப்பற்றிவிடும், கட்டுப்படுத்தும்
சர்வதேச மூலதனத்தின் முயற்சிக்கு தடையாக பழங்குடி மற்றும் பூர்வகுடி மக்கள் பார்க்கப்படும்போது
பழங்குடி மக்கள் மீதான அரசு ஒடுக்குமுறை பலமடங்கு
அதிகரித்துள்ளது.
விவசாய சமூகம் மற்றும் பழங்குடி மக்கள்
பிரச்சனைகள்பால் கூடுதல் கூருணர்வு இருப்பதாகக்
காட்ட நகல் தீர்மானம் முனைகிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த அடித்தளங்களில் நிலம்
கையகப்படுத்துதல் பிரச்சனைகளில் அதன் இறுமாப்பு
மிக்க, விவசாயிகள் விரோத அணுகுமுறை, அரசு
ஒடுக்குமுறை பற்றிய அதன் தெளிவற்ற நிலைப்பாடு
ஆகியவற்றைப் பார்க்கும்போது, இந்த கூருணர்வு
எந்த அளவுக்கு தொட்டறியத் தக்க நடவடிக்கையாக, நம்பத்தகுந்த இயக்கமாக மாற்றப்படும் என்பது
கேள்விக்குரியதே. அரசு ஒடுக்குமுறை, மனித உரிமைகள் ஆகிய பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி கொண்டுள்ள ஊசலாட்டம், நகல் தீர்மானத்தின் வடகிழக்கு
மாநிலங்கள் மற்றும் ஜம்மு, காஷ்மீர் தொடர்பான
பகுதிகளிலும் காணப்படுகிறது. கொடூரமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய
வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரவில்லை; சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை
சிறப்பு அதிகாரங்கள் சட்டம் பகுதியளவில் விலக்கிக்
கொள்ளப்பட வேண்டும் என்று மட்டுமே கோருகிறது.
தெலுங்கானா, விதர்பா அல்லது கோர்க்காலேண்ட் போன்ற தனிமாநில கோரிக்கைகளுக்கு
மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பை நகல் தீர்மானம்
மறுஉறுதி செய்கிறது. இந்த எதிர்ப்பு, மொழிரீதியான
புனர்நிர்மாணம் மற்றும் அரசு கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவது ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திசைவானது என்று கட்சி சொல்கிறது. பிராந்திய பின்தங்கிய நிலைமைகள், ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக சிறிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதை மனம்போன போக்கில் ஆதரிப்பதற்கு
கட்சி காட்டும் எதிர்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால், சில இனக்குழுக்களின், பிராந்தியங்களின்
வரலாற்றுரீதியான அடையாள விருப்பங்களில் அது
போன்ற கோரிக்கைகள் வேர் கொண்டிருக்குமானால், நீடித்த வெகுமக்கள் அணிதிரட்டல்களின் ஆதரவைப்
பெற்றிருக்குமானால், கட்சி ஏன் அதை எதிர்க்க
வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. மொழிரீதியான புனர்நிர்மாணம் மட்டுமே இறுதிச்
சொல்லாக ஏன் இருக்க வேண்டும்? கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக கட்டமைப்புக்கு ஒரு புதிய மாநிலம்
தீங்கு விளைவிக்கும் என்று ஏன் கருத வேண்டும்? அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் நேபாளி மொழி இணைக்கப்பட்டிருக்கும்போது, தனி கோர்காலாண்ட் மாநிலம் உருவாவது மொழி
ரீதியான புனர்நிர்மாணம் என்னும் உணர்வுடன் எப்படி
ஒத்துப்போகாமல் இருக்கும்?
நகல் தீர்மானம் கட்சியின் மரபுரீதியான அழைப்பான இடதுசாரி மற்றும் ஜனநாயக மேடை என்பதை, 17 அம்ச கொள்கைகள் மற்றும் கோரிக்கைகள்
சாசனத்தை முன்வைத்து, மீண்டும் சொல்கிறது. இடதுசாரி மற்றும் ஜனநாயக மேடை பற்றிய இந்த புதுப்பிக்கப்பட்ட அழுத்தம், மூன்றாவது அணி, மதச்சார்பற்ற அணி போன்ற கட்சியின் சமீபத்திய பரிசோதனைகளில் இருந்து மாறுபட்டதா? தீர்மானத்தை
ஆழமாகப் படித்தால் மார்க்சிஸ்ட் கட்சி அப்படி
எதையும் யோசிக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத்
தெரியும். நிஜ வாழ்க்கையில் இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்று பற்றிய கருத்து வாய்ப்புள்ள இடங்களில்
எல்லாம் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத
முதலாளித்துவ கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி
மற்றும் உடன்பாடு காண்பது என்ற மார்க்சிஸ்ட்
கட்சியின் நடைமுறை அழுத்தத்துக்கு தொடர்ந்து
கீழ்ப்பட்டதாகத்தான் இருக்கும். இந்திய – அமெரிக்க
அணுஆற்றல் ஒப்பந்தம் பிரச்சனையில் மார்க்சிஸ்ட்
கட்சியின் அனைத்து முதலாளித்துவ கூட்டாளிகளும்
மார்க்சிஸ்ட் கட்சியை எப்படி கைவிட்டார்கள் என்று
நாம் பார்த்தோம். வெவ்வேறு மாநிலங்களில் பெரும்பாலும் ஆளும்கட்சிகளாகவும் எதிர்க்கட்சிகளாகவும்
இருக்கிற இந்த கூட்டணி கட்சிகள் எதுவும் இந்த 17 அம்ச இடதுசாரி மற்றும் ஜனநாயக சாசனத்தில் எந்த
ஆர்வமும் கொண்டவை அல்ல என்பதும் தெளிவாகத் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியால் நடைமுறைப்படுத்தப்படும் அய்க்கிய முன்னணி கொள்கை, எப்போதாவது கூடுதல் எண்ணிக்கையிலான இடங்கள்
பெறுவதில், மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தாண்டிய
மாநிலங்களில் கூடுதல் வாக்குகள் பெற உதவியிருக்கலாம். ஆனால், இடதுசாரிகளின் சுதந்திரமான
பாத்திரம் மற்றும் அதை முன்னிறுத்துவது என்று அது
அழைப்பதை உறுதிப்படுத்துவதில், அல்லது அது
அதிகம் கவலைப்படுகிற, அடிப்படை வர்க்கங்களின்
போராட்டங்களை முன்நகர்த்துவதில் காணப்படும்
‘பின்னடைவை’ வெற்றிகொள்வதில் மார்க்சிஸ்ட்
கட்சிக்கு எந்த விதத்திலாவது உதவியிருக்கிறதா? மார்க்சிஸ்ட் கட்சி 20ஆவது காங்கிரசுக்கான நகல்
அரசியல் தீர்மானம் இந்தக் கேள்விகளை அங்கீகரிக்கும் துணிவைக் கூட காட்டவில்லை.
(லிபரேசன், மார்ச் 2012 இதழில் இருந்து)