டிரம்ப்பின்
வெற்றிக்குப் பின்னால்
எஸ்.குமாரசாமி
பதில்:
இன்றைய உலகின் மக்கள் தொகை
743 கோடியே 26 லட்சத்து 63 ஆயிரத்து 275. இதில் அய்க்கிய அமெரிக்க
மக்கள் தொகையான 32 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரத்து 787 என்பது வெறும் 4.36% மட்டுமே.
உலக மக்கள் தொகையில் 4.36% மட்டுமே
உள்ள ஒரு நாடுதான், உலகையே
ஆட்டிப் படைக்க மூர்க்கமாக முயற்சிக்கிறது.
கேள்வி:
ஹிலாரியும் டிரம்ப்பும் பெற்ற வாக்குகள் என்ன?
பதில்:
இந்த அதிபர் தேர்தலில் வயது
அடிப்படையில் வாக்களிக்க தகுதி உடைய அமெரிக்கர்கள்
25 கோடியே 11 லட்சத்து 7 ஆயிரம் பேர். ஹிலாரி
கிளிண்டன் 6 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 504 வாக்குகள் (47.7%) பெற்றார். டொனால்ட் டிரம்ப் 6 கோடியே 4 லட்சத்து 67 ஆயிரத்து 245 வாக்குகள் (47.3%) பெற்றார்.
கேள்வி:
ஹிலாரி, ட்ரம்ப்பை விட கிட்டத்தட்ட 5 லட்சம்
வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். அவரை விட குறைவாக
வாக்குகள் பெற்ற டிரம்ப் எப்படி
வெற்றி பெற்றார்?
பதில்:
அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியாளர்கள்
நேரடியாய் மக்களிடம் பெறும் வாக்குகள் அடிப்படையில்
வெற்றி பெற முடியாது. மாநிலங்களின்
பிரதிநிதிகள் அவை வாக்குகள் 270க்கும்
மேல் பெறும் வேட்பாளரே, அதிபராக
முடியும்.
கேள்வி:
மாநிலங்களின் பிரதிநிதிகள் அவை வாக்குகள் எப்படி
கணக்கிடப்படும்?
பதில்:
அய்க்கிய அமெரிக்காவில் 50 மாநிலங்களும், வாஷிங்டன் இடம் பெற்றுள்ள டிஸ்ட்
ரிக்ட் ஆஃப் கொலம்பியாவும்
உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை பிரதிநிதிகள் என்று
முடிவு செய்யப்பட்டுள்ளது. நெப்ராஸ்கா மற்றும் மெய்ன் என்ற
இரண்டு மாநிலங்களில் மட்டும் மாவட்ட வாரியாக
பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள் தேர்வாகின்றனர்.
மிச்சிகன்
16, விஸ்கோன்சின் 10, பென்னிசில்வேனியா 20 என பிரதிநிதிகள் அவைக்கு
செல்வார்கள். இங்கேதான் ஒரு திருகல் உள்ளது.
மிச்சிகனில் ஹிலாரி 47.3% வாக்குகளும், டிரம்ப் 47.6% வாக்குகளும் பெற்றார்கள். பெற்ற வாக்குகளுக்கேற்ப, இரு
வேட்பாளர்களுக்கும் பிரதிநிதிகள் கிடைக்காது. கூடுதலாய் மாநிலத்தில் மக்கள் வாக்குகள் பெற்றவருக்கு,
அந்த மாநிலத்தின் அனைத்து பிரதிநிதிகளும் கிடைத்து
விடுவார்கள். இந்த மூன்று மாநிலங்
களிலும் 0.3%, 1%, 1.4% கூடுதல் வாக்குகள் பெற்ற
ட்ரம்ப் இந்த மூன்று மாநிலங்களின்
46 பிரதிநிதிகளையும் கைப்பற்றி விட்டார். இப்படிப்பட்ட கணக்கில்தான், டிரம்ப் 310 பிரதிநிதிகளும் ஹிலாரி 218 பிரதிநிதிகளும் பெற்றிருந்தனர். அதனால்தான், டிரம்ப் வெற்றி பெற்றார்.
கேள்வி:
எந்த மாநிலங்களில் யாருக்கு எவ்வளவு பலம், பிரதிநிதிகள்
கூடுதல் உள்ள மாநிலங்களை யார்
வெல்கிறார் என்பதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்குமா?
பதில்:
ஆமாம். ஜனநாயகக் கட்சி வெற்றி பெறும்
மாநிலங்கள் நீல மாநிலங்கள். குடியரசுக்
கட்சி வெற்றி பெறும் மாநிலங்கள்
மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள். ஆப்ரகாம்
லிங்கன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின மக்கள் விடுதலைக்கான போரில்
வெற்றிக்கு வழி நடத்தியவர். ஆனால்,
வரலாற்றின் விந்தைமுரணாக கடந்த சில பத்தாண்டுகளாக,
அந்தக் காலத்தில் அடிமை முறையை அமல்படுத்திய
தெற்கத்திய மாநிலங்கள் குடியரசுக் கட்சியின் கோட்டைகள். நியுயார்க், கலிபோர்னியா மற்றும் கடலோர மாநிலங்கள்
ஜனநாயக கட்சி கூடுதல் பலம்
பெற்றுள்ள மாநிலங்கள். கட்சிகளும் வேட்பாளர்களும் தம் கோட்டைகளைத் தக்க
வைக்கவும், எதிரி கோட்டைகள் சிலவற்றையாவது
கைப்பற்றவும், இப்படியும் அப்படியும் செல்லும் மாநிலங்களில் (ஸ்விங் ஸ்டேட்ஸ்) எப்படியாவது
வெற்றி பெறவும் முயற்சிப்பார்கள். நிச்சயமாக
வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ள மாநிலங்களில்
கூடுதல் வாக்குகள் பெற அவ்வளவு அக்கறை
காட்ட வேண்டியதில்லை. புளோரிடா, ஓஹையோ ஆகியவை பொதுவாக
ஸ்விங் மாநிலங்கள் ஆகும். இது போக
அந்த நாட்டின் வாக்காளர்களில் 70% பேர் குடியரசு மற்றும்
ஜனநாயக கட்சிகளின் பதிவு பெற்ற வாக்காளர்கள்.
இந்த முறை 2016ல் அவர்களில் 90% பேர்
தத்தமது கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். ஆக பெருநகரம், சிறுநகரம், என்ன படித்தவர்கள், என்ன
வருமானம் உள்ளவர்கள், என்ன வயதினர், வெள்ளையினத்தவரா,
ஸ்பானிஷ் மொழி பேசும் ஹிஸ்பானிக்
லத்தினோ மக்களா, கருப்பு நிறம்
உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
கேள்வி:
ஹிலாரி - ட்ரம்ப் இருவருக்கும் இடையிலான,
பார்த்த மாத்திரத்தில் தெரியும் வேறுபாடுகள் என்ன?
பதில்:
ஹிலாரி முழுக்க முழுக்க நிறுவன
நபர், (எஸ்டாப்ளிஷ்மென்ட் பெர்சன்). அவரது கணவர் பில்
கிளின்டன் இரண்டு முறை அய்க்கிய
அமெரிக்க அதிபர் ஆக இருந்தவர்.
ஹிலாரி செனட்டராக இருந்தவர். அயல் விவகாரத்துறை அமைச்சராக
இருந்தவர். நிதி மூலதன உலகோடு,
இராணுவ அதிகார வர்க்க அரசியல்வாதி
அச்சோடு, நாட்டின் அரசியலோடு பொருளாதாரத்தோடு நெருக்கமான பிணைப்புக்கள் உள்ளவர். ஆழமான அரசோடு, ஏகாதிபத்திய
உலகின் தலைவர்களோடு தொடர்பு உள்ளவர். முழுக்க
முழுக்க இன்சைடர். உள் ஆள். கார்ப்பரேட்
நிறுவனங்களால், கார்ப்பரேட் அச்சு மின் அணு
ஊடகங்களால், ஹாலிவுட் திரையுலக பிரபலங்களால், ஒபாமாவால் ஆதரிக்கப்பட்டவர். குடியரசுக் கட்சியின் காலின் பாவெல், கோன்டலிசா
ரைஸ் போன்ற பிரபலங்களின் ஆதரவு
பெற்றவர்.
ஆனால் டொனால்ட் டிரம்ப் முழுக்க முழுக்க
வெளி ஆள். அவுட்சைடர். இராணுவ
சேவை செய்யாதவர். அரசாங்க வேலை பார்க்காதவர்.
மாநில ஆட்சிமன்ற பொறுப்புகளில், அய்க்கிய அமெரிக்க காங்கிரஸ் செனட் அவைகளில் இடம் பெறாதவர். பெரும்தொழில்
அதிபர். கோடி கோடியாய் இந்தியா
உள்ளிட்ட நாடுகளில் சொத்து உடையவர். பெண்களுக்கு
எதிராக பாலியல் வக்கிரத்தோடு பேசுபவர்.
பாலியல் வேட்டைக் குணம் கொண்டவர், இசுலாமிய
வெறுப்பாளர். ஹிஸ்பானிக்குகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
மீது விஷம் கக்குபவர். மனம்
போனபடி நடப்பவர். மனம் போனபடி பேசுபவர்.
அரசியல்ரீதியாக சரியாக பேசுவது, சரியாக
நடந்து கொள்வது போன்றவற்றையெல்லாம் கேலியும்
கிண்டலும் செய்பவர்.
சர்வதேச
அளவிலான இன/நிற/மத
வெறியர்கள் இவருடைய கூட்டாளிகள், குடியரசுக்
கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்ட மாநாட்டில்,
இங்கிலாந்தின் தேசிய வெறி அரசியல்வாதி
நிகல் ஃபாரேஜ÷ம், ஹாலந்தின்
தேசிய வெறி அரசியல்வாதி கிரிக்
வில்டர்சும் வந்திருந்தனர். இவர் அதிபர் பொறுப்பேற்கும்போது
பிரான்சின் இன/நிற வெறி
அரசியல்வாதி மரியன் பென்னும் கலந்து
கொள்ள உள்ளார். டிரம்ப்புக்கு மோடியை மிகவும் பிடிக்கும்.
கேள்வி:
டிரம்ப்பின் அறிவிக்கப்பட்ட அரசியல் நம்பிக்கைகள் நிலைப்பாடுகள்
எவை?
பதில்:
1998ல் டிரம்ப் பீப்பிள் மேகசினுக்கு
பேட்டி அளித்தார். ‘நான் அதிபர் பதவிக்குப்
போட்டியிட்டால் குடியரசுக் கட்சி சார்பாகவே போட்டியிடுவேன்.
அந்தக் கட்சியினர்தான், நாட்டின் மிகவும் முட்டாள்களான வாக்காளர்கள்.
அவர்கள், ஃபாக்ஸ் தொலைக்காட்சி எதைச்
சொன்னாலும் அதை அப்படியே உண்மையென்று
நம்பி ஏற்பவர்கள்.
அவர்கள் சார்பாக எனக்கு பெரும்
எண்ணிக்கையில் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும்’.
செப்டம்பர்
1, 1987 அன்று, ரியல் எஸ்டேட் அதிபரான,
அப்போது 41 வயது நிரம்பிய டிரம்ப்,
ஒரு விளம்பரம் தந்தார். சிஎன்என்னின் ரான் கிங்குக்கு பின்வரும்
பேட்டி அளித்தார். ‘நமது முட்டாள்தனத்தைப் பார்த்து
மற்ற நாடுகள் சிரிக்கின்றன. இது
மிகப் பெரிய நாடு. ஆனால்
நமது தலைவர்கள் முட்டாள்கள். ஜப்பான், சவுதி அரேபியா போன்ற
நாடுகளுடன் வெளி வர்த்தகப் பற்று
வரவில் ஆண்டு தோறும் 2,000 கோடி
டாலர்களை நாம் இழந்து கொண்டு
இருக்கிறோம். அமெரிக்கா ஆதரிக்காவிட்டால், இந்த நாடுகளை மற்ற
நாடுகள் இருக்கும் இடம் தெரியாமல் வரைபடத்தில்
இருந்து அகற்றிவிடுவார்கள். இப்படியே நீடித்தால் அமெரிக்கா இன்னும் இரண்டு ஆண்டுகளில்
திவாலாகி விடும். ராணுவரீதியாக அளிக்கும்
பாதுகாப்புக்காக, இந்த நாடுகளைப் பணம்
கொடுக்க செய்ய வேண்டும்’.
‘சுதந்திர
வர்த்தகம் என்று எதுவும் கிடையாது.
ஜப்பானிலும் சவுதி அரேபியாவிலும் அமெரிக்க
நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்த
முடியவில்லை. ஜப்பான் இங்கே வந்து,
மன்ஹாட்டனில் எல்லாவற்றையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. நமது விவசாயிகள் விளைபொருட்களுக்கு
நல்ல விலை கிடைக்காமல் செத்துக்
கொண்டிருக்கிறார்கள். வீடற்றவர்கள் அமெரிக்க நகர்களில் திரிகிறார்கள். உலகிலேயே பணக்கார நாடுகளுக்கு நாம்
நிறைய பணம் கொடுக்கிறோம். நம்
நாட்டு மக்கள் மீது எந்த
அக்கறையும் இல்லாமல் இருக்கிறோம். ஏழைகள், நோயாளிகள், வீடற்றவர்கள்,
விவசாயிகள், நமது உதவிகளைப் பெறாதவர்கள்
அன்ற அனைத்துத் தரப்பினரும் அல்லலுறுகின்றனர்’.
2016ன்
ட்ரம்ப், தொழிலாளர்களின் கூலி திருடப்படுவதாகவும், கூலி
தேங்கி நிற்பதை ஏற்க முடியாது
என்றும் குடியரசு கட்சியை தொழிலாளர் கட்சியாக
மாற்றத் தயங்க மாட்டேன் என்றும்
சொன்னார்.
1960களில்
நான்கு வேலை வாய்ப்புகளில் ஒரு
வேலை வாய்ப்பு உற்பத்தித் துறை வேலையாக இருந்தபோது,
இப்போது 10 வேலை வாய்ப்புகளில் ஒரு
வேலை வாய்ப்பு மட்டுமே உற்பத்தித் துறையில்
இருப்பது நியாயமா எனக் கேட்டார்.
ஆப்பிள்
நிறுவனம், அய்க்கிய அமெரிக்காவில் மட்டுமே கணிணி தயாரிப்பதை
கட்டாயமாக்குவேன் என்றார். ஃபோர்டு நிறுவனம் வெளிநாடுகளில்
கார் தயாரித்தால் 35% வரி போடுவோம் என்றார்.
மெக்சிகோ
வழியாக அந்நியர் நுழைவதைத் தடுக்க, மெக்சிகோ செலவில்,
மெக்சிகோவுக்கும் அய்க்கிய அமெரிக்காவுக்கும் இடையில் சுவர் எழுப்ப
வேண்டும் என்கிறார். அய்க்கிய அமெரிக்க வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளுக்குப்
போகக் கூடாது எச் - 1பி
விசா மூலம் இந்தியர்கள் போன்றவர்கள்
அய்க்கிய அமெரிக்கர்கள் வேலைகளைப் பறித்துக் கொள்வதைத் தடுப்பேன் என்றார்.
விதிவிலக்காக,
நேட்டோவுக்கு பணம் அள்ளித் தர
முடியாது, ரஷ்யாவோடு நல்லுறவு, முதல் அணுஆயுதத் தாக்குதல்
அய்க்கிய அமெரிக்கா நடத்தாது என்ற விசயங்களையும் பேசினார்.
ஹிலாரியை
குரூக்கட் ஹிலாரி (இழ்ர்ர்ந்ங்க் ஏண்ப்ப்ஹழ்ஹ்) (Crooked Hillary) என அழைத்தார். ஹிலாரியை சிறையில் அடைக்க வேண்டும் என்று
அவரது ஆதரவாளர்களைச் சொல்ல வைத்தார்.
பருவ நிலை மாற்றம் என்றெல்லாம்
எதுவும் இல்லை, அது சீனா
காட்டும் பூச்சாண்டி என்கிறார்.
ஒபாமா அய்க்கிய அமெரிக்காவில் பிறக்காதவர், சட்டவிரோதமாக அதிபர் பதவியில் இருக்கிறார்
என்றார். பாரக் ஹ÷சேன்
ஒபாமா என்ற பெயருள்ளவர் இசுலாமியர்
என்றும் கிறித்துவர் வேடம் போடுவதாகவும், தனக்கு
வேண்டியவர்கள் மூலம் சொல்ல வைத்தார்.
செப்டம்பர்
16 அன்றுதான் ட்ரம்ப் ஒபாமாவின் அய்க்கிய
அமெரிக்க பிறப்பை ஏற்றுக்கொண்டார். இப்போதும்
ட்ரம்ப் ஆதரவாளர்களில் 100ல் 39 பேர், ஒபாமா
வெளிநாட்டவர் என்று நம்புகின்றனர். 100ல்
54 பேர் அவர் இசுலாமியர் என்று
நம்புகின்றனர். ட்ரம்ப் ஒரு வேளை
தோல்வி அடைந்திருந்தால், அவரது ஆதரவாளர்களில் 100ல்
70 பேர், தேர்தல் தில்லுமுல்லுகள் மற்றும்
முறைகேடுகளால் ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டார் என்று
நம்பத் தயாராக உள்ளனர்.
கேள்வி:
ட்ரம்ப்பின் செல்வாக்கு வளர என்ன நிலைமைகள்
உதவின?
பதில்:
அய்க்கிய அமெரிக்க, சமூக பொருளாதார காரணங்களை
சற்று விரிவாக காண்பது அவசியம்.
ஜனநாயக
கட்சி செனட்டர், ஹார்வர்ட் பல்கலைக் கழக பேராசியர், ஹிலாரி
ஆதரவாளர், ட்ரம்ப் எதிர்ப்பாளர் எலிசபெத்
வாரன், அய்க்கிய அமெரிக்க நிலைமைகள் பற்றிய விவரிப்பைத் தருகிறார்.
‘இப்போது கணவன், மனைவி இருவருமே
வேலைக்குப் போகும் சராசரி அய்க்கிய
அமெரிக்க குடும்பம், ஒரு தலைமுறைக்கு முன்னால்,
ஒரே ஒருவர் சம்பாதித்துக் கொண்டிருந்த
குடும்பத்தை விட மோசமான நிலையில்
உள்ளது. அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் கடன்காரராகி, கடன்
வசூலிக்க வருபவருக்கு பதில் சொல்லும் நிலையில்
உள்ளார். கல்லூரி மாணவர்களில் 70% பேர்,
18 வயதை எட்டும்போது, கடன் சுமையால் அழுத்தப்படுகின்றனர்.
2015ல் மட்டும் 8,20,000 குடும்பங்கள், தாங்கள் திவாலாகிவிட்டதாக அறிவித்துள்ளனர்’.
‘இதற்கெல்லாம்
காரணம், அரசின் கொள்கைகள் மாறியதுதான்.
நடுத்தர குடும்பங்களை வலுப்படுத்திய நாடு என்ற நிலையில்
இருந்து விலகி, பெரும்பணக்காரர்களை ஆதரிக்கும்
நாடாக மாறிவிட்டோம். 1935 முதல் 1980 வரை உருவான செல்வங்களில்
70% வாழ்க்கையின் அடிநிலையில் உள்ள 90% மக்களுக்குச் சென்றுள்ளது. உயர்நிலையில் உள்ள 10% பேருக்கு எஞ்சிய 30% சென்றது. 1980 முதல் 2016 வரை (உலகமய, தனியார்மய,
தாராளமய காலத்தில்) புதிதாக உருவான செல்வம்
அனைத்தையும் 10% பணக்காரர்கள் விழுங்கினர். மீதமுள்ள 90% பேருக்கு எதுவும் இல்லை’.
‘சராசரி
அமெரிக்கர்களின் வாழ்க்கை கடந்த 30 ஆண்டுகளில் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.
வருவாயில் 13%த்துக்கும் குறைவாக உணவுக்கும், 46%க்கும்
குறைவாக உடைகளுக்கும், 48%க்கும் குறைவாக அய்ஃபோன்
உள்ளிட்ட சாதனங்களுக்கும் செலவிடுகின்றனர். ஏற்கனவே செலவழித்ததை விட
போக்குவரத்துக்கு 11%, குடியிருப்புக்கு 57%, சுகாதாரக் காப்பீட்டுக்கு 104%, கல்லூரி கல்விக்கு 275%, குழந்தைகள்
நலனுக்கு 953% கூடுதலாக செலவழிக்கின்றனர்’.
2008, 2009 பொருளாதார
வீழ்ச்சிக்குப் பிறகு, ஜனநாயக கட்சியின்
புதிய அதிபர் ஒபாமா காலத்தில்
என்ன நடந்தது என்பது இந்தத்
தேர்தலில் ஒரு தீர்மானகரமான பங்கு
வகித்தது. நிதிநிறுவனங்களுக்கு மக்களின், நாட்டின் வளங்களை வாரி வழங்கிய
ஒபாமா, நம்புங்கள், நம்மால் முடியும் என்ற
வெற்று முழக்கத்தை மட்டுமே கூவி விற்றார்.
(ஒபாமா மக்களுக்குத் தந்த பாதுகாப்பின்மையை, மக்களுக்கு
ஏற்படுத்திய கவலையை, இப்போது மக்கள்,
ஜனநாயக கட்சிக்கும் முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதன்
நிறுவனங்களுக்கும் தந்துள்ளனர்). 2009க்குப் பிறகு அய்க்கிய
அமெரிக்காவின் பெருந்தொழில் குழும லாபங்கள் இரண்டு
மடங்காகப் பெருகின. அவர்கள் நாட்டு டௌ
பங்குச் சந்தை மதிப்பு மூன்று
மடங்கு உயர்ந்தது. ஒபாமா பதவி காலத்தில்
பெரும்தொழில் குழும மற்றும் முதலீட்டாளர்
வரிகள் 6 ட்ரில்லியன் டாலர் (1 ட்ரில்லியன் டாலர் = 65,00,000 கோடி ரூபாய்) குறைக்கப்பட்டது.
ஆகப்பெரும் பணக்காரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் 1 ட்ரில்லியன்
டாலர் பண முடிப்பு தரப்பட்டது.
நிதி மூலதனம் குவித்த பணம்,
தொழில், சேவைத் துறையில் அல்லாமல்,
சூதாட்ட ஊக வணிகத்தில் செலுத்தப்பட்டது.
5 கோடி முதியோர்களின் ஓய்வூதிய நிதியத்துக்கு வட்டி தரப்படவில்லை. 13 கோடி
பேர் வீட்டு அடமானம் மூழ்கும்
நிலையை சந்தித்தனர். சம்பளம் தேங்கியது. பகுதி
நேர, தற்காலிக, நெளிவுசுளிவு வேலைவாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன.
சமூகரீதியாக,
கருப்பு உயிர்களுக்கு பொருளே இல்லை என்ற
நிலை வெள்ளை இனவெறியர்களால் உருவாக்கப்பட்டது.
வாக்களிக்கும் தகுதி பெற்ற 8 ஆப்பிரிக்க
அமெரிக்கர்களில் ஒருவர் (12.5%) வாக்களிக்கக் கூடாது என தடை
விதிக்கப்பட்டது. ஹிஸ்பேனிக் குடியேறிகள் லட்சக்கணக்கில் அகற்றப்பட்டனர். ஓயாத போர், கூடுதல்
செலவையும் இழப்பையும் உருவாக்கியது. கருச்சிதைவு நிலையங்கள், தன்பால் ஈர்ப்புடையோர், சிறுபான்மையினர்
மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. மக்கள் வாழ்வின் எல்லா
அம்சங்களிலும் அரசு ஒற்று வேலை
பார்த்தது. ஜனநாயக கட்சி ஆட்சி
வேண்டவே வேண்டாம் என்ற கருத்து வளர,
நிலம் செழிப்பாக இருந்தது.
கேள்வி:
சரி, அப்படியானால் பொருளாதார அடிப்படையில் மட்டும், அல்லது சற்று நீட்டுவித்து,
வர்க்க அடிப்படையில் மட்டுமே, ட்ரம்ப் வென்றதற்கான காரணங்களை
சொல்ல முடியுமா? தொழில்கள் நின்றுபோய், வேலை வாயப்புகள் போய்
துருப்பிடித்த ரஸ்ட் பெல்ட் போன்ற
நிலைமைகளில், வெள்ளையினத் தொழிலாளர்கள், ஹிலாரியைத் தோற்கடித்தார்களா?
பதில்:
முதலில் சில விவரங்கள் காண்போம்.
1996, 2000, 2004, 2008, 2012 ஆண்டுகளில்
ஜனநாயகக் கட்சி மிச்சிகன், விஸ்கோன்சின்,
பென்னிசில்வேனியா மாநிலங்களில் வென்றது. இங்கு ஒபாமா குடியரசுக்
கட்சியின் மேட் ரிம்னியைக் காட்டிலும்
2008, 2012ல் சுமார் 6% முதல் 16% வரை கூடுதல் வாக்குகள்
பெற்றார். இவை பொருளுற்பத்தியும் வேலைகளும்
அடிவாங்கிய ரஸ்ட் பெல்ட் மாநிலங்களே.
இந்த முறை இந்த மூன்று
மாநிலங்களிலும் 46 பிரதிநிதிகளும் ட்ரம்ப்பிடம் சென்றனர். இந்த 46 ஹிலாரிக்குக் கிடைத்திருந்தால்
அவர் 228+46, 274 பெற்றிருப்பார். ட்ரம்ப் 310-46, 264 பெற்றிருப்பார். ஹிலாரி வென்றிருப்பார்.
20 பிரதிநிதிகளை
ட்ரம்ப்புக்கு தந்த பென்னிசில்வேனியாவில் ட்ரம்ப் ஆதரவாளர்களின்
சராசரி வருமானம் 72,000 டாலர். ஹிலாரி ஆதரவாளர்களின்
சராசரி வருமானம் 61,000 டாலர்கள். ஆனபோதும், வெள்ளையர்களின் 50% வாக்குகளை மட்டும் ட்ரம்ப் பெறுவார்
என கணிக்கப்பட்ட நிலையில், ட்ரம்ப், தேர்தலில் அவர்களின் 56% சதம் வாக்குகளை கைப்பற்றினார்.
ட்ரம்ப்பின்
வெற்றியில் வர்க்கரீதியான பொருளாதாரரீதியான காரணங்கள் நிச்சயம் உண்டு. ஆனால் அடையாள,
இன, நிற, மதரீதியான அசிங்கமான,
குரூரமான தன்மை கொண்ட காரணங்கள்
உண்டு என்பதை மறுக்க முடியாது.
ட்ரம்ப்
பணக்காரர்கள் மீதான வரியைக் குறைப்பேன்
என்றார். மக்களுக்கு மருத்துவக் கவனிப்பு பாதுகாப்பை வழங்கும் ஒபாமா கேர் திட்டத்தை
ஒழித்துக் கட்டுவேன் என்றார். ஆனாலும் சாமான்யர்கள், வெள்ளையின
உழைக்கும் மக்கள், பெருமளவில் ட்ரம்ப்புக்கு
வாக்களித்துள்ளனர்.
நாகரிகம்
பற்றிக் கவலைப்படாத முரட்டுத்தனமான ட்ரம்ப் என்றும், நாகரிகத்
தோற்றம் உடைய நயவஞ்சகமான பொய்
பேசும் மூடிமறைக்கும் குறுக்குவழி
ஹிலாரி என்றும், அய்க்கிய அமெரிக்க மக்கள், ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
ஹிலாரி ஜனநாயகக் கட்சியின், ஆகமோசமான வேட்பாளர் ஆவார். அவர் ஒபாமாவை
விட ஹிஸ்பானிக்குகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின்
வாக்குகளை குறைவாகவே பெற்றார். மத்திய புலனாய்வுத் துறை
கசியவிட்ட ஹிலாரியின் இமெயில் முறைகேடுகள் விஷயமும்,
சிறிதளவு அவரைப் பலவீனப்படுத்தியது.
ஆனால்,
மிகவும் முக்கியமாக, அய்க்கிய அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம். மேக் அமெரிக்கா கிரேட்
அகெயின் என்ற ட்ரம்ப்பின் முழக்கம்,
ஒரு முக்கியப் பங்காற்றியது. தகுதியற்ற கருப்பு நிற ஒபாமாவின்
8 ஆண்டு கால ஆட்சி அய்க்கிய
அமெரிக்காவை தரம் தாழ்த்தியுள்ளது, வெள்ளை
நிறத்தவர் ஆட்சி மூலம் தூய்மைப்படுத்தி
மீண்டும் நாட்டை மகத்தானதாக்கு வோம்
என்பதே முழக்கத்தின் சாரம். ட்ரம்ப் ஆதரவாளர்கள்
ஒரு வலதுசாரி வெறுப்பு அரசியலை, கருத்தியலை வெற்றிகரமாக பரப்பினர். அமெரிக்க கனவை கைப்பற்ற நிற்கும்
சாமான்யர்களின் வரிசையில், திடீரென கருப்பினத்தவர்கள், ஹிஸ்பானிக்குகள்,
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசியர்கள் போன்றோர் உள்ளே புகுந்து முன்னே
சென்றுவிட்டனர், அப்படி தகுதி இல்லாமல்தான்
ஒபாமாவும் மிஷேலும் கூட வரிசையில் முன்னே
நுழைந்தனர், ஒபாமா, அந்த வகையில்,
வரிசையில் நிற்கும் கடின உழைப்பாளிகளின் அதிபரல்ல,
அவர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பாடுபடும் வெள்ளை அய்ரோப்பிய வம்சாவழியினரின்
அதிபரல்ல, தவறான முறையில் வாய்ப்புக்களை
கைப்பற்றியவர்களின் அதிபர், அரசு நிறுவனங்கள்,
கொள்கை வகுப்பது எல்லாமே வெள்ளையர்கள் கைகளை
விட்டுச் சென்றுவிட்டன, தகுதியான நாம், தகுதியற்ற அவர்களிடமிருந்து
நாட்டை மீட்கவேண்டும்,
திரும்பக் கைப்பற்ற (டேக் பேக்) வேண்டும்
என்பதுதான், அந்தக் கருத்தியல் ஆகும்.
கேள்வி:
ட்ரம்ப் வழியேதான் பாசிசம் அந்த நாட்டிற்கு
வந்துள்ளதா?
பதில்:
இல்லை, நிச்சயம் இல்லை. தற்போதைய அய்க்கிய
அமெரிக்க சமூக பொருளாதார நிலைமைகளுக்கு
எதிரான, இருக்கிற நிலைமைகளுக்கு (ஸ்டேட்டஸ் கோவுக்கு) எதிரான மக்கள் சீற்றம்
மேலோங்கியிருந்தது. அது இனம் புரியாததாக,
வகைப்படுத்த முடியாததாக தோற்றம் கொண்டிருக்கலாம், ஆனால்
இந்த சீற்றம் ஜனநாயகக் கட்சியை,
ஹிலாரியை வீழ்த்தியது. இந்த சமூக பொருளாதார
அரசியல் பின்னணியில் ஏற்கனவே உருவாகி வளர்ந்துள்ள
உள்ளார்ந்த பாசிசத்துக்கு, ட்ரம்ப் போன்ற வகைமாதிரி
அரசியல்வாதி, பொருத்தமான பண்பு மாற்றத்துடன், கூடுதல்
வெளிச்சத்துடன் துலக்கமான தோற்றம் வழங்கியுள்ளார்.
கேள்வி:
அடுத்து என்ன?
பதில்:
ட்ரம்ப் வெற்றிக்குப் பின் வெள்ளையர் அல்லாதோர்
மீது 200 வெறுப்புக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவர் 30 லட்சம் குடியேறியவர்களை
விரட்டுவோம் என்கிறார். அவர் ஆண்டுக்கு ஒரு
டாலர் சம்பளம் பெறுவேன், விடுப்பே
எடுக்க மாட்டேன் என்றெல்லாம் சொன்னாலும், அன்றாடம், ட்ரம்ப் வேண்டவே வேண்டாம்
என்ற எதிர்ப்பு வீதிகளில் பரவி வருகிறது.
மூலதனம்
உலகம் முழுவதும் விரைந்து பாய்வதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ளும் ட்ரம்ப்,
உழைப்பின் நடமாட்டத்தை (மொபிலிடி) முடக்கப் பார்ப்பது முரணானது. அய்க்கிய அமெரிக்க சமூகத்துக்கு ராணுவ, அதிகாரவர்க்க,
அரசியல்வாதி அச்சு, அதன் பின்
நிற்கும் நிதிமூலதனம், வேரூன்றி நிற்கும் ஆழமான அரசு ஆகியவை
மிகவும் அடிப்படையானவை. மூலதனம் குறைந்த கூலி
கொடுத்து கூடுதல் லாபம் ஈட்டுவதை
எவர் தடுத்தாலும் ஏற்காது. ஏகாதிபத்தியம் ஆயுதப் போட்டியில்லாத, போர்
இல்லாத உலகத்தை அனுமதிக்காது. ட்ரம்ப்,
ஆளும் வர்க்கங்கள் மத்தியில் மற்றும் அவர்கள் நிறுவனங்களில்,
வழக்கமான மேட்டுக்குடியினர் தாண்டி செல்வாக்கு பெற,
உரிய சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
மறுபக்கம் அவர், மக்களின் வாழ்க்கையில்,
அவர்களுக்குச் சாதகமாக, வருமானங்களையும் செல்வங்களையும் மறுபங்கீடு செய்வதில் போதுமான அளவு செயல்படாவிட்டால்,
இப்போது நான்கு நாட்களாக நீடிக்கும்
எதிர்ப்பு, இன்னும் பல மடங்கு
அதிகரிக்கும்.
ஏகாதிபத்திய
உலகமய நலன் என்ற பரந்த
வரையறைக்குள், அதே நேரம் அதன்
போக்கிற்கு எதிரானதாக தோன்றும்விதம், தேசத்திற்குள் உள்நோக்கித் திரும்பும் ட்ரம்ப்பும் அவரது அய்ரோப்பிய அரசியல்
கூட்டாளிகளும், அரசியல் அரங்கில் நுழையும்போது
துன்பியல் நாடகமாக திகழ்கின்றனர்; தோற்கும்
நேரம் வரும்போது, கேலிக்கூத்தான தோற்றம் தருவார்கள். அய்க்கிய
அமெரிக்கா முன்பு, குறைந்தபட்ச சம்பள
இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், கருப்பு உயிர்களுக்கு பொருளுண்டு
இயக்கம், வெறுப்பு அரசியல் எதிர்ப்பு இயக்கம்,
ஜனநாயகத்திற்கான இயக்கம் ஆகியவை, பலப்படும்,
ஒன்றுகலக்கும், ஆர்வத்தைத் தூண்டும் வாய்ப்புக்கள் உள்ளன. அப்படி நடக்கும்
போது வெற்றி பெற்றவர்கள் தோற்பார்கள்,
தோற்றதாக காணப்படும் மக்கள் வெற்றி பெறுவார்கள்.
(மாலெ தீப்பொறி 2016 நவம்பர் 16 - 30)