COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 16, 2019

காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பும் 
தொழில் நிறுவனங்கள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பும் 
நாட்டின் தொழிலாளர்கள் பற்றி சொல்லும் சில உண்மைகள்

ஒரு கார்ப்பரேட் ஆதரவு அரசின் ஒப்புதல் வாக்குமூலம்

மோடியின் மேலும் பலம் பொருந்திய ஆட்சி நாட்டு மக்கள் மீது மேலும் பலமான தாக்குதல்களைத் தொடுக்கும் தனது திட்டங்களை அமல்படுத்துவதை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
முதல் நூறு நாட்களில் அடித்தட்டில் வாழ்கிற நூறு கோடி பேர் அந்தத் தாக்குதல்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடும். மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் அந்தத் தாக்குதல்களால் மக்கள் வாழ்வு நாசமாகி விடக் கூடும். அரைகுறை நிவாரணங்கள் தந்து கொண்டிருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிக்கும் விதித் தொகுப்புகள், பொதுத் துறை நிறுவனங்களை மூடி விடுவது என அறிவிப்புகள் வெளியாகின்றன. ஏற்கனவே உள்ள மூச்சு முட்டும் நிலைமைகள் மேலும் திணற வைக்கும் என்பதாக இந்திய தொழிலாளர்களின் உடனடி எதிர்காலம் மாறக் கூடும்.
ஒரு தலைவர் ஜும்லா என்று சொன்னாலும் மற்றவர்கள் எல்லாம் நல்ல நாட்கள் என்று சொல்லியே அய்ந்து ஆண்டு காலத்தை ஓட்டி, அந்த காலத்தில் வெளியிடப்பட்ட உண்மைகளை அடுத்த ஆட்சியில் ஒப்புக்கொண்டு விடும் துணிச்சலை மோடி அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை தந்துள்ளது. இந்திய தொழிலாளர்கள், அவர்களது வேலை நிலைமைகள், வேலை வாய்ப்பின்மை பற்றி மோடி அரசின் கடந்த ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட தொழில் நிறுவனங்கள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பும் போதுமான அளவு காட்டுகின்றன.
தொழில் நிறுவனங்கள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பு
நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பு (ஆன்னுவல் சர்வே ஆஃப் இன்டஸ்ட்ரீஸ்) அறிக்கை 2016 - 2017, மார்ச் 2019ல்  வெளியிடப்பட்டுள்ளது. 2017 மார்ச் 31 நிலவரப்படி பதிவு செய்யப் பட்ட தொழில் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் அடிப்படையில், இந்த ஆய்வு, 2018 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்டது. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதியை மோடி அரசு எப்படி நிறைவேற்றியது என்று இந்த அறிக்கையில் இருந்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை
நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் மொத்தம் 2,34,865 உள்ளன. (தமிழ்நாடு 37,220. மகாராஷ்டிரா 27,010. குஜராத் 25,996. ஆந்திரா 16,246. தெலுங்கானா 15,028. கர்நாடகா 13,344). இவற்றில் ஆய்வு காலத்தில் மொத்தம் 1,94,380 தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. (தமிழ்நாடு 31,614. மகாராஷ்டிரா 21,095. குஜராத் 18,980. ஆந்திரா 13,084. தெலுங்கானா 12,725. கர்நாடகா 10,748).
இந்த 1,94,380 தொழில் நிறுவனங்களில் உள்ள மொத்த நிலையான மூலதனத்தின் மதிப்பு ரூ.31,90,386.49 கோடி. முதலீடு செய்யப்பட்ட மூலதனம் ரூ.42,96,254.90 கோடி.
இந்த நிறுவனங்களில் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளர்கள் 1,16,62,947 பேர், மேலாளர்கள் போன்ற நேரடி உற்பத்தியில் ஈடுபடாத பிற வகை பணியாளர்கள் 32,48,242 பேர் என மொத்தம் 1,49,11,189 பேர் வேலை செய்கின்றனர். இந்தத் தொழிலாளர் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 4.28% கூடுதல். 2013 - 2014ல் இயங்கிய 1,85,690 தொழில் நிறுவனங்களில் 1,35,38,114 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருந்தார்கள். மோடியின் வாக்குறுதிப்படி 2016 - 2017ல் இந்த எண்ணிக்கை 6,35,38,114 என அதிகரித்திருக்க வேண்டும். 2019ல் 10,35,38,114 என உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால் மூன்றாம் ஆண்டு முடிவில் வெறும் 13,73,075 என்று மட்டுமே தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஆய்வு காலத்தில் இயங்கிக் கொண்டிருந்த 1,94,380 தொழில் நிறுவனங்களில், 1,37,089 நிறுவனங்கள் 50க்கும் குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ளன. இது மொத்த தொழில் நிறுவனங்களில் 70.53%. இந்த பெரும்பான்மை நிறுவனங்களில் உள்ள நிலையான மூலதனம் மொத்தத்தில் வெறும் 6.97%தான். 78,094 நிறுவனங்களில் 14க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். 50க்கும் குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள இந்த நிறுவனங்களில் மொத்தமாக 20,96,018 தொழிலாளர்கள் உள்ளனர்.
நாடு முழுவதும் நேரடி உற்பத்தியில் ஈடுபடும் 1,16,62,947 தொழிலாளர்களில் 41,99,449 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். கிட்டத்தட்ட 40% தொழிலாளர்களுக்கு உரிமை, பாதுகாப்பு போன்றவை இல்லை.  (312)
625 நிறுவனங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கை 12,96,463. இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தரத் தொழிலாளர்களாக இருக்க வாய்ப்பில்லை.
உதாரணமாக, தமிழ்நாட்டின் அமைப்பாக்கப்பட்ட துறையில் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 20,03,759. இவர்களில் 3,66,261 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். தமிழ்நாட்டில் 201 தொழில் நிறுவனங்களில் 5,000க்கும் மேல் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  ஹ÷ண்டாய் நிறுவனத்தில் 10,000 பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள். நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை 2,000க்கும் குறைவு. ஃபோர்ட், நிசான் போன்ற ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை செய்யும் புதிய வகை நிறுவனங்களிலும் அசோக் லேலண்ட், எம்ஆர்எஃப் போன்ற பழைய வகை நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.
தொழிலாளர்கள் உருவாக்கும் செல்வமும் அவர்கள் பெறும் ஊதியமும்
தமிழ்நாட்டில் நேரடி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொத்தமாக பெற்ற ஊதியம் ரூ.26,305.99 கோடி. சராசரி ஊதியம் மாதம் ரூ.10,000தான். இதையே முன்னேறிய நிலை என மோடி சொல்லும்போது, பிற மாநிலங்களில், நிலைமைகள் படுமோசம் என்பதை மோடி ஒப்புக்கொள்கிறார்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உருவாக்கிய உற்பத்தி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.72,65,514.23 கோடி. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சென்ற ஆண்டை விட ரூ.4,03,160.48 கோடி கூடுதல். லாபம் ரூ.5,39,352.85 கோடி. இது முந்தைய ஆண்டை விட ரூ.26,159.47 கோடி கூடுதல்.
சராசரியாக ஒரு தொழிலாளி ரூ.48,72,525 மதிப்புள்ள உற்பத்தி தந்து, நாட்டு வருமானத்துக்கு ரூ.7,68,496 நிகர மதிப்பு கூட்டியுள்ளார். முந்தைய ஆண்டு இருந்ததை விட இது முறையே ரூ.73,579 மற்றும் ரூ.18,491 கூடுதல்.
தொழிலாளர்களுக்கு தரப்பட்ட மொத்த ஊதியம் ரூ.3,75,163.85 கோடி. (இது முந்தைய ஆண்டை விட 10.42% கூடுதல்). இதில் நேரடி உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெற்றது ரூ.1,73,537.16 கோடி. நேரடி உற்பத்தியில் ஈடுபடாத 32 லட்சம் பிற வகைப் பணியாளர்களை விட நேரடி உற்பத்தியில் ஈடுபடும் 1.16 கோடி தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெறுகிறார்கள்.
சராசரியாக ஓராண்டில் ரூ.48,72,525 மதிப்புள்ள உற்பத்தி தந்து இந்தத் தொழிலாளர்கள் பெற்ற ஊதியம் ரூ.1,48,794. மாதம் ரூ.12,000. அவர்கள் உருவாக்கிய உற்பத்தி மதிப்பில் 32ல் ஒரு பங்கு. மீதமுள்ள 31 பங்குகளை பறித்துக் கொள்கிறார்கள். இந்த ஒரு பங்கிலும் பெரிய பங்கை தொழிலாளர்களிடம் இருந்து பலவிதமான வரிகளாக பிடுங்கிவிடுகிறார்கள்.
நாட்டின் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் பெரும்பான்மை, மோடி அரசின் முதல் ஆட்சி காலத்தின் மூன்று ஆண்டுகளில்  இந்த அளவுதான் ஊதியம் பெற்றது. மோடி இதில் என்ன நல்ல நாட்கள் பார்த்தார் என்று அவர்தான் சொல்ல வேண்டும். இதுவும் அவரது ஆட்சிக் காலத்துக்கு முந்தைய 2013 - 2014ல் தொழிலாளர்கள் பெற்ற ஊதியத்தை விட மூன்று ஆண்டுகளில் மாதம் ரூ.2,000 மட்டும்தான் கூடுதல். ஓர் ஆண்டில் ரூ.1,000 கூட ஊதிய உயர்வு என்று தொழிலாளி பெறவில்லை. இது சராசரி கணக்கு. கணக்கெடுப்பு நடந்த ஆண்டு, பணமதிப்பகற்றம் நடந்த ஆண்டு. குறைந்தபட்ச ஊதியம் பெற்றவர் ஊதியத்தில் மூன்று ஆண்டுகளிலும் பெரிதாக மாற்றம் ஏதும் இருந்திருக்காது. கணக்கெடுப்பு நடந்த ஆண்டில் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.45,038. மாதம் ரூ.4,000க்கும் குறைவு. அதிகபட்ச ஊதியம் ரூ.3,40,795. மாதம் ரூ.28,400.
சராசரியாக மாதம் ரூ.12,000 என குறைவான ஊதியம் பெறும் இந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலைகள் மூலம் இந்த அமைப்பாக்கப்பட்ட உற்பத்தி துறை நிறுவனங்களில் இருந்து நாட்டுக்கு ரூ.11,45,919.11 கோடி நிகர மதிப்பு கூட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6.85% கூடுதல். நிகர மதிப்பே 11 லட்சம் கோடிகளுக்கு மேல் இருந்தும், தொழிலாளர்களுக்கு தரப்பட்ட ஊதியம் முந்தைய ஆண்டை விட ரூ.17,536 கோடி கூடுதல். ஆனால் தொழிலாளர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டை விட 5,26,814 கூடுதல். ஆக, மொத்தமாக காட்டப்படும் உயர்வு, நெருப்பில் சுடப்பட்டுவிட்ட அவர்கள் கனவுகள்.
எத்தனை மனித நாட்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது என்ற விவரம் உள்ளது. இந்த விவரத்தில் சம்பளத்துடனான வார விடுமுறை, சம்பளத்துடனான விடுப்புகள், ஊதியம் தர வேண்டிய லேஆஃப் மற்றும் வேலை நிறுத்த நாட்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. எத்தனை ஆலைகளில் எத்தனை நாட்கள் வேலை நிறுத்த போராட்டங்கள் நடந்தன, அதனால் எத்தனை வேலை நாட்கள் இழப்பு, முதலாளிகளுக்கு எத்தனை கோடிகள் இழப்பு என இந்த ஆய்வு விவரம் தரவில்லை. 
காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு
2016 - 2017 காலத்துக்கு பிந்தைய தொழிலாளர்கள் நிலைமைகள் பற்றி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்தியுள்ள காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு சொல்கிறது.  2017 ஜ÷லை முதல் 2018 ஜ÷ன் காலத்துக்கான இந்த அறிக்கையை 2019 மே மாதத்தில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 45 ஆண்டுகாலத்தில் இல்லாத வேலை வாய்ப்பின்மை மோடி ஆட்சியில் வந்ததாக இந்த ஆய்வின் அறிக்கை சொன்னதாக செய்திகள் வந்தபோது, அறிக்கை கசிந்துவிட்டது, அதில் உண்மை இல்லை என்று தேச பக்தர்கள் கத்தினார்கள். தேர்தல் முடிந்து மோடி மீண்டும் முடிசூடிவிட்ட பின், அரசே வெளியிடுகிற இந்த அறிக்கை, தேர்தல் நேரத்தில் கசிந்த விவரம் உண்மை என்கிறது.
நாடு முழுவதும் 1,02,113 குடும்பங்களில் 4,33,339 பேர் மத்தியில் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தமான் நிகோபர் தீவுகளின் கிராமங்களில் இந்த ஆய்வை நடத்த முடியவில்லை என்று அறிக்கை சொல்கிறது. (அங்கு தேர்தல் நடத்த முடியும் என்றால், மக்களின் வாழ்நிலைமைகளை தெரிந்துகொள்ளும் ஆய்வு நடத்த எப்படி முடியாமல் போனது?)
ஆய்வு நடந்த நாளுக்கு முந்தைய ஏழு நாட்களில் ஒரு நாளில் ஒரு மணி நேரம் வேலை செய்திருந்தாலும் அவர் வேலை வாய்ப்புள்ளவர் என்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒர்க் பார்டிசிபேசன் ரேட், வேலை வாய்ப்பில் பங்கேற்பு விகிதம் 1973ல் இருந்ததைவிட 2018ல் 7% குறைந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த விகிதம் அதிகரித்திருக்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததால் அதிகரிக்கவில்லை.
நாட்டில், 22.8% தொழிலாளர்கள் மாத வருமானம் தரும் வேலை வாய்ப்பில் இருக்கிறார்கள். தற்காலிகத் தொழிலாளர்கள் 24.9% பேர். 52.2% தொழிலாளர்கள் சுயவேலை வாய்ப்பில் உள்ளவர்கள். (முத்ரா கடன் பெற்றவர்களை இந்த வகையினத்தில் சேர்த்து விட்டார்களா? அப்படியானால் அது ஆய்வுக்கு வந்த சோதனையல்லவா?) எப்படியாயினும் 22.8% தொழிலாளர்கள் தவிர மற்றவர்கள் கிட்டத்தட்ட வேலைவாய்ப்பில்லாதவர்கள் என நாம் சொல்லலாம். 
விவசாயம் சாராத துறைகளில் 71.1% தொழிலாளர்களுக்கு எழுத்துபூர்வமான பணி ஒப்பந்தம் இல்லை. இவர்கள் தொடர்ச்சியான கூலி, சம்பளம் தரும் வேலை வாய்ப்புகளில் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இவர்களில் 54.2% தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லை. 49.6% தொழிலாளர்கள் எந்த சமூகப் பாதுகாப்பு திட்டத்துக்குள்ளும் இல்லை. இதுதான் மோடியின் புதிய இந்தியா. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு உகந்த நிலைமைகளை உருவாக்க மோடி அரசு மிகைநேரப் பணி செய்து பாடுபட்டதன் விளைவு.
கிராமப்புறங்களில் தற்காலிக வேலைகள் செய்யும் தொழிலாளர்களில், ஆண்கள் நாளொன்றில் ரூ.253 முதல் ரூ.282 வரையிலும் பெண்கள் நாளொன்றில் ரூ.166 முதல் ரூ.179 வரையிலும் கூலி பெறுகிறார்கள். நகர்ப்புறங்களில் ஆண்கள் ரூ.314 முதல் ரூ.335, பெண்கள் ரூ.186 முதல் ரூ.201 வரை பெறுகிறார்கள். இது ஆய்வு நடந்த குறிப்பிட்ட வாரத்தில் அவர்களுக்கு வேலை கிடைத்து அவர்கள் வேலை செய்து அவர்கள் பெற்ற கூலி. இது ஆண்டு முழுவதுக்குமான நிலைமை என்று எடுத்துக் கொள்ள முடியாது. கிராமப்புறங்களில் தற்காலிக வேலைகள் என்று ஆய்வு வகைப்படுத்துகிறது. வேறு என்ன வேலை வாய்ப்புகளை கிராமப்புறங்களில் வைத்திருக்கிறார்கள்? தற்காலிக வேலைவாய்ப்புகளும் ஆண்டு முழுவவதும் இருக்கும் வேலைகள் அல்லவே?
வேலை உறுதித் திட்டத்தில் ஆண்கள் ரூ.141 முதல் ரூ.171, பெண்கள் ரூ.131 முதல் ரூ.165 பெற்றிருக்கிறார்கள். திட்டத்தில் சட்டப்படி தரப்பட வேண்டிய குறைந்தபட்ச கூலி இவர்கள் பெறவில்லை என்று மோடி அரசு ஒப்புக்கொள்கிறது. வேலை உறுதித் திட்டம் தவிர வேறு அரசுப் பணிகளில் ஆண்கள் ரூ.138 முதல் ரூ.158, பெண்கள் ரூ.119 முதல் ரூ.144 பெற்றிருக்கிறார்கள்.
மாத வருமானம் பொறுத்தவரை, கிராமப்புறத்தில் ஆண்கள் ரூ.8,500 முதல் ரூ.9,700 வரை, பெண்கள் ரூ.3,900 முதல் ரூ.4,300 வரை பெற்றிருக்கிறார்கள். (நாகை மாவட்டத்தின் சில கிராமங்களில் வேலை, வருமானம் பற்றி இகக மாலெ தோழர்கள் நடத்திய ஆய்விலும் இதே போன்ற விவரங்கள்தான், நிலைமைகள்தான் வெளிப்பட்டன). நகர்ப்புறத்தில் ஆண்கள் ஏறத்தாழ ரூ.16,000, பெண்கள் ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை பெற்றிருக்கிறார்கள். இது ஆண்டு முழுவதுக்குமான வருமான நிலைமையாக இருக்க வாய்ப்பில்லை.
இந்த ஊதியத்துக்காக கிராமப்புற தொழிலாளர்கள் வாரத்தில் 48 மணி நேரமும் நகர்ப்புறத்தில் வாரத்தில் 56 மணி நேரமும் வேலை செய்திருக்கிறார்கள்.
2018 ஏப்ரல் முதல் 2018 ஜ÷ன் வரை, கிராமப்புறத்தில் 2% பேரும் நகர்ப்புறத்தில் 5.4% பேரும் வாரத்தில் 72 மணி நேரம் முதல் 84 மணி நேரம் வரை வேலை செய்திருக்கிறார்கள். வார விடுமுறை இல்லாமல் நாளொன்றில் 12 மணி நேர வேலை. வார விடுமுறை இருந்தால், நாளொன்றில் 14 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரையிலான வேலை. இதற்கு மேல் ஒரு தொழிலாளிக்கு நரகம் என ஒன்று தனியாக இருக்குமா?
கிராமப்புறங்களில் கல்வி பெற்ற ஆண்கள் மத்தியில் 2004 - 2005 முதல் 2011 - 2012 வரை 3.5% முதல் 4.4% என்று இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதம் 2017 - 2018ல் 10.5% என அதிகரித்துள்ளது. நகர்ப்புற ஆண்கள் மத்தியில் 2004 - 2005 முதல் 2011 - 2012 வரை 3.6% முதல் 5.1% என்று இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதம் 2017 - 2018ல் 9.2% என அதிகரித்துள்ளது. நகர்ப்புற பெண்கள் மத்தியிலான வேலைவாய்ப்பின்மை விகிதம் 2017 - 2018ல் 19.8%. 2004 - 2005 முதல் 2011 - 2012 வரை 10.3% முதல் 15.6% என இருந்தது. ஒட்டுமொத்தமாக நகர்ப்புற ஆண்களுக்கு 3.7% என்பதில் இருந்து 6.9%, நகர்ப்புற பெண்களுக்கு 6.9% என்பதில் இருந்து 10.8%, கிராமப்புற ஆண்களுக்கு 1.6% என்பதில் இருந்து 5.7%, பெண்களுக்கு 1.8% என்பதில் இருந்து 3.8% என வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று வாக்குறுதி தந்த மோடியின் ஆட்சிக்கு முன் இருந்ததை விட அவரது ஆட்சி நடந்த காலத்தில் வேலை வாய்ப்பின்மை கடுமையாக அதிகரித்துள்ளது.
2019 நிலைமைகள் என்ன?
மாருதி, ஹுண்டாய், டாடா நிறுவனங்களின் கார் விற்பனை ஜுன் 2018ல் இருந்ததை விட ஜுன் 2019ல் குறைந்துள்ளது. அசோக் லேலண்ட், டாடா கிர்லோஸ்கர் நிறுவனங்களின் கனரக வாகனங்களின் விற்பனையும் இந்த காலகட்டத்தில் குறைந்துள்ளது. தரக்கட்டுப்பாடு விதிகளில் ஏற்படும் மாற்றங்கள், நானோ கார் உற்பத்தியை 2020 ஏப்ரலில் இருந்து நிறுத்திவிடும் நிலையை உருவாக்கியுள்ளன.
நாட்டின் கருவான தொழில் துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, சிமென்ட் உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியில் மே 2019ல் சரிவு காணப்படுகிறது. ஜ÷ன் 2019ல் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக அய்எச்எஸ் மார்க்கெட் இந்தியா என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்கிறது.
உற்பத்தித் துறையில் காணப்படும் இந்த சரிவு, தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பற்றி மோடி அரசின் இரண்டு விதமான ஆய்வுகள் தரும் விவரங்களில் 2019ல் பிரதிபலிக்கும். அதாவது வேலை வாய்ப்பின்மையே மேலும் அதிகரிக்கும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா என எல்லாம் குப்புற கவிழ்ந்துவிட்டன. வேலை வாய்ப்பு இல்லாத, வருமானம், வாழ்க்கை இல்லாத, குறைவருமானம் பெறுகிற, ஒட்டச் சுரண்டப்படுகிற, கரும்புச் சக்கையாக்கப்படுகிற இந்தியாதான் கடந்த அய்ந்து ஆண்டுகளில் மிஞ்சியிருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண் தொழிலாளர்களுக்கு விடுமுறை தரப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படும்போது, தமிழ்நாட்டு ஆடை உற்பத்தி தொழிலில், மாதவிடாய் காலத்தில் பெண் தொழிலாளர்களுக்கு, வலி இல்லாமல் இருக்க, உதிரப் போக்கை நிறுத்த மாத்திரை தருகிறார்கள் என்று செய்தி வருகிறது. கொஞ்சமோ துன்பங்கள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ என்று இந்தியத் தொழிலாளர்கள் பரிதவிக்கும்போது, பகோடா விற்கும் இந்தியா, பசுவை பாதுகாக்கும் இந்தியா படைக்க வரும் அய்ந்து ஆண்டுகளில் மோடி அரசு விரைந்து நடை போடவிருக்கிறது.
ஜெய் ஸ்ரீ ராம். பாரத் மாதாகீ ஜே.

Search