COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 16, 2019

தோழர் சாரு மஜும்தார் 
பிறந்த தின நூற்றாண்டு, 1919 - 2019
இககமாலெ (விடுதலை) 
அய்ம்பதாவது நிறுவன ஆண்டு, 1969 – 2019

புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடித்து பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை வெற்றிகரமாக உருவாக்கியிருந்த சீனப் புரட்சியாளர்களால்,
வசந்தத்தின் இடிமுழக்கம் என்று விவரிக்கப்பட்ட நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய தோழர் சாருமஜும்தாரின் பிறந்த தின நூற்றாண்டும் இகக மாலெ (விடுதலை) உருவாக்கப்பட்ட அய்ம்பதாவது ஆண்டும் இந்த ஆண்டு நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு தினங்களை ஒட்டி, இகக மாலெ மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் அபிஜித் மஜும்தார் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அளவிலான கூட்டம் ஜுலை 21 அன்று சேலத்தில் நடக்கவுள்ளது. ஜுலை 30 அன்று கொல்கத்தாவில் பெருந்திரள் கருத்தரங்கமும் ஜுலை 31 - ஆகஸ்ட் 1 தேதிகளில் தேசிய அளவில் கட்சி ஊழியர் கூட்டமும் நடைபெறவுள்ளன. தோழர் சாரு மஜும்தார் நினைவு தினமான ஜுலை 28ம், தோழர் டி.பி.பக்ஷியின் முதலாண்டு நினைவு தினமான ஜுலை 26ம் சென்னையில் ஜுலை 26 அன்று நடக்கவுள்ள கூட்டத்தில் அனுசரிக்கப்படவுள்ளன.
கட்சியின் மிக முக்கியமான தருணங்களை அனுசரிக்கும், அவற்றை ஒட்டி உறுதிமொழி ஏற்கும் இந்த ஜுலை நாட்களில், கட்சியின் அரசியல் கருத்தியல் ஏடான மாலெ தீப்பொறி இதழ் பதிவு செய்யப்பட்ட இதழாக வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவுற்றுவிட்டன. 2002ல் பதிவு செய்யப்பட்டு, 2003 ஆகஸ்ட்டில் இருந்து மாத இதழாகவும், 2011 ஆகஸ்ட்டில் இருந்து இருவார இதழாகவும் மாலெ தீப்பொறி இதழ் முறையாக தடையின்றி வெளியிடப்படுகிறது.
கட்சி வேலைகள் ஒப்பீட்டுரீதியில் தீவிரமாக நடக்கும் மாவட்டங்களில் கட்சி வேலைகளுக்கு உதவுவதாகவும், மாலெ தீப்பொறி இதழ் முறையாக, தடையின்றி வெளியாவதில் கட்சி வேலைகளும் அவற்றுக்குரிய பங்காற்றியுள்ளன. கட்சிக்குள் காத்திரமான பணியாற்றும் தோழர்கள் மத்தியிலும் கட்சிக்கு வெளியில் இடதுசாரி, முற்போக்கு வட்டங்களிலும் ஒரு சிறிய பிரிவு சாமான்ய வாசகர்கள் மத்தியிலும் மாலெ தீப்பொறி வரவேற்பும் ஆதரவும் பெற்றுள்ளது.
பாசிச இருளின் அச்சுறுத்தல்கள் யதார்த்தமாகிவிட்ட இந்த பின்னணியில், மாலெ தீப்பொறியின் பாத்திரத்தை மேலும் பொருத்தமுடையதாக ஆக்க அனைத்தும் தழுவிய முயற்சிகள் மேற்கொள்ள இகக மாலெ ஆனதெல்லாம் செய்யும்.

Search