COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 16, 2019

நடைமுறையே நல்லாசான்

செப்டம்பர் 28 அன்று, காஞ்சிபுரத்தில் மக்கள் கோரிக்கை மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வேலைகள் துவக்கப்பட்டன.
100 நாட்கள் பிரச்சாரம் வேகம் பிடிக்காமல் மெதுவாகவே சென்றது. 10, 20, 50 என அடுத்தடுத்த கட்ட முன்னணிகளுடன் ஆறு ஒன்றியங்களில் வேலை துவங்க வேண்டும் என திட்டமிடப்பட்டது. எண்ணிக்கையில் குறைவான தோழர் கள் கொண்டு, செயின்ட் தாமஸ் மவுன்ட், காட்டான்குளத்தூர் மற்றும் திருபெரும்புதூர் ஒன்றியங்களில் வேலைகள் துவங்கின.
பரிசீலனை கூட்டங்கள் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன. தோழர்கள் இரணியப்பன், ராஜகுரு, ராஜேஷ், தினகர், குமாரசாமி ஆகியோர் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஜுலை 13 அன்று நடந்த கூட்டத்தில் தோழர் தினகர் உடல்நலக் குறைவால் கலந்துகொள்ள முடியவில்லை.
வேலைகள் துவங்கியதும், செயின் தாமஸ் மவுன்ட், வெங்கம்பாக்கம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குமிழி ஊராட்சியின் அனைத்து கிராமங்களுக்கும் குக்கிராமங்களுக்கும் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்பட்டது. பெருமாட்டுநல்லூரிலும் மக்களைச் சந்திப்பு நடந்தது. காட்டாங்குளத்தூரில் குமிழி, பெருமாட்டுநல்லூர் தவிர, கலவை, காயரம்பேடு ஊராட்சிகள் பார்க்க வேண்டியுள்ளது. திருப்போரூரிலும் சாத்தியமே.
திருபெரும்புதூர் ஒன்றியத்தில் பண்ருட்டி ஊராட்சி, கொளத்தூர் ஊராட்சியின் நாவலூர், தத்துவார் ஊராட்சியில் தெரசாபுரம், திருபெரும்புதூர் பேரூராட்சியின் ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடந்துள்ளது.
திருபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் பயிற்சி தொழிலாளர் மற்றும் இளைஞர் மத்தியில் வேலை செய்ய வேண்டி உள்ளது. இடைப்பட்ட நாட்களில் வண்டலூர் மற்றும் திருபெரும்புதூரில் தண்ணீர் பிரச்சனையில் ஆர்ப்பாட்டங்கள், மேலும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டுள்ளன. பகத்சிங் அம்பேத்கர் வாசகர் வட்டக் கூட்டம் ஒன்றும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டத்தில் நிதானித்து அசை போட்டு அடுத்து முன்னேற பரிசீலனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அலங்கார வெற்றுப் பேச்சு பேசுபவர்கள் அல்லாத, நேரடியாக அன்றாடம் வேலை செய்பவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால், அது நடந்த வேலைகளை முறையாகப் பரிசீலித்தது. முடிவுகள் அமலாக் கம் பற்றிய பரிசீலனையும் சரிசெய்து முன்னே றுதலுமே உணர்வுபூர்வமான தலைமையாகும். புறக்கண், புறக்காது திறந்து இருந்ததோடு, அகக்கண்ணையும் அகக்காதையும் திறந்து வைத்து நிகழ்வுப்போக்குகள், நிகழ்வுகள் தாண்டியும் சில மணி நேரம் பரிசீலனை நடந்தது.
உணர்ந்ததும் அடுத்து செய்ய இருப்பதும்
மக்கள் வாழும் பகுதிகளில், ஊராட்சிகளில் வேலைகள், நிலைபெறத் துவங்கி உள்ளன. 100 நாள் வேலை, தண்ணீர்க் கொள்ளை, சாலையோர வியாபாரிகள் பிரச்சனை வேறு வேறு ஊராட்சி பிரச்சனைகள் என வேலைகள் கிளை பரப்புகின்றன.
ஊராட்சிக்குள் நமது அமைப்புடன் இன்னும் யாராவது தோழர்கள் இணையும்போது வேலைக்கு வலு சேர்கிறது.
கட்சியும் நம்பிக்கையோடு அணுகுகிறது. மக்களும் கட்சியை நம்பிக்கையுடன் அணுகுகின்றனர். 100ல் 90% அல்லது 95% பேர் நம் அழைப்பை ஏற்றனர். வேலைகள் தலித் பகுதிகளில் மட்டுமே நடந்துள்ளன.
வாடகை வீடுகளில் இருப்பவர்களை பிரச்சாரம் நடந்த பகுதிகளில், தெருக்களில் தோழர்களால் காண முடியவில்லை. பிளாஸ்டிக் ஷீட், டிஜிட்டல் பேனர் போட்டு மூடப்பட்ட குடிசை வீடுகளும் குறைந்த எண்ணிக்கையில் கண்களில் தென்பட்டன.
வீட்டில் ஓர் இருசக்கர வாகனம் இல்லாமல் நடமாட்டம் முடியாது. 
மக்களின் வீடுகள் அனைத்துக்கும் பட்டாக்கள் உண்டா, முதியோர், இதர சமூக நல ஓய்வூதியம் தரப்படுகிறதா எனக் காண வேண்டி உள்ளது.
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் ஒரு சிறு பகுதி தவிர எங்கும் விவசாயம் இல்லை.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலை கூட கிடைப்பதில்லை. 100 நாள் ஏரி வேலைக்கே செல்கிறார்கள். ரூ.115, ரூ.120 சம்பளம் தாண்டவில்லை. சிறு சிறு வேலைகள், ஒப்பந்த வேலைகளே உள்ளன.
ஆண்களும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை சம்பளம் கிடைக்கும், பள்ளி வர்த்தக நிறுவன ஒப்பந்த வேலைகளே செய்கின்றனர். சிலர் ஆட்டோ மினிவேன் ஓட்டுகின்றனர்.
கிட்டத்தட்ட எங்கும் கேன் தண்ணீர் வாங்கப்படுகிறது.
அரசு, தனியார் ஆலை என எதிலும் நிரந்தரப் பணிகள் இல்லை.
பெண்கள், அம்மா ஸ்கூட்டி திட்ட பயன் பெற்றது போல் தெரியவில்லை.
கோழி, ஆடு, மாடு வளர்ப்பு உள்ளது.
இளைஞர்கனை கவனிக்க வைக்க முடியவில்லை. ஈர்க்க முடியவில்லை.
பலவீனம்
ஷிப்டுக்குப் போகும் தொழிலாளர்களை ஷிப்டு முடிந்து குடியிருப்புப் பகுதிகளுக்குக் கூட்டிச் செல்வதில் வேலையைத் திட்டமிடுவதில் வேலையைச் சரியான நேரத்தில் துவக்குவதில் சிக்கல் உள்ளது.
பத்துக்கும் குறைவானர்கள், 2 குழுக்கள் என்ற நிலை மாற வேண்டி உள்ளது. நேரம் இன்மை காரணமாக மக்களிடம் பேசும் தோழர்கள் வீட்டுமனைப் பட்டா, எழுவர் விடுதலை, உள்ளாட்சித் தேர்தல் போன்றவை பற்றி குறைவான நேரம் பேசுகிறார்கள். உறுப்பினர் சேர்க்க எந்த விஷயம் பேசினால் எடுபடும் என அவரவர் முடிவுக்கு ஏற்பப் பேசுகிறார்கள்.
காத்திருக்கும் புதிய கடமை
பிரச்சாரம் நடந்த எல்லா இடங்களிலும் வெளி மாநிலத்தவர் கணிசமாக உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே  வருகிறது. நமது வேலை, வருமானம்,  வாய்ப்பு,   வசதிகள் எல்லாமே அவர்களால் பறிபோகிறது என்ற வெறுப்பரசியல் பரவவும் நமது தோழர்கள் மத்தியிலும் அந்த நோய் பரவவும் வாய்ப்பு உண்டு. பிற மாநிலத்தவர்களையும் நாமே அமைப்பாக்குவது உட்பட ஏதாவது செய்தாக வேண்டும்.
கவனித்து அடுத்து செய்ய வேண்டியவை
ஹுண்டாய், ஹுண்டாய் துணை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளிக்கு ரூ.8,500 சம்பளம் தரப்படுகிறது.
பொறியியல் துறையில் சட்டப்படியான குறைந்தபட்ச சம்பளம் ரூ.11000க்கும் மேல் உள்ளது. குறைந்தபட்ச சம்பள சட்ட அதிகாரிகளை, தொழிற்சாலை அதிகாரிகளை அணுக வேண்டி உள்ளது.
ஹுண்டாய், என்ஃபீல்ட்  நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மாதம் ரூ.17,000 சம்பளமும் சப்ளையரின் பயிற்சியாளர்கள் ரூ.10,000ல் இருந்தும் சம்பளம் வாங்குகிறார்கள்.
6 பேர், 8 பேர் சேர்ந்து வீடெடுத்து, வாடகைக்கும் உணவுக்கும் ரூ.2,000 செலவழித்து கம்பனி கேண்டீனில் சாப்பிட்டு, கம்பனி பஸ்ஸில் போய்வந்து, வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி மனதை அடக்கி சேமித்து மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வீட்டிற்கு அனுப்புகிறார்கள். இரண்டு வருடங்களில் ரு.1,50,000  முதல் ரூ.3 லட்சம் வரை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பணி நிரந்தரம் இல்லை என உணர்ந்தாலும், வீட்டுக்கு அனுப்பக்கூடிய தொகை/சேமிப்பு/ இவர்களை கட்டிப் போடுகிறது. இவர்கள் பொறியில் சிக்கிய எலிகள்.
நிலையாணைகள் சட்டத் திருத்தத்தை  நாம் வலியுறுத்த வேண்டும். நிரந்தரப்படுத்துதல் சட்ட விதிப்படி ஜுன் 30, டிசம்பர் 31 தேதிகளில் டிரெய்னி உட்பட எத்தனை நாட்கள் தொடர்பணி புரிந்தனர் என நிர்வாகங்கள் அறிக்கை அனுப்பி உள்ளனவா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து அறிய வேண்டும்.
ஆட்டோ காம்பொனென்ட் தொழிலை பொது பயன்பாட்டு சேவை என அறிவித்துள்ளதற்கு எதிராக  ஆகஸ்ட் 11 அன்று கருத்தரங்கு கள்  நடத்தப்பட வேண்டும். ஆட்டோ, ஆட்டோகாம்பொனென்ட் தொழிலாளர் அனைவரையும் அழைக்க வேண்டும்.
புதிதாக வேலையில், பகுதியில் இணைந்தவர்களின், பகுதி உறுப்பினர்களின் கூட்டங்கள்  நடத்த வேண்டும். இந்தச் செய்திகளை நம் தோழர்களுடன் பரிமாறி கூடுதல் தோழர்களை வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும்.

Search