COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, July 1, 2019

ரஞ்சித் முன் முன்வைக்கப்படும் கேள்விகள்

(அ.மார்க்ஸ் முகநூல் பதிவில் இருந்து)

மதுரை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் வைக்கப்படும் கேள்விகளையும் சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

1. ஆதிதிராவிடர் நிலத்தை ராஜராஜன் சோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் என்ன?
2. ரஞ்சித்தின் பேச்சு மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது குற்றச்சாட்டு
3. ஆயிரம் ஆண்டுகட்குப் பின் ராஜராஜன் குறித்து விமர்சனம் செய்தது ஏன்?
இது குறித்து சில.
1. இந்த ஆதிதிராவிடர் ஹரிஜன் என்கிற சொல்லாக்கங்கள் மற்றும் தீண்டாமை காணாமை முதலான கருத்தாக்கங்கள் எல்லாம் நடைமுறையில் பல்வேறு வடிவங்களில் பலகாலமாய் இருந்தபோதும் பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தில்தான் இன்றைய சொற்களில் இறுக்கமான வரையறைக ளுடன் உருவாக்கப்பட்டன. எனவே நேரடியாக இச்சொற்களை ராஜராஜனின் பட்டயங்களில் தேடிக் கொண்டிருக்க இயலாது. சமூக ஒதுக்கம் என்பது சங்க காலத்திலிருந்து தொடங்கிவிட்டது. அந்தணன், பாணன், பறையன் என்றெல்லாம் பிரிவினைகளும் ஏற்றத் தாழ்வுகளும் உருவாகிவிட்டன. இன்றைய வடிவத்தில் தீண்டாமை என்பது இல்லாவிட்டாலும் ஒரு மூல வடிவத்தில் அது தோன்றத் தொடங்கிவிட்டது. வரலாறு முழுவதிலும் பாய்ச்சலூர்ப் பதிகம், கபிலர் அகவல், நந்தன் கதை, இராமாயண மகாபாரதங்கள் எல்லாவற்றிலும் தீண்டாமையின் இந்த prototypeகளைக் காணமுடிகிறது.
அதேபோல நிலத்தை பறித்துக் கொடுப்பது என்பதையும் இன்றைய பொருளில் பார்க்க இயலாது. இன்றுள்ளது போன்ற வடிவத்தில் அன்று தமிழகத்தில் நில உடைமைகள் கிடையாது. ஆனாலும் நில உரிமைகள் பெரிய அளவில் கீழ்மட்ட, உழவுத் தொழில் சார்ந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு வேதங்கள் ஓதி யாகங்கள் நடத்திய பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டதற்கு வேள்விக்குடிச் செப்பேடுகள் முதலான ஏராளமான பாண்டியர் பட்டயங்கள் முதலியன சான்றுகளாக உள்ளன. tribal and upland people  இதற்கெதிராகக் கிளர்ந்து அதிகாரம் பெற முடிந்த காலமாகத்தான் களப்பிரர் ஆட்சிக் காலம் பற்றி, இடைக்காலத் தமிழ்ச் சமூக மற்றும் அரசமைப்பு குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ள, பர்டன் ஸ்டெய்ன் போன்ற அறிஞர்கள் விளக்குகின்றனர்.
கடைச்சங்க காலம் தொடங்கியே (அதாவது சுமாராக ராஜராஜனுக்கு முன் ஏழு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே) வேள்விச் சடங்குகள் செய்யும் பார்ப்பனர்களுக்கு ஏற்கனவே சாகுபடியில் உழவுத் தொழில் செய்து கொண்டிருந்த பிரிவினரிடம் இருந்த நில உரிமைகள் பிரித்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு உரிய பட்டயச் சான்றுகள் உள்ளன. (எ.கா: வேள்விக்குடிச் சாசனம் முதலியன) ராஜராஜனின் காலத்தில் பெரிய அளவில் பிரமதேயங்கள் முதலியன அளிக்கப்பட்டு பார்ப்பனர்கள் நிலை ஓங்கியிருந்தது. இவர்களில் பலர் வடநாட்டில் இருந்து வந்த பார்ப்பனர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமைகள் யாரிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டன? பார்ப் பனர்களும், வேளாளர்களும் அன்று ஆதிக்கத்தில் இருந்ததையும் இதர உழவு மற்றும் கைவினை சார்ந்த தொழில் புரிந்த மக்கள் கீழ் நிலையில் இருந்ததையும் வரலாறு ஏற்றுக் கொள்கிறது.
2. ஆதிதிராவிடர்கள் ராஜராஜன் ஆட்சியில் தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு பிரிக்கப்பட்டு இருந்ததை ஏராளமான சான்றுகளை முன்வைத்து இன்று சுப்பராயலு, கராஷிமா ஆகியோர் சுட்டிக் காட்டி அய்யத்திற்கிடமின்றி நிறுவியுள்ளனர். இப்படி அவர்கள் தனியாகப் பறைச்சேரிகளில் ஒதுக்கப்பட்டார்கள் எனில் அதன் பெயர் என்ன? அது தீண்டாமை இல்லையா? அப்படிச் சிலருக்குத் தனிக்குடியிருப்புகள் எனில் அது சமூகப் பிளவு இல்லையா? சோழ மன்னர்களின் காலத்தில் பறையர்கள் எனப்பட்டோர் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படாமைக்கு நந்தன் சரித்திரம் முதலியன சான்றுகள் இல்லையா? ஏதோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு பின் ரஞ்சித்தான் இப்படி சாதி அடிப்படையில் பிளவை ஏற்படுத்துகிறார் என்றால் இதென்ன வேடிக்கை?
3. இன்றும் தீண்டாமை உள்ளது. இன்றும் தலித் மக்களின் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. சாதி மீறிய திருமணங்கள் பிரிக்கப்பட்டு தலித் மக்கள் எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றனர். அதன் வேர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கு கால்பதித்துள்ளன. இன்றளவும் இதற்குக் காரணமான ஆட்சியாளர்களையும், மன்னர்களையும், பறைச்சேரிகளை உருவாக்கியவர்களையும் சிலை எடுத்துக் கொண்டாடுவ தற்குச் சமூகத்தில் மேல் தட்டினருக்கு என்ன உரிமைகள் உள்ளனவோ அதே உரிமைகள், இவர்கள் காலத்தில்தான் பாலும் தேனும் பெருகி ஓடியது என இன்றைக்குப் பேசித் திரிபவர்களை நோக்கி, அப்படியானால் எங்களுக்கு அன்று ஏன் தனிச் சேரிகள், தனிச் சுடுகாடுகள்? எனக் கேட்க ரஞ்சித்திற்கு மட்டுமல்ல நமக்கும் உரிமை உண்டு.
Ref: Y.Subbrayalu, south India under the Cholas, Oxford,, 2011
நொபொரு கராஷிமா, வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம் (850 - 1300)
Burton Stein, Peasant State and Society in Medieval South  India, 1980
K.A.Neelakanda Sastri, The Cholas, 1935 & A History of South India, 1955
அ.மார்க்ஸ்: சீனி வேங்கடசாமி அவர்களின் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (விடியல் பதிப்பகம், கோவை) நூலுக்கு எழுதப்பட்ட விரிவான முன்னுரை, 2012

Search