COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 16, 2019

எதிர்ப்பின் தொன்மைக்குரல்

உலகம் முழுக்க
திருட்டுக் கொடுத்த
வீட்டிலெங்கும்

‘திருடன் திருடன்’ என்றுதான்
கூக்குரலிடுகிறார்கள்
அதில் புதிய பெயருக்கு இடமில்லை

உலகம் முழுக்க
கொலைகாரனைக் கண்டவர்கள் எல்லாம்
‘கொலைகாரன் கொலைகாரன்’
என்றுதான் கத்துகிறார்கள்
அதில் புதிய சொல்லிற்கு இடமில்லை

உலகம் முழுக்க
கூரைகள் பற்றி எரிவதைப் பார்த்தவர்கள் எல்லாம்
‘நெருப்பு நெருப்பு’ என்றுதான் கதறுகிறார்கள்
அதில் புதிய தத்துவத்திற்கு இடமில்லை

ஒரு தேசம் அழிக்கப்படுகிறது
ஒரு தேசத்தின் வரலாறு அழிக்கப்படுகிறது
ஒரு தேசத்தின் பண்பாடு அழிக்கப்படுகிறது
ஒரு தேசத்தின் நீதி அழிக்கப்படுகிறது
அழிகிற எந்த தேசத்திலிருந்தும் கேட்கும் குரல்
‘என் தேசம் அழிகிறது என்பதே
அதை மாற்றிச் சொல்வதற்கு வழியில்லை

அரசனை நோக்கி
யாரோ ஒருத்தி எழுந்து நின்று
‘இந்த தேசத்தை ரத்தம் சிந்த வைக்காதே’
என்று முழங்குகிறாள்

‘இந்தக் குரல் வரலாற்றில்
ஏற்கனவே கேட்ட குரல்
ஆகவே அது உன் குரல் அல்ல’
என்று ஆர்ப்பரிக்கின்றன
அரசனின் பரிவாரங்கள்

உலகம் முழுக்க
குருதி ஒரே நிறத்தில்தான் சிந்தப்படுகிறது
கொலைகாரர்களின் வழிமுறைகள்
ஒரேமாதிரிதான் இருக்கின்றன
பாசிசத்தின் பாதைகள்
ஒன்று போலவே இருக்கின்றன

உலகம் முழுக்க
கொடுங்கோன்மைக்கு முகம் ஒன்று
எதிர்ப்பின் முகமும் ஒன்றுதான்

அரக்கத்தனத்தின் குரல் பழையது
அதை அழிக்கும் குரல் அதனிலும் பழையது
அது இலட்சோப இலட்சம்
நாவுகளால் உச்சரிக்கப்படுகிறது
கோடானுகோடி இதயங்களால்
நகலெடுக்கப்படுகிறது

ஆம் நகலெடுக்கப்பட்ட
நம் கடவுள்களின் சிலைகளைவிடவும்
நம் புனித நூல்களின் பிரதிகளைவிடவும்
நம் ஒழுக்க விதிகளைவிடவும்
நம் அரசர்களின் மீதான புகழுரைகளைவிடவும்
கலகத்தின் குரல் துல்லியமாக நகலெக்கப்படுகிறது

04.06.2019
பகல் 11.23
மனுஷ்யபுத்திரன்

(திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆற்றிய புகழ்பெற்ற உரையின் ‘பாசிசத்தின் ஏழு அறிகுறிகள்’ என்ற வாசகம் திருடப்பட்டது என்று வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்)

Search