COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, July 1, 2019

ஆட்டோ உதிரிபாக தொழிலில் 
வேலை நிறுத்தத் தடை

கணியன்

ஆட்டோ உதிரிபாக தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் இது 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் பிசினஸ் ஸ்டேன்டர்ட் இதழ், 26.06.2019 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிலின் வேலையளிப்பவர்கள், வேலை நிறுத்தங்கள் இல்லாமல் அமைதியும் நிம்மதியும் நிலவும் என மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.
அதே நாளேட்டில் அதே நாளில் ஆட்டோ உதிரிபாகத் தொழில் பற்றி வந்துள்ள செய்தி, அந்த தொழில் நல்ல நிலையில் உள்ளதாகவே சொல்கிறது. இந்தியாவின் ஆட்டோ உதிரிபாக தொழில் உற்பத்தியில் 35% தமிழ்நாட்டில் நடக்கிறது; தமிழ்நாட்டில் ஒரு நிமிடத்தில் 3 கார்கள், இரண்டு நிமிடங்களில் ஒரு டிரக், 6 விநாடிகளில் ஒரு மோட்டார் சைக்கிள் தயாராவதால், உதிரிபாகத் தொழிலும் நன்றாக உள்ளது; இந்தியாவில் டயர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் எம்ஆர்எஃப் தமிழ்நாட்டில் உள்ளது; மாசுக்கட்டுப்பாடு, ஓட்டுனர் உதவி உயர்தொழில்நுட்பம், பாதுகாப்பு, தகவல் கேளிக்கை தேவைகளால் தொழிலில் எலக்ட்ரிக்கல் உள்ளடக்கம் அதிகமாகும்; 2019 - 2020, 2020 - 2021 ஆண்டுகளில், உற்பத்தி வருவாயில் மூலதனச் செலவுகள் (புதிய தொழில்நுட்ப முதலீடு) 6% முதல் 7% வரை செய்ய முடியும் என அந்த செய்தி சொல்கிறது. தொழில் செழிக்கிறது.
ஆனால் இந்த தொழிலதிபர்கள், அடிக்கடி வேலை நிறுத்தம் நடக்கிறது, கோம்ஸ்டார், எம்எஸ்அய், என்விஎச், பிரிக்கால் என வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன, அதனால் வேலை நிறுத்தங்கள் நடக்காமல் இருக்க, ஆட்டோ உதிரி பாக தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிக்குமாறு அரசுக்கு தொடர் நிர்ப்பந்தம் தந்து வந்துள்ளனர்.
தண்ணீர் வழங்குவது, நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பது என்ற பொதுப் பயன்பாட்டு சேவைகளை பராமரிப்பதில் படுதோல்வி அடைந்துள்ள தமிழ்நாடு அரசு, ஆட்டோ உதிரிபாக முதலாளிகள் சொல் பேச்சு கேட்டு, அங்கே வேலை நிறுத்தத்தைத் தடை செய்ய, ஆட்டோ உதிரிபாக தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவித்துள்ளது.
இதுதான்  முதல் முறையா?
தமிழ்நாட்டில் ஹு ண்டாய் வந்த பிறகுதான், புரிந்துணர்வு ஒப்பந்தக் கலாச்சாரம் மேலோங்கியது. முதலாளிகளுக்கு சலுகை களை, தமிழ்நாட்டு வளங்களை வாரித் தருவது நடந்தது. முதலாளி முதலீடு போடும்போதே, உன் தொழிலை பொதுப் பயன்பாட்டு  சேவையாக அறிவிக்கிறேன் என அரசு சட்ட விரோதமாக முதலாளிகளிடம் மண்டியிடும் அலங்கோலம் ஆரம்பானது. 10.08.2012ல், ஆட்டோமொபைல் தயாரிப்பு தொழில், ஜி.ஓ. (ஆர்டி) எண். 256 மூலம், பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு ஆணை அமலில் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. 03.12.2014 தேதிய இரண்டு அரசாணைகள் மூலம் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ காம்பனன்ட் தொழில்கள் பொதுப் பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டன. இதற்கான அரசு அறிவிப்பாணை 24.12.2014 அன்று வெளியிடப்பட்டது.
பொதுப் பயன்பாட்டு சேவை அறிவிப்பு எதற்காக?
தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் 22 முதல் 26 வரையிலான பிரிவுகள் வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்பு தொடர்பானவை. பொதுப் பயன்பாட்டு சேவையான ஒரு நிறுவனத்தில், முன் அறிவிப்பு தராமல் வேலை நிறுத்தம் செய்தால், சமரச பேச்சு நடக்கும் போது வேலை நிறுத்தம் நடந்தால் அந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது. சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, தூண்டிவிடுவது, நிதி உதவி தருவது தண்டனைக்குரியது. பொதுப் பயன்பாட்டு சேவையில் வேலை நிறுத்த அறிவிப்பு வந்தவுடன், சமரச பேச்சுவார்த்தை துவங்கிவிட்டதாகப் பொருளாகும். அதனால்தான், வேலை நிறுத்தத்தைத் தடை செய்ய முதலாளிகள் சில தொழில்களை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிக்கக் கோருகிறார்கள்.
ஹு ண்டாய் நிர்வாகம் தொழில் துவங்கும் போதே, தனது ஆலையில் தொழிலாளர் ஒழுங்கீனம் எதுவும் எழுந்தால், தமிழ்நாடு அரசோ, உயர்அதிகாரிகளோ தனது தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிப்பார்கள் என்ற உறுதிமொழியை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வலியுறுத்தி சேர்த்துள்ளது. இந்த விவரம் 2013(4) எல்எல்என் பக்கம் 714ல் பிரசுர மாகி உள்ள தீர்ப்பின் பக்கம் 725, பத்தி 25ன் மூலம் தெரியவரும். பக்கம் 727லும் இந்த விவரம் உள்ளது.
எது பொதுப் பயன்பாட்டு சேவை?
தொழில் தகராறுகள் சட்டம் துவங்கும்போதே பிரிவு 2(ய்)படி நிரந்தரமாக காலத்துக்கும் ரயில்வே, பொது போக்குவரத்து, தபால் தந்தி, தொலைபேசி சேவை, துறைமுகம், பாதுகாப்புக்கான துறைகள், மின்சாரம், மருத்துவ சேவை, பொது சுகாதாரம் ஆகியவை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும் பொது நலன் அவசரம் கருதி எந்த தொழிலையும் பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 6 மாதத் தொகுப்புகளில்  நீட்டிக்கவும் முடியும். பிரிவு 40படி பொதுப் பயன்பாட்டு சேவைகள் பட்டியல் உள்ள முதல் அட்டவணையை அரசு திருத்தலாம். இதுவும் பொது நலன் கருதியே செய்ய முடியும்.
பொதுப் பயன்பாடு என்றால் மிகப்பெரும்பான்மை மக்கள் தேவையைத்தான் குறிக்கும். இது பற்றி உரிய அரசு, அவசர முடிவு எடுக்கும்.தொழிலாளியை, முதலாளியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசு மனம் போன போக்கில் முடிவு எடுக்க முடியாது. 1994 2 எல்எல்ஜே பக்கம் 170ல் பிரசுரமாகி உள்ள மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு, இந்த விஷயத்தில் தெளிவு தருகிறது. பொதுப் பயன்பாட்டு சேவை அறிவிப்பு, முதலாளிகளின், தொழிலாளிகளின் கோரிக்கைகள், நியாயங்கள் தொடர்பானதல்ல. குறிப்பிட்ட தொழில், உற்பத்தி செய்கிற பண்டங்கள், வழங்குகிற சேவைகள் நின்று போனால், பொது நலன் பாதிக்கப்பட்டால், அவசர நிலை வந்தால், பொதுப் பயன்பாட்டு சேவை அறிவிப்பை அப்போது தரலாம். ஆக 2(ய்) பிரிவில் முதல் அய்ந்து துணைப் பிரிவுகளில் குறிப்பிட்டது போக, மக்கள் சமூகத்தின் பொது நலன் பொது அவசரம் கருதி, பொதுப் பயன்பாட்டு சேவை அறிவிப்பு துணைப் பிரிவு 6 படி வெளியிடலாம்.
தொழில் தகராறுகள் சட்டம் 10 (3) பிரிவு, ஒரு தொழில் தகராறு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்படும்போதே, அது தொடர்பான வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு தொடர்வதை தடை செய்யும் அதிகாரத்தை அரசுக்குத் தந்துள்ளது. ஒரு தொழில் முடங்கி மக்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே, 10 (3) அதிகாரத்தையும் தாண்டி அரசு பொதுப் பயன்பாட்டு சேவை அறிவிப்பின் மூலம் பொதுவான வேலை நிறுத்தத் தடையை ஒரு தொழிலில் கொண்டு வர முடியும் என்பது தெளிவு.
உணவுப் பொருட்கள், பால், தண்ணீர் ஆகியவை பொதுப் பயன்பாட்டு சேவைகளே. கார் 20% பேர் பயன்படுத்துவது.அது பொதுப் பயன்பாடு அல்ல. தங்க, வைர, பிளாட்டினம்  நகைகள் பொதுப் பயன்பாடல்ல. 5, 4, 3 நட்சத்திர விடுதிகள், பெரும் கேளிக்கைகள் பொதுப் பயன்பாடல்ல. ஆட்டோமொபைல் ஆட்டோகாம்பனன்ட் பொதுப் பயன்பாடு என அறிவிப்பது, முதலீட்டாளர்களை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள மட்டுமே செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் எந்த ஆட்டோமொபைல், ஆட்டோகாம்பனன்ட் ஆலை வேலை நிறுத்தத்தாலும், எந்த பொது நலனும்  பாதிக்கப்படவில்லை. எந்த பொது அவசர நிலையும் ஏற்படவில்லை.அப்படி இருக்க 6 மாத அவசர அறிவிப்பு ஏன்?
இந்த அவசரத்தை தமிழக அரசு பொது நலன், பொது அவசரம் கருதி மக்கள் பிரச்சனைகளில் காட்டியிருந்தால் 39ல் 38 இடங்களில் மக்களவைத் தேர்தலில் தோற்றிருக்காது.
அறிவிப்பு வந்துவிட்டது
 அடுத்து என்ன செய்யலாம்?
ஆட்டோ உதிரிபாக தொழில் பொதுப் பயன்பாட்டு சேவை என 03.12.2014 அன்று அறிவிக்கப்பட்டபோது, ஏஅய்சிசிடியுவின் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம்  ரிட்  மனு 9479/2015 மூலமும் வழக்கறிஞர் தொழிற்சங்க தலைவரான பிரகாஷின் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு ரிட் மனு 974/2015 மூலமும் அந்த அரசாணைகள் தவறு என வாதாடின.
அந்த நேரத்திலும் ஏஅய்சிசிடியு மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவை நாடியது.  ஏஅய்சிசிடியுவுடன் புரட்சிகர இளைஞர் கழகமும் களமிறங்கியது.
இப்போதும் இந்த அநீதியான அறிவிப்புக்கு எதிராக, நீதிமன்றத்திலும் களத்திலும்  பெரிய போராட்டங்கள் அவசியம்.

Search