COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 16, 2019

அத்தி வரதரும் சாதியாதிக்கக் கொலைகளும்

ஜி.ரமேஷ்

பாஜகவின் அடிமைகள் ஆட்சியில் கடந்த ஆண்டுகளில் காவிரி புஷ்கரணி, தாமிரபரணி புஷ்கரணி என்று புதிதுபுதிதாக புகுத்தி மக்களை உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பியது மட்டுமின்றி இந்துத்துவத்தை அரியணையில் ஏற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.
மக்கள் வரிப்பணத்தையும் சீரழித்தார்கள். இப்போது காஞ்சிபுரம் அனந்த சரஸ் புஷ்கரணி குளத்தில் இருந்து அத்தி வரதர் வெளியே வந்துள்ளார் என்று பிரபலப்படுத்தி கொடுமையான குடிதண்ணீர் பிரச்சனை, மாணவர்கள் மடிக்கணினி பிரச்சனை, சாதியாதிக்கப் படுகொலைகள், நீட் தேர்வு விலக்கு நிராகரிப்பு, ஏழு தமிழர் விடுதலை, எட்டு வழிச் சாலை எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு நாசகாரத் திட்டங்கள் என எல்லா பிரச்சனைகளில் இருந்தும் மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
எல்லாரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அத்திவரதரை தரிசித்துவிட்டால் அவர்கள் வேண்டிய அனைத்தையும் அவர் தந்து விடுவாராம். சாதி வித்தியா சம் இல்லாமல் மக்கள் அங்கே குவிகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஏகப்பட்ட கெடுபிடிகள் வேறு. காஞ்சி நகருக்குள் செல்ல தன்னிடம் உரிய அனுமதி சீட்டு இருந்தும் தன்னை அனுமதிக்கவில்லை என்று கூறி ஆட்டோ தொழிலாளி ஒருவர் தீ குளித்து இறந்து போனார். தன் தாயுடன் ஆந்திராவில் இருந்து வந்த இளைஞர் அத்திவரதரை தன்னுடைய செல்பேசியில் படம் பிடிக்க முயன்றபோது, அதைத் தடுத்த காவலர் தள்ளிவிட்டதால் இறந்து போனார். அத்தி வரதரைக் கும்பிட்டுவிட்டு திரும்பிப் போகும்போது இளம்பரிதி என்பவர் தன் மனைவி மற்றும் மகனுடன் விபத்தில் சிக்கி மூன்று பேரும் இறந்துபோனார்கள். 
இந்து மதத் துறவி, இந்துக்களின் பாதுகாவலர்  என்று சங்கிகளால் அழைக்கப்படும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், 2017 ஜøலை மாதத்தில் நடக்கும் கன்வார் யாத்திராவை முன்னிட்டு, சாமியார்கள் கங்கையில் நீராட வரும் வழியில் உள்ள அத்தி மரங்களையெல்லாம் வெட்டச் சொல்லி உத்தரவிட்டார். சாமியார்கள் வரும் வழியில் அமங்கலமான அத்தி மரங்கள் இருக்கக் கூடாதாம். அத்தி மரங்கள் அமங்கலமானது என்றால் அத்திமரத்தால் ஆன அத்தி வரதபெருமாள் மங்களகரமானவரா, இந்து மதத்திற்குள்ளேயே ஏன் இந்த முரண்பாடு என்றெல்லாம் பகுத்தறிவோடு கேள்வி கேட்பவருக்கு, கல்புர்கிக்கும் கவுரி லங்கேஷøக்கும் தரப்பட்ட பரிசு காத்திருக்கிறது.
பிரம்மன் நடத்திய யாகத்தை தடுக்க சரஸ்வதி பெருவெள்ளத்தை ஏற்படுத்த அதன் குறுக்கே படுத்து தடுத்தாராம் பெருமாள். அதன் பின் நடந்த யாகத்தால் ஏற்பட்ட சூடு தாங்காமல் பெருமாள் அனந்த சரஸ் தண்ணீருக்குள் சென்று விட்டாராம். பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து அருள் தருகிறார் என்று புராணம் கூறுகிறது என்கிறார்கள். ஜே நியுஸ் சேனலில், காஞ்சிபுரம் கோவிலில் பணிபுரியும் வெங்கடேச பட்டர், 1800ஆம் ஆண்டிற்கு முன்பு, முகமதியர் காலத்தில், தீண்டத்தகாதவர்கள் மரத்தினால் ஆன இந்த அத்தி வரதரைத் தீண்டிவிட்டதால், அந்த தீட்டைக் கழிக்க அத்தி வரதர் அனந்த சரஸ் தீர்த்தத்திற்குள் போய் விட்டார், பெருமாளைப் பார்க்கமுடியாமல் வருத்தப்பட்ட பட்டாச்சாரியார் சொப்பனத்தில் பெருமாள் வந்து 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருதாகச் சொன்னாராம். ஆயுளே 60 ஆண்டுகள் இருக்காதே எனக் கேட்க 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரேன் என்று பெருமாள் சொன்னார் என்றார்.
பெருமாள் தண்ணீருக்குள் போனதற்கான உண்மைக் காரணம் தீட்டு என்றால், அந்தத் தீண்டத் தகாதவர்கள் முகமதியர்களாகவும் இருக்கலாம். தலித் ஆகவும் இருக்கலாம். அது அந்தக் காலம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், இன்று சாதி மேலும் ஆழமாக வேரூன்றிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இருக்கும் எல்லாரும் இந்துக்கள் என்றும் தாழ்த்தப்பட்ட தலித் மற்றும் பழங்குடி மக்கள் எல்லாம் இந்துக்கள் என்றும் சொல்லிக் கொண்டு பண ஆசை, பதவி ஆசைகள் காட்டி சங்கிகள் அவர்களை ராம் சேனா, இந்து முன்னணி, பாஜகவில் இணைத்துக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிறுத்துகிறார்கள். கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றவர்களையும் சமூக நீதி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, முன்னேறிய சாதியினருக்கான பொருளாதார இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பேச வைக்கிறார்கள்.
சாதியாதிக்கப் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வட மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் அதிகமாக இருந்த சாதி வெறி ஆதிக்கப் படுகொலைகள், பாலியல் வன்முறைப் படுகொலைகள் தமிழ்நாட்டிலும் அதிகரிக்கின்றன. தூத்துக்குடியில் தலித் சமூகத்தினுள் வேறு பிரிவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் அந்த இளைஞரையும் தான் பெற்ற பெண்ணையும் அவர் கர்ப்பமாக உள்ளார் என்று தெரிந்தும் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளனர் பெண்ணின் தந்தை அழகரும் அவர் கூட்டாளிகளும். கோவை மேட்டுப்பாளையத்தில் தலித் பெண் வர்ஷினிப் பிரியாவைத் தன் தம்பி கனகராஜ் காதலித்தார் என்பதற்காக தன் தம்பியையும் வர்ஷினிப்ரியாவையும் வெட்டிக் கொன்று விட்டார் அண் ணன் வினோத் குமார். இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகள் கழித்து கூட, நல்லுறவு ஏற்படுத்துவது போல் காட்டிக் கொண்டு, பின்னர்  பெற்றோர்களால், சகோதரர்களால் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோர் ஆதிக்க சாதிப் பெண்களைத் காதல் திருமணம் செய்தார்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள். உசிலம்பட்டி விமலா தேவி, ராமநாதபுரம் வைதேகி ஆகியோர் தலித் இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்ததால் பெற்றோர்களால், உடன் பிறந்தவர்களால் கொல்லப்பட்டனர்.
சாதியாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இளைஞர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். புரட்சிகர இளைஞர் கழகத்தின் நெல்லை தோழர் மாரியப்பன் 2016 ஜøலை 20 அன்று இந்து முன்னணியினர் ஆதரவோடு பிற்படுத்தப்பட்ட கோனார் சாதியைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தன் தாயை சாதிய வன்மத்துடன் தாக்கியதால் அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள இளைஞர்கள் லும்பன்களாக, சமூக விரோதிகளாக இருந்தால் அவர்களோடு சமரசம் செய்து கொள்ளும் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தங்கள் உரிமைக் காக குரலெழுப்பினால் பொறுத்துக் கொள்வதில்லை.
தன் சாதியைச் சொல்ல கூச்சப்பட்ட காலம் போய் சாதிப் பெருமை பேசுவது அதிகரித்துள்ளது. வர்ணாசிரமத்தை, சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவா கொள்கைகள் வளர வளர சாதியாதிக்கமும் வன்கொடுமைகளும் மேலும் வளரும். 2014ல் கணக்கில் வந்த சாதியாதிக்கக் கொலைகள் எண்ணிக்கை 28. பாஜகவின் ஓராண்டு ஆட்சிக்குப் பின்னர் 2015ல் அதன் எண்ணிக்கை 251 ஆனது. அதாவது 796% அதிகரித்தது. 2014-16ல் மூன்று ஆண்டு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் 81 சாதியாதிக்கப் படுகொலைகள் நடந்துள்ளன என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு தரும், காவல் நிலையங்களில் தஞ்சம் புகும் காதலர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. அரசாங்கம், நீதித்துறை மற்றும் காவல் துறைக்குள்ளேயே சாதிய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன.
தற்போது நாட்டில் நிலவும் சூழல், இந்து மதம் மக்களின் கடவுள் வழிபாட்டு முறையாக மட்டும் இல்லாமல் ஆட்சி அதிகாரம் செலுத்துவதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான். அந்த வகையிலேயே அத்திவரதர் அமர்க்களப்படுத்தப்படுகிறார். முதல் நாள் ஆளுநர் வந்தார் என்றால் அடுத்தடுத்து அமைச்சர்கள் வந்தார்கள். 12ஆம் நாள் நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிறார். அன்று அத்தி வரதர் காவியுடையில் இருக்கிறார்.  இந்திய குடியரசுத் தலைவர் வரும்போது காவியுடை அலங்காரம் என்பது இந்திய நாட்டின் நிறம் காவி என்று அடையாளப்படுத்துவதே ஆகும். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு இந்து மதவெறிப் பாசிசக் கொள்கைகளை முன்வைக்கும் மோடி ஆட்சியின் செயல் திட்டமாகவே அத்தி வரதரின் இன்றைய அவதார நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும். அத்தி வரதரை மக்கள் வணங்குவது இயல்பானது. அத்திவரதர் வரவுக்குப் பின்னால் உள்ள அரசியல்தான் முக்கியமானது. சங்கிகள் நாடெங்கும் இதுபோன்ற நிகழ்வுகளை அரசாங்கத்தின் மூலமே நடத்தவிருக்கிறார்கள். தாமிரபரணியின் புனிதத்தை, தூய்மையைக் காக்க பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை தீர்த்த கட்டங்களை ஏற்படுத்தி பூசைகள் செய்யப் போகிறார்களாம். இப்படி அரசாங்கமே இந்து மதச் சடங்குகளை அமல்படுத்துவது, இந்தியாவின் மதம் இந்து என்பதை வலியுறுத்தும் செயலாகவே உள்ளது. இந்துகள் ஓட்டு எல்லாருக்கும் தேவை என்பதால், ஆட்சியாளர்களின் இந்த அடாவடிச் செயலை எதிர்க்கட்சியினரும் கண்டு கொள்வதில்லை.
இதன் விளைவாக, பாஜகவினர் என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்கிற நிலை தமிழ்நாட்டிலேயே ஏற்பட்டுள்ளது. தோழர் அசோக் படு கொலையைத் தொடர்ந்து, நெல்லையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டிற்கு சாதி மோதல் ஏற்படும் என்று அனுமதி மறுத்த காவல்துறை, செங்கோட்டையில், இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் பாஜகவின் எச்.ராஜாவின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கிறது. அந்தப் பொதுக் கூட்டம் திருநெல்வேலி காவல்துறை இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்று கூறி நடத்தப்பட்ட காவல்துறைக்கு எதிரான கண்டனப் பொதுக் கூட்டம். நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதற்காக இசுலாமிய இளைஞர் ஒருவர் இந்து முன்னணி குண்டர்களால் கத்திக் குத்துக்கு ஆளாகியிருக்கிறார். இந்து மதவெறிப் பாசிசம் வேரூன்றுவது வேரறுக்கப்படவில்லை என்றால், சமூக நீதிக்கு முதன்மையான மாநிலமாக இருக்கும் தமிழகமும் இந்து ராஜ்ஜியமாக்கப்பட்டுவிடும். அதற்கு ஒரு போதும் சமூகநீதிக் காவலர்கள், இடதுசாரிகள் அனுமதிக்கக் கூடாது.

Search