COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 15, 2014

2014 மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆவண திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் ஆற்றிய ஏற்புரை

வாழ்நாள் சாதனை விருதை நான் பெற்றுக் கொள்ளும் இந்த மாலை நேரத்தில் வெவ்வேறு  உணர்வுகள் கலந்த நிலையில் நான் இருக்கிறேன். உண்மைதான். நாங்கள் செய்த வேலைக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இது நடப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நாங்கள் செய்த வேலை, அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்டனத்துக்கு ஆளானபோதெல்லாம், சந்தை அவற்றை நிராகரித்தபோதெல்லாம், அளவற்ற, தன்னலமற்ற ஆதரவு தந்த எனது பெற்றோர், எனது குடும்பம், எனது நண்பர்கள்... இவர்கள் எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எதிர்ப்புக்கள் இருந்தபோதும் எனது பல திரைப்படங்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் கிடைத்தது என்பதிலும் நான் அதிர்ஷ்டசாலி.

இங்குதான், வெவ்வேறு  உணர்வுகள் கலந்த நிலையில் நான் இருக்கிறேன். எனது திரைப்படங்கள் முன்வைத்த பிரச்சனைகளையும் அந்தப் பிரச்சனைகளுக்காக போராடியவர்களையும் விலக்கிவிட்டு அவற்றை பார்த்தால், அவை ஒன்றுமில்லாதவை. இந்தத் திரைப்படங்கள், அந்த மக்களுக்கு, அந்தப் பிரச்சனைகளில், ஏதாவது மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறதா என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். மாற்றம் ஏற்படவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

நான் சில உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

1978ல் எடுக்கப்பட்ட மனசாட்சியின் கைதிகள் என்ற படம் சுதந்திர இந்தியாவில் அரசியல் கைதிகள் பற்றியது. இன்று சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆண்டுக் கணக்கில் விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்குக் கூட பிணை தர நமது கட்டமைப்பு மறுக்கிறது. நான் இங்கே பேசிக்  கொண்டிருக்கும்போது, நீண்ட காலமாக பிணை மறுக்கப்படும் பல சிறைக் கைதிகள் பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1985ல் எடுத்து முடிக்கப்பட்ட மும்பை நமது நகரம் வீடற்றவர்களின் தற்காலிக வீடுகளை இடித்துத் தள்ளும் கொடூரமான நடைமுறை பற்றிய படம். இப்போதும் வீடுகளை இடித்துத்தள்ளுவது முழுவீச்சில் நடைபெறுகிறது. நகர்ப்புறத்தில் இடம்பெயர்தலை, நகர்ப்புற வறுமையை கேள்விக்கு உள்ளாக்குவதற்கு பதில் நாம் தொடர்ந்து வறியவர்களை குற்றவாளிகளாக்குகிறோம்.

எனது நண்பர்களின் நினைவாக (1990), கடவுளின் பெயரால் (1992) ஆகிய படங்கள், மதத்தின் பெயரால் பிளவுவாதமும் வன்முறையும் வளர்ந்து வருவது பற்றியவை. இன்று, மகாத்மா காந்தியை கொலை செய்யும், பாப்ரி மசூதி இடிக்கப்படுவதை திட்டமிடும், அது இடித்துத் தள்ளப்பட்டதை கொண்டாடுகிற, சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படுவதில் கூட்டுச்சதி செய்கிற, அவற்றை மன்னித்து விடுகிற கருத்தியல் மனப்போக்குடன் பேணி வளர்க்கப்பட்டவர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தும் விளிம்பில் இருக்கிறோம். தாக்கப்பட்டவர்கள், நீதி மறுக்கப்பட்டவர்கள் மத்தியிலும் இது பழிவாங்குவதற்கான, எதிர் வன்முறைக்கான தாகத்தை உருவாக்குகிறது.

பிதா, சுதன் மற்றும் புனிதப் போர் (1995) என்ற படம் நமது ஆணாதிக்க அமைப்பு முறை, மதவாத வன்முறை மற்றும் ஆண்திமிர் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு பற்றியது. இன்று பெண்கள் மேலும்மேலும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்; கூட்டுப் பாலியல் வன்முறை மதவெறி தாக்குதலின் ஓர் அங்கமாக இருக்கிறது; ஆண்மையை கொண்டாடும் ஒரு வெகுமக்கள் கலாச்சாரத்தை நாம் பார்க்கிறோம். பிரதமர் வேட்பாளர் ஒருவர் தனது 56 அங்குல அகல மார்பு பற்றி பொது வெளியிலேயே பெருமைபட்டுக் கொள்கிறார்; ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகமும் அவற்றால் சூழப்பட்ட ஊடகங்களும் 2002 மனிதப் படுகொலையின்போது அவர் செய்ததையும் செய்யாமல் விட்டதையும் மறந்துவிட்டன; மன்னித்துவிட்டன.

ஒரு நர்மதா நாட்குறிப்பு (1995) ராட்சத சர்தார் சரோவர் அணை, அந்தத் திட்டத்துக்கு   நிதி அளித்துக் கொண்டிருந்ததை நிறுத்த உலக வங்கியை நிர்ப்பந்தித்த மக்கள் இயக்கம் பற்றிய படம். இன்று அந்த அணை கட்டும் பணி கிட்டத்தட்ட நிறைவுபெற்றுவிட்டது; ஆயினும் அங்கிருந்து வறட்சிப் பகுதிகளுக்கு நீர் பாய்வதற்குப் பதிலாக, நகர்ப்புற குஜராத்தில் உள்ள நீர்ப்பூங்காக்களுக்கு, அகல நடைபாதைகளுக்கு தண்ணீர் மின் அழுத்தத்தின் உதவியுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

போரும் அமைதியும் (2002) என்ற படம்,  அவப்பெயர்பெற்ற அணுஆற்றல் மன்றத்தில் இந்தியாவும் இணைந்து அணுஆயுதம் பயன்படுத்தக்கூடிய ஓர் அரசாக மாறுவது என்ற துயரமான முடிவு பற்றியது. பாகிஸ்தானும் அதே விதத்தில் பதில் சொல்லியுள்ளபோது, இந்த மொத்த பிராந்தியமும் அணுஆயுத பாதுகாப்பின்மையில், நிச்சயமின்மையில் தள்ளப்பட்டுள்ளது. இன்று, பதவிக்காலம் முடியவிருக்கிற நமது பிரதமர், தான் பெருமைப்படுகிற சில சாதனைகளைப் பற்றி பேசும்போது, இந்தியாவின் அணுஆற்றல் திட்டத்திற்கு இருந்த தடையை விலக்கி, நாடு முழுவதும் மேலும்மேலும் அணுஉலைகளை நிறுவ உதவிய இந்திய - அய்க்கிய அமெரிக்க அணுஒப்பந்தத்தைத்தான் முதல் சாதனை என்று பட்டியலிட்டார். ஃபுகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பிறகு, அணுசக்தி பாதுகாப்பற்றது மட்டுமின்றி, கட்டுப்படியாகாதது என்று உலகம் முழுவதும் உணரும்போது, சுனாமியால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நமது கடலோரப் பகுதிகளை நிரப்ப, வேண்டாமென வீசப்பட்ட செர்னோபிள்களை வாங்குவதில் மும்முரமாக இருக்கிறது.

ஜெய்பீம் காம்ரேட் (2012), ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, இழிவான வேலைகள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட, தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் எதிர்ப்பு என்னும் இசை பற்றியது. அரசாங்கத்தின் அதிகாரபூர்வ விவரங்கள்படி,  இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் தலித்துகள் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள்; மூன்று தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். இந்தக் கொடுமைகளை எதிர்க்கிற பல்வேறு குழுக்களில் ஒன்று எங்களது படத்தில் வரும் கபீர்கலா மன்ச். படத்தின் இறுதியில், காவல்துறையினர் அவர்களை மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துவதால், அவர்கள் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு நடந்த மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் பெற்ற விருது உட்பட ஜெய்பீம் காம்ரேட் பல விருதுகள் பெற்றது; அது பற்றி விரிவாக எழுதப்பட்டது; அதன் பிறகு நாங்கள் கபீர் கலா மன்ச் பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கினோம். இறுதியில், குடிமைச் சமூகத்தின் உதவியுடன் வெளிப்படையாக வருவது சாலப் பொருத்தமானது என்று கபீர் கலா மன்ச் முடிவு செய்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு வெளியே பாடல்கள் பாடி  அகிம்சை முறையில் சத்தியாகிரகத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்கள். அதன் பிறகு, அவர்களில் மூன்று பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்; பத்து மாதங்கள் ஆன பிறகும் இன்னும் மூன்று பேர் சிறையில் இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் அடிப் படையில் அவர்கள் தாமாக சரணடைந்தார்கள். அவர்களுடைய பாடல்கள் மட்டும்தான் அவர்களுடைய ஒரே ஆயுதம். இன்று, நமது அரசியல் மற்றும் நீதித்துறைதான் உண்மையில் குற்றவாளி கூண்டில் நிற்கிறது.

எனவேதான் சொல்கிறேன்; வெவ்வேறு  உணர்வுகள் கலந்த நிலையில் நான் இருக்கிறேன். கசப்பும் இனிப்பும் கலந்த இந்தத் தருணத்தில், நான் பெற்றுள்ள அனைத்துக்கும் நான் நன்றி சொல்ல வேண்டிய எனது பெற்றோர் இங்கு இல்லை. தாங்கள் எதை நம்பினார்களோ அதற்காக உயிர்விட்ட பூஜாரி லால்தாஸ், ஜெய்மல் சிங் பத்தா, ஷாகிர் விலாஸ் கோக்ரே போன்ற எனது படங்களின் கதாநாயகர்களும் இன்று இல்லை. எனது இந்த நீண்ட பயணத்தில், பெர்வேஸ் மெர்வான்சி, சரத்சந்திரன், தாரிகி மசூத், இப்போது, பீட்டர் வின்டோனிக் போன்ற எனது அன்பிற்குரிய, நான் போற்றுகிற எனது திரைப்பட நண்பர்களையும் நான் இழந்துவிட்டேன்.

உங்களது நேரத்தை நான் கூடுதலாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறேன். எனது பணி அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் பலரின் பணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு எனது நன்றிகள். இதுபோன்ற விருதுகள் எங்களுடைய பணியை, எங்களுடைய லட்சியத்தை இன்னும் கூடுதலாக தெரியும்படிச் செய்யும் என்று நான் நம்புகிறேன். அது மிகப்பெரிய அளவில் நடக்கும்போது, மாற்றம் வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நன்றி.

- ஆனந்த் பட்வர்த்தன், மும்பை, 03.02.2014


Search