COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 1, 2014

தலையங்கம் - தமிழக ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு வேலையும் இல்லை வாழ்க்கையும் இல்லை

ஒரு மரத்தை ஆறு மணி நேரத்துக்குள் வெட்ட வேண்டும் என்று சொல்லி என்னிடம் ஒரு கோடரியைக் கொடுத்தால் முதல் நான்கு மணி நேரத்தை கோடரியை கூர்தீட்டுவதில் செலவிடுவேன் என்று ஆப்ரகாம் லிங்கன் சொன்னதை காவல் துறையினருக்கு ஜெயலலிதா நினைவுபடுத்தினார்.

ஜெயலலிதா ஆப்ரகாம் லிங்கன் அளவுக்கு கோடரியை கூர்தீட்டும் பணியில் தன்னை துன்புறுத்திக்கொள்ளமாட்டார். கோடரியை நான் நான்கு மணி நேரம் கூர்தீட்டுவேன் என்று அறிவித்துவிடுவார். அவர் அறிவித்தபின், அந்த அறிவிப்பைப் பாராட்டி கழக உடன்பிறப்புகள் சுவரொட்டி ஒட்டுவார்கள்; தொலைக்காட்சி நேர்காணல்களில் அறிவிப்பை மெச்சித்தள்ளுவார்கள்; சிவப்புத் துண்டணிந்த சிலர் கூட ஆஹா, அற்புதமான அறிவிப்பு என்று சொல்லிவிடுவார்கள்; முடிந்தது கூர்தீட்டும் வேலை.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் ஜெயலலிதா நடத்திக் கொண்டிருக்கிற அறிவிப்பு அரசியலில் அமலாக்கப்பட்ட அறிவுப்புக்கள் எவை, அமலாகாத அறிவிப்புகள் எவை என்ற கணக்குப் பார்த்தால் அமலாகாதவை முந்தி நிற்கும். கட்டணம் இல்லா அரிசி முதல் கணிணி ஊடாக வீட்டுமனை வரை முழுமையான அமலாக்கம் நடந்தது, அந்த அறிவிப்புகள் செயல் வடிவில் முழுமையாக மக்களைச் சேர்ந்தது என்று யாரும் முழுமையாகச் சொல்ல முடியாது.

இலங்கை தமிழர், தமிழக மீனவர், காவிரி என்று இடையில் சில சடங்குகள் நடத்தப்படும். சமீபத்திய சடங்கு தமிழக, இலங்கை மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை. என்ன பேசினார்கள், முடிவெடுத்தார்கள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் பேச்சு வார்த்தை நடந்ததே தனது சாதனை என்று ஜெயலலிதா தனது பட்டியலில் சேர்த்துக் கொள்வார்.

ஜெயலலிதா அடையாள அளவில் முயற்சிகள் எடுத்து தனது மேலோட்டமான அறிவிப்புக்களை, சடங்குகளை விற்கப் பார்த்தாலும், அவை தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுபடாமலே போகின்றன. ஏனென்றால் பெரிய ஆடம்பர அறிவிப்புக்கள் இல்லாமல் சில அரசாணைகள் மூலம் சாமான்ய மக்களின் சில அடிப்படை உரிமைகளுக்கு முடிவு கட்டுகிறார் ஜெயலலிதா. மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் அதிமுகவினர் தகுதியைப் பற்றி முன்னறியாமல் அறிவித்துவிடும் ஜெயலலிதா, பிறகு முடிவை மாற்றி அறிவிக்கும் நடைமுறையை கொண்டிருக்கிற ஜெயலலிதா, தமிழக அரசின் பணிகளில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்.

பார்வையற்ற பட்டதாரிகள் தகுதி தேர்வு தங்களை எப்படி துன்பத்தில் தள்ளியுள்ளது என்று தங்கள் போராட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொன்னார்கள். இப்போது அந்த வரிசையில் அரசு செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இணைந்துள்ளார்கள்.

அரசு செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தங்களுக்கு வகுப்புக்கள் எடுக்கப்படுவதாகவும் வாரத்தில் 5 நாட்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும் சொல்கிறார்கள். படிப்பு முடிந்தால் அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களை செலுத்துகிறது. அந்த நம்பிக்கைக்கு முடிவு கட்டியுள்ளது தமிழக அரசின் அரசாணை.

மூன்றரை ஆண்டுகள் பட்டயப் படிப்பு, அந்தப் பட்டயப் படிப்பின் பெரும்பான்மை பகுதி நேரடி சேவை என்று ஈடுபடும் செவிலியர்கள் அரசுப் பணி வேண்டும் என்றால் தேர்வு எழுத வேண்டும் என்று அந்த அரசாணை சொல்கிறது. செவிலியர் மாணவர்கள் வாழ்க்கையை இந்த அரசாணை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளுகிறது.

அவர்கள் அரசு கல்லூரி மாணவர்களுக்கு எதிராக நிறுத்தப்படுகிறார்கள். தனியார் கல்லூரிகள் அரசின் கொள்கைகளின் முழுஆதரவுடன்தான் நடக்கின்றன. தனியார் கல்லூரிகளில் பயில்வதால் அந்த மாணவர்களுக்கு அரசு வேலை இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது.

அதனால் தேர்வு என்று புத்திசாலித்தனமாக காரணம் சொல்லப்படுகிறது. உங்களுக்குள் மோதிக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு மக்களிடம் சொல்கிறது. மாநிலம் முழுவதும் காளான்போல் முளைத்துக் கிடக்கிற தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலை தரவேண்டிய பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற பிறகு, பதவி ஏற்க வேண்டுமானால் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று ஜெயலலிதாவையும் அவரது அமைச்சர்களையும் பணித்தால் ஏற்றுக் கொள்வார்களா?

ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு சொல்வதைத்தான் நான் செய்கிறேன் என்று சொல்கிற ஜெயலலிதா, செவிலியர்களை பணிக்கமர்த்துவதில் ஏன் மத்திய அரசின் கொள்கையை பின்பற்ற வேண்டும்?

ஜெயலலிதாவின் மத்திய அரசு எதிர்ப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சனைகளில் மட்டும்தானா?
அரிது அரிது வேலை வாய்ப்பு கிடைப்பது அரிது, அதனினும் அரிது அரசுப் பணி கிடைப்பது என்ற நிலைமைகளை உருவாக்கிவிட்டு தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பதாக தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் மூலம் தோற்றம் தரப்பார்க்கிறார் ஜெயலலிதா. முன்னாள் நீதிபதியின் பொறுப்பில் உள்ள தேர்வாணையம் வெவ்வேறு அரசுப் பணிகளுக்கான கால அட்டவணை அறிவிப்பது வரை போக்கு காட்டுகிறது.

ஆனால், சில ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு பல லட்சம் தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். தேர்வுக் கட்டணமாக பல கோடி ரூபாய் அரசு கருவூலத்துக்கு வந்து சேர்கிறது.

எங்கள் ஆட்சியில் புதிய தொழில்கள் துவங்கப்பட்டு வேலை வாய்ப்புக்கள் அதிகரித்தன, இப்போது புதிய தொழில்களும் இல்லை, வேலை வாய்ப்புக்களும் இல்லை என்று கனிமொழி விமர்சிக்கிறார். கனிமொழி நடத்திய வேலை வாய்ப்பு முகாம்களில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது, எந்த விதமான வேலை வாய்ப்பு கிடைத்தது என புரிந்துகொண்டதால்தான் தமிழக மக்கள் திமுகவை வஞ்சத்துடன் தூக்கியெறிந்தார்கள்.

ஜெயலலிதா முந்தைய திமுக ஆட்சியில் இருந்து பாடம் பெற்றாக வேண்டும். சலுகைகள், இலவசங்கள் மக்கள் சீற்றத்தை எந்த விதத்திலும் தணிக்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வில் ஸ்தூலமான முன்னேற்றம் கோருகிறார்கள். அதற்குக் குறைவாக எதையும் ஒப்புக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

இது தேர்தல்களின் காலம். மக்களவை தேர்தல்களில் யார் எங்கு நிற்கப் போகிறார்கள் என்பதை பரிசோதிக்க மாநிலங்களவை தேர்தல் பேரங்கள் பயன்பட்டன. தனித்து போட்டி என்று அறிவித்த ஜெயலலிதா இககமா வேட்பாளரை ஆதரித்து தனது மக்களவை தேர்தல் கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுகவுக்கு இது சோதனை காலம். காங்கிரஸ் தன்னுடன் யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து கதவை திறந்து காத்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக ராட்சத பலூன் பறக்க விட்டிருக்கிற தேமுதிகவின் மாபெரும் தேர்தல் உத்தியை தெரிந்து கொள்ள பிப்ரவரி 2 வரை காத்திருக்க வேண்டும்.

மக்கள் வாக்குகள் பெற்றால்தான் வெற்றி பெற முடியும் என்பதை மட்டும் இந்த அனைத்து கட்சிகளும் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் யார் விவாதத்திலும் வேலை வாய்ப்பின்மை உட்பட தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனை பற்றியும் எந்த விவாதமும் இல்லை.

தமிழக உழைக்கும் மக்களும் தமிழக  ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு வேலையும் இல்லை வாழ்க்கையும் இல்லை என பதில் சொல்வார்கள்.

Search