மேற்குலகம் அனுபவித்திராத ஒரு வாழ்க்கை முறை இந்தியாவில் இருப்பதாகவும்,
இங்கே பெண்களை வழிபடுவது நம் உயர்ந்த பாரம்பரியம் என்றும், பழைமைவாதக்
கருத்துக்கள் இப்போதும் பகிரங்கமாகப் பேசப்படுகின்றன; எழுதப்படுகின்றன.
(காண்க: 22.01.2014 தினமணி நடுப்பக்க கட்டுரை).
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் சுபல்பூர் கிராமத்தில், பெண் எப்படி வழிபடப்பட்டாள் என்பதைப் பார்ப்போம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இருபது வயது பழங்குடியினப் பெண் ஒருவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆணுடன் உறவு கொண்டார் எனச் சொல்லி, பஞ்சாயத்து தலைவர் சில ஆயிரங்கள் அபராதம் என தண்டனை விதித்தார். அந்தப் பெண்ணால் அந்த அபராதத் தொகையை செலுத்த முடியவில்லை.
அப்போது அங்கிருந்த சாதிய பஞ்சாயத்து, அந்தப் பெண்ணை தண்டிக்க, அதே கிராமத்தில் உள்ள ஆண்கள் அந்த பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொள்ளச் சொன்னது. கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய, குற்றுயிரும் குலையுயிருமாக, அந்தப் பெண் மருத்துவமனையில் இருக்கிறாள். நேற்று வரை அண்ணா மாமா சித்தப்பா பெரியப்பா எனத் தான் அழைத்தவர்கள்தான், இந்தக் கொடுங் குற்றத்தை இழைத்ததாக, அந்தப் பெண், நினைவு இருக்கும் நேரம் சொன்னாள்.
கேடுகெட்ட அயல்நாட்டுப் பாரம்பரியங்களுக்கு எதிரான போற்றுதலுக்குரிய நம் பாரதப் பாரம்பரியம், பண்பாடு, பெண்ணை எப்படி வழிபட்டது என்பதை, சுபல்பூர் கதை நமக்குச் சொல்லும். கண்ணகி தேசத்து தமிழ்ப் பண்பாடு, காரைக்கால் பெண்ணை எப்படி வழிபட்டது என்பதை, சில தினங்கள் முன் நடந்த சம்பவம் சொன்னது.
டெல்லியில் ஒரு புயல் போல் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. சங்பரிவார் போல் ஆம் ஆத்மி கட்சியும், தினமணி கட்டுரையாளர் எடுத்தாண்ட மனு ஸ்மிருதி மேற்கோளைப் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்கள் கொண்ட கட்சிதான்.
‘யத்ர நாரியஸ்து பூஜ்யந்தே ரமன்தே
தத்ர தேவதஹ’.
இதற்கு, எங்கு பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கு எல்லா தேவதைகளும் குடியிருக்கும் என்று பொருள். அவர்களும் ‘அதிதி தேவோ பவ’, விருந்தினரை வழிபடுவோம் என்கிறவர்கள்தான்.
ஆனால் டெல்லி மாநகரின் கிர்கியில் என்ன நடந்தது?
கிர்கியில், நைஜீரியா, ருவாண்டா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர் வாழ்கிறார்கள். பாசிசம், ஹிட்லர் காலத்திலிருந்து ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சமன்பாட்டை முன்நிறுத்துகிறது., அய்க்கிய அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரால், ‘நாம் எதிர் இசுலாமியர்கள்’ என்ற சமன்பாட்டைக் கட்டமைத்துச் செயல்படுத்தி வருகிறது. இதே சமன்பாட்டை இந்தியாவில் சங் பரிவார் செயல்படுத்துகிறது. ஆம் ஆத்மி கட்சி இதே சமன்பாட்டை, உள்ளூர் ‘மா பெஹன் பேட்டி’ அதாவது ‘உள்ளூர் தாய்கள்/சகோதரிகள்/மகள்கள் எதிர் வெளிநாட்டு வேசிகள்’ எனக் கட்டமைத்துள்ளது.
டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்கர்கள் நம்மவர்களும் அல்ல நல்லவர்களும் அல்ல என்கிறார். கருப்பு தோல் மனிதர்களுக்கு எதிரான நிறவெறி, இனவெறி நஞ்சாய் கிர்கியில் உமிழப்பட்டது. ஆப்பிரிக்கப் பெண்கள் வேசிகள், ஆப்பிரிக்க ஆண்கள் போதை மருந்து கடத்துபவர்கள் என சோம்நாத் பார்தி விஷம் கக்கி, ஆப்பிரிக்கர்கள் குடியிருக்கும் ஒவ்வொரு வீட்டையும் சோதிப்போம் என மக்களை உசுப்பி விடுகிறார்.
அவரது ஆதரவாளர்கள் ஆப்பிரிக்கப் பெண்களை விரட்டுகிறார்கள். அவர்கள் ஓடுகிறார்கள். இவர்கள் பிடித்து அடித்து இழுத்து வருகிறார்கள். பெண்களின் உடல்களைப் பாலியல் ரீதியாகத் தடவுகிறார்கள். அந்தப் பெண்களை, பொது இடத்தில், சிறுநீர் கழிக்க வைத்து சிறுநீர் சோதனைக்கு உட்படுத்துகிறார்கள்.
டெல்லியின் கிர்க்கியிலும், இப்படித்தான் ஆப்பிரிக்கப் பெண்கள் வழிபடப்பட்டுள்ளனர்! மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டுபவர்கள் எல்லாம் மறைமுகமாக கடவுள் மறுப்பு கொள்கை பிரச்சாரத்திற்கு உதவுவதாகத் தெரிகிறது. அவர்கள் தேவதைகள் குடி இருக்கும் இடம் இந்தியாவில் எங்கும் இல்லை என்ற உண்மை நிலையை உணர்த்துவதன் மூலம், இந்தியாவில் தேவதைகள் இல்லை எனக் காட்டுகிறார்கள்.
சோம்நாத் பார்தி, மக்கள் புகார்கள் அடிப்படையில்தான் செயல்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியும் அர்விந்த் கெஜ்ரிவாலும் வக்காலத்து வாங்குகிறார்கள். சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்கர்கள் சமூக அறத்தை/தார்மீக நெறிகளை மாசுபடுத்திவிட்டதாகச் (POLLUTING SOCIAL MORALITY) சொல்கிறார்.
தலித்துகளால், எல்லாமே மாசுபடும் தீட்டு ஆகிவிடும் என்ற சுத்தக் கோட்பாட்டை முன்வைத்துத்தான், இந்துத்துவா ஊருக்கு வெளியில் சேரி என்றது. இதே இந்துத்துவாதான் இயற்கையின் விளைவான மாதவிடாய்க் கால இரத்தப்பெருக்கைக் காரணம் காட்டி, பெண் உடல் அசுத்தமானது தீட்டு, அதனால் பெண் என்றும் இரண்டாம் தரமானவள் என்றது.
பகுதி மக்கள் புகார் செய்தார்கள் என்று சொல்லி மொத்த ஆப்பிரிக்க பெண்கள் மீது ஆண்கள் மீது சோதனை என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? நாளை, முசாபர் நகரில் ஆம்ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்து அவரிடம் பகுதியிலிருந்து சிலர் இசுலாமிய இளைஞர்கள் காதல் போர் (LOVE JEHAD) தொடுப்பதாகப் புகார் சொன்னால், தர்மபுரியில் ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் தலித் இளைஞர்கள் காதல் போர் (LOVE JEHAD) தொடுப்பதாக யாராவது புகார் சொன்னால், அந்த இரண்டு இடங்களிலும் முறையே அனைத்து இசுலாமிய தலித் இளைஞர்கள் மீதும் சோதனை (RAID) நடத்தி போலீசார் அவர்களை கைது செய்ய வேண்டும் எனச் சொல்லி அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்களா?
ஒரு குடியிருப்போர் அமைப்பு பக்கத்து குடிசைப் பகுதியிலிருந்து, சில திருடர்கள் வந்ததாகப் புகார் செய்தால், மொத்த குடிசைப் பகுதியும் வேட்டையாடப் படுமா? புகார் வந்தால் புகார் விசாரிக்கப்படட்டும். விசாரணை நடக்கட்டும். குற்றம் சுமத்தப்படட்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படட்டும். ஆனால், ஒரு சமூகத்தையே ஒரு நிறத்தினரையே ஓர் இனத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரித்து, கும்பல் மனோநிலைக்கு தலைமை தாங்குவது, குற்றம் என்கிறோம்.
டெல்லியின் முற்போக்கு ஜனநாயக சக்திகளிலிருந்து ஹசார்ட் சென்டரின் துனுராய், ஜேஎன்யுவின் நிவேதிதா மேனன், ஜி.அருணிமா, டெல்லி பல்கலைக் கழகத்தின் நிர்மலாங்சு முகர்ஜி, நந்தினி சுந்தர், வரலாற்றாளர் உமா சக்ரவர்த்தி, பத்திரிகையாளர்கள் பமேலா பிலிப்போஸ் சத்யா சிவராமன், கல்வியாளர் கவுதம்பான், திரைப்படம் எடுப்பவர்களான சபாதேவன், இரம் குப்ரன், நியு டிரேட் யூனியன் இனிசியேடிவின் ராக்கி செகல், ஜாமியா மிலியா இசுலாமியாவின் சோஹினி கோஷ் சோஹாய்ல் அக்பர், பியுசிஎல்லின் கவிதா சிறீவத்சவா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் கவிதா கிருஷ்ணன், ஜகோரியின் சுனிதா தார், மற்றும் பலர், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி நிறுவனத் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்பு பின்வரும் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
1. சோம்நாத் பார்தி உடனடியாக சட்ட அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
2. ஆப்பிரிக்க பெண்களுக்கெதிரான நிற வெறி மற்றும் பாலியல் வன்முறையை தூண்டிய, நிகழ்த்திய குற்றம் புரிந்த சோம்நாத் பார்தி உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும்.
3. டெல்லி போலீஸ், டெல்லி அரசாங்கத்தின் கீழ் வர வேண்டும். ஆனால் டெல்லி போலீஸ், அமைச்சர் மற்றும் கும்பல்களின் ஆணைகள்படி அல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
4. இனவெறி பாலியல் வன்முறை பற்றி புகார் கூறியுள்ள உகாண்டா பெண்களிடம், அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும். வன்முறைகளை கண்டிக்க வேண்டும்.
நாமும் இந்த கோரிக்கைகளோடு இணைந்து கொள்வோம்.
ஆம் ஆத்மி கட்சியின் கருத்தியலாளரான யோகேந்திர யாதவ், ‘சமூக மோதல்களை’ உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார். சமூகக் கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள் என்கிறார். தலித் விரோத, பெண்கள் விரோத காப் பஞ்சாயத்துகள் பற்றி மவுனம் சாதிக்கிறார்.
ஆதிக்க சாதியினரின் கருத்தொற்றுமை அடிப்படையிலான முடிவுகளை ஏற்பவர்கள், ‘சமூக மோதல்களை’ எப்படி உரையாடல் மூலம் தீர்க்க முடியும்? இது, ஒடுக்கப் படுபவர்களை, வலியவர்களிடம் வணங்கிப் போ என்று உபதேசம் செய்வதில்தானே முடியும்? கும்பல் மனோ நிலை, ஏதோ ஒரு வெறியின் அடிப்படையிலான உன்மத்தம் பிடித்த கலவர கும்பல் மனோநிலைக்கு அடி பணிவது, அதைவிட மோசமாக, அதனைத் தூண்டிவிடுவது என்பதற்கு மாறாக, அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லும்படி தனிநபர் உரிமைகளை குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியோர் உரிமைகளைக் காப்பதுதான், விடாப்பிடியான அனைத்துந்தழுவிய ஜனநாயகத்தின் கடமையாகும்.
கலாச்சார/அற/தர்ம நியாய கட்டுப்பாடு கோடு ஒன்று போடப்பட்டு, கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, கோட்டின் இந்தப்பக்கம் நிற்பவர்கள் எல்லாம் தாய்/சகோதரி/மகள் என்றும், அந்தப் பக்கம் நிற்பவர்கள் வேசிகள் என்றும் சொல்வது, அப்பட்டமான ஆணாதிக்கமாகும். இந்தக்கோடு இல்லாதபோதுதான், பெண்களுக்கு சுதந்திரம் இருக்கும். ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணோ, ஒரு பாலியல் தொழிலாளியோ, ஒரு பால் மாறியவரோ, இரவானாலும் பகலானாலும் வீதிகளில் அச்சமில்லாமல் நடமாட முடிந்தால்தான், பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரம் இருப்பதாக ஆகும்.
இந்தியா முழுவதும் பெண் உரிமை சமத்துவம் தொடர்பான விவாதங்கள் பல புதிய நுழைவாயில்களைத் தாண்டி, ஆதிக்கத்தின் அடிவயிற்றில் கலக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரம், நாம் குறிப்பிட்டிருந்த தினமணி கட்டுரை பெண்களை, தொழிலாளர்களை இருண்மை நிறைந்த 19ஆம் நூற்றாண்டிற்கு அழைக்கிறது.
‘இந்தியாவில் நமது முன்னேனார்கள் பெண்ணுக்கு உரிமை தரவில்லை பெருமை தந்தார்கள். அந்தப் பெருமை பெண்ணுக்குக் கடமையுணர்வினால் வருமேயன்றி உரிமை கோஷத்தால் வந்துவிடாது. இந்த விஷயத்தில் நாம் மேலை நாடுகளைப் பின்பற்ற முடியாது. மேற்கத்திய பெண்ணியக் கோட்பாடுகள் ஆணும் பெண்ணும் சமம் என்ற அரசியல் கருத்தில் இருந்து தோன்றியவை ஆகும்.
ஆனால் ஆணும் பெண்ணும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதே இந்தியாவின் சிந்தனை. நமக்குத் தேவை பாரம்பரியமான இந்தியப் பண்பாட்டின்படியான பெண்ணின் பெருமையா அல்லது மேற்கத்திய போராட்ட அனுபவங்களில் இருந்து அச்சமூகம் பெற்று மகிழ்ந்திருக்கும் பெண் உரிமையா? இன்றைய இந்தியப் பெண்ணுக்கு தேவை உரிமைகளை அள்ளித்தரும் நவீனமல்ல. அதற்கு மாறாக பெருமையைக் கொட்டிக் கொடுக்கும் மரபுகளே ஆகும். இந்த இரண்டில் ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும் என்பதே உண்மை. இதுவரை இந்தியப் பெண்கள் பெருமையின் பக்கமே நிற்கிறார்கள் என்பதே நமக்குப் பெருமைதான்.’
இந்தப் பழைமைவாதக் கருத்துக்கு பிரிக்கால் பெண் தொழிலாளர்கள் ‘அச்சமற்ற சுதந்திரமும் உரிமைகள் உள்ள நிலைமையுமே, பெண்களுக்கும் மனிதர்களுக்கும் பெருமை’, என மிகச் சரியான பதில் தந்து விட்டார்கள். ‘நீ உன் கடமையைச் செய், பலனை எதிர் பாராதே’ என்று முதலாளி பேசும்போது, அது தொழிலாளி காதில் கீதோபதேசமாக விழாது, நரகத்திற்குத் தள்ளும் சாத்தானின் நாராசக் குரலாகவே ஒலிக்கும்.
பெண்ணாக இருக்கட்டும் தொழிலாளியாக இருக்கட்டும், அவர்களுக்குத் தேவை, ஆணாதிக்கத்தை, பெண் அடிமை முறையை, முதலாளித்துவத்தைப் பலப்படுத்துகின்ற, பெருமை பற்றிய போலியான கற்பிதங்கள் அல்ல; அவர்களுக்குத் தேவை எல்லாம் உரிமைகள், உரிமைகள், உரிமைகள் மட்டுமே. உரிமைகளைப் பெற போலிப் பெருமைகளை உதறித் தள்ளியாக வேண்டும்.
உங்கள் வேசிகளிடமிருந்து
உங்கள் மனைவிகளைப்
பிரித்து வைத்திருக்கிற,
உங்கள் காதலிகளை
உங்கள் மனைவிகளிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிற
நீங்கள்
ஒரு பெண்
வேசிகள் மனைவிகள் காதலிகள் என்ற
அடையாளங்கள் வழியாகவும்
அந்த அடையாளங்கள் தாண்டியும்
தன்னையே தான் தேடி
அச்சமில்லாமல் திரிந்தால்,
எவ்வளவு தூரம்
நடுநடுங்கிப் போகிறீர்கள்.....?
- அலோக் தன்வா