இகக மாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் தலைமையிலான உண்மை அறியும் குழு பழவேற்காட்டில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களை சந்தித்து உரையாடியபோது மீனவர்கள் சொன்ன விவரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது
“உழைப்பவர் வாழ்க்கை மலராதோ... ஒருநாள் பொழுதும் புலராதோ.... தரைமேல் பிறக்க வைத்தான். எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக் கண்ணரில் குளிக்க வைத்தான்”
என்ற வாலியின் பாடல் வரிகள் 54 ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் அர்த்தம் மாறாமல் அப்படியே இருக்கின்றது. அவர்களின் சோகம் அதிகமாகிக் கொண்டே போகின்றது. இயற்கையால் இழப்பதை விட அவர்கள் மனிதர்களால் இழப்பதே அதிகம். இலங்கைக் கடற்படையால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள், வலைகள் கைப்பற்றப்படுவதும் அழிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினரும் இடிந்தகரை மீனவர்களை, கன்னியாகுமரி மீனவர்களைத் தாக்கித் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.
தேர்தலுக்கு முந்தின நாள் காலையில் மீன் பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்த இடிந்தகரை மீனவர்களின் இரண்டு படகுகளை இடிந்த கரையில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இந்திய கடலோரக் காவல் படையினர் தடுத்து நிறுத்தி, உரிமத்தைக் காட்டச் சொல்லியுள்ளனர். பின்னர், படகின் உரிமையாளர்களான தொம்மையையும் டரூமனையும் தங்கள் காவல்துறைப் படகில் கட்டாயப்படுத்தி ஏற்றி 50 தோப்புக்கரணங்கள் போடச் சொல்லி கம்பால் அடித்துள்ளனர். அதன் பின், மீனவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பிடித்து வைத்திருந்த மீன்களையும் நண்டுகளையும் பிடுங்கிக் கொண்டு “இனிமேல் கடலுக்குள் செல்லும்போது இந்த பயம் இருக்க வேண்டும்” என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்குள் சென்று சின்னமுட்டத்தில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் படகுகளையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் மறித்து, அடையாள அட்டையைக் காட்டச் சொல்லிக் கேட்டுள்ளனர். பின்னர், இது கூடங்குளம் அணுமின்நிலையப் பகுதி. இங்கு வந்து மீன் பிடிக்கக் கூடாது என்று சொல்லி மீனவர்களை அடித்துத் தோப்புக்கரணம் போடவைத்து அவர்களிடம் இருந்த மீன்களையும் நண்டுகளையும் இறால்களையும் பறித்து கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளார்கள். இனிமேல் லைசென்ஸ் இல்லாத 14 வயது சிறுவனையெல்லாம் படகில் அழைத்து வரக் கூடாது, அப்படி வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்கள்.
மீனவக் குழந்தையின் வாழ்க்கையே வள்ளங்களில்தான் ஆரம்பிக்கிறது. அந்த மீனவர்களிடம் பிடுங்கித் தின்னும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் சட்டம் பேசுகிறார்கள்.
இப்போது மீன்பிடித் தடைக் காலம். ஆழமான பகுதிக்குச் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அன்றாடச் செலவுக்காக, வள்ளங்களில் (நாட்டுப்படகு) கரையை ஒட்டிய பகுதியில் மீன், நண்டுகளைப் பிடித்து வந்து வயிற்றைக் கழுக வேண்டிய நிலை. இது நாள் வரை இல்லாமல், இப்போது 3, 4ஆவது அணுஉலைகளுக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள பின்னணியில், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இந்தியக் கடலோரக் காவல் படை அடித்து விரட்ட ஆரம்பித்துள்ளது. நாகர்கோவிலில் சோனியாவும் மோடியும் ராமநாதபுரத்தில் ராகுல் காந்தியும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நாங்கள் தக்க நட வடிக்கை எடுப்போம் என்று கர்ஜித்து விட்டுப் போன பின்புதான் இந்தியக் கடலோரக் காவல் படை தன் கைவரிசையைக் காட்டியுள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடித்தால் அடுத்த நாட்டுக்காரன் அடிக்கிறான். அண்மைக் கடலில் மீன்பிடித்தால் சொந்தநாட்டுக்காரன் அடிக்கிறான். நாங்கள் எங்கு போக என்று ஏங்குகிறார்கள் இங்குள்ள மீனவர்கள். இது ஒரு புறம் என்றால், இன்னொரு பக்கம் மீனவர்களுக்குள்ளேயே தாக்குதல்களை உருவாக்கி, அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் காவல்துறையும். சமீபத்தில் பழவேற்காட்டில் நடந்த கலவரத்திற்கு மூல காரணமும் முழுக் காரணமும் அரசாங்கமும் காவல்துறையுமே.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி தாலுகாவில் உள்ளன சின்ன மாங்காடு, பெரிய மாங்காடு, புதுக்குப்பம் என 3 குப்பங்கள். கும்மிடிப்பூண்டித் தாலுகாவில் நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம், பத்தானிக்குப்பம், வெங்கடேச பெருமாள் நகர், கோங்கிலிக்குப்பம், வள்ளம்பேடு, சுண்ணாம்புக்குளம், பெரிய மேடு, காரைக்காடு குப்பம் என சுமார் 20 குப்பங்கள் உள்ளன. இதில் 3 குப்பங்கள் மட்டுமே ஆந்திர மாநில எல்லைக்குள் வருகின்றன. இவர்கள் எல்லாருக்குமே வாழ்வாதாரம் பழவேற்காடு ஏரியில் கிடைக்கும் மீன்களும் நண்டுகளும் இறால்களும்தான்.
சின்னமாங்காடு, பெரிய மாங்காடு, புதுக்குப்பம் இந்த மூன்று குப்பங்களும் ஏரியின் ஆழமான முகத்துவாரப் பகுதிக்கு அருகில் உள்ளன. அதனால், அவர்களுக்கு மீன் கிடைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், இந்தப் பகுதியில் உள்ள நொச்சிக்குப்பம் பாட்டைக்குப்பங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன் கிடைப்பதில் சிக்கல் வருகிறது. இவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று வலை விரித்தால் அந்த வலைகளை மாங்காடு குப்பத்து மீனவர்கள் அறுத்துவிடுகிறார்கள். அல்லது தூக்கிச் சென்று விடுகிறார்கள்.
அப்படித்தான் ஜனவரி 31 அன்று நொச்சிக்குப்பம் மீனவர்கள் வலைகளை மாங்காடு மீனவர்கள் எடுத்துச் சென்றுவிட, நொச்சிக்குப்பப் பகுதி மீனவர்கள் திருப்பாலை வனம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். வலைகளைக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுகிறார்கள். ஆனால், மீண்டும் வலைகளை எடுத்துச் சென்றது மட்டுமின்றி மாங்காடு மீனவர்கள், நொச்சிக்குப்பம் மீனவரைத் தாக்குகிறார்கள். ஆரப்பாக்கம் காவல்நிலைத்தில் புகார் தரப்படுகிறது. எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. காரணம் மாங்காடு தரப்பினரிடமிருந்து மாதம் தவறாமல் காவல்துறைக்கு மாமூல் செல்வதே என்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததைத் தொடர்ந்து பொன்னேரி தாலுகா அலுவலகத்தில், பிப்ரவரி முதல் வாரத்தில் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சின்னமாங்காடு, பெரியமாங்காடு, புதுக்குப்பம் தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிகாரிகளும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அதனால், நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் பிப்ரவரி 12 அன்று மறியல் நடத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இருதரப்பும் ஆஜர். வலைகளை எடுத்துச் சென்றதால் தங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பு என்கிறார்கள் நொச்சிக்குப்பம் மீனவர்கள். ஆனால், ரூபாய் 6 லட்சம் மாங்காடு தரப்பு நொச்சிக்குப்பம் தரப்புக்குக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கிறார்கள் அதிகாரிகள்.
அதன் பின்பும் மாங்காடு தரப்பினர் நொச்சிக்குப்பம் மீனவர்கள் சிலரை ஏப்ரல் 8 அன்று அடித்துக் காயப்படுதுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. யாரும் கைது செய்யப்படவும் இல்லை. வாழ்வாதாரப் பாதிப்பு, வலைகள் இழப்பு, அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் வேறு வழியின்றி, மீனவர் சமுதாய வழக்கப்படி மாங்காடு தரப்பினரை சண்டைக்கு அழைக்கும் வகையில் சண்டைக் கொடி ஏற்றுகிறார்கள்.
சண்டைக் கொடியேற்றிவிட்டால், எதிர்த் தரப்பு 1 மணி நேரத்திற்குள் பதில் கொடுக்க வேண்டும். ஆனால் பதில் இல்லை. அதைத் தொடர்ந்து சின்னமாங்காட்டிற்குள் நொச்சிக் குப்பம் தரப்பு மீனவர்கள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறார்கள். 4000 பேர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அங்குள்ள 9 தெருக்களில் 4 தெருக்களில் இருந்த குடிசைகள் எரித்து, காரைவீடுகளைத் தாக்கியுள்ளார்கள். விவரம் அறிந்த சின்ன மாங்காடு ஆட்கள் ஏற்கனவே ஊரைக் காலி செய்து சென்றுவிட்டிருந்தார்கள். போலீஸôர் மட்டுமே இருந்துள்ளார்கள். அவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த மீனவர்கள் போலீஸôரைத் தாக்கியுள்ளார்கள். 75 குடிசைகள், 25க்கு மேற்பட்ட படகுகள் எரிக்கப்பட்டுள்ளன. சின்ன மாங்காட்டில் உள்ள மற்ற 5 தெருக்களுக்கோ, பெரிய மாங்காடு, புதுக்குப்பம் பகுதிகளுக்குள்ளோ அவர்கள் செல்லவில்லை. எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜ÷ மற்றும் கோட்டாட்சியர் மாங்காடு பகுதிக்குள் இருந்தும் உருப்படியான தடுப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
நொச்சிக்குப்பம் தரப்பினர் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வீடுகளில் பெண்கள் மட்டுமே உள்ளார்கள். காவல்துறை நொச்சிக் குப்பம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பெண்களை அசிங்கமாகப் பேசி அவர்கள் வீட்டு ஆண்களை அழைத்து வரச் சொல்லி மிரட்டுகிறார்கள். “20க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள எங்களுக்கு வாழ்க்கையே பாழாகிறது என்று நாங்கள் பல முறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத அரசும், காவல்துறையும் இப்போது வந்து எங்கள் வீட்டு ஆண்களை விரட்டி விரட்டிக் கைது செய்கிறது. மாமூல் வாங்கிக் கொண்டு மனசாட்சியில்லாமல் செயல்பட்டு எங்களை மேலும் துன்புறுத்துகிறார்கள்” என்று நொச்சிக்குப்பம் பகுதிப் பெண்கள் குமுறுகிறார்கள்.
தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி நொச்சிக்குப்பம் தரப்பைச் சேர்ந்த சுமார் 10000 வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டார்கள். அதிமுக அரசு தங்களுக்கு நிறைய செய்வார்கள் என்ற நம்பிக்கையில். சின்ன மாங்காடு, பெரிய மாங்காடு, புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அரசோ கலவரத்தில் பாதிக்கப்பட்ட படகு ஒவ்வொன்றுக்கும் ரூ.4500ம் எரிந்த குடிசைகளுக்கு தலா ரூ.3500ம், பாதிப்படைந்த வீடுகளுக்கு தலா ரூ.2000மும் மட்டுமே வழங்கியுள்ளது. தேர்தல் சமயம் என்பதால் நிறைய தரமுடியாது. தேர்தல் முடிந்தவுடன் நல்ல நிவாரணம் தரப்படும் என்று சொல்லியுள்ளார்களாம். இகக (மாலெ) கட்சியினரைத் தவிர இதுவரை எந்தவொரு கட்சியும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிடவில்லை.
பிரச்சனை இரு தரப்பு தமிழக மீனவர்களுக்கிடையேதான். ஆனால், மக்களுக்கிடையே உள்ள பிரிவினையைப் பயன்படுத்தி, காசு பார்க்கும் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் ஊடகங்களும் ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் என்று ஊதிப் பெருக்கி இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். வெறும் 3 குப்பங்கள் மட்டுமே ஆந்திர எல்லைக்குள் வருகின்றன. அதிலும் அதிகம் வசிப்பவர்கள் தமிழர்கள். பழவேற்காடு ஏரியில் முக்கால் பாகம் ஆந்திர எல்லைக்குள்ளும் கால் பாகம் மட்டுமே தமிழக எல்லைக்குள்ளும் இருக்கிறதாம். ஆந்திர எல்லைக்குள் அதிகமாக இருக்கும் ஏரியில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்களுக்கிடையே தகராறு.
பொதுவாக சாதாரண காலங்களில் மீன்கள் அதிகம் உள்ள காலங்களில் இரண்டு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படுவதில்லை. இரு தரப்புக்குள்ளும் திருமண சம்பந்தம் செய்து கொள்கிறார்கள். கோடை காலத்தில், ஏப்ரல், மே, ஜ÷ன் மாதங்களில் மாங்காடு குப்பங்களுக்கு அருகில் உள்ள முகத்துவாரத்தில் மட்டுமே மீன்கள் கிடைக்கும். அதனால், அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.5000 பார்த்து விடுவார்கள். நொச்சித் தரப்புக்கோ மீன் விளைச்சல் இல்லாததால் ஒரு நாளைக்கு ரூ.1000 கிடைப்பதே அரிது. மேலும் மாங்காடு தரப்பினர் விசைப் படகு வைத்துள்ளார்கள். நொச்சிக்குப்பம் பகுதியினரிடம் பாய்மரப் படகு மட்டுமே இருக்கிறது. கடந்த காலங்களில் நாள் முறை வைத்து மீன்கள் பிடித்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வந்துள்ளார்கள். ஆனால், இப்போது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்களுக்குக் காசு கிடைக்கிறது என்பதற்காக, பிரச்சனைக்குத் தீ மூட்டி எரியவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள்.
பழவேற்காடு மட்டுமல்ல பொதுவாகவே மீனவர் கிராமங்களுக்கிடையே மோதல் என் பது வெளியே தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ராமநாதபுரம், தூத்துக்குடி, பெரியதாழை, மணப்பாடு பகுதி மீனவர்களுக்கிடையே எல்லை பிரச்சனை தகராறுகள் வரும். சமாதானமாகும். இப்போதும் கூட சுருக்குமடி வலை, இரட்டை மடி இழுவலைப் பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
விசைப்படகு வைத்திருப்பவர்கள் ஆழ் கடலுக்குள் செல்ல முடியும். அதனால், நாட்டுப் படகு மீனவர்கள் சுருக்கு மடி வலையை விரித்து மொத்த மீன்களையும் அள்ளி விடுகிறார்கள். இந்த வலையில் மீன் குஞ்சுகள் கூட தப்பாது. இதனால் மீன்கள் இனப் பெருக்கமே பாதிக்கும். ஆகையால் விசைப்படகு மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதே வேளை அவர்கள் ஆழ்கடலுக்குள் கண்ணிகள் நெருக்கமாக உள்ள இரட்டை மடி இழுவலையைப் போட்டு மீன் பிடிக்கிறார்கள். இதுவும் சுருக்குமடி போல, மீன் வளத்தை முற்றிலும் அழித்துவிடும். அதோடு கூட்டமாக வாழும் கணவாய் பார்களை வேரோடு அழித்துவிடும். எனவே சுருக்கு மடி வலையும், இரட்டை மடி வலையும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும், காசு பார்க்க இவற்றைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், வலை அறுப்பு, வலை பறிப்பு, தகராறுகள் நடக்கின்றன.
இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையே நடக்கும் தகராறுக்கு ஒரு வகையில் இந்த இரட்டை மடி இழு வலை விரிப்பும் காரணம் என்கிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நிரபராதி மீனவர்களை விடுவிக்கும் அமைப்பின் தமிழகப் பிரதிநிதி அருளானந்தம். தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால், பாக் ஜலசந்தி கடல் வாழ் உயிரினங்கள் இடம்பெயரும் சூழல் உருவாகிறது என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல் துறை ஆராய்ச்சியாளர் சூசை அனந்தன்.
இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணுஉலை, சேது சமுத்திரத் திட்டம், தாது மணல் தொழிற்சாலை என்று எல்லாவற்றையும் அமல்படுத்தி கடைசியில் கடலை கட்டமண்ணாக்கப் பார்க்கிறார்கள்.
பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்டத்தின் நிரோடி வரை 1078 கி.மீ நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில் மீன் வளத்தை நம்பித்தான் மீனவர்கள் இருக்கிறார்கள். கடல் நீரோட்டத்திற்கேற்ப நகரும் படகே அவர்களின் அன்றையத் தொழிலைத் தீர்மானிக்கும். ஆனால், சிலர் காசுக்காக தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்து மீன் வளத்தையே அழிக்கிறார்கள்.
இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின், அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால், தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை கறாராகத் தடுப்பதற்கோ மீன் வளம் குறைவாக உள்ள பகுதியினரும் மீன் வளம் அதிகம் உள்ள பகுதியினரும் மோதிக் கொள்ளாமல் முறை வைத்து மீன்பிடிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பிரச்சனை ஆறாமல் இருப்பதையே ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் விரும்புகிறார்கள். இலங்கைக் கடற்படையால்தான் மீனவர் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகிறது என்று மட்டும் சொல்லி பொறுப்பில் இருந்து நழுவுகிறார்கள்.
அரபிக் கடலில் மீன்பிடிக்கும் குஜராத் டையு டாமன் மீனவர்கள் பாகிஸ்தான் கடல்படையால் கைது செய்யப்படுகிறார்கள். 232 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் உள்ளார்கள். பாகிஸ்தான் கடல்படை 800 இந்திய மீனவர் படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ளது என தேசிய மீன்பிடித் தொழிலாளர் மன்றம் (The National Fishworkers Forum) கூறுகிறது. இந்திய வெளியுறத்துறை இணை அமைச்சர் இ.அகமதியும் இதை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். பாகிஸ்தானின் 139 மீனவர்களை, 200 படகுகளை இந்திய கடற்படை சிறைப் பிடித்துள்ளது என்கிறார்கள்.