COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, May 15, 2014

பாலியல் வன்புணர்ச்சியின் உட்கூறுகளும் அதை அடுத்த உடனடி நிகழ்வுகளும்

தூக்கமில்லாத இரண்டு நாட்கள் வேகமாக கழிந்துவிட்டன. எனக்கு தெரிந்த அந்த பெண், உற்சாகத்துடன், கண்கள் விரிய வலம்வரும் கல்லூரி முதலாமாண்டு மாணவியான அவர், பாலியல் வன்கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டுள்ளார். அநீதிக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலியல் வன்முறைக்கு எதிராக நானும் அந்தப் பெண்ணும் பல பேரணிகளில் பங்கேற்றிருக்கிறோம். பல மாதங்களுக்கு முன் கோல்கத்தாவிலுள்ள இந்தியன் காபி ஹவுசுக்கு எதிரில் அவரைச் சந்தித்தபோது, தீவிர இடதுசாரி மாணவர் அமைப்பான அய்சாவின் செயல் வீரராக அவர் இருந்தார். அதற்குப் பின் பல நிகழ்ச்சிகளில் நான் அவருடன் உரையாடியிருக்கிறேன். பாலியல் வன்புணர்ச்சி நடைபெற்ற அன்று கூட நரேந்திர மோடியை முன்நிறுத்தும் கார்ப்பரேட் - மதவெறி தாக்குதலுக்கு எதிரான மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வந்திருக்கிறார். அடுத்த நாள் மற்றுமொரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அந்த இரவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

விடியும் வரையிலான அன்றைய இரவு

நான் தூங்குவதற்கு தலை சாய்கையில் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தை நண்பர் ஒருவர் எனக்கு தெரிவித்தது போலவே என் பெண்கள் இயக்க தோழியான சந்திரஸ்மிதாவிற்கும் தெரிவித்திருந்தார். அந்தப் பெண் தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே வடக்கு கொல்கத்தா வீதியில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டதாகவும், அந்த நபர் அங்கிருந்து ஓடிய பின்பு அந்தப் பெண் தன் விடுதிக்கு வந்து சக மாணவிகளிடம் இது பற்றி சொன்னதாகவும் எனது நண்பர் கூறினார். இது விசயத்தில் கால தாமதம் கூடாது என்பதாலும், தடயங்கள் அழிந்துவிடக் கூடாது என்பதாலும் நானும், சந்திரஸ்மிதாவும் உடனே புறப்பட்டு விடுதிக்குச் சென்றோம். எங்களோடு இணைத்துக்கொள்ள முடிந்தவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டோம். இரவு 1.30மணிக்கு விடுதிக்கு சென்றோம். விடுதி மாணவிகள் அச்சத்திலும் கோபத்திலும் இருந்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசும்போது, அந்தக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தோடு கூடவே தன் குடும்பம் மற்றும் சுற்றத்தார் சந்திக்கக் கூடிய சமூக புறக்கணிப்பு மற்றும் பாதுகாப்பு, தன் படிப்புக்கு வரும் இடையூறுகள் பற்றி கவலை தெரிவித்தார். அவரை தனியாக உட்கார வைத்து நடந்த விசயங்களை நிதானமாக நினைவில் இருக்கும் அனைத்தையும் எழுத சொன்னோம். பிறகு அருகிலுள்ள நண்பர், டாக்டர் ஒருவரின் காரில் இரவு 2.30 மணிக்கு அம்ஹர்ஸ்ட் தெரு காவல் நிலையம் சென்றோம். அங்கு எழுத்துபூர்வ புகாரை மாணவி கொடுத்தார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பாக 1. முதல் தகவல் அறிக்கை உடனடியாக பதியப் பட வேண்டும். 2. உடனே மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 3. குற்றவாளி அடையாளம் காணப்பட்டு பிடிக்கப்பட வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றையும் நாங்கள் காவல் நிலையத்தில் கொடுத்தோம். மாணவியின் பாதுகாப்பையும் விடுதியில் தங்கியுள்ளோரின் பாதுகாப்பையும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

காவல் நிலைய பொறுப்பு அதிகாரி வந்து சேர 2 மணி நேரமானது. பலர் அந்தப் பெண்ணை திரும்பத் திரும்ப விசாரித்தார்கள். ஒவ்வொருவருக்கும் அதே பதிலை சொல்ல வேண்டிய துயரம் அவருக்கு நேர்ந்தது. இறுதியாக காலை 5 மணிக்கு அவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் விடுதி தோழி ஒருவரும் நானும் காவல்துறை ஜீப்பில் உடன் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே காத்திருந்து காத்திருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எங்கேயோ இருந்த அந்தப் பணி நேரத்திற்கான ஆண் மருத்துவர் (ட்யூட்டி டாக்டர்) வந்தார். ஒரு செவிலியர், இரு பயிற்சி மருத்துவர்கள், ஒரு பெண் காவலர் முன்னிலையில் அவர் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்தார். என்னையோ அல்லது விடுதி மாணவிகளையோ உள்ளே அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நம்பகமானவர்களை அனுமதிக்க வேண்டுமென்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் குறிப்பான விதிகள் இருந்தும், எங்களை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ - சட்ட கவனிப்பு தரப்படும்போது நம்பகமானவர் உடனிருக்க வேண்டுமென அமைச்சக விதிகள் கட்டாயமாக்கியிருக்கிறது. காவல்துறையினர் இருக்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறது. 10 நிமிடத்திற்குள்ளாகவே மருத்துவ பரிசோதனை முடிந்துவிட்டது.

நாங்கள் காலையில் போக அனுமதிக்கப்படுவதற்குள் மிகவும் சோர்வுக்குள்ளான ஒரு இரவை கடந்திருந்தோம். காவல்துறையினர் மீண்டும் மாலை அந்தப் பெண் தலைமையகம் வந்து குற்றவாளியின் படம் வரைவதற்கு உதவ வேண்டும் என்றனர்.

பாலியல் புகார் அளிக்க, உயிர் பிழைத்தவரை கவனிக்க, புகார் மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை என அனைத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் கொண்ட 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மய்யங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான அளவு வேண்டும், அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல் அனைத்து தேவையான விசயங்களையும் ஒரே இடத்தில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என பெண்கள் இயக்கத்தில் நாம் வைக்கும் கோரிக்கை எவ்வளவு நிதர்சனமானது என்பது அன்று இரவு 8 மணி நேரம் நடந்த கடினமான சோதனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. மருத்துவப் பயிற்சியாளர்கள் பாதி தூக்கத்தில் எழுப்பி விட்டார்களே என அக்கறையும் விருப்பமும் அற்று செயல்பட்டனர். எல்லாவற்றையும் கடந்து தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து எல்லோரிடமும் விளக்கி வந்த அந்தப் பெண்ணின் அமைதியான பண்பையும், துணிவையும் நான் பாராட்டுகிறேன்.

அந்தச் சம்பவம்

ஏப்ரல் 28 இரவு பாதிக்கப்பட்ட பெண் தன் உறவினர் வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு தனது விடுதிக்குள் நுழைய முற்படும் போது அந்தச் சம்பவம் நடந்தது. சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவரை அழைக்க இது வழமையான ஆண்களின் பாலியல் சீண்டல் என உதாசீனப்படுத்தியிருக்கிறார். பிறகு குறிப்பாக தனது தாயார் அனுப்பியதாகவும், தான் மருத்துவர் எனவும், தான் செய்யப் போகிற இழிசெயலை மறைத்தும் அந்தப் பெண்ணுக்கு உள்ள உடல்ரீதியான மருத்துவ பிரச்சனையை அறிந்தவராகவும், நம்பிக்கைக்குரியவராக நடித்து அந்த நபர் பேசியிருக்கிறார். தனக்கு அவசர மருத்துவ உதவி தேவையில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் சொல்லியும் அவர் வற்புறுத்தி சில மாத்திரைகளை பரிந்துரைப்பதாகவும் கூறியிருக்கிறார். விடுதிக்கு எதிர்புறம் அழைத்ததற்கு தயக்கத்துடன் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உடலை பரிசோதிக்க வேண்டும் என சொல்லி அந்த நபர் முற்பட்டபோது மறுத்து திரும்ப முற்பட்டபோதுதான் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறான். அவர் உடலை சீண்டி ஆடைகளை அவிழ்த்து சில நிமிடங்களில் திரும்பத் திரும்ப வன்புணர்ச்சி செய்திருக்கிறான். அவன் கையில் பை ஒன்றும் இருந்திருக்கிறது. அதில் ஆயுதங்கள் இருக்கலாம் என பெண் அச்சப்பட்டிருக்கிறார். திடகாத்திரமான அவனை மெலிந்த அந்தப் பெண் தள்ளிவிட்டு எழும்போது அவன் அந்த இடத்தில் இருந்து ஓடிப்போய் விட்டான். பிறகு ஆடையை சரி செய்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண் விடுதிக்கு வந்து தோழிகளிடம் நடந்தவற்றை சொன்னார்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தின. பேரணி, சாலை மறியல் போன்ற போராட்டங்களும் நடத்தப்பட்டன. சம்பவம் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. குற்றவாளியின் உத்தேச வரைபடத்தை பொதுவில் வெளியிட வேண்டும் எனவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனையையும், மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு முழுப்பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த கோரிக்கை விடப்பட்டது. இது சம்பந்தமாக மேற்கு வங்க முதல்வர் அறிக்கை தர வேண்டும் எனக் கோரும்பொழுதே ஆத்திரமுற்ற மாணவர்கள் குற்றவாளியைப் பிடிக்க 72 மணி நேர கெடு விதித்தனர்.

மருத்துவ சோதனை, பத்திரிகை செய்திகள், எப்போதைக்குமான சந்தேகங்கள்

மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் ஒரு சில கேள்விகளை கேட்டுவிட்டு பெண் உறுப்பிலிருந்து திரவம் எடுத்து (வெஜினல் ஸ்வேப்) போலீசாரிடம் பரிசோதனைக்கு கொடுத்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. (பக்கம் 23 - 36) முக்கியமாக ஆய்வுக்குரிய பகுதியின் உரோமங்கள் (ப்யூபிக் ஹேர்) சேகரிக்கப்படவில்லை. மார்ச் 19 வழி காட்டும் நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு தேவையற்ற (இரட்டை விரல் சோதனை) விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே சோதனை செய்த மருத்துவருக்கு நெறிமுறைகள் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது என்றே தெரிகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் சிறு துணுக்குகள் இருந்தால் அவை சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும். இரட்டை விரல் சோதனை, முன்னர் அவர் உடல் உறவில் ஈடுபட்டிருந்தாரா போன்ற விபரங்கள் தேவையற்றவை, கூடாது என நெறிமுறையில் சொல்லப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறுநீர் சோதனை, ஹெச்அய்வி சோதனை செய்யப்படவில்லை.

குற்றவாளியின் விரல் ரேகை தடயங்கள் உடலில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட பெண், மருத்துவரிடம் சொன்னதற்கு அவர் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று பதில் அளித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநலம் பேண சிகிச்சை அளிக்கப்படவில்லை. பெண்ணின் மருத்துவச் சான்றுகளை நெறிமுறைகள் படியான உரிய படிவத்திலும் நிரப்பவில்லை (பக்கம் 62). மருத்துவமனையில் வழிமுறைகளின் நகலோ அல்லது உரிய படிவமோ இல்லை என்றே தெரியவருகிறது.

இரவு 9.30 மணிக்கு கொல்கத்தா நகர வீதியில் நடந்த இந்தச் சம்பவம் மறுநாள் தலைப்புச் செய்திக்கு உரியதாக பத்திரிகைகள் கருதவில்லை. மனம்போன போக்கில் செய்திகளை வெளியிட்டன. பெண்ணின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என  ஒரு பத்திரிகையும், மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்புணர்ச்சி நிரூபிக்கப்படவில்லை என ஒரு பத்திரிகையும் கருத்து தெரிவித்திருந்தன. பத்திரிகைகளே நீதிபதிகளாக செயல்பட்டன.

எல்லோரிடமும் இருக்கும், பாலியல் வன்புணர்ச்சி மருத்துவ சோதனையில் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கருத்தே பத்திரிகைகளிடமும் உள்ளது. மாறாக பாலியல் வன்புணர்ச்சி விசயத்தில் நீதிமன்றத்தில் பல்வேறு சான்றுகளில் மருத்துவ சோதனை அறிக்கையும் ஒன்று என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. இன்னும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவ - சட்ட பரிசோதனை முடிவடையவில்லை. அவர் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை முடிந்து அறிக்கை வரவில்லை.

அவரது ஆடை இன்னும் சோதனை செய்யப்படவில்லை. ஆனால் பத்திரிகைகள் போலீசார் சொன்னதாக கூறி பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்றும், நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தெருவில் பலமுறை எப்படி வன்புணர்ச்சியில் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் ஆணாதிக்க எண்ணங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக அவர்கள் ஹிந்திப் படங்களில் நீண்ட நேரம் காண்பிக்கப்படும் பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை இந்நிகழ்வுடன் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். நாம் சமூகத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் வன்புணர்ச்சி நடைபெற முடியும் என்பதைப் பார்த்தோம்.

பாலியல் வன்புணர்ச்சி பெண்ணின் உடல் மீது அத்துமீறுவதாகும் என்பதை நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இது தினமும், நிமிடங்களில், நொடிகளில் நடைபெறுகிறது. மூடிய அறைக்குள், திருமணமானவர்களின் படுக்கையறையில், பரபரப்பான நாளில் கல்லூரி சங்க அலுவலகத்தில், வீட்டு வேலைக்கு பெண்கள் செல்லும் பொது வீதிகளில், மூடிக்கிடக்கும் ஆலைக்குள் பெண் பத்திரிகையாளர் செய்தி சேகரிக்க செல்லும்போது, பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் வயல்வெளிகளில், கலவரங்கள், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், போர் போன்றவை நடைபெறும்போது, காவல்துறை அல்லது ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது, ஓடிக்கொண்டிருக்கும் பேருந்து அல்லது காரில், உயர் குடியினர் கேளிக்கை நடக்கும்போது மின் தூக்கிகளில், பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் அறைக்கு வெளியே உட்கார்ந்திருக்கும்போது ஆசிரம அறைகளுக்குள் என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. எனவே சம்பவம் நடைபெற முடியாத தனியார் அல்லது பொது இடம் என்று எதுவுமில்லை.


நம் முகத்தில் அறையும் கேள்விகள்

கொல்கத்தா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் காரணமாக மாணவர்கள் நகருக்கு வந்து குவிகிறார்கள். ஆண்/பெண் என இரு பாலருக்குமே போதிய பாதுகாப்பான, வசதியான விடுதிகள் கிடையாது. ‘விடுதி’ பெரும் வியாபாரம் ஆகிவிட்டது. காசு கொடுத்து விருந்தாளியாக தங்குவது என்ற முறை பெருகி விட்டது. ஆனால் இவை எந்த சட்ட திட்டப்படியும் செயல்படுவதில்லை. கூடுதலான கட்டணங்களை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் கூட சம்பந்தப்பட்ட பெண்ணை, தங்களை விசாரணையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் விடுதி நிர்வாகம் காவல்நிலையம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி அவர் காவல் நிலையம் சென்றால் விடுதி பெயர் கெட்டுவிடும் என்றும், அவருடன் அறையை பகிர்ந்து கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள் என்றும், தனது வியாபாரம் பாதிக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி அந்தப் பெண் புகார் கொடுத்ததால், பெண்ணின் தந்தையிடம் விடுதியை காலி பண்ணக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறார்கள். சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் மனமுடைந்து போயிருக்கிறார். தற்காலிகமாக விடுதியை அடைத்து விட்டார்கள். இது பற்றியும் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

நான் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பின்னால்தான் அமர்ந்திருந்தேன். இரண்டு மருத்துவ பயிற்சியாளர்கள் தூக்கத்தில் தம்மை தொந்தரவு செய்துவிட்டார்களே என கொட்டாவி விட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு செவிலியர் வந்து பக்கத்து அறையில் ஒரு குழந்தை இறந்து விட்டது என்று அவர்களிடம் சொல்லும்போது கூட அவர்களிடம் எவ்வித அசைவும் இல்லை.

காவல்துறை அதிகாரி திரும்பத்திரும்ப சொல்லியும் மருத்துவர் வராததால், அவர் தாமாகவே மருத்துவர் அறைக்கு சென்று அவரை கூட்டி வந்தார். அவ்வளவு சீக்கிரமாக பரிசோதித்த பிறகு அதை படிவத்தில் குறிப்பிட படிவத்தை நீண்ட நேரம் தேடினார்கள். உரிய படிவம் எது என்று யாருக்கும் தெரியவில்லை. இறுதியில் கிடைத்துவிட்டதாகச் சொல்லி தவறான படிவத்தில் எல்லாம் குறிக்கப்பட்டது. எதுவும் தெரியாத மருத்துவர், பயிற்சியாளர்களை கடிந்து கொண்டார். இதுதான் கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த அனுபவம்.

இரண்டாவது கேள்வி காவல்துறை அதிகாரிகள் தொடர்பானது. அதிலும் குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த செய்தி தொடர்பானது. நீதிபதி வர்மா கமிசன் அறிக்கைக்குப் பிறகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டும் நெறிமுறைகள் தெளிவாக கீழ் கண்டவற்றை சொல்கின்றன. ‘நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் விதத்தில் எந்த ஆலோசனையும் வழங்கப்படக் கூடாது.

பாதிக்கப்பட்டவர் மீது இரக்கமற்ற தன்மையை உருவாக்கும் விதம் தீர்ப்புரை குறிப்புகள் (ஜட்ஜ்மெண்டல் ரிமார்க்ஸ்) எதுவும் சொல்லப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கையோ அல்லது நடவடிக்கையின்மையோ நடந்த சம்பவத்திற்கு எவ்விதத்திலும் காரணமில்லை என்ற முக்கிய செய்தி பகரப்பட வேண்டும்’

காவல்துறை இணை ஆணையாளர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் சந்தேகத்திற்கிடமானது என்றார். இதைத்தான் காவல்துறை எப்போதுமே செய்து வருகிறது. எது மாதிரியான சந்தேகத்திற்கிடமான கேள்விகள் அவை?

தெரியாத நபருடன் ஏன் அவர் செல்ல வேண்டும்? தாக்குதல் நடக்கும்போது அவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவோ கூச்சலிடவோ இல்லை? தெரியாத நபருடன்  அந்தப் பெண் சந்திற்குள் சென்றார் என்றால் அது குற்றமாகவோ, பாலியல் வன்புணர்ச்சியாகவோ கருதப்பட முடியாது. ஆனால் நடந்தவற்றை பாதிக்கப்பட்டவர் சொல்லியிருக்கிறார். அவர்தான் மிகவும் நம்பத் தகுந்த சாட்சி. அவர் சொல்வது உண்மை என எனக்கும், விடுதியிலுள்ள மாணவர்கள் அனைவர்க்கும் படுகிறது. கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரு படித்தான பதிலையே அவர் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறார்.

அப்படியிருக்க காவல்துறை நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு யாரைக் காப்பாற்ற? முதலமைச்சர் மாநிலம் பற்றி அடிக்கும் தம்பட்டங்களுக்கு ஆதரவானதா? காவல்துறையின் விசாரணை நடவடிக்கைகள் பற்றி குற்றவாளியின் வரையப்பட்ட படத்தை பொதுமக்களுக்கு வெளியிடுவது பற்றி அவர் ஏன் மவுனம் காக்க வேண்டும்? உயிர்பிழைத்த இளம் பெண்ணை களங்கப்படுத்துவதில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்?

இந்த நேரத்தில், பார்க் ஸ்ட்ரீட் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்ததை, ஜகச்சாவில் வீட்டு வேலை செய்யும் பெண் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி புகாரைக் கூட பதிவு செய்ய படாதபாடு பட்டதை, கட்டோவில் தன் மகள் கண் முன்பே இரயிலில் இழுத்து சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை அமைதி காக்க சொன்னதை, எப்படி அதிகார பலம் கொண்ட முதலமைச்சரும் அவர் சகாக்களும் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் கூட்டியே தயாரிக்கப்பட்டவை என்று சொல்லி புறந்தள்ளுவதை எல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

பார்க் ஸ்ட்ரீட் நிகழ்வில் பாதிக்கப்பட்டவரை நாடாளுமன்ற உறுப்பினர் கேவலமாக நடத்தியதை, தொடர் நிகழ்வுகள் நடந்த பின்னரும் ஒருவர் கூட தண்டிக்கப் படாததை, பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள்  மீது பழி சொல்லப்படுவதை, பாதிக்கப்பட்டவர்களின் வாய் அடைக்கப்படுவதை, மாநிலத்தை விட்டே வெளியே துரத்தப்படுவதை எல்லாம் கூட நினைத்துப் பார்க்கிறேன்.

குற்றமிழைப்பவர்களுக்கு இப்படி ஒரு பாதுகாப்பு இருப்பது மேற்குவங்கத்தில் பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் பெருகி வருவதற்கான காரணமாக இருக்கக் கூடும். அதனால்தான் இரவு 9.30 மணிக்கு கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. புகார் கொடுத்தவர் பொய் சொல்கிறார் என நிரூபிப்பதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. இது ஒரு வகைமாதிரியை குறிக்கிறது.

இங்குதான், அரசியல் விழிப்புணர்வு பெற்ற, தைரியமான இந்த இளம் பெண் மாணவர் தோழர்களையும், பெண்கள் இயக்கத்தவரையும் உடனடியாக தனக்கு ஆதரவாக திரட்டிக் கொள்ளும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஆனாலும் பல்வேறு தடைகள், முத்திரை குத்தப்படுதல் மற்றும் அவதூறு நடவடிக்கைகள் ஆகியவற்றை கடக்க வேண்டியுள்ளது. நீதி எப்போதும் போலவே கைவரப் பெறாமல் உள்ளது. அவரது தந்தை நீதி கோருகிறார். ஆனால் இப்போது தண்டனை விகிதத்தைப் பார்க்கும்போது நீதி கிடைக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கையின்மையே உள்ளது.

மருத்துவ - சட்ட உள்கட்டமைப்பு இல்லாத தொலைதூர இடங்களில் சமூகத்தின் கீழ்நிலை மக்கள் இதுபோன்ற விசயங்களை சந்திக்கும்போது நீதி என்பது அவர்களுக்கு லாட்டரி அடிப்பது போலானதுதான்.

ஆனால் இந்தப் பெண் உறுதியாக இருக்கிறார். நிர்ப்பந்தம் எங்கிருந்து வந்தாலும் அவர் தலை குனிவதாய் இல்லை. அவரின் அரசியல் கடப்பாடு இதில் வெளிப்படுகிறது. நாம் கூட்டாக பேரணிகளில் கலந்து கொள்ளும்போது நாம் முழக்கமிடுவது போல நாம் போராடுவோம், நாம் வெற்றி பெறுவோம் என்று சொல்ல அவரைச் சுற்றி தீர்மானகரமான மனிதர்கள் பலர் உண்டு.

(கட்டுரையாளர் ஆராய்ச்சியாளர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டக் குழு உறுப்பினர். தமிழில்: தேசிகன்)

Search