COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, May 15, 2014

வடக்குமாங்குடியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்கிறோம்

கடலூர் மாவட்டம் வடக்குமாங்குடியில் தலித் மக்கள் தாக்கப்பட்டதை ஒட்டி, சம்பவ இடத்துக்குச் சென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) குழு திரட்டிய விவரங்கள் அடிப்படையில் 03.05.2014 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் வெளியிட்ட பத்திரிகை செய்தி

மக்களவைத் தேர்தல் நடந்த 24.04.2014 அன்றும் அதற்கடுத்த நாட்களிலும் சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களது குடியிருப்புகள், மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்களை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) குழுவொன்று கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் தாக்குதலுக்கு ஆளான கிராமங்களுக்குச் சென்று வந்தது. இக்குழுவில் கடலூர் மாவட்டச் செயலாளர் சி.அம்மையப்பன், மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் புலவேந்திரன், ராஜசங்கர், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் காட்டுமன்னார் கோயில் ஒன்றிய அமைப்பாளர் செல்வராஜ், கட்சியின் விழுப்புரம் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கணேசன், தஞ்சை - நாகை மாவட்டச் செயலாளர் இளங்கோவன், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

வடக்குமாங்குடி தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்திக்கவிடாமல் மாலெ கட்சியின் குழுவை காவல்துறை திருப்பி அனுப்பிவிட்ட போதிலும் தாக்குதலுக்கு ஆளான வடக்கு மாங்குடி கிராமத்து மக்களை சந்தித்தது. சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து ஆறுதல் கூறியது. மேலும் பலதரப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், வன்னியர் சாதி பிரமுகர்கள், காவல்துறையினர் ஆகியோரை சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விவரங்களைத் திரட்டியது.

தேர்தல் நடந்த 24.04.2014 அன்றும் அதற்கு அடுத்த நாட்களிலும் வடக்குமாங்குடி, கோதண்டவிளாகம், விளாகம், ஆண்டிப்பாளையம், திருநெடுஞ்சேரி ஆகிய கிராமங்களில் தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், பாமக என்று சொல்லிக் கொள்வோர் பயங்கர ஆயுதங்களுடன் தலித் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எண்ணிக்கையில் குறைவாக உள்ள வடக்குமாங்குடி தலித் கிராமத்தில் மட்டும் பெண்கள், வயதானவர்கள் உட்பட 8 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களுள் பாப்பா(65) என்பவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதல்கள் அனைத்தும் தலித்துகளை வாக்களிக்க விடாமல் தடுப்பது. தலித்துகளது வாக்குகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக பாமக, அதிமுக கட்சிகளுக்கு ஆதரவாக பதிவு செய்வது. ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்த தலித்துகளை பழி தீர்த்துக் கொள்வது ஆகிய காரணங்களுக்காக நடைபெற்றுள்ளன.

கடந்த 3 தேர்தல்களாக விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருவதை ஒட்டி தொகுதியிலுள்ள தலித்துகள் அரசியல் வேட்கையுடன் ஒவ்வொரு தேர்தலிலும் அணி திரண்டு வருகின்றனர். தலித்துகளின் அரசியல் அணிதிரட்டலை முறியடிக்கும் நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர்களை உசுப்பிவிடுவதும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த தேர்தலிலும் தேர்தல் வன்முறை நடத்தப்பட்டுள்ளது.    
   
தருமபுரி, மரக்காணம் சம்பவங்களின் பின்னணியில் பாமக மூர்க்கத்தனமான தலித் எதிர்ப்பும் வெறித்தனமான சொந்த சாதி அணி திரட்டலையும் செய்து வருகிறது. தருமபுரியில் அன்புமணி ராமதாசை வெற்றி பெறச் செய்வதும் சிதம்பரத்தில் திருமாவளவனை தோற்கடிக்கச் செய்வதுமே இந்த தேர்தலில் பாமகவின் அறிவிக்கப்படாத ஒரே திட்டமாக இருந்துள்ளது. அவசர அவசரமாக, காங்கிரசிலிருந்த மணி ரத்தினத்தை கட்சியில் சேர்த்து வேட்பாளராக அறிவித்த ஆர்வமும் அதை அடுத்து உக்கிரமாக தேர்தலில் இறங்கிய காடுவெட்டி குரு உள்ளிட்ட பாமக தலைவர்களின் செயலும் இதை உறுதி செய்கின்றன. இந்தப் பின்னணியிலேயே சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்துள்ளன.

இந்தப் பின்னணியில், தொகுதியிலுள்ள பதட்டமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தலித்துகளின் வாக்குரிமையை பாதுகாக்கவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும், சாதி ஆதிக்க சக்ததிகளின் தாக்குதலிலிருந்து தலித்துகளைப் பாதுகாக்கவும் தேர்தல் ஆணையமும் தொகுதியின் தேர்தல் அதிகாரியும் தவறிவிட்டனர். தேர்தல் நிர்வாகத்தின் பொறுப்பற்ற முன்னெச்சரிக்கையில்லாத நடவடிக்கையே இந்த தாக்குதலுக்கும் இழப்புகளுக்கும் காரணம்.

ஈச்சம்பூண்டி, வேலப்பூண்டியிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. பண்ணையார் போல் செயல்பட்டு வரும் ஈச்சம்பூண்டி கிராமத்தின் தற்போதைய (தலித்) ஊராட்சித் தலைவர் பரமேசுவரனும் அவரது ஆதரவாளர்களும் இன்னொரு பிரிவு தலித் மக்களை தாக்கியுள்ளனர். அவர்கள் பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்துக்கு வாக்களித்தார்கள் என்ற காரணத்துக்காக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு தாக்குதல் நடத்தியது தலித் ஊராட்சித் தலைவரே என்றாலும் ஒரு பிரிவு தலித்துகள் வாக்குகள் விடுதலை சிறுத்தைகளுக்கு போகாமல் தடுத்து, பாமகவுக்கு வாக்களிக்க வைக்கும் நோக்கத்துடன் பாமக செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. தாக்கப்பட்ட தலித்துகள் பற்றி கவலைப்படாத ராமதாஸ் கைது செய்யப்பட்ட தனது கட்சிக்காரர்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டு அறிக்கை விட்டிருப்பதிலிருந்து இது உறுதியாகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் பிறகும் தலித்துகள் மீதான தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சத்திலும் பதட்டத்திலும் பெரும்பாலான தலித் கிராமங்கள் உள்ளன. நடந்த வன்கொடுமைத் தாக்குதல் குறித்து அதிமுக தலைவர் ஜெயலலிதாவோ, விடுதலை சிறுத்தை கூட்டணித் தலைவர் கருணாநிதியோ, வைகோ விஜயகாந்த் போன்ற தலைவர்களோ பாஜக போன்ற கட்சிகளோ தலித்துகள் மீதான இந்த வன்கொடுமை தாக்குதல்களை கண்டிக்கவில்லை. இக்கட்சிகளும் தலைவர்களும் இந்த வன்கொடுமை  செயல்களை ஆதரிப்பதாகவே தெரிகிறது.

மாவட்ட நிர்வாகம், மாநில அரசாங்கம், தேர்தல் ஆணையம் ஆகியவை உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, இழப்பீடு, வழங்குவதோடு மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறா வண்ணம் தடுத்திட வேண்டும். தலித் மக்கள் அச்சமின்றி தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தாக்குதலுக்கு ஆளான வடக்குமாங்குடி கிராமத்து மக்கள் வேறு இடத்தில் குடியமர்த்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளது தலித்துகளின் பாதுகாப்பற்ற நிலையை உணர்த்துகிறது.

ஒரே ஒரு குடும்பமாக இருந்தாலும் பாரம்பரியமான இடத்தில் அச்சமின்றி தலித்துகள் வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசாங்கம், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். குற்றமிழைத்தவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி கடும் தண்டனை வழங்குவதன் மூலமே தலித்துகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட முடியும். தலித்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்களைத் தாக்கியவர்களை நீதியின் முன் நிறுத்துவதுமே அரசியல் சட்டத்தின்படி ஆளுவதாகச் சொல்லும் மாநில அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி தொடர் இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளது.

Search