COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, May 1, 2014

அந்த நாற்பது நாட்கள்

இதுவே எனது கடைசி தேர்தல் பிரச்சாரமாக இருக்கலாம் என்றார் கருணாநிதி. முதுகு வலியின் தொடர் துன்புறுத்தலுடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகச் சொன்னார். ஜெயலலிதா இதற்கு பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டுவிட்டு உங்களைச் சந்திக்க ஓடோடி வந்திருக்கிறேன் என்றார். அவர்கள் இருவரும் கலந்துகொண்ட கூட்டங்களுக்கு ‘அழைத்து’ வரப்பட்ட தமிழக மக்கள், மனதுக்குள், அய்யோ, உங்களை யார் வரச் சொன்னது, போய் ஓய்வெடுங்களேன், எங்களை விட்டுவிடுங்களேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி எங்களை ஏமாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் எந்த சபதமும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவரை தண்டிக்கும் போக்கில் மற்றவர் ஆட்சிக்கு வந்துவிடுகிறார். உண்மையில், இவர்கள் இருவரிடமும் இருந்து தமிழக மக்கள் விடுதலை நாடுகிறார்கள். மே 16 நமக்கு ஆச்சரியங்கள் வைத்திருக்கலாம்.

எப்படியாயினும் தற்போது இன்னும் முதலமைச்சராக மட்டுமே இருக்கிற ஜெயலலிதா அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்பாட்டில் இறங்க வேண்டியிருக்கும். மே 15க்குப் பிறகு தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா சொன்னார். இதற்கு விளக்கம் ஏதும் இன்னும் அவர் சொல்லவில்லை.

2023 வரை தமிழக மக்களின் எல்லாப் பிரச்சனைகளையும் தள்ளிப்போட முடியாது என்று, நாற்பது நாட்கள் ஜெயலலிதாவால் வாக்காளர்களாக பார்க்கப்பட்ட சாமான்ய மக்கள் உணரச் செய்திருக்கிறார்கள். நாற்பது நாட்கள் கடந்துவிட்டாலும் அவர்கள் வாக்காளர்கள் தான். ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் யார் ஆட்சி நடத்துவார்கள் என்பதை தீர்மானிக்க இருப்பவர்கள் அவர்கள்தான்.

தேர்தல் ஆணைய விதிகள் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக இருந்ததாக ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்தார். அவரால் வேட்பாளர் பெயரைக் கூடச் சொல்ல முடியாமல் போனது என்று சீற்றமுற்றார். என்ன பெரிய பிரச்சனை? ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சத்துக்கு மேல் செலவு செய்யக் கூடாது என்பது தேர்தல் ஆணைய விதி. நடக்கிற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் வேட்பாளர் கணக்கில் காட்டப்பட வேண்டும் என்று இன்னொரு விதி. தேர்தல் ஆணைய விதிகளின்படி அஇஅதிமுக வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சம் மட்டும்தான் செலவு செய்தார் என்று வைத்துக் கொண்டால் கூட ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் குறைந்தபட்சம் ரூ.28 கோடி செலவு செய்துள்ளது. யார் தந்தது இந்த ரூ.28 கோடி? அஇஅதிமுக வேட்பாளர்கள் எப்படி, எங்கு இந்தத் தொகையை வசூல் செய்தார்கள்? ஜெயலலிதா பேசுவதை கேட்க வந்த சாமான்ய தமிழர்கள் நிச்சயம் இதைத் தந்திருக்க முடியாது.

தாது மணல் கொள்ளை, டாஸ்மாக் விற்பனை, தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் இப்படி ஏதாவது இந்த கோடிகளுக்குப்பின் இருக்குமா? கருணாநிதி சொத்துப் பட்டியலை வெளியிடும் ஜெயலலிதா தேர்தல் செலவுக்கு அஇஅதிமுகவுக்கு கோடிகோடியாய் பணம் எங்கிருந்து வந்தது என்று அறிவிக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கும் வருமான வரி வழக்கும் நீதிமன்றங்களுக்கு அழைக்கும்போது, அது நன்கு தெரிந்தும் கொடநாடு சென்றுவிட்டார் ஜெயலலிதா. நீதி மன்றத்தை போக்கு காட்டுவதுபோல் மக்கள் மன்றத்தை போக்கு காட்டுவது சிரமம்.

அஇஅதிமுக தேர்தல் செலவு சில நூறு கோடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஜெயலலிதா கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்துக்கே ஒரு மேடைக்கு மட்டுமே ரூ.1 கோடி செலவு என்று சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சத்துக்கும் மேல் செலவு என்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள ஒருவர் ரூ.300 முதல் ரூ.500 வரை பெறுகிறார். ஒரு வகையில் ஒரு நாள் வேலைக்கு ஒரு சாதாரண தொழிலாளிக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கூலி தரப்பட வேண்டும் என்பதை ஜெயலலிதாவும் அதிமுக அமைச்சர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

வேறுவிதமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்த முடியாத முதலமைச்சரும் அமைச்சர்களும் இந்த 40 நாட்களில் மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு அவர்கள் மனம் நிறையும் வேலைவாய்ப்பு தந்தார்கள்.
விவசாயம் பொய்த்து வேலை வாய்ப்பின்றி தவிக்கும் கிராமப்புற வறியவர்களுக்கு இந்த நாட்களில் மட்டும் சொல்லிக்கொள்ளத்தக்க வருமானம் தரப்பட்டது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.300 கூலி வேண்டும் என்று போராடுகிற விவசாயத் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலியான ரூ.148 கூட தரப்படுவதில்லை. என்றாவது அதிசயமாக ரூ.100 வாங்கிவிட்டால் அன்று கறி சோறு. தமிழ் நாட்டுக்குள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல ரூ.5 லட்சத்துக்கும் மேல் செலவு செய்யும் ஜெயலலிதா ரூ.100க்கு கொண்டாடும் நிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு வெட்கப்பட வேண்டும்.

ஜெயலலிதா தமிழகத்தை முன்னேற்ற தான் எடுக்கும் அதிசூர முயற்சிகள் பற்றி  பிரச்சாரக் கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தபோது, நோக்கியா தொழிலாளர்களின் எதிர்காலத்தை மெல்ல மெல்ல இருள் சூழ்ந்துகொண்டிருந்தது. அவர் தொடர்ந்து சொல்கிற 2023ல் தமிழகத் தொழிலாளர்கள் எப்படி இருப்பார்கள் என்று நோக்கியாவில் இன்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

தொழிலாளர்கள் வேலையில் சேரும்போது பயிற்சியாளர்களாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சேர்ந்து பின் பணிநிரந்தரம் பெறுவார்கள். பணிநிரந்தரம் பெறும் வரை நிர்வாகத்திடம் கெட்ட பெயர் வாங்கிவிடாமல் கொத்தடிமைகளாக நடந்துகொள்வார்கள். பின் அதற்கேற்ப பணி நிரந்தரமோ வெளியேற்றமோ நடக்கும். நேற்று வரை அதுதான் நடைமுறை.
இன்று தமிழ்நாட்டில் அது தலைகீழாகி விட்டது. பயிற்சியாளர்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் பணி நிரந்தரம் பெற்று இப்போது ஒப்பந்தத் தொழி லாளர்களாக மாறியிருக்கிறார்கள்!

சுதந்திரச் சந்தையில் சின்ன மீனை பெரிய மீன் விழுங்கியபோது முழுவதுமாக விழுங்கவில்லை. தேவையற்றவற்றை, 7,500 தொழிலாளர்களை ஒதுக்கி விட்டது. பெரிய மீனுக்கு மட்டுமின்றி யாருக்கும் அவர்கள் தேவையற்றவர்கள் ஆனார்கள். ஜெயலலிதா இன்று வரை அவரது ஆட்சியில் நடந்துகொண்டிருக்கிற இந்த சோகம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. குஜராத் மனிதப் படுகொலை ஜனநாயக இந்தியாவின் மாபெரும் துயரம். 7,500 பேருக்கு திடீரென விதிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆயுள் தண்டனையும், மரணதண்டனையும் துயரம்தான். ஒரு பெரிய ஜனக்கூட்டத்தை தேவையில்லை என்று சொல்லும் துயரத்தைத்தான் வளர்ச்சி என்று பெயர் சூட்டி ஜெயலலிதா 2023ல் உருவாக்கப் போகிறார். தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாப்பதாக ஜெயலலிதா பெருமையுடன் சொல்கிறார்.

நோக்கியா நிறுவனம்  முக்கியமான எந்திரங்களை ஆலையை விட்டு எடுத்துச் சென்றுவிட்டது. எப்படி எடுத்துச் சென்றது என யாருக்கும் தெரியவில்லை. காவல் துறை கண்ணில் படாமலா ஓர் எந்திரத்தை எடுத்துச் செல்ல முடியும்? சில நூறு கோடி தேர்தல் செலவின் ஒரு பங்கு பேசுகிறதா?

தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கும் இடம் இல்லை என்று சாதியாதிக்கம் சிதம்பரத்தில் மீண்டும் சொல்லியுள்ளது. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா வேடிக்கைப் பார்க்கிறார். பல்லாயிரம் பேருக்கு 40 நாட்கள் வேலை வாய்ப்பு மற்ற 325 நாட்கள் மக்களை அமைதியாக இருக்கச் செய்யாது.

Search