நாம், சங்பரிவாரின் மதவெறி அரசியலிலிருந்து மட்டுமின்றி, கட்டற்ற அதிகாரம் மற்றும் சூறையாடலுக்காகக் காத்திருக்கிற பெரும்தொழில் குழும (கார்ப்பரேட்) உலகில் இருந்தும் இன்று மோடி தமது சக்தியைப் பெறுகிறார் எனப் புரிந்து கொள்ளும்போது, மோடி மாதிரிக்கெதிரான போராட்டத்தை, வெறுமனே, மதவெறி எதிர் மதச்சார்பின்மை வழிகளில் தொடர முடியாது என்பதை அங்கீகரித்தாக வேண்டும். மாறாக, அது உழைக்கும் மக்களின் பெரும்தொழில் குழும எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான தொடர் போராட்டங்களிலிருந்து பலம் பெற வேண்டும். மோடி மாதிரியை எதிர்கொள்ள, மோடி வகை (இலச்சினை) அரசியலோடு பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ள, மதவெறி பயங்கரவாதம், கார்ப்பரேட் மூலதனம், அரசு ஒடுக்குமுறை, பயங்கரவாதத்திற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரின் ஒரு பகுதியாக இசுலாமியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை, திறம்பட இணைத்தாக வேண்டும். ஒட்டுமொத்த பெரும்தொழில் குழும - பாசிச கையகப்படுத்துதல் ஆபத்துக்கு ஆளாவதில் இருந்து, மக்களின் ஓர் அதிஉயர்ந்தபட்ச அறுதியிடலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் தலையீடும் மட்டுமே, நாட்டைக் காப்பாற்ற முடியும்.’- இகக(மாலெ) 9ஆவது காங்கிரஸ் தேசிய சூழல் ஆவணம்
மே 16 அன்று, 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். தொழிலதிபர்கள் பணக்காரர்கள் மேட்டுக்குடியினர், நரேந்திர மோடி பிரதமராவதை விரும்புகின்றனர். ஏகப்பெரும்பான்மை அச்சு மின்னணு ஊடகங்கள், மோடியின் ஊதுகுழலாக மாறிவிட்டன.
அய்முகூவின் இரண்டாவது அவதாரத்தில் ஏற்பட்ட கூட்டணி குளறுபடிகள், அம்பலமான ஊழல்கள், மூலதனம் விரும்பும் சீர்திருத்தங்களில் தேக்கம் போன்றவை எல்லாம் சேர்ந்து, முதலீட்டாளர்களிடமிருந்து மன்மோகன் அரசை வெகுவாகவே விலக்கி வைத்துவிட்டன. நவதாராளவாத நிகழ்ச்சிநிரலை வேகமாக வீச்சாக முன்எடுக்க மாற்று தேவை; அந்த மாற்று நரேந்திர மோடி என்ற ஆளும் வர்க்க விருப்பங்களை மக்கள் விருப்பங்களாக மாற்ற முயன்றுள்ளனர்.
இது எப்படி நடந்துள்ளது? அதற்கு முன் நவதாராளவாத நிகழ்ச்சிநிரல் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வோம். அது,
பெரும்தொழில் குழுமங்களுக்கு (கார்ப்பரேட்டுகளுக்கு) வரி தள்ளுபடி தருவது ஆகும்; அரசு கஜானாவிற்கு இழப்பும் முதலாளிகள் கல்லாப்பெட்டிக்கு ஆதாயங்களும் உருவாக்குவது ஆகும்.
அரசு செலவில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து, பெருமுதலாளிகளுக்கு உள் கட்டுமான வசதிகள் செய்து தருவதாகும்.
மிகப்பெரும் அளவில், கார்ப்பரேட்டுகளுக்கு, குறைந்த வட்டி கடன் தருவதாகும்.
சந்தையின் மூலச்சிறப்புமிக்க (செவ்வியல்) போட்டி விதிகளை மீறி, அரசை ஆட்டி வைத்து ஒரு சிலர் ஏக போக நிலையில், அரிய மூல வளங்களை இயற்கை வளங்களை கனிம வளங்களை மலிவான விலையில் சூறையாட விடுவதாகும்.
அது இறுதி ஆராய்ச்சியில், இயற்கையின் மீது மனித உழைப்பு ஏவப்பட்டு, உருவான பிரம்மாண்டமான செல்வங்களை வருமானங்களை தாறுமாறாக மறு விநியோகம் செய்வதாகும்.
(கடந்த 15 ஆண்டுகளில், வாஜ்பாய் மன்மோகன் காலங்களில், இந்திய பில்லியனர்களின் நிகர மதிப்பு 15 மடங்கு உயர்ந்துள்ளது)
இங்கேதான், அரசியல்வாதி அல்லாத பொருளாதார மேதை மன்மோகனின் 10 ஆண்டுகால உபயோகம், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு முடிந்துவிட்டது. ‘நல் ஆளுகை’ தரும் திறன் வாய்ந்த தலைவர், ‘வளர்ச்சியின் நாயகர்’ என்ற பெயரால், நரேந்திர மோடி நல் மேய்ப்பராக முன் நிறுத்தப்படுகிறார்.
குஜராத்தில் எத்தகைய வளர்ச்சிப் பாதை பின்பற்றப்படுகிறது?
இந்த கேள்விக்கான பதிலில், நரேந்திர மோடியை கார்ப்பரேட் இந்தியா ஏன் விரும்பு கிறது என்பதற்கான காரணத்தைச் சுலபமாகக் காண முடியும். நீண்ட பட்டியல் மூலம் அல்லாமல் சில உதாரணங்களை மட்டும் காண்போம். அதானி டாட்டா அம்பானி ஆகியோரோடு மோடியின் கூட்டு பற்றிப் பார்க்கலாம்.
அதானி: மோடி பதவியேற்கும்போது, அதானியினுடைய சொத்து மதிப்பு ரூ.3000 கோடி. இப்போது அது ரூ.50000 கோடி ஆகி உள்ளது.
முந்த்ராவில், 7350 ஹெக்டர் நிலம் 30 வருட குத்தகைக்கு அதானிக்கு குஜராத் அரசு தந்துள்ளதாக போர்ப்ஸ் ஏசியா சொல்கிறது. ஒரு சதுர மீட்டருக்கு அவர் தர வேண்டிய குத்தகை 1 சென்ட் முதல் 4 1/2சென்ட் வரை ஆகும். (100 சென்ட்கள் 1 டாலர் ஆகும்) இந்த நிலத்தின் ஒரு பகுதியை, அதானி, அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு ஒரு சதுர மீட்டர் 11 டாலர் (1100 சென்ட்) எனக் குத்தகைக்கு விட்டுள்ளார். அதானியிடம் செல்வம் குவியாதா? (குத்தகை தொகை விவரங்களை மறுக்கும் அதானி, காங்கிரஸ் காலத்தில் இருந்தே தனக்கு நிலம் தரப்படுவது துவங்கிவிட்டது என்று சொல்கிறார்).
டாடா: பெருந்தகையாளர், கனவான் என்ற பிம்பம் உடையவர். இவர் சிங்கூரிலிருந்து குஜராத்தின் சாநாந்துக்கு நானோ கார் தொழிற்சாலையைக் கொண்டு வந்தார். இவருக்கு இயந்திரங்களை இடம் மாற்ற ஆன ரூ.700 கோடி செலவை குஜராத் அரசே ஏற்றுக் கொண்டது. இவருக்கு 20 வருட கால அவகாசம் தந்து 0.1% வட்டி வீதத்தில் ரூ.9570 கோடி கடன் தந்துள்ளது. ஒரு டாடா நானோ காரில் குஜராத் அரசின் ரூ.60000 இருக்கிறது.
முகேஷ் அம்பானி: ரிலையன்ஸ் குடும்ப மாப்பிள்ளை சவுரப் பட்டேல் குஜராத் அரசின் எரிசக்தி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஆவார். இவரது மேற்பார்வையில் தான், ஜாம் நகரில் ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவப்பட்டுள்ளது.
அலைக்கற்றை நிலக்கரி மெகா ஊழல்களை அம்பலப்படுத்திய, அதே மத்திய தணிக்கையாளர் (சிஏஜி), குஜராத் அரசு, தன் சொந்த கஜானாவுக்கு ரூ.25000 கோடி நஷ்டம் ஏற்படுத்தி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் தொழிலாளியின் நிலை பற்றியும் பார்த்தால்தானே, முதலாளிகளின் மோடி தேர்வை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அம்பானியின் விமல் ஜவுளி ஆலையில் 7500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 2011 மார்ச் கணக்கில் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.42400 கோடி. 2012ல் நிகர லாபம் ரூ.18000 கோடி. 1100 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஆளுக்கு மாதச் சம்பளம் ரூ.6000 தாண்டாது. மீதமுள்ள 6400 ஒப்பந்தத் தொழிலாளிக்கு நாள் கூலி ரூ.100 தாண்டாது. கூலி குறைய லாபம் பெருகும். குஜராத், இந்தியா முழுவதும் வேண்டும் என அம்பானிக்கள் அதானிகள் டாடாக்கள் விரும்புவதில் வியப்பேதும் இல்லையே!
யாதும் ஆகி நின்றார்
முதலாளிகளுக்காக மட்டுமே நாடாளு மன்றங்களும் சட்டமன்றங்களும் மத்திய மாநில அரசுகளும் செயல்படும் என்றபோதும், முதலாளிகள் வாக்குகள் மட்டும் வாங்கி தேர்தல்களில் வெற்றி பெற முடியாதே! இங்கேதான் தேர்தல்களில் மக்கள் பங்கு என்ற பிரச்சனை முன்வருகிறது.
மக்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் திசையில் சிந்திக்க வைக்க மிகவும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறார்கள். ‘எல்லோருடனும், எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்’, ‘ஸப்கா சாத், ஸப்கா விகாஸ்’. இதுதான் எனது அணுகுமுறை. ‘முதலில் இந்தியா. முதலில் தேசம்’. இதுவே என் முழக்கம்.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்’. இதுவே என் வேத நூல். தினமணி ஆசிரியர் நரேந்திர மோடியின் பக்த கோடியாகி கன்னத்தில் போட்டுக் கொண்டே பேட்டி எடுத்தபோது, மேலே சொன்ன விஷயங்களை நரேந்திர மோடி சொல்லியுள்ளார். ரத்தக்கறை, கொடிய நகங்கள் பற்கள் மறைக்கப்படுகின்றன. வாஜ்பாய் அவர் உச்சத்தில் இருந்தபோதே 187 இடங்கள் தான் பெற்றார். இப்போது, சிவசேனா, லோக் ஜனசக்தி, தெலுங்குதேசம், சிரோமணி அகாலி தள் எனக் கூட்டாளிகள் எல்லாம் சேர்ந்தால் கூட 225 - 250 - 260 இடங்கள் என நின்று விட்டால் என்ன செய்வது?
அய்முகூ தேஜமு அல்லாத, திரிணாமூல், அஇஅதிமுக, பிஜ÷ ஜனதா தள் போன்றோரை ஈர்க்க, தம்மிடம் எல்லா வகை முகமூடிகளும் இருப்பதாக மோடி சொல்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கு சாட்சியமாகத்தான் ‘ஸப்கா சாத், ஸப்கா விகாஸ்’ முழக்கமும், அரசியல மைப்புச் சட்டமே புனித நூல் என்ற முழக்கமும் முன்வைக்கப்படுகிறது. 10 கோடி புதிய வாக்காளர்களிடம் ‘வளர்ச்சியின் நாயகராக’ விகாஸ் புருஷ் என வலம் வருகிறார். மதவெறி அரசியல் துர்நாற்றத்தை மறைக்க, ‘எல்லோருடனும் எல்லோருக்குமான வளர்ச்சி’ ‘அரசியலமைப்புச் சட்டமே புனித நூல்’ என்ற வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்கிறார். தேர்தல் சூட்டில் வாசனைத் திரவியங்களும் ஒப்பனையும் கலைந்து, நிஜ மோடி வெளியே வந்ததை, அடுத்து காண்போம்.
முகமூடியில்லாத நிஜ முகத்துடன் நரேந்திர மோடி
வாரணாசியில் காவி வெள்ளத்தில் மிதந்து வந்து மோடி வேட்பு மனு தாக்கல் செய்ததாக ஊடகங்கள் வியந்து போற்றின. ‘ஹர் ஹர் மகாதேவ்’ என வாரணாசியில் சிவ பக்தர்கள் ஓதும் மந்திரத்திற்குப் பதிலாக, ‘ஹர் ஹர் மோடி, கர் கர் மோடி’ என்ற முழக்கங்கள் ஒலித்தனவாம்.
வழிபாட்டுக்குரியவர் மோடி, ஒவ்வொரு வீட்டிலும் மோடி. சபாஷ். விஷயம் அதோடு நின்றுவிடவில்லை. கடவுள் தம்மோடு பேசியதாக சொன்ன ஜார்ஜ் புஷ்ஷிற்குப் பிறகு, இப்போது கடவுள் விதித்தபடி, தாம் கங்கையின் புதல்வராக வாரணாசிக்கு வந்திருப்பதாக, மோடி பேசுகிறார். தேசமே மோடி. இந்துத்துவாவே தேசம்.
தலித்துகளை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்த, ரன்வீர் சேனா தலைவரை பீகாரின் காந்தி என்றழைத்த கிரிராஜ் சிங் இப்போது சொல்கிறார்: ‘மோடியை எதிர்ப்பவர்கள், பாகிஸ்தான் பக்கம் தங்கள் பார்வையைக் கொண்டிருப்பவர்கள். வரும் நாட்களில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது. பாகிஸ்தானில்தான் இடமுண்டு.’ இதுவரை எந்த மன்னிப்பும் கேட்காமல், முன் ஜாமீன் பெற்றுள்ளார். விஸ்வ இந்து பரிஷத்தின் பிரவீண் டொகாடியா இசுலாமியர் வீடுகளை சொத்துக்களை பணத்தைப் பிடுங்கிக்கொள்ள, அவர்கள் மீது காரி உமிழ வேண்டும் என்கிறார்.
மோடியோடு மேடையைப் பகிர்ந்து கொண்ட சிவசேனாவின் ராமதாஸ் கதம், ‘இந்த முஸ்லிம்கள், போலிசுக்கெதிராகக் கலவரம் செய்பவர்கள், வாகனங்களை எரிப்பவர்கள், பெண் காவலர்களை மானபங்கம் செய்பவர்கள்.
இந்த நடவடிக்கைகள் தண்டிக்கப்படுவதை மோடி உறுதி செய்வார். நரேந்திர மோடி அதிகாரத்திற்கு வந்தால் 6 மாதங்களுக்குள் பாகிஸ்தானை அழிப்பார்.’
‘யாருக்கும் தனி நீதி இல்லை; எல்லோருக்கும் சம நீதி’ என்கிறார் மோடி. பார்த்த மாத்திரத்தில், சரிபோல் தெரிகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவு சமத்துவக் கோட்பாடு பற்றிப் பேசுகிறது. சமத்துவ நாணயத்தின் ஒரு பக்கம், சமமானவர்களைச் சமமாக நடத்தச் சொல்கிறது.
அதன் மறுபக்கம், சமமற்றவர்களை சமமாக நடத்தக் கூடாது என்கிறது. சம வாய்ப்புக்கள் உண்டா இல்லையா எனப் பார்க்கும்போது, சமூக நீதி தழைக்கிறது. தலித் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் பெண்கள் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் பாதுகாப்பு, எல்லாமே தனி நீதியை வலியுறுத்துகின்றன. மோடி கூடாது என்கிறார். மோடி உண்மையில் என்ன சொல்கிறார் என்பதை, பாஜகவின் சி.பி.தாகுர் இட ஒதுக்கீடு கூடாது எனப் பிட்டுப் பிட்டு வைக்கிறார். சங்பரிவார், மசூதி இடித்த இடத்தில் இராமன் கோவில், முஸ்லிம்களுக்கும் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு 370 பிரிவு சிறப்பு அந்தஸ்து கிடையாது என அழிச்சாட்டியம் செய்கிறது.
நாஜிக்களின் தலைவரான ஹிட்லர், ஓர் இனவெறியர் மட்டுமல்ல, படுமூர்க்கமான ஆக்ரோஷமாக எழுந்து வந்த ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி. ஹிட்லர், முதல் உலகப் போரில் அடைந்த தோல்வியால் காயமுற்றிருந்த ஜெர்மானிய உணர்வைத் தூண்டினார். ஜெர்மானிய ஆரிய ரத்த இனத்தூய்மை பற்றிப் பேசி, ஜெர்மானியர் ஆளப் பிறந்தவர்கள் என்றார். நிதி மூலதன ஏகபோக ஏகாதிபத்திய சேவையில் ஜெர்மானியப் பெருமிதம் உசுப்பி விடப்பட்டது. இந்தியாவில் மோடி அந்த வேலையை எடுத்துக் கொண்டுள்ளார். ஆகப் பிற்போக்கான முதலாளிகள் நிலப்பிரபுக்கள் மதவெறி சாதி ஆதிக்க ஆண் ஆதிக்க சக்திகளின் பிரதிநிதி பாஜக ஆகும். அது ஏகாதிபத்திய அடிவருடி ஆகும். அது மக்கள் ஒற்றுமையைக் குலைக்க இந்துத்துவா ஆயுதத்தை எடுத்துள்ளது. கடந்த கால இசுலாமியப் படையெடுப்புக்கள் பற்றிப் பேசுகிறது. மாட்டிறைச்சி தடை என ஒரே கல்லில் இசுலாமியர்களையும் தலித்துகளையும் தாக்குகிறது. நரேந்திர மோடி, முகமூடிகள் இல்லாமல் பார்த்தால், ஏகாதிபத்திய விசுவாசி, மூலதன சேவகர், மதவெறி சாதி ஆதிக்க ஆண் ஆதிக்க பிற்போக்கு சக்திகளின் தளபதி.
மோடியை, ராகுலால் கெஜ்ரிவாலால், மதச்சார்பற்ற சக்திகள் என்று அழைக்கப்படுபவர்களால் எதிர்கொள்ள முடியுமா?
ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி ஆகியோர் மோடியின் எழுச்சிக்குப் பங்காற்றி உள்ளனர். ராகுல் காந்தியும் அர்விந்த் கெஜ்ரிவாலும், கார்ப்பரேட் முதலாளித்துவத்தை எதிர்க்கவில்லை என்றும், குரோனி கேப்பிடலிசத்தை அதாவது கூடா நட்பு முதலாளித்துவத்தைத்தான் எதிர்ப்பதாகவும் சொல்கிறார்கள். (முதலாளித்துவம் கூடாநட்பு முதலாளித்துவமாக மட்டுமே நிதிமூலதன சகாப்தத்தில் இருக்க முடியும்). ராகுல் காந்தி, வளர்ச்சி இல்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது எனவும் தொழிலதிபர்களின் நலனையும் ஏழைகளின் நலனையும் ஒரு சேரப் பாதுகாக்க முடியும் எனவும் சொல்கிறார். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டையாடு வார்களாம்; அதேநேரம், வேட்டையாடப்படும் முயல்களோடும், சேர்ந்து ஓடுவார்களாம். முதலாளிகளும் கிராமப்புற மேட்டுக்குடியினரும், அவர்கள் சுரண்டுகிற ஒடுக்குகிற தொழிலாளர்களின், விவசாயிகளின், சாமான்ய மக்களின் தர்மகர்த்தாக்களாக இருப்பார்களாம்.
அர்விந்த் கெஜ்ரிவால், ஊழலுக்குக் காரணம், சூறையாடலுக்குக் காரணம், முதலாளிகள் அல்ல, அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே என்கிறார். தண்ணீர்க் குழாய் திறந்து வாழும் அறையில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும்; குழாயை மூடாமலே, தரையைத் துடைத்தும் மின் விசிறியைச் சுழல வைத்தும் ஈரம் இல்லாமல் வாழலாம் என்கிறார். இது நடக்காது. உலக வங்கி தொண்டு நிறுவனங்கள் பாணியிலான, ‘நல்ஆளுகை’ ‘வெளிப்படைத் தன்மை’ ‘பொறுப்பேற்றல்’ என்ற தீர்வுகள் போதும், அடிப்படை சமூக மாற்றம் தேவை இல்லை என்கின்றனர். பெரும்தொழில் நிறுவனக் கொள்ளை, அதற்கு ஆதரவான கொள்கைகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்கும் ராகுல் மற்றும் கெஜ்ரிவாலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
மதவெறி என்ற பிரச்சனையிலும் காங்கிரஸ் ஒரு மென்மையான இந்துத்துவா கட்சியே. ஏகாதிபத்தியத்தின் இசுலாமிய எதிர்ப்பு பயங்கரவாதப் போரில் இணைந்து கொண்டுள்ள காங்கிரஸ், ஒருபோதும் மதச்சார் பற்ற நிலை எடுக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சியோ, வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்ற சங்பரிவார் முழக்கங்களுடன், செயற்கையாக, ஒட்டாமல் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்தை இணைக்கிறது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் வேண்டாம், காப் பஞ்சாயத்துகள் கூடாது போன்ற பிரச்சனைகளில் தடுமாறுகிற ஆம் ஆத்மி கட்சி, விடாப்பிடியான மதச்சார்பற்ற நிலை எடுப்பதும் கடினமே. எஞ்சியுள்ள பிராந்திய கட்சிகள், (பகுஜன் சமாஜ், அஇஅதிமுக, பிஜ÷ ஜனதா தளம், திரிணாமூல்) விடாப்பிடியான மதச் சார்பற்ற கட்சிகள் இல்லை. இவை அனைத்துமே, ஏகாதிபத்திய சார்பு பெரும்தொழில் குழும சார்பு கொள்கைகள் கொண்டவையே.
இந்தியப் பாட்டாளி வர்க்கமும், உழைக்கும் மக்களின் வெவ்வேறு பிரிவினரும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் தலைமையில், விடாப்பிடியான உறுதியான போராட்டங்கள் நடத்துவதன் மூலம் மட்டுமே கார்பரேட் பாசிசத்தை எதிர்கொள்ள முடியும். இந்தியாவில், சமூக பொருளாதார அரசியல் சம நிலையில், அடிப்படை மாற்றங்களை, மக்கள் திரள் பங்கேற்பு போராட்டங்கள் மூலம் மட்டுமே, கொண்டு வர முடியும். மே நாளில் கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க சபதமேற்போம்.