COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, May 1, 2014

ஜார்க்கண்ட் வாக்களிக்கச் சென்ற தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் - ஜி.ரமேஷ்

ஜார்க்கண்ட் மாநிலம், ஜமுயி ஒன்றியம், கொடர்மா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிரிதியில் ஏப்ரல் 10 அன்று தேர்தல் நடந்தது. அங்குள்ள தலித் கிராமங்களில் இருக்கும் மக்கள் அனைவரும் இகக(மாலெ) ஆதரவாளர்கள். அவர்கள் இகக(மாலெ)வுக்கு வாக்களிப்பார்கள் என்ற காரணத்திற்காக மேல் ஜாதி பூமிகார் கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பாஜக ஆதரவாளர்கள் தலித் மக்களை ஓட்டுப் போடவே விடக்கூடாது என்று திட்டமிட்டு, அவர்கள் ஓட்டுப் போட வரும்போது  வழி மறித்து கம்பு, கல், செங்கல் கொண்டு தாக்கி அவர்களை அடித்து விரட்டியுள்ளார்கள். பெண்களையும் அடித்து விரட்டியுள்ளார்கள்.

துதாவாலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது உமாதேவி, ஏப்ரல் 10 அன்று காலையில் அருகில் உள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்று ஓட்டுப் போடுவதற்காக, ஓட்டு எந்திரத்தில் ஓட்டு போட்டவுடன் ஓட்டு எந்திரத்தின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. பீப் ஒலி வரவில்லை. அதனால் அவர் மீண்டும் ஓட்டுப் போட முயற்சிக்கும்போது  ஜியாதோலியைச் சேர்ந்த பூமிகார் ஆட்கள்,  சுரஜ்தேவ், மனோஜ் தேவ் இருவரும் பின்னால் இருந்து அவரை ஓட்டுப் போடவிடாமல் பிடித்துக் கொள்ள, உமாதேவி கத்திக் கொண்டு வெளியே வர முயற்சிக்கிறார். சத்தம் கேட்டு வெளியே நின்று கொண்டு இருந்த அவர் கணவர் கோவர்த்தன் ராய் உள்ளே வர அவரை அந்த இருவரும் கல்லால் அடித்துத் தாக்கி அவர் சட்டையை கிழித்து எறிகிறார்கள். கோவர்த்தன்ராயின் நெற்றி மண்டை பிளந்து ஆழமான காயம்.

தேவந்தி தேவி ஓட்டுப் போடப் போகும்போது, வாக்குச் சாவடியில், பூமிகார் ஆட்கள்  வாக்குச்சாவடி அலுவலருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டு எந்திரத்திற்கான தொடர்பைத் துண்டித்துவிட்டு, நீ ஓட்டுப் போட முடியாது வெளியே போ என்று விரட்டியுள்ளனர். வாக்குச் சாவடி ஊழியர்களிடம் சொன்னபோது அவர்கள் எதுவும் நடக்காதது போல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்கள். மீண்டும் மீண்டும் சொல்லவும் வாக்குச் சாவடி அதிகாரி தனது நாற்காலியில் இருந்து எழுந்து பிரச்சினையில் தலையிட முயன்றபோது, பூமிகார் ஆட்கள் அவர் சட்டைக் காலரைப் பிடித்து மிரட்டி உட்கார வைத்துவிட்டார்கள் என்று கூறுகிறார் அனுப்தூரி. பாதுகாப்பு நின்று கொண்டிருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த பூமிகார் சாதியைச் சேர்ந்த அசோக் நாராயண் தேவ், பூமிகார் ஆட்களுடன் சேர்ந்து கொண்டார் என்கிறார் அனுப்தூரி. லக்கண் ராய், நகுல் ராம், ரீட்டல் ராய் ஆகியோருக்கு தலையில் ஆழமாக வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சந்தோஷ்துரி என்பவரை லத்தியால் அடித்துள்ளார்கள். அவரின் இடது கையில் தடியடிபட்ட தடயம் உள்ளது.

கணேஷ் ராய் என்கிற வயதானவர் 1995ல் இருந்து வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும், தான் இதுவரை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்கிறார். அவர் “பூமிகார் சாதியினரின் வயல்களில் நாங்கள், வெறும் கோதுமைக்காக மட்டும் வேலை செய்ய முடியாது. எங்களுக்கு கூலியும் வேண்டும் என்று கேட்பதால் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர்.  எங்களுடைய ஓட்டை அவர்களே போட்டுவிடுவார்கள். நாங்கள் இகக(மாலெ) வுக்கு வாக்களித்து விடுவோம் என்பதால்” என்கிறார்.
ஏப்ரல் 10 அன்று அங்கு தலித் மக்கள் 10 பேர் மட்டுமே ஓட்டு போட முடிந்துள்ளது. ஆனால், தலித் மக்கள் வாக்குச் சாவடியைக் கைப்பற்ற முயற்சித்தார்கள் என்று கூறி 100க்கும் மேற்பட்ட தலித் மக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமிகார் சாதியைச் சேர்ந்தவர்கள் 9 பேர் மேல் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி ஜஜோரியா, அந்த வாக்குச் சாவடி ஊழியர்களிடம் இருந்து தனக்கு புகார் ஏதும் வரவில்லை என்கிறார்.

ஊர்காவல் படையைச் சேர்ந்த அசோக் நாரயணன்,  இகக(மாலெ)யைச் சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி, பிஜேபி காங்கிரசுக்கு ஓட்டுப் போடவிடாமல் தடுக்கிறார்கள் என்பதை அறிந்து நான் ஒழுங்குபடுத்தப் போனேன். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கி விட்டார்கள்  என பத்திரிகையாளரிடம் பொய் உரைத்துள்ளார். அந்த ஊர்க்காவல் படை வீரர் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். தலித் மக்கள் பூமிகார் பெண் ஒருவரைத் தாக்கியதாகவும் பொய் கூறியுள்ளார்கள். தி இந்து பத்திரிகையாளர், அவர் எங்கே என்று கேட்டதற்கு அவர் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

நடந்த சம்பவங்கள் பற்றியும் அப்பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் வாக்குச் சாவடி அதிகாரிகள் அனைவரும் ஒரு தலைப்பட்சமாகச் செயல்பட்டுள்ளார்கள் என்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தபோது, அவர், மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் இது பற்றி விசாரிக்கச் சொல்லியுள்ளோம், ஒரு தலைபட்சமாக நடக்காதவாறு நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அங்கு மறுதேர்தல் நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இகக(மாலெ) ஆதரவுப் பகுதியான ஆஜியோன், தராரி சட்டமன்றத் தொகுதிகளில்  சில இடங்களில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று சொல்லி வாக்களிக்கும் நேரத்தை மாலை 6 மணி வரை என்பதற்குப் பதிலாக மாலை 4 மணி வரை என்று குறைத்தார்கள்.

 கிரிதியில் மட்டுமல்ல. பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் தலித் மக்கள், உழைக்கும் மக்கள் இகக(மாலெ)விற்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக முதலாளித்துவக் கட்சிகள் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள்.

      இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால், தலித் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை. தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து,  இந்நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் தங்களுக்காகக் குரல் கொடுக்கச் செய்ய முடியவில்லை.

Search