COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, May 15, 2014

மே 25, நக்சல்பாரி தினம். அனைத்து அதிகாரமும் மக்களுக்கே

நக்சல்பாரியில் விவசாயப் போராட்டம் துவங்கி ஆண்டொன்று கடந்து விட்டது. இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விவசாயப் போராட்டங்களில் இருந்தும் மாறுபட்டது. எங்குள்ளது அந்த மாறுபாடு? பல்வேறு அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விவசாயிகள் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பகுதித்தன்மை கொண்ட கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவும் அப்போதுதான் முதல் முறையாக போராடினார்கள். நக்சல்பாரி விவசாயப் போராட்டத்தில் இருந்து நமக்கு பாடம் எதுவும் இருக்குமானால், அது இதுதான்: போர்க்குணமிக்க போராட்டங்களை நிலத்துக்காக, விளைச்சலில் பங்குக்காக நடத்தக் கூடாது; அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்த வேண்டும். இதுதான் நக்சல்பாரி போராட்டத்துக்கு அதன் தனித்தன்மையை தருகிறது. பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் விவசாயிகள், தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பொறியமைவுகள் செயலற்றுப் போகும்படிச் செய்யும் விதம் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் விவசாயப் போராட்டங்களின் வரலாற்றில், நக்சல்பாரியில்தான் முதல்முறையாக இந்த வழி கடைபிடிக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், புரட்சிகர சகாப்தம் துவக்கப்பட்டுவிட்டது; இது, அந்த சகாப்தத்தின் முதல் ஆண்டு. இதனால்தான், எல்லா நாடுகளிலும் உள்ள புரட்சியாளர்கள் நக்சல்பாரி போராட்டத்தை நெஞ்சு நிறைய வரவேற்கிறார்கள்.

இந்தியா, ஏகாதிபத்தியத்தின், திரிபுவாதத்தின் அடித்தளமாக மாற்றப்பட்டுவிட்டது; இன்று, விடுதலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு எதிரான பிற்போக்கு சக்திகளின் அடித்தளமாக செயல்படுகிறது. எனவே, நக்சல்பாரி போராட்டம் தேசிய அளவிலான ஒரு போராட்டம் மட்டும் அல்ல; அது ஒரு சர்வதேச அளவிலான போராட்டமும் கூட. இந்தப் போராட்டம் கடினமானது. நாம் தேர்ந்தெடுக்கிற பாதை எளிதானதோ, மென்மையானதோ அல்ல. அங்கு சிரமங்கள் இருக்கும்; ஆபத்துக்கள் இருக்கும்; பின்னடைவுகள் கூட இருக்கும். ஆனால், புதிய சர்வதேசியத்தின் உணர்வால் பற்ற வைக்கப்பட்ட விவசாயிகள் இவை அனைத்தையும் மீறினார்கள்; இவை அனைத்துக்கும் அடங்க மறுத்தார்கள். தங்கள் போராட்டப் பாதையில் தொடர்ந்து செல்கிறார்கள்.

ஒரு சிறிய பகுதியில் நடந்த இந்தப் போராட்டத்தின் செய்தி இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் பரவியிருப்பதை, கடந்த ஓராண்டுகால நமது அனுபவம், காட்டுகிறது. இப்போது இருக்கிற அனைத்து அரசியல் கட்சிகளும் நக்சல்பாரி போராட்டத்தை எதிர்த்தன. ஆயினும் மக்கள் இந்தப் போராட்டத்தை ஒட்டியே சிந்திக்கிறார்கள்; இந்தப் போராட்டம் வகுத்திருக்கிற பாதையில் செல்ல முன்வருகிறார்கள். நக்சல்பாரி போராட்டத்தின் வீரமிக்க தலைவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்;     பிற்போக்கு அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களை அழிக்க முடியவில்லை. அனைத்து பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள். பிற்போக்காளர்கள் தோற்றத்தில் அச்சம் உருவாக்குபவர்களாக இருப்பார்கள். ஆனால், யதார்த்தத்தில் அவர்கள் அவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் அல்ல என்ற தலைவர் மாவோவின் சொற்கள் எவ்வளவு உண்மை என்பதை இது காட்டுகிறது.

காலனியமும் ஏகாதிபத்தியமும் அனைத்து சுரண்டல் அமைப்பு முறைகளும் முழுமையாக வீழ்வதும், உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசங்கள் முழுமையாக விடுதலை பெறுவதும் வெகுதொலைவில் இல்லை.

விடுதலையின், அந்த அறிவார்ந்த சூரியஒளியை கொண்டு வர நாம் முன்னோக்கிச் செல்வோம்.

- சாரு மஜூம்தார், லிபரேசன், ஜூன் 1968

Search