‘ஒரு சிறப்பு வர்த்தகமாக, ஒரு சமூக நடவடிக்கையாக மூலதனம் விநியோகிக்கப்படுவது, வங்கி முறை மூலம், தனியார் முதலாளிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் கைகளில் இருந்து அகற்றப்பட்டுவிடுகிறது. ஆனால், அதே நேரம், வங்கி முறையும் கடன் வழங்குதலும் முதலாளித்துவ உற்பத்தியை அதன் சொந்த எல்லைகளைத் தாண்டிச் செலுத்துவதற்கான, ஆகத் திறன்வாய்ந்த வழிமுறைகள் ஆகின்றன; அத்துடன், நெருக்கடிகள் மற்றும் மோசடிக்கான ஆகச் சிறந்த வாகனங்களில் ஒன்றாகின்றன’.
- கார்ல் மார்க்ஸ், மூலதனம், தொகுதி 3, பகுதி 5, அத்தியாயம் 36, முதலாளித்துவத்துக்கு முந்தைய உறவுகள்
அய்முகூ ஆட்சியாளர்கள், மக்களுக்குச் சேர வேண்டியவற்றை சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்ப்பதில் அக்கறை உடையவர்களாம். அவர்கள் பக்கத்தில் உள்ள பொருளாதார மேதைகள் எல்லாம் மான்யங்களில் பணம் வீணாகக் கூடாது, அது இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும் என்று அறிவுறுத்தினார்களாம். உங்கள் பணம் உங்கள் கையில் என்றார்கள் அய்முகூ ஆட்சியாளர்கள். மக்கள் நல நடவடிக்கைகளுக்கு தரப்படும் மான்யம் பற்றி தீராத கவலைப்பட்டவர்கள், அதை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி நந்தன் நீல்கேணியை அழைத்து அவரிடம் ரூ.120 கோடி எனத் துவங்கி ரூ.14,232 கோடி வரை கொடுத்தார்கள். அவரும், மாற்றி மாற்றி அடையாள அட்டை காட்டி சாமான்யர்கள் அரசாங்கத்தை ஏமாற்றுவதற்கு முடிவு கட்டுகிறேன் என்று, ஆதார் அட்டை தயார் செய்தார். வேலை ஆகவில்லை, இன்னும் பணம் வேண்டும் என்றார். இன்னும் ரூ.1,758 கோடி தந்தார்கள். ஆதார் அட்டை வேலையும் முழுமையாக முடியவில்லை. மக்களுக்கு எதுவும் போய்ச் சேரவும் இல்லை. மக்கள் பணம் பறந்து போனது.
ஆனால் வேறொரு பக்கம் வேறு வகைப்பட்ட பணம் சேர வேண்டும் என்று அய்முகூ ஆட்சியாளர்கள் விரும்பியவர்களுக்கு சென்று சேர்ந்து கொண்டேதான் இருந்தது. இதற்கென அய்முகூ ஆட்சியாளர்களோ, அப்படிச் சேருவதை ஆதரிக்கும் மற்ற ஆட்சியாளர்களோ சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்கவில்லை. அடையாள அட்டை தருவதாகச் சொல்லவில்லை. நாராயணமூர்த்தியையோ சத்யம் நாதெள்ளவையோ அழைக்கவில்லை. வங்கிகளில் இருந்த மக்கள் பணம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வயிற்றுக்குள் சென்றுகொண்டே இருந்தது. சென்றுகொண்டே இருக்கிறது.
ஏப்ரல் 18, 2014 அன்றைய நிலவரப்படி இந்திய வங்கிகளில் உள்ள மக்கள் பணம் ரூ.78,69,970 கோடி. வாராக்கடன் வாங்கியிருப்போர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நீண்டகாலமாக போராட்டங்கள் பல நடத்திக் கொண்டிருக்கிற வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், பல முறை கோரியும் சங்கத்தின் கோரிக்கை நிறைவேறாததால், முதல் 406 கடன்கார கார்ப்பரேட் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அடுத்து இன்னும் 3000 நிறுவனங்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
கடன்சுமை தாளாமல் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட, செய்துகொண்டிருக்கிற நாட்டில், கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து, மானத்துடன் சாகவாவது செய்யலாம் என்று குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கிற நாட்டில், மார்ச் 2008ல் ரூ.39,000 கோடியாக இருந்த வாராக்கடன் மார்ச் 2013ல் ரூ.1,64,600 என மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 2013ல் ரூ.2,36,600 என அதிகரித்தது. (இந்தத் தொகைக்கு 10 சதம் வட்டி வாங்கினால் கூட வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 கோடி வரும்).
முதலாளித்துவ பொருளாதார மேதைகள் வாராக்கடனுக்கு செயல்படாத சொத்துக்கள் என்று நளினமான பெயர் வைத்திருக்கிறார்கள். கார்ப்பரேட் வயிற்றுக்குள் போனதுதானே, அது கார்ப்பரேட்டுகளுக்கு சொத்தாக நிச்சயம் மாறி இருக்கும். ஆனால், வங்கிக்கு, வங்கிகளில் பணம் சேர்த்து வைத்த சாமான்யர்கள் எங்கள் பணம் அங்கே இருக்கிறதே என்று கேட்டால் என்ன செய்வது? அதனால் அந்த சொத்து செயல்படாதது என்று சொல்லி வைக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கேள்வி கேட்டால் கேள்வி கேட்டவர் சுருண்டுவிழும் அளவுக்கு புரியாத, புதிரான பொருளாதாரச் சொற்களைச் சொல்லி அச்சுறுத்துவார்கள்.
இப்படி சட்டை கசங்காமல் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் எடுத்துக்கொண்டு போன பணம் வாராக்கடன். அது வரும். ஆனால் வராது. இந்த வகையில், மார்ச் 31, 2013 நிலவரப்படி, முதல் 406 வாராக்கடன்களின் மதிப்பு ரூ.70,300 கோடி. முதல் 12 பேர் ரூ.20,000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார்கள். முதல் 50 கடனாளிகள் மட்டும் ரூ.40,000 கோடி பாக்கி வைத்திருக்கிறார்கள். 172 கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பித் தராமல் உள்ளன.
இவர்கள் இந்திய நாட்டின் கனவான்கள் என்று அறியப்படுபவர்கள். சொகுசுக் கப்பல், ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் குழு, சாராய கம்பெனி என செல்வத்தில் திளைக்கும் விஜய் மல்லையா ரூ.2,673 கோடி கடன் பாக்கியுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். ரூ.938 கோடி பாக்கி வைத்திருக்கிற ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிக்கல்சின் ராகவேந்திர ராவ், 2011ல் விருது பெற்றவர். மோசர் பேயர் இந்தியா நிறுவனத்தின் தீபக் பூரி 2010ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் ரூ.581 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். மத்திய ஜவுளி அமைச்சர் கே.எஸ்.ராவ் ரூ.351 கோடி பாக்கி வைத்துள்ளார். இவர்கள் எல்லாம் இன்னும் கூட அரசினரின் பெருமதிப்புடன் அதிகார தாழ்வாரங்களில் குறுக்கும் நெடுக்கும் நடப்பவர்கள். இவர்களால்தான் இந்தியா தொழில் வளர்ச்சி பெற்று சிறப்புற்று விளங்குகிறது என்று அவ்வப்போது விதவிதமான விருதுகளால் கவுரவிக்கப்படுபவர்கள்.
என்ன செய்யலாம் இவர்களை? சாமான்ய மக்கள் வாங்கிய கடனை திருப்பி வாங்குவது போல் இவர்கள் கடனையும் வாங்க வேண்டும். அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்; ஏலம் விட வேண்டும்; பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அவர்கள் பெயர் பட்டியலை வங்கிகளிலும் காவல்நிலையங்களிலும் அறிவிப்புப் பலகையில் நிழற்படத்துடன் காட்சிக்கு வைக்க வேண்டும். வங்கிக் கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
ஆனால், நமது ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? கடந்த அய்ந்தாண்டுகளில் மட்டும் ரூ.11,000 கோடி முதல் ரூ.1,40,000 கோடி வரையிலான வங்கிகளின் லாபம் வாராக்கடனை சரிக்கட்ட, ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் ரூ.2.04 லட்சம் கோடி கடன் வரவே வராது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ரூ.3.25 லட்சம் கோடி வாராக்கடனை நல்ல கடன் என்று மறுகட்டமைப்பு செய்துள்ளனர். அதாவது அவர்கள் திருப்பித் தந்து விட சில வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். வட்டியைக் குறைப்பது, கால அவகாசத்தை நீட்டிப்பது, மிகவும் முக்கியமாக புதிதாகக் கடன் தருவது என்று அந்தக் கடன்கார கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுகிறார்கள்.
பெரிய சாதனை செய்ததுபோல் 2014 பிப்ரவரியில் சிதம்பரம் அறிவித்தார். 2014 - 2015க்கு வங்கி மூலதனத்தை அதிகரிக்க அரசு ரூ.11,200 கோடி வங்கிகளில் முதலீடு செய்யும். 2013 - 2014ல் ரூ.14,000 கோடி அளித்துள்ளது. வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வங்கிகள் நிலைமை மோசமடைவதால், அந்த நிலையில் இருந்து வங்கிகளைப் பாதுகாக்க அரசு நிதி தருகிறது. கார்ப்பரேட் நிறுவனம் பணம் வாங்கி திருப்பித் தர மாட்டான். அதில் வங்கி நட்டம் எதிர்கொள்ளும். அதை அரசு அக்கறையுடன் சமாளிக்கும். ஜனநாயகம்... ஜனநாயகம்...
பெற்றோர்களைக் கொன்றவன், நான் அனாதை அதனால் எனக்கு கருணை காட்டி விட்டுவிடுங்கள் என்று சொன்னதுபோல், நாங்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை, திருப்பிச் செலுத்த கடன் கொடுங்கள் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்கின்றன. ஆட்சியார்கள் கொடுக்கிறார்கள்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் மென்பொருள் இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. அந்த மென்பொருளில் சிக்கல்கள் இருப்பதாகவும் வாராக் கடன்களை சாதாரண கணக்குகளாகக் காட்டுவதாகவும் வங்கி நிர்வாகம் சொல்கிறது. விளங்குமா?
சீனத்தில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் வாராக்கடன் 9.6 பில்லியன் டாலர் (ரூ.62,400 கோடி). இதனால் சீனப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கும் என்றும், சிக்கினாலும், ஏதாவது ஒரு கட்டத்தில், சீனா அதற்கு மூடி போட்டு ஆபத்தை தடுத்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு அப்படி ஏதாவது நடக்குமா? மே 12ல் வங்கி நிர்வாகங்களைச் சந்திக்கவுள்ள சிதம்பரம் மக்கள் பணத்தைப் பாதுகாக்க உருப்படியாக ஏதும் சொல்ல வாய்ப்புக்கள் அரிது.