COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, May 1, 2014

காவிரி அரசியல் பராமரிப்பும் காவிரி நீர்வளம் புறக்கணிப்பும் - மஞ்சுளா


 ‘ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரையையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வந்து வீரநாராணய ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கு கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்தி நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரம் நீர் வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விதை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன....
.....வடகாவேரியில் இருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையில் இருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது, கரைக்கு சேதம் உண்டாகாமல் இருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென் மேற்கு திசையில் இருந்து இருபுறமும் மரவரிசையுடன் வடவாற்றின் புதுவெள்ளம் வந்து வீரநாராயண ஏரியில் கலக்கும் காட்சி சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக்கோலம் போட்டது போல் காணப்பட்டது....’
இந்தப் பத்திகள் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் சொல்லப்பட்டுள்ளவை. 

இன்றைய தலைமுறை ஓடி வரும் தண்ணீரை தீம் பார்க்குகளில் மட்டுமே பார்க்கிறது. தமிழ்நாட்டின் இன்றைய கலாச்சார வெளிப்பாடுகளில் டாஸ்மாக்குக்கு இருக்கும் இடம், நீர் நிலைகளுக்கோ, ஆறுகளுக்கோ இல்லை. ஏனென்றால் இன்று அவை இல்லை. ஆறு என்றால் என்ன என்று அடுத்த தலைமுறை கேட்கும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் ஊடாக இருந்து திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நீர் வளத்தை திட்டமிட்டு அழித்தவர்கள் திராவிட ஆட்சியாளர்கள். கரிகாலனுக்கும் பென்னி குயிக்குக்கும் மணிமண்டபம் கட்டியதில் காட்டிய ஆர்வத்தை, அவர்களால் பாதுகாக்கப்பட்ட நீர்வளத்தை பாதுகாப்பதில் திமுகவோ, அஇஅதிமுகவோ காட்டவில்லை.

அன்று மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போரிட்டார்கள். வென்றார்கள். தோற்றார்கள். திமுக, அஇஅதிமுக ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டின் நீர்வளத்தை பராமரித்து விவசாயத்தை பாதுகாப்பதை விட நீர்வளம் தொடர்பான, குறிப்பாக, காவிரி அரசியலை பராமரிப்பதே முக்கியமானது.

இன்று நமக்கு பொன்னியின் செல்வி உண்டு. ராஜராஜ சோழர்கள் என்று பெருமை பேசுபவர்கள் உண்டு. காவிரி அரசியல் உண்டு. ஆனால் காவிரி நீரில்லை. பாசனம் இல்லை. விவசாயம் இல்லை. காவிரி அரசியலில் இன்று மோடியையும் சேர்த்துக் கொண்டார் பொன்னியின் செல்வி. கர்நாடகம் ஒருபோதும் தண்ணீர் தராது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் அதைச் செய்யாது என்று காவிரி தீர்வுக்கு ஏக போகம் கொண்டாட ஜெயலலிதா முயற்சிக்க, இலங்கை தமிழர் பிரச்சனை மட்டுமின்றி காவிரி பிரச்சனையையும் மோடி தீர்த்து வைப்பார் என்று பாஜக கூட்டணி பேசத் துவங்கியது. இந்த லாவணியின் உட்பொருள், ஒருபோதும் காவிரி நீர் தமிழகத்துக்கு பயன்படும் எந்த நடவடிக்கையையும் திராவிட ஆட்சியாளர்கள், மத்திய ஆட்சியாளர்கள் யாரும் எடுக்கப் போவதில்லை என்பதே.
தேர்தல் பிரச்சாரத்தில் காவிரிப் பிரச்சனை  தீர்வு நோக்கிச் செல்ல தானே காரணம் என்று ஜெயலலிதாவும் மோடி எல்லாம் தீர்த்து வைப்பார் என்று எதிர்த்தரப்பினரும் நடந்த நல்லவை அனைத்துக்கும் தனது ஆட்சியில் நடந்தவை  காரணம் என்று கருணாநிதியும் பேசிக் கொண் டிருந்த நேரத்தில் காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது என்று பலவீனமான குரல் ஒன்றும் கேட்டது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், வீணாகக் கடலில் கலக்கும் கொள்ளிடம் உபரி நீர் மாயனூர் கதவணை மூலம் புதுகை விவசாயத்துக்கு திருப்பி விடப்பட வேண்டும் என்ற தங்கள் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்தனர். இதனால் புதுகையில் உள்ள 5000த்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். மூன்று லட்சம் ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி கிடைக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

இந்த நடவடிக்கை தொடர்பாக பொதுப் பணித்துறையிடம் திட்டம் உள்ளது. அந்தத் திட்டத்தின்படி 250 கி.மீக்கு மேல் கால்வாய் வெட்டப்பட வேண்டும். ஆனால் மாயனூர் கதவணை மூலம் என்றால் 100 கி.மீக்கு மேல் தொடர் கால்வாய் வசதி, வடிமதகுகள், ஏரிகள், கழுங்கிகள், சிறிய அணைக்கட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை 2013 - 2014க்கான தனது கொள்கை விளக்கக் குறிப்பிலும் இந்த 250 கி.மீ கால்வாய் பற்றி பேசுகிறது. ஆனால் திட்டச் செயல்பாடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

காவிரி நீரை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவே பிறந்தவர்கள் போல மாறிமாறிப் பேசி வருகிற அஇஅதிமுக, திமுக ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட எந்த நியாயமும் இல்லை. பருவமழைக் காலங்களில் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் காவிரி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் நேரடியாக வெளியேற்றப்பட்டு கொடியப்பள்ளம் அருகே வீணாக வங்கக் கடலில் கலக்கிறது. 2005ல் 70.96 டிஎம்சி, 2006ல் 42.85 டிஎம்சி, 2007ல் 64.41 டிஎம்சி, 2008ல் 78.15 டிஎம்சி, 2009ல் 65.42 டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடலில் கலந்து வீணாகியுள்ளது. (நாம் கர்நாடகாவிடம் கேட்டுக் கொண்டிருப்பது 199 டிஎம்சி தண்ணீர்!). 2013 ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 தேதிகளில் மட்டும் கீழணை வழியாக 15 டிஎம்சி தண்ணீர் வீணாகி கடலில் கலந்தது. ஆகஸ்ட் 5 அன்று மட்டும் 4 டிஎம்சி காவிரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்தது. காவிரி நீர் இப்படி வீணாக கடலில் கலந்து கொண்டிருந்த நேரத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் காவிரி பற்றிய தீவிர போட்டி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஜெயலலிதாவுக்கு முன்பு ஆட்சி நடத்திய கருணாநிதி கொள்ளிட நீரை  பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி கேட்கவில்லை. கருணாநிதியின் கடந்த கால ஆட்சிகளின் அவலங்களை பட்டியல் போடுவதை பொழுதுபோக்காகக் கொண்ட ஜெயலலிதா அவர் ஆட்சியில் ஏன் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேட்கவில்லை.
சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 12 டிஎம்சி. கொள்ளிடத்தில் வீணாக கடலில் கலந்த நீர் சென்னை நகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்திருக்கும். கடல் நீர் சுத்திகரிப்புத் திட்டம் என்று ஜெயலலிதா தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அரசு குடிநீர் விற்கிறது என்று கொந்தளித்துப்போன ஸ்டாலினும் வீணாகக் கடலில் கலக்கும் நீர் பற்றி கேள்வி எழுப்பவில்லை.

காவிரி அரசியலை பராமரிக்கும் அளவுக்கு மேட்டூர் அணையை திமுக, அஇஅதிமுக ஆட்சிகள் பராமரிக்கவில்லை. மேட்டூர் அணையின் கொள்ளளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 93 ஆயிரம் மில்லியன் கன அடியாக இருந்த கொள்ளளவு, தற்போது 66 ஆயிரம் மில்லியன் கன அடியாகக் குறைந்துள்ளது.

கல்லணைக்கும் கீழணைக்கும் இடையே உள்ள 100 கி.மீ. கொள்ளிடத்தில் கதவணை அமைப்பதன் மூலம் வீணாக கடலில் கலக்கும் இந்த நீரை சேமிக்க முடியும். 7 கதவணைகள் கட்டினால் ஒவ்வொரு கதவணைக்கும் ஒன்றரை டிஎம்சி நீரை சேமிக்க முடியும். இதற்கான திட்டம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இது தவிர கீழணைக்கு கீழ் பகுதியில் நாகை மாவட்டம் குமாரமங்கலம் கிராமத்திற்கும் கடலூர் மாவட்டம் கோ.ஆதனூர் கிராமத்திற்கும் இடையில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுவதன் மூலமும் நீரை சேமிக்க முடியும். இதற்கான திட்ட மதிப்பீடு மற்றும் திட்ட அறிக்கையை பொதுப்பணித்துறை தயார் செய்து சமர்ப்பித்துள்ள போதிலும் திட்டம் துவங்கப்படவில்லை.

வீராணம் ஏரி ஒன்றரை டிஎம்சி கொள்ளளவு கொண்டது. மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீர்தான் இதன் ஆதாரம். இதன் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகள் வீராணத்தின் துணை ஏரிகள். இந்த ஏரிகளுக்கும் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கும் வீணாகிப் போகும் காவிரி நீர் கிடைக்க 1936லேயே கீழணை கட்டப்பட்டது. வீராணம் ஏரி நிரம்பியதும் உபரி நீர் இந்த ஏரிகளுக்குச் செல்லும். வாலாஜா ஏரியில் இருந்து 15,000 ஏக்கர் நிலத்துக்கும் பெருமாள் ஏரியில் இருந்து 10,000 ஏக்கர் நிலத்துக்கும் பாசனம் கிடைக்கிறது. இந்த இரண்டு ஏரிகளும் பராமரிப்பு செய்யப்படாததால் வாலாஜா ஏரி தூர்ந்து போய்விட்டது. பெருமாள் ஏரி தூர்ந்து போகும் நிலையை எட்டிவிட்டது. என்எல்சியில் இருந்து சுத்திகரிக்கப்படாத சுரங்க நீர் இந்த ஏரிகளுக்கு விடப்படுவதாலும் கரித்துகள் படிந்து ஏரிகள் தூர்ந்து போகின்றன. இந்த இரண்டு ஏரிகளையும் பராமரித்தால் பருவ மழைக்காலங்களில் நீரை சேமித்து முப்போகம் விளையும் 30,000 ஏக்கர் நிலங்களில் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்று பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சொல்கின்றனர்.
பருவமழைக் காலங்களில் பிஏபி தொகுப்பு அணைகளான பரம்பிக்குளம் சோலையாறு அணைகள் நிரம்பி உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

ஆனால், பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் திருமூர்த்தி அணை வறண்டு கிடக்கிறது. நல்லாறு அணைத் திட்டத்தை செயல் படுத்தினால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாவது தடுக்கப்படும் என்று அங்குள்ள விவசாயிகள் சொல்கின்றனர். இந்தத் திட்டம் கேரளாவுடன் தொடர்புடையது. ஒப்பந்தப்படி, கேரள அரசு முடிக்க வேண்டிய பணியை முடிக்கவில்லை, காலதாமதம் செய்கிறது என்று காரணம் சொல்லப்படுகிறது.

2012ல் அமைக்கப்பட்ட காவிரி தொழில் நுட்பக்குழு, தடுப்பணைகளும் கதவணைகளும் கட்ட முன்வைத்த பரிந்துரைகள் மீது இது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

தமிழக விவசாயிகளின் துயர் தீர்க்க, தமிழ் நாட்டுக்குள்ளேயே எடுக்க வேண்டிய நடவடிக் கைகயை எடுக்காமல் கர்நாடகத்தை கைகாட்டி தப்பிக்கிறார்கள் ஜெயலலிதாவும் கருணாநிதியும். நீரில்லாமல், விவசாயம் இல்லாமல், வேலை இல்லாமல் தமிழக மக்கள் வாழ்விழப்பதற்கு வழிவகுக்கிறார்கள். வறட்சி வாட்டிக் கொண்டிகிற புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப் பகுதிகளில் அரசே ஆர்எஸ் பதி தைல மரங்கள் நடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மழை வருவதும் தடுக்கப்படுகிறது. மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், மின்உற்பத்தி நிலையங்கள், பன்னாட்டு இந்நாட்டு தொழிற்சாலைகள்  தமிழ்நாட்டின் பெருமளவு விவசாய நிலங்களை விழுங்கிவிட்டன. மீதமுள்ளவற்றை வறட்சிக்கு தின்னக் கொடுக்க அஇஅதிமுகவும் திமுகவும் திட்டமிடுகின்றன. தண்ணீர் தனியார்மயத்தை ஊக்குவிக்க செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன.

தமிழக விவசாய சமூகம் துன்பத்தில் வாடும்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விவேகமான அணுகுமுறைகள் மற்றும் விடாமுயற்சியின் பயனாக, காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது, இதனால் மாநிலத்தின் அனைத்து வேளாண் பெருமக்களும் குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று பொதுப் பணித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. ஜெயலலிதாவை பொறுத்தவரை, 2023 வரை தமிழ்நாட்டில் எந்த வளமும் ஏற்படாது. (ஜோசியர் சொல்லியிருப்பாரோ?).

2023 தொலைநோக்கு திட்டத்தில் வேளாண் கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.40,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது, அணைகளை, கால்வாய்களை பாசன நிலங்களோடு இணைக்கவும் நீர்நிலைகளை புனரமைக்கவும் ரூ.16,000 கோடி தேவைப்படும், நீர்க்கட்டமைப்புகளை பலப்படுத்தி, அணைகளின் நீர் கொள்ளளவை அதிகப்படுத்துவதன் மூலம் பாசனம் பெறும் பகுதிகளை அதிகரித்து, கிடைக்கப்பெறும் நீரினைப் பாதுகாத்து அனைத்து பகுதிகளுக்கும் பாசன வசதியை உறுதி செய்வதே இப்பணிகளின் முக்கிய குறிக்கோளாகும் என்று 2013 - 2014 ஆண்டுக்கான நீர்பாசனத் துறை அறிக்கை சொல்கிறது. ஆனால், இயற்கையின் மாறுபடும் இயல்பும் அண்டை மாநிலங்களில் இருந்து பெறப்படும் நீரின் அளவும், நமது நீர்வளத்தினை திறம்பட திட்டமிடுதலுக்கு இடையூறாக அமைகின்றன என்றும் அறிக்கை சொல்கிறது. இயற்கை மீதும் அண்டை மாநிலங்கள் மீதும் பழிபோட்டு லட்சக்கணக்கான தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை ஜெயலலிதா ஆபத்தில் தள்ளுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள, 34 ஆற்று வடிநிலங்கள் 17 பெரிய ஆற்று வடிநிலங்களாகவும் 127 உப வடிநிலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன, மொத்த மேற்பரப்பு நீர்வள ஆதாரம், அண்டை மாநிலங்களில் இருந்து பெறப்பட வேண்டிய 275 டிஎம்சி அடி உட்பட 853 டிஎம்சி அடி, தமிழ்நாட்டில் உள்ள 89 அணைகளின் கொள்ளளவு 238.58 டிஎம்சி அடி என்று சொல்கிறது. அப்படியானால், மொத்த மேற்பரப்பு நீர்வள ஆதாரம் என்று தமிழக அரசு குறிப்பிடுகிற நீரை பாதுகாக்க 2013 - 2014 வரை ஏற்பாடோ, நடவடிக்கையோ இல்லை.

2013 - 2014 நிதிநிலை அறிக்கை, காவிரிப் பிரச்சனை, அதனால் வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டிய நிலை பற்றி, முதலமைச்சரின் தொடர்முயற்சியால் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது பற்றி குறிப்பிட்டுத்தான் துவங்குகிறது. ஆனால், அறிக்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அணுகுமுறைகள் என பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் விவசாயமோ நீர்ப்பாசனமோ இடம் பெறவில்லை. சென்ற ஆண்டு நீர்ப்பாசனத் துறைக்காக செய்யப்பட்ட மொத்த ஒதுக்கீடு ரூ.3,314.50 கோடி. இந்த ஒதுக்கீடு மூலம் அடுத்த நிதிநிலை அறிக்கை வரும் வரை கடலில் வீணாகக் கலக்கும் காவிரி நீரைப் பாதுகாப்பது பற்றி தமிழக விவசாயிகள் எழுப்பிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. தவிர, ஆசிய வளர்ச்சி வங்கி உதவியோடு காவிரி பாசனப் பகுதி மேம்பாட்டு திட்டம் ரூ.1,560 கோடி செலவில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.

 அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் ரூ.390 கோடி ஒதுக்கீடு எனச் சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில்தான் புனரமைக்கிறார்களா, வேறெங்காவது புனரமைக்கிறார்களா என்று இன்னும் தெரியவில்லை. வாடுகிற பயிருக்கு நீர் பாய்ச்ச நிலத்தடி நீரை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகள், எப்போது வரும் என்று சொல்ல முடியாத மின்சாரம், வரும் நேரம் பார்த்து காத்துக்கிடக்கிறார்கள்.

மத்திய, மாநில நீர்வளத்திட்டங்களை ஒருங்கிணைத்து ரூ.400 கோடி செலவில் 1.30 லட்சம் ஏக்கர் நிலம் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று தேர்தலுக்கு முந்தைய 2014 - 2015 நிதிநிலை அறிக்கை சொன்னது. நுண்ணீர் பாசனத்தில் என்ன பயிர் வரும்? பணப்பயிர் கிடைக்கலாம். பசிப்பயிர் கிடைக்குமா? நீர்ப்பாசனத்துறைக்காக மொத்த ஒதுக்கீடு ரூ.3,669.79 கோடி என்றும் சொல்லப்பட்டது. மேலும், அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில் உலக வங்கி உதவியோடு 104 அணைகளை புனரமைக்க ரூ.329.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டது. இந்த ஆண்டாவது வீணாகக் கடலில் கலக்கும் காவிரி நீர் பாதுகாக்கப்படுமா?

கர்நாடகக் காவிரி, அரசியல் ஆக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்க்கையை இருள் சூழ்ந்திருக்கும் தமிழ்நாட்டில், வங்கக்கடலில் வீணாகக் கலக்கும் காவிரி, அரசியல் நிகழ்ச்சிநிரலில் முன்வந்தாக வேண்டும்.

Search