05 மே 2020
கம்யூனிஸ்ட் கட்சி
இடது தொழிற்சங்க மய்யம்
தோழர் எஸ்.கோவிந்தராஜு அவர்களுக்கு செவ்வஞ்சலி
அவரை
ஆசிரியர் என்றுதான் அழைப்போம். ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கத்தில்,
குறிப்பாக, ஆசிரியர்களை அமைப்பாக்குவதில் அவரது பங்கு சிறப்பானது. அரசின்
நல்லாசிரியர் விருது பெற்றுள்ள அவர், மாணவர்களிடமும், தொழிலாளர்களிடமும்
கூட நல்லாசிரியர் விருது பெற்றவராக இருந்தார்.
முற்போக்கு
சிந்தனையும், போராட்டங்கள் மீது விருப்பமும் மரியாதையும் கொண்ட அவர்,
ஆசிரியர் பணியில் இருந்து, கோவை மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை
ஆசிரியராக பணியாற்றபோது ஓய்வு பெற்றபின், மார்ச் 2007ல் பிரிக்கால்
தொழிலாளர் போராட்டம் வெடித்தபோது, களத்தில் செயல்படும் முன்னணிப்
போராளிகளில் ஒருவர் ஆனார். அவரது இணையர் தோழர் மல்லிகா, பிரிக்கால்
தொழிலாளி. ஓய்வு பெற்றுவிட்டார். அவர் கொலை வழக்கு சந்திக்கும் அளவுக்கு
தொழிலாளர் வர்க்க இயக்கத்தோடு பிரிக்க முடியாத பகுதியாக இப்போதும்
தொடர்கிறார்.
அவரது வீடு பிரிக்கால் தொழிலாளர்
போராட்டப் பாசறை ஆனது. 2007 போராட்டத்தில் நூறு நாட்களும் சில ஆயிரம்
பேருக்கு, உணவு அளித்ததில், உணவுப் பொருட்களை சேகரிப்பதில், உணவு
தயாரிப்பதில், உணவு பரிமாறுவதில், வழிகாட்டியும் நேரடியாகவும்
செயல்பட்டார். அவரது வீட்டில்தான் போராட்டக்காரர்களுக்கு உணவு
தயாரிக்கப்பட்டது.
பிரிக்கால் தொழிலாளர்
போராட்டம் தாண்டி, சங்கத்தின் மூலம் அவருக்கு அறிமுகமான, அவருக்கு அடையாளம்
காட்டப்பட்ட, அவர் அடையாளம் கண்ட கம்யூனிச இயக்கத்தோடு, இறுதி வரை இணைந்து
நின்றார். அவரது வீடு மனித நேயமிக்க ஒரு விருந்தினர் இல்லமாக தோழர்களுக்கு
இருந்தது. இயக்கத்தோடு தொடர்புடைய எவருக்கும் அவர் வீட்டுக் கதவுகள்
திறந்திருந்தன. உணவு மேசையில் உணவு இருந்தது. தோழர்கள் அவரது வீட்டில்
வாரக்கணக்கில் தங்க முடிந்துள்ளது.
தோழர் கோவிந்தராஜு
மறைந்துவிட்டார்.
அவரது நினைவுகள் நம்மோடு எப்போதும் இருக்கும்.
தோழர் மல்லிகாவுக்கு, அவரது குடும்பத்தினருக்கு, அவரது பிரிவால் வாடும் தோழர்களுக்கு, இயக்கத்தின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நினைவு போற்றி, செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.
எஸ்.குமாரசாமி