பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்
நூலில் இருந்து மேலும் சில விவரங்கள்
ஏ.ஜி.நூரானி
பகத்சிங் பிறப்பு
பஞ்சாப்
மக்களின் ஒரு பெரிய பகுதியினரின் மனங்களில் கலக உணர்வு இருந்த சூழலில்
புரட்சியாளர்களின் ஒரு குடும்பத்தில் செப்டம்பர் 27, 1907ல் லயால்பூரின்
பங்கா கிராமத்தில் வித்யாவதியின் மகனாக பகத்சிங் பிறந்தார். அன்று அவர்
தந்தை கிஷன் சிங் விவசாய குத்தகை முறையை கால்வாய் கட்டணங்களை
விவசாயிகளுக்குப் பாதகமாக மாற்றியதற்கு எதிராக நடந்த போராட்டத்தை ஒட்டி
லாகூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது, குறிப்பிடத் தக்க
ஒரு போராட்ட ஆளுமையாக இருந்த பகத்சிங்கின் தந்தையின் சகோதரர் மான்டலே
சிறையில் இருந்தார்.
பிள்ளைப் பருவம்
பகத்சிங்
தனது தந்தையின், அவரது சகோதரர்களின் போராட்டங்கள் பற்றி கேட்டுக் கொண்டே
வளர்ந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போர் புரிந்த கதார் கட்சியின்
செயல்பாடு அவர் மனதில் பெரும் தாக்கம் செலுத்தியது. முதல் லாகூர் சதி
வழக்கில், 19 வயதில் தூக்கில் ஏற்றப்பட்ட கர்தார் சிங் சராபா, பகத்சிங்கின்
நாயகராக இருந்தார். ஏப்ரல் 13, 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை
அவரை அமிர்தசரசுக்குச் செல்ல வைத்தது. தியாகிகளின் ரத்தத்தால் நனைந்திருந்த
அந்த புனித மண்ணை முத்தமிட்டு அதன் ஒரு பிடியை வீடு திரும்பும்போது
எடுத்து வந்தார்.
கல்வி
பகத்சிங்,
1921ல் தான் படித்த லாகூர் டிஏவி பள்ளியில் இருந்து விலகி நேஷனல்
கல்லூரியில் சேர்ந்தார். அங்குதான் அவர் தனது வருங்கால தோழர்களான சுக்தேவ்,
பகவதி சரண் ஓரா, யஷ்பால் ஆகியோரைச் சந்தித்தார். அங்கு அவருக்கு வரலாறு
பாட ஆசிரியராக இருந்த பேராசிரியர் ஜெய்சங்கர் வித்யாலங்கர், தமது
மாணவருக்கு உத்தரபிரதேச புரட்சியாளர்களை அறிமுகப்படுத்தினார்.
இளம்பருவம்
பகத்சிங்கின்
தந்தை, திருமணம் செய்யுமாறு பகத்சிங்கை வற்புறுத்தியபோது, பகத்சிங் தமது
தந்தைக்கு எழுதிய கடிதம்: மரியாதைக்குரிய அப்பா, இது திருமணம் செய்வதற்கான
நேரமல்ல. நாடு என்னை அழைக்கிறது. நான் உடல்ரீதியாக, மனரீதியாக, பணரீதியாக
நாட்டுக்கு சேவை செய்ய உறுதி கொண்டுள்ளேன். மேலும் இது நமக்கு ஒன்றும்
புதிதல்ல. நம் குடும்பம் நாட்டுப் பற்று நிறைந்தது. நான் பிறந்த இரண்டு
மூன்று ஆண்டுகளில், 1910ல் உங்கள் சகோதரர் ஸ்வரன் சிங் சிறையில் இறந்தார்.
உங்கள் சகோதரர் அஜித் சிங் அந்நிய நாட்டில் சிறையில் இருந்தார். நீங்களும்
சிறைகளில் நிறைய அனுபவித்துள்ளீர்கள். நான் உங்களது அடிச்சுவட்டில்தான்
துணிந்து நடைபோட முடிவெடுத்துள்ளேன். என்னை மண உறவில் கட்டிப் போட முயற்சி
செய்யாதீர்கள். நான் என் லட்சியப் பயணத்தைத் தொடர, ஆசி வழங்குங்கள்.
பகத்சிங்கின் அரசியல் பயணம்
பகத்
சிங்குக்கு, கான்பூரில் அவர் தந்தையின் நண்பரான அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டியில் உறுப்பினராக இருந்த கணேஷ் சங்கர் வித்யார்த்தி தமது
அச்சகத்தில் வேலை தந்தார். கான்பூரில் பகத்சிங் பதுகேஷ்வர் தத்தை
சந்தித்தார். அவரிடம் வங்க மொழி கற்றார். உ.பி. புரட்சியாளர்களான
சந்திரசேகர ஆசாத், ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி, பிஜோய் குமார் சின்ஹா
ஆகியோருடன் இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசனில் முறைப்படி சேர்ந்தார்.
அதனை செலுத்தபவராக சசீந்திரநாத் சன்யால் இருந்தார். அவர் பனாரஸ் சதி
வழக்கில் எம்.என்.ராய், ராஷ்பிகாரி போஸ் ஆகியோருடன் தொடர்பு
கொண்டிருந்தார்.
டில்லி கூட்டம்
டில்லியில்
செப்டம்பர் 8, 1928ல் ஒரு கூட்டம் நடந்தது. பெரோஷ் ஷா கோட்லா கோட்டையில்
ஒரு மரத்தடியில் பொலீந்திரநாத் கோஷ÷ம் மன்மோகன் பானர்ஜியும் சந்தித்தனர்.
சின்ஹா அழைப்பில், அவர்களோடு குந்தன் லாலும் சேர்ந்து கொண்டார். சற்று
தள்ளி மற்றும் ஒரு கூட்டம் நடந்தது. பகத்சிங், சுக்தேவ், ஜெய்தேவ், சிவ்
வர்மா, பிஜோய் குமார் சின்ஹா, பின்னர் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்)
மாறிய பிரம் தத் அங்கு இருந்தனர். பொலீந்திரநாத் கோஷ÷க்கு பகத் சிங்கை
தெரியாது. மறுநாள்தான் அவருக்கு பகத்சிங்கும் சுக்தேவும் அறிமுகமாயினர்.
மறுநாள்
செப்டம்பர் 9 காலை, சில முக்கிய முடிவுகள் எடுக்க அதே இடத்தில் அனைவரும்
கூடினர். இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன், இந்துஸ்தான் சோசலிஸ்
ரிபப்ளிகன் அசோசியேசன் என்ற புதிய முக்கியத்துவம் வாய்ந்த பெயருடன்
புதுப்பிக்கப்பட்டது. ‘சோசலிஸ்ட்’ என்ற சொல் பகத்சிங் வலியுறுத்தி
சேர்க்கப்பட்டது. புதிய அமைப்பின் மத்திய குழுவுக்கு ஏழு பேர் தேர்வு
செய்யப்பட்டனர். பகத்சிங், சுக்தேவ், பிஜோய் குமார் சின்ஹா, பொலீந்திரநாத்
கோஷ், குந்தன் லால் ஆகியோரோடு, மிகவும் முக்கியமாக, காகோரி வழக்கில்
காவல்துறையிடம் சிக்காமல் தப்பிவந்த சந்திர சேகர் ஆசாதும் இடம் பெற்றார்.
அவர் கூட்டத்துக்கு வரவில்லை.
சுக்தேவ்
பஞ்சாபுக்கு பொறுப்பு, சிவ் வர்மா உ.பி.க்கு பொறுப்பு, பொலீந்திரநாத் கோஷ்
பீகாருக்கு பொறுப்பு என்றும் ராணுவ பிரிவுக்கு சந்திர சேகர ஆசாத் பொறுப்பு
என்றும் குந்தன்லால் ஜான்சியில் உள்ள மத்திய அலுவலகத்துக்கு பொறுப்பு
என்றும் பகத்சிங்கும் பிஜோய் குமார் சின்ஹாவும் பிராந்தியங்களை இணைப்பதற்கு
பொறுப்பு என்றும் முடிவானது. இந்தக் கூட்டம் அடுத்தடுத்து மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்தது. தியாகிகளின் ரத்தமே துளிர்க்கிற
சுதந்திர பயிருக்கு உணவு என தோழர்கள் பிரகடனம் செய்தார்கள்.
முழக்கம்
பகத்சிங்கும்
பதுகேஷ்வர் தத்தும் ஏப்ரல் 2, 1929 அன்று மத்திய சட்ட அவையில் குண்டு
வீசும்போது இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய முழக்கங்கள் இன்குலாப்,
ஜிந்தாபாத்! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வீழட்டும்!
புரட்சி (ஜுன் 06, 1929)
கீழமை
நீதிமன்றத்தில் பகத்சிங்காகிய என்னிடம், ‘புரட்சி’ என்ற சொல்லுக்கு என்ன
பொருள் என கேட்கப்பட்டது. இதோ எனது பதில். ‘புரட்சி’ என்றால் அது ரத்தும்
சிந்தும் மோதலாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது தனிப்பட்ட முறையில்
பழிவாங்குவதும் அல்ல. அது குண்டு அல்லது கைத் துப்பாக்கியை வழிபடுவது
அல்ல. நாங்கள் ‘புரட்சி’ என்று சொல்லும் போது, தற்போதைய அமைப்பு அப்பட்டமான
அநியாயத்தின் அடிப்படையிலான அமைப்பு, மாறியாக வேண்டும் என்று சொல்கிறோம்.
சமூகத்தின் மிகவும் அவசியமான பிரிவினராக எல்லா பொருட்களையும் உற்பத்தி
செய்பவர்கள் தொழிலாளர்கள் இருக்கும்போதும், அவர்களது உழைப்பின் விளைபொருளை
சுரண்டல் கூட்டம் சூறையாடுகிறது. அவர்களது அடிப்படை உரிமைகள்
பறிக்கப்படுகின்றன. தானியத்தை விதைத்து வளர்த்த விவசாயி, குடும்பத்துடன்
பட்டினி கிடக்கிறான். ஆடைகளை நெய்து தரும் நெசவாளியிடம் தனது குழந்தைகள்
உடுத்த போதுமான உடைகள் இல்லை. விதவிதமான கட்டுமானத் தொழிலாளர்கள் மாளிகைகளை
கட்டி எழுப்புகிறார்கள். ஆனால், சேரிகளில் தீண்டத்தகாதவர்களாக
இருக்கிறார்கள். சமூக ஒட்டுண்ணிகளான முதலாளிகளும் சுரண்டல் கூட்டமும்,
கோடிகோடியாய் தாறுமாறாய் மனம்போனபடி செலவழிக்கிறார்கள். இந்த படுமோசமான
சமத்துவமின்மையும் கட்டாயத்தின் அடிப்படையில் உருவான வாய்ப்புகளின்
ஏற்றத்தாழ்வும் நிச்சயம் குழப்பத்துக்கு இட்டுச் செல்லும். இந்த நிலைமை
வெகுகாலம் தொடர முடியாது. தற்போதைய சமூக அமைப்பு ஓர் எரிமலை மேல்
அமர்ந்திருக்கிறது.
‘புரட்சி’
என்பதன் மூலம், இவ்வாறு உடைந்து நொறுங்கும் ஆபத்துக்கு உள்ளாகாத ஒரு சமூக
அமைப்பை உருவாக்குவது பற்றி நாங்கள் பேசுகிறோம்; அங்கே பாட்டாளி
வர்க்கத்தின் இறையாளுமை அங்கீகரிக்கப்படும்; உலகக் கூட்டமைப்பு, மானுடத்தை
முதலாளித்துவ சங்கிலிகளில் இருந்தும் ஏகாதிபத்திய போர்களின் அவதியில்
இருந்தும் மீட்கும்.
காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
குண்டு
வெடிப்பு வழக்கில் ஜுன் 12, 1929 அன்று தண்டனை வழங்கப்பட்டது. சிறையில்
அரசியல் சிறைவாசிகள் போல் நடத்தப்பட வேண்டும் என பகத்சிங்கும் தோழர்களும்
காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை 15.06.1929 அன்று துவக்கினர்.
17.06.1929
அன்று பஞ்சாப் சிறைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு, மியான்வாலி மாவட்ட
சிறையில் இருந்து பகத்சிங் ஒரு கடிதம் எழுதினார். ‘டில்லி குண்டு வெடிப்பு
வழக்கில் எனக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், நான் ஓர் அரசியல்
சிறைவாசி என்பது வெளிப்படையாகும். எங்களுக்கு டில்லி சிறையில் சிறப்பு உணவு
தந்தனர். ஆனால், இங்கு வந்ததும் என்னை பொதுவான குற்றவாளி போல்
நடத்துகின்றனர். அதனால் நான், 15.06.1929 காலை முதல் பட்டினிப் போராட்டம்
துவங்கியுள்ளேன். கடந்த இரண்டு மூன்று தினங்களில் டில்லி சிறையில் இருந்ததை
விட எனது எடை 6 பவுண்டு குறைந்துள்ளது.
- சிறப்பு உணவு (பால், நெய், தயிர், அரிசி உட்பட)
- கட்டாய வேலை வாங்கக் கூடாது.
- சோப், எண்ணெய், முகம் மழிக்க வாய்ப்பு.
- வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், கவிதை, நாடகம், கதைகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் பெற அனுமதி.
நான் கோரியவற்றை பரிவாக பரிசீலனை செய்து நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்’.
நாடெங்கும் ஜுன் 30 பகத்சிங் தினமாக அனுசரிக்கப்பட்டது.
காங்கிரஸ்
கட்சியின் பொதுச் செயலாளர் ஜவஹர்லால் நேரு ஜுலை 5 அன்று ஒரு பத்திரிகை
செய்தி வெளியிட்டார். ‘நான் பகத்சிங் மற்றும் தத்தின் பட்டினிப் போராட்டம்
பற்றி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைகிறேன். இருபது நாட்கள் அல்லது அதற்கும்
மேலாக அவர்கள் உணவு உண்ணவில்லை. அவர்களுக்கு கட்டாயமாய் உணவைத் திணிக்கும்
முயற்சி நடப்பதாக கேள்விப்படுகிறேன். அந்த இரண்டு இளைஞர்களும் ஏதாவது தவறு
செய்திருக்கலாம்; ஆனால், இந்தியர் எவரும் அவர்களது மகத்தான துணிச்சலை
போற்றி மதிக்காமல் இருக்க முடியாது. அவர்களது, இந்த மகத்தான மற்றும் தாமாக
அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தின்போது, நம் இதயங்கள் அவர்களுக்காக துடிக்க
வேண்டும். அவர்கள் சுயநலத்தோடு பட்டினிப் போராட்டம் நடத்தவில்லை. அரசியல்
சிறைவாசிகள் நிலைமை முன்னேற போராடுகிறார்கள்.
நாட்கள்
செல்லச் செல்ல, நாம் இந்த கடுமையான சோதனையை ஆழ்ந்த கவலையுடன் கவனிக்க
வேண்டும். தங்களது கடுமையான போராட்டத்தில் நமது வீரமிக்க சகோதரர்கள் வெற்றி
பெறுவார்கள் என்று நாம் நம்புவோம்’.
பகத்சிங்
மற்றும் தத் துவக்கிய பட்டினிப் போராட்டத்தில், பிறகு மற்ற தோழர்களும்
கலந்துகொண்டனர். அது பற்றி அஜய்குமார் கோஷ் நினைவு கூருகிறார். ‘பத்து
நாட்கள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. நாங்கள் அனைவரும் தனித்தனி செல்களில்
(அறைகளில்) இருந்தோம். பசி அதிகரித்தது. அதனோடு பலவீனமும் வந்தது. ஒரு
வாரத்துக்குப் பின் சிலர் படுத்த படுக்கையாயினர். விசாரணை தொடர்ந்ததால்,
அவர்களால் விசாரணையின்போது, நீதிமன்றத்தில் அமர்வதே சிரமமாக இருந்தது.
ஆனால், எங்கள் துவக்க பயம் போய்விட்டது. பட்டினிப் போராட்டம், அப்படி
ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. ஆனால், நிஜமான போராட்டம் பிறகுதான் வரவுள்ளது
என எங்களுக்குத் தெரியவில்லை’.
‘பத்து
நாட்களுக்குப் பிறகு உணவை கட்டாயமாகத் திணித்தார்கள். முரட்டுத் தோற்றம்
கொண்ட வலுவான உடல்வாகு கொண்ட தண்டனை சிறைவாசிகளான காவலர்களுடன்
மருத்துவர்கள் ஒவ்வொரு செல்லாக வந்தார்கள். பட்டினிப் போராட்டம் நடத்துபவரை
ஒரு பாயில் தூக்கிப் போடுவார்கள். ரப்பர் குழாயை கட்டாயமாக அவர் மூக்கில்
நுழைப்பார்கள். அதன் வழியே பாலை ஊற்றுவார்கள். பலம் கொண்டு எதிர்ப்போம்.
ஆனால் முதலில் எந்தப் பயனும் இருக்காது. அவர்கள் எங்களை
தோற்கடித்துவிட்டதுபோல் இருந்தது. பட்டினிப் போராட்டம் மேலும் தீவிரமானதாக,
உறுதியானதாக மாறியது. விரைவில் மருத்துவமனை நிறைந்தது. நீதிமன்ற
நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மருத்துவர்களை முறியடிக்க நாங்கள் பல
வழிமுறைகளை கையாண்டோம். கிஷோரிலால் சிவப்பு மிளகாயையும் சுடுதண்ணீரையும்
விழுங்கியதால் தொண்டை புண்ணானது. அப்போது குழாயை நுழைத்தால் கடுமையான
இருமல் வந்து மூச்சு திணறி இறந்து விட வாய்ப்பிருந்ததால் குழாயை
எடுத்துவிடுவார்கள். நான் கட்டாயமாய் உணவு திணிக்கப்பட்ட பிறகு, ஈயை
விழுங்கி வாந்தி எடுப்பேன். இந்த முறைகள் மருத்துவர்களுக்கு தெரிந்து
காவலர்களை போட்டார்கள்’.
‘எங்களை எப்படியாவது
முறியடிக்க வேண்டும் என்பதற்காக சிறை அதிகாரிகள் செல்களில் இருந்த
தண்ணீருக்குப் பதிலாக பாலை வைத்தார்கள். இது மிகமிகக் கொடுமையானது. ஒரு
நாளைக்குப் பிறகு தாங்க முடியாத தாகம் எடுத்தது. தண்ணீர் தேடி நான் பானையை
நோக்கி எனது உடலை இழுத்துச் சென்றபோது அதில் பால்தான் இருந்தது. கோபம்
தலைக்கேறியது. நான் பானையை சுவரில் வீசினேன். பானை உடைந்து காவலர் மீது
பால் சிந்தியது. அவர் பயந்து திகைத்துப் போனார். எனக்கு பைத்தியம் பிடித்து
விட்டதா என்று கூட நினைத்தார். அவர் நினைத்தது சரியல்ல என்றும் சொல்ல
முடியாது‘.
‘கிஷோரியும் மற்றவர்களும் இந்த
சித்திரவதைக்கு ஆளாயினர் என்றும் அவர்களும் காவலர்கள் முன் பானைகளை
உடைத்தார்கள் என்றும் பின்னர் கேள்விப்பட்டேன்’.
‘சிறை
அதிகாரி வேறு வழியில்லாமல் எங்கள் செல்களுக்கு தண்ணீர் வர ஏற்பாடு
செய்தார். நான் அந்தத் தண்ணீரை குடித்துக் கொண்டே இருந்தேன். உடல்நலம்
பாதிக்கப்பட்டு ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் வாந்தி எடுத்தேன்’.
திரு.ஜதீந்திரநாத் தாசின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவரால் நகரக் கூட முடியவில்லை. அவர் பேசுவது முணுமுணுப்பாகவே கேட்கிறது. அவர் பெரும் அவதியில் உள்ளார். அவர் மரணத்தில் விடுதலையை எதிர்நோக்குகிறார்.
அரசாங்கம் செப்டம்பர் 2 அன்று இறங்கி வந்தது.
அது, பஞ்சாப் சிறைக் குழு ஒன்றை அமைத்தது. பகத்சிங்கும் தத்தும் தமது 81
நாட்கள் பட்டினிப் போராட்டத்தையும் மற்ற தோழர்கள் 55 நாட்கள்
போராட்டத்தையும் முடித்துக் கொண்டனர். ஜதீந்திரநாத் தாஸ் மட்டும்
போராட்டத்தைத் தொடர்ந்தார். திரும்பவும் இரண்டு தினங்களுக்குப் பிறகு
பகத்சிங், தத் மற்றும் மூவர் ஜதீந்திரநாத்தை நிபந்தனை இல்லாமல் விடுவிக்கக்
கோரி பட்டினிப் போராட்டம் துவங்கினர்.
ஜதீந்திரநாத் செப்டம்பர் 13 அன்று இறந்தார்.
செப்டம்பர்
25 அன்று நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில்
ஒருவரான மவுலானா ஜாபர் அலிகான், ஜதீந்திரநாத் என்ற அந்த இளம்தேசபக்தன்,
தாகூர் போன்ற மகாகவி அல்ல, காந்தி போன்ற புனிதரும் அல்ல, திலக், லாலா லஜபதி
ராய் போன்ற தேசியத் தலைவரும் அல்ல, ஆனால், அவனுக்கு ஓர் இதயம் இருந்தது,
அந்த இதயம் தேசபக்தியால் கனன்று எரிந்தது என்றார். சி.ஆர்.தாசின் இறுதி
ஊர்வலத்தில் கல்கத்தா வீதிகளில் 5 லட்சம் பேர் திரண்டதை அவரிடம் யாரோ
சொல்ல, அது ஏகாதிபத்தியத்தின் இறுதி ஊர்வலம் இந்தியா எங்கும் நடப்பதை
ஏகாதிபத்தியவாதிகளுக்கு நினைவுபடுத்தியது என்று குறிப்பிட்டார். (கூட்டம்
இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கியது).
மத்திய
சட்ட அவையின் உறுப்பினர் ஜெய்கர் செப்டம்பர் 14 அன்று அந்த அவையில்
உரையாற்றும்போது, ஜதீந்திரநாத் பட்டினிப் போராட்டத்தின் 63ஆம் நாள் இறந்தது
பற்றியும் அந்த இறுதி காலம் பற்றியும் உருக்கமாக பேசியபோது, அந்த அவையே
சோகத்தில் மூழ்கியது. ‘அவன் அங்குலம் அங்குலமாக மெதுவாக இறந்தான். அவனது
ஒரு கை உணவின்றி முடங்கிப் போனது. அதேபோல் மறுகையும் ஊட்டமின்றி
சுருங்கியது. ஒரு கால் செயலிழந்தது. மறுகாலும் செயலிழந்தது. இயற்கை அளித்த
விலைமதிப்பில்லாத கண் பார்வை போனது. தலையை சீவும் கில்லட்டின் மூலம்
உடனடியாக கருணையுடன் அவன் உயிர் பறிக்கப்படவில்லை. ஆக்குகிற, அழிக்கிற
இயற்கையைப் போல், மெதுவாக அவனது விழிக்கோள நெருப்பு அணைந்தது. அய்யோ, இந்த
மெதுவான சித்திரவதை எவ்வளவு வலி நிறைந்தது.
பகத்சிங்கும் காந்தியும்
காந்தி
மார்ச் 21 அன்று புதுதில்லியில் ஊடகத்தினரை சந்தித்தார். பகத்சிங்
தொடர்பான கேள்விகளுக்கு, அவரது பதில்கள் வெளிப்படையானவையாகும்.
கேள்வி: லார்ட் இர்வினோடு உங்களுக்கு ஏற்பட்ட உடன்படிக்கையின் சரத்துகளை காங்கிரஸ் தேசிய மாநாட்டில் விவாதிப்பீர்களா?
பதில்:
ஆம். பகத்சிங் தூக்கில் ஏற்றப்பட்டால், கிட்டத்தட்ட இப்போது அது
உறுதியாகிவிட்டது, அது, காங்கிரசில் உள்ள இளையவர்கள் மீது பாதகமான தாக்கம்
செலுத்தக் கூடும். அவர்கள் காங்கிரசை பிளவுபடுத்தவும் முயற்சி செய்யலாம்.கேள்வி: கடைசி நிமிடத்தில் பகத்சிங் காக்கப்படலாம் என்ற எந்த நம்பிக்கையாவது உங்களுக்கு உள்ளதா?
பதில்: ஆமாம். ஆனால் அப்படி நடப்பது மிகவும் கடினம்.
இர்வின் உடனடியாக தான் ஏற்கனவே சொன்ன காரணங்களால், காந்தியின் யோசனையை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
காந்தி
பிப்ரவரி 19 அன்று இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தால் பகத்சிங்கின்
உயிரை ஒரு வேளை காத்திருக்க முடியும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக
மாற்றுவது இரு தரப்பினருக்கும் ஒத்துப்போகக் கூடிய விசயமாக
இருந்திருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சியாளர் விருப்பப்படி, பகத்சிங்கை அரசியல்
வெளியில் இருந்து ‘வெளியேற்றி’ இருக்க முடியும். பகத்சிங் உயிர்
காக்கப்பட்டு நாட்டு மக்கள் உணர்வும் ஆறுதல் அடைந்திருக்கும். ஆனால்,
மார்ச் 19 அன்று வைசிராயுடன் பேசியபோது, மார்ச் 20 அன்று உள்துறை
செயலருக்கு கடிதம் எழுதியபோது, காந்தி பகத்சிங் மரண தண்டனை விசயத்தில்
தமக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதாகக் காட்டவில்லை. மார்ச் 23 அன்று மிகவும்
தாமதமாக, தாம் வைசிராயிடம் வைத்த தண்டனை குறைப்பு வேண்டுகோளை வைசிராய்
ஏற்பார் என நம்ப, காந்திக்கு எந்தக் காரணமும் இல்லை.
மண்மத்நாத்
குப்தா எழுதினார்: ‘காந்தி எமர்சனுக்கு எழுதிய கடிதப்படியே, நேரு, போஸ்
உள்ளிட்ட மொத்த நாடும் இந்த மூன்று இளைஞர்களின் தூக்குதண்டனை தொடர்பாக
கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாடு காந்தியிடம் இல்லை.
பகத்சிங்கின் இறுதி முறையீடு - சில பகுதிகள்
- பிரிட்டிஷ் தேசத்துக்கும் இந்திய தேசத்துக்கும் போர் நடப்பதாகவும் நாங்கள் அந்தப் போரில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
- ஒரு சில ஒட்டுண்ணிகள் இந்தியாவின் பாடுபடும் மக்களையும் இயற்கை வளங்களையும் சூறையாடும் வரை, இந்தப் போர் சூழல் தொடர்ந்து நிலவும். இந்த ஒட்டுண்ணிகள், பிரிட்டிஷ் முதலாளிகளாக, பிரிட்டிஷ் இந்திய முதலாளிகள் கலவையாக, தனித்த இந்திய முதலாளிகளாக இருக்கலாம்.
- இந்தப் போர் வெவ்வேறு நேரம் வெவ்வேறு வடிவம் எடுக்கும். அது பகிரங்கமாக நடக்கலாம். கண்ணுக்குத் தெரியாமல் நடக்கலாம். கிளர்ச்சி நிலையில் நடக்கலாம். வாழ்வா சாவா என சீற்றத்துடன் நடக்கலாம். எங்கள் போராட்டம் ரத்தம் சிந்துவதாக இருக்குமா அல்லது அமைதியானதாக இருக்குமா என்பது அரசின் முடிவுப்படி இருக்கும். நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தப் போர் எங்களோடு துவங்கவுமில்லை. எங்கள் மரணத்தோடு முடியப் போவதுமில்லை.
- நாங்கள் போரில் சிறைபட்டவர்கள். ஆகவே, எங்களை தூக்கிலிடுவதற்குப் பதிலாக, சுட்டுக் கொல்லுங்கள்.