பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்
பகத்சிங் என்ற மனிதனும் பகத்சிங் என்ற நிகழ்வும்
ஏ.ஜி.நூரானி
பகத்சிங் தூக்கில் ஏற்றப்பட்டதிலிருந்து அய்ந்து ஆண்டுகள் கழித்து பிரசுரமான நேருவின் தன் வரலாற்றில் மேலே சொன்ன பத்தி இடம் பெறுகிறது. மரியாதை, மறுப்பு, தயக்கம் ஆகியவற்றின் கலவை உணர்வோடு நேரு எழுதியது அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால் இந்த கலவையில் உள்ள எந்த உணர்வையும் அவர் திட்டவட்டமாக சொல்லவில்லை. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான போர் சதியின் ஒரு பகுதியாக, டிசம்பர் 17, 1928 அன்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஜான் போயன்ட்ஸ் சான்டர்சை படுகொலை செய்ததாக சொல்லப்பட்டு, பகத்சிங் மற்றும் சுக்தேவ், ராஜகுரு என்ற இருவரும் கழுத்தில் கயிறு மாட்டி தூக்கிலிடப்பட வேண்டும் என அக்டோபர் 7, 1930 அன்று சிறப்பு தீர்ப்பாயம் தண்டனை வழங்கியது. வாழ்வை இழக்கும் போது பகசிங்கின் வயது 23. சாண்டர்சின் வயது 21.
துரதிர்ஷ்டவசமாக தவறாக அடையாளம் காணப்பட்டவர் கொல்லப்பட்டார். லாகூரில் அக்டோபர் 30, 1928ல் ஓர் ஊர்வலத்தின் போது, லாலா லஜ்பதி ராயை தடியால் தாக்கினார் என அவர்கள் நம்பிய காவல் கண்காணிப்பாளர் ஜே.எ.ஸ்காட்தான் கொல்லப்பட வேண்டும் என அவர்கள் எண்ணி இருந்தனர். அடுத்த சுற்று அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தங்கள் பற்றி பரிந்துரை செய்ய நாடெங்கும் பயணம் செய்ய இருந்த சைமன் ஆணையத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்தது. எந்த நாட்டின் வருங்கால அரசியல் அமைப்பு சட்டம் பற்றி விவாதிக்கப்பட உள்ளதோ, அந்த நாட்டை சேர்ந்த ஒருவரைக் கூட பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த ஆணையத்தில் உறுப்பினராக்கவில்லை. இந்தியா ஒன்றுபட்டு எதிர்த்தது. இத்தகைய ஒற்றுமை அரிதானது என்பது வருத்தத்துக்குரியது.
பெரும்விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய அந்தப் பேரணியில், லாகூரின் புகழ்வாய்ந்த, பிரபலமான பலரும் கூட்டத்தில் சந்தித்தனர். டாக்டர் முகமது ஆலம் தலைமை தாங்கினார். உரையாற்றியவர்களில், பேரணிக்கு தலைமை தாங்கிய மதன் மோகன் மாளவியா, லாலா லஜ்பதி ராய். டாக்டர் ஆலம் மவுலானா ஜாபர் அலி கான், மவுலானா அப்துல் காதிர், ரைசாதா ஹன்ஸ்ராஜ், சர்துல் சிங் சுவேத், கோபி சந்த் பார்கவா, கே.சந்தானம், சத்யபால் மற்றும் மவுலானா தாவுத் கஸ்னாவி ஆகியோர் உரையாற்றினர். சைமன் ஆணையம் அன்று லாகூருக்கு வருவதற்கேற்ப அந்த கூட்டம் ஏற்பாடானது. இந்த கூட்டம், ஏற்பாடு செய்யப்பட்ட பல கூட்டங்களில் ஒன்றாகும். குறிப்பாக, அக்டோபர் 27 அன்று குவாசுர் மவுலானா அப்துல் குவாதிர் தலைமையில் ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் மாளவியா பேசினார். அவரது வாழ்நாளில், உரையாற்றும் திறமைக்காகப் புகழ் பெற்ற சையத் அடாவுல்லா புகாரியும் அந்த கூட்டத்தில் பேசினார்.
அக்டோபர் 30 நடந்த ஆர்ப்பாட்டம், லாகூர் கண்ட, ஒரு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டம் ஆகும். ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள கார்களில் சர் ஜான் சைமனும் அவரது சக உறுப்பினர்களும் ஏறும் போது, தங்களது எதிர்ப்பு உரத்து அவர்கள் காதுகளில் விழும் என்ற நம்பிக்கையுடன், பேரணியினர் இரும்பு வேலி தடுப்புக்கள் முன் நின்றுவிட்டனர். அழைக்கப்படாமல் வருகை புரிந்தவர்களுக்காக அவர்கள் காத்திருந்தபோது, புகாரி கூட்டத்தினரை மெய்மறக்க வைத்திருந்தார்.
ஸ்காட் அன்று மிகுந்த எரிச்சலுடன் இருந்தார். டிரிப்யூன் பத்திரிகையின் மூத்த உதவி ஆசிரியர் பியாரே மோகன் தாத்தரேயா பத்திரிகையாளருக்கான இடத்திற்குச் சென்ற போது, அவரது பத்திரிகையாளர் நுழைவுச் சீட்டு உண்மையானதல்ல என்று சொல்லி அவரைப் பிடித்து தள்ளினார். பல மாதங்கள் நடந்த விசாரனைக்கு பிறகு, ஜி.டிகோஸ்லா, ஒரு சாதாரண தொகைதான் என்றாலும், நஷ்ட ஈடு தரவேண்டும் என்ற துணிச்சலான தீர்ப்பு தந்தார். அத்தகைய முன்மாதிரிகள் பின்பற்றப்பட வேண்டியது, இன்றைக்கு மிகவும் தேவை.
ஸ்காட், எந்தத் தூண்டுதலும் இல்லாமல், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான காவல் துறை தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். அவர் லஜபதிராயை தனிக் கவனத்துடன் குறிவைத்தார். லஜபதிராய்க்கு மார்பிலும் உடலின் பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அவர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்ததிற்குச் சென்றபோது, காயங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன. ‘பஞ்சாப் சிங்கம்’ நவம்பர் 17, அன்று இறந்தார். மரணச் செய்தி பரவ, நாடு அதிர்ச்சியில் உறைந்தது.
இது பற்றி, இங்கிலாந்து மக்களவையில், தொழிலாளர் கட்சி மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியாவுக்கான அமைச்சர் லார்ட் வின்டர்டன் அளித்த பதில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக இருந்தது. காலம்சென்ற சி.ஆர்.தாசின் மனைவி வசந்தி தேவி துயரத்துடன் கதறினார்: ‘நான் அவமானத்தால் சிறுமைக்குள்ளாகி, என் உடல் நடுங்குகிறது. இந்த நாட்டின் இளைஞர்களும் ஆண்மையும் இன்றும் இருக்கிறதா? இந்த சம்பவத்தின் அவமானத்தையும் சிறுமைபடுத்துதலையும் அவர்கள் உணர்கின்றனரா? இந்த நாட்டின் ஒரு பெண் ஒரு தெளிவான பதில் வேண்டும் எனக் கேட்கிறேன்’.
ஒரு மனிதன் பதிலுடன் தயாரானான். கைது வாரண்ட் இருந்ததால் வெளிப்படையாக பங்கேற்க முடியாவிட்டாலும் அக்டோபர் 30 நிகழ்ச்சியின் முதன்மையான அமைப்பாளர்களில் பகத்சிங்கும் ஒருவர். லாலாவின் மரணத்துக்கு ஸ்காட்டைக் கொன்று பழிவாங்க, பகத்சிங் முடிவு செய்தான். சம்பவம் நடந்த சில மணிநேரம் கழித்தே, பகத்சிங்குக்கும் ராஜகுருவுக்கும், இறந்தது ஸ்காட் அல்ல, அவரது இளைய அதிகாரியே எனத் தெரிந்தது. சுவரொட்டிகளில், ஸ்காட் பெயருக்குப் பதில் சாண்டர்ஸ் பெயர் மாற்றப்பட்டது. ‘சாண்டர்ஸ் இறந்து விட்டார். லாலாஜிக்கு பழிவாங்கிவிட்டோம்’.
நேரு நினைவு கூர்ந்தார்: ‘பகத்சிங், பயங்கரவாத நடவடிக்கையில் மக்கள் செல்வாக்கு பெறவில்லை, மாறாக லாலா லஜபதி ராயின் கவுரவத்தை, அதன் மூலம் தேசத்தின் கவுரவத்தை மீட்டதற்காக, மக்கள் செல்வாக்கு பெற்றார். அவர் அடையாளச் சின்னம் ஆனார். அந்த செயல் மறக்கப்பட்டது. அடையாளச் சின்னம் நின்றது. சில மாதங்களில் பஞ்சாபின் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும், அதைவிட சற்று குறைவாக என்றபோதும், மொத்த வட இந்தியாவிலும் பகத்சிங்கின் பெயர் ஒலித்தது. பகத்சிங் பற்றி எண்ணிலடங்காத பாடல்கள் பிறந்தன. அந்த மனிதர் மக்கள் மத்தியில் பெற்ற செல்வாக்கு வியக்கத்தக்கதாக இருந்தது’.
பகத்சிங் தான் பெற்ற அந்த புகழோடு திருப்தி அடைந்து நிற்கவில்லை. துப்பாக்கியிலிருந்து அவர் குண்டுக்குச் சென்றார். 1929, ஏப்ரல் 28ல் பகத்சிங்கும் பதுகேஷ்வர் தத்தும் மத்திய சட்டப்பேரவை அமர்வு கூடியிருந்தபோது, அந்த அவையின் மீது, ஆளுக்கொரு குண்டு வீசினர். பிரசுரங்களை வாரி இறைத்தனர். எவரையும் கொல்லும் நோக்கம் இல்லை. எவரும் கொல்லப்படவில்லை. அவையின் ஆறு உறுப்பினர்கள் காயம் அடைந்தனர். நோக்கம் செய்தி சொல்வதாக மட்டுமே இருந்தது. அதனால்தான் பகத்சிங் தன் துப்பாக்கியிலிருந்து யாரையும் குறிவைக்காமல் இரண்டு முறை சுடுவது நடந்தது. தாங்கள் தப்பிப்பதை இழிவாகப் பார்த்தனர். அதனால் தயாராக, கைதாக இடம் தந்தனர்.
நவீன பயங்கரவாதிகளின் அளவுகோல்கள்படி, இரண்டு நடவடிக்கைகளுமே வியக்கத்தக்க விதம் திறன் குறைவானவை. உதாரணமாக, சான்டர்ஸ் படுகொலைக்கு பின் லாகூரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பகத்சிங் கையெழுத்தில்தான் இருந்தன. துணிச்சல் வாய்ந்த அந்த சட்டபேரவை நடவடிக்கை இல்லாவிட்டால், பகத்சிங் வெற்றிகரமாக காவல்துறையிடம் பிடிபடாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால் சட்டபேரவை குண்டுவீச்சுக்குப் பின் கைப்பற்றப்பட்ட கை துப்பாக்கியிலிருந்து சான்டர்ஸ் மீதான குண்டுகள் பாய்ந்தன என பின்னர் நிருபிக்கப்பட்டது. ஜ÷ன் 12, 1929ல் பகத்சிங்குக்கும் தத்துக்கும் நாடுகடத்தல் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு மாதம் கழிந்தபின் சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணை லாகூரில் துவங்கியது.
ஆனால் அவர்கள், இன்று துப்பாக்கி தூக்குபவர்களைக் காட்டிலும் குறைவான திறமை கொண்டிருந்தார்கள் என்றாலும், அவர்கள் கூடுதல் லட்சிய வேட்கை உடையவர்களாக, தனிமனித அறங்களை, ஒழுக்க விதிகளை தம் சொந்த வாழ்க்கையில் கறாராக பின்பற்றுபவர்களாக இருந்தனர். பகத்சிங்கின் அப்பழுக்கற்ற பரிசுத்தமான வாழக்கை, உயர்ந்த தொலைநோக்கு லட்சியம், நம்ப முடியாத அளவுக்கான சுயநல மறுப்பு ஆகியவற்றால் தான் நேரு, ‘பகத்சிங் என்ற ஒரு நிகழ்வுப் போக்கு’ என்று குறிப்பிட்டார்.
பகத்சிங் பற்றி, பகத்சிங்கின் சம காலத்தவர் கொண்டிருந்த மனப் பதிவுகளை, பிற்கால ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. பகத்சிங் அறிவு தேடல் பண்பு கொண்டவர். மகத்தான படைப்பாற்றல் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை தந்த சிந்தனையாளர். பகத்சிங் சிறைவாசத்தில் எழுதிய, அந்த வியக்கத்தக்க நாட்குறிப்பின் பக்கங்கள், அவரது பண்புகளுக்கு சான்று கூறுகின்றன. லாலா லஜபதி ராய் மரணத்திற்குப் பழிவாங்கும் அவர் உறுதியில், ஒரு விந்தைமுரண் இருந்தது. லாலா லஜபதி ராய் என்ற தலைவரிடமிருந்து பகத்சிங் வெகுதூரம் தள்ளி வந்ததோடு அல்லாமல், சொந்த காரணங்களுக்காக அல்லாமல் 1920களின் நடுபகுதியில், லஜபதி ராயின் அரசியல், முனைப்பான மதவாதத் தன்மை பெற்றதால் அவரை பொது வெளியிலும் கண்டனம் செய்தார். வரலாற்றாசிரியர் டாக்டர் பிபின் சந்திரா பதிவு செய்கிறார்: ‘பிரஞ்சு புரட்சிக்கு எதிராகவும் விடுதலை உணர்வுக்கு எதிராகவும் வோர்ட்ஸ்வொர்த் மாறியதால், அவரைப் பற்றி ராபர்ட் பிரவுனிங் எழுதிய, ‘தொலைந்து போன தலைவர்’ என்ற கவிதையை பகத்சிங் பிரசுரமாக வெளியிட்டார். அந்த கவிதையின் துவக்க வரி, ‘கொஞ்சம் பணத்துக்காக அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்’ என இருந்தது. பின்வரும் வரிகளும் இருந்தன. ‘அவர் கூட இல்லாமலே, நாம் முன்னேறுவோம். அவரது இசைக்கருவியில் இருந்து எழும் பாடல்கள் நமக்கு உற்சாகம் தரட்டும். அவர் பெயரை நீக்கிவிடுங்கள். ஓர் ஆன்மாவின் இழப்பைப் பதிவு செய்யுங்கள்’. இந்த பிரசுரத்தின் ஓரிடத்தில் கூட லாலா லஜபதி ராய் பெயர் இடம் பெறவில்லை. அட்டையில் மட்டும் அவர் புகைப்படம் இருந்தது.
‘பகத்சிங்கும் அவர் தோழர்களும்’ என்ற, தகவல்கள் நிறைந்த கட்டுரையில் டாக்டர் பிபின் சந்திரா எழுதினார்: ‘மதவாதம் நோக்கி லஜபதிராய் திரும்பிய போது, பகத்சிங் அவரை கூர்மையாக விமர்சனம் செய்ய தயங்கவில்லை. 1928ல் அவர் நவஜவான் பாரத் சபாவில், அகாலி தளம் போன்ற மதம் சார்ந்த- மதவாத அமைப்புகளில் இருப்பவர்கள் சேர முடியாது என வெற்றிகரமாக வாதாடினார். பகத்சிங் வாதப்படி மதம், தனிநபர் தொடர்புயை விஷயமாகும். ஆனால் அது அரசியலில் ஊடுருவும் போது, அது மதவாத வடிவம் எடுக்கும் போது எதிர்க்கப்பட்டாக வேண்டும். நவஜவானின் ஆறு விதிகளில் இரண்டு விதிகள் பின்வருமாறு: மதவாத அமைப்புகளோடு, மதவாத கருத்துகளைப் பரப்பும் கட்சிகளோடு எந்த ஒட்டுறவும் இல்லாமல் இருப்பது. மதம் மனிதனின் தனிப்பட்ட நம்பிக்கை எனக் கொண்டு அதன்படி முழுமையாக நடப்பது, பொதுவான சகிப்புத்தன்மை உணர்வை உருவாக்குவது.
கருத்துகளின் வலிமையை பகத்சிங்கால் தீவிரமாக உணர முடிந்தது. அவர் வழக்கை விசாரித்த நீதிபதியிடம், புரட்சியின் வாள் சிந்தனையின் உரைகல்லில் கூர் தீட்டப்படுகிறது என்று அவர் சொன்னார். அந்த அப்பாவி ஆன்மாக்களுக்கு (விவரம் இல்லாதவர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்), அவர் சொன்னது புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது கூட்டாளி, சிவ் வர்மா, அவர் கையில் புத்தகம் இல்லாமல் ஒரு முறையும் பார்த்ததில்லை என்கிறார். பகத்சிங், பிரசுரங்கள் எழுதும் மகத்தான மரபைச் சேர்ந்தவர். 1927ல் ‘மதக்கலவரங்களும் தீர்வும்’ என அவர் எழுதிய பிரசுரத்திற்கு, சமகால பொருத்தப்பாடு உண்டு. ‘1914-1915 தியாகிகள், மதத்தை அரசியலிலிருந்து பிரித்து நிறுத்தினர். மதம் தனிநபரின் தனிப்பட்ட விவகாரம் என்றும் அதில் எவரும் தலையிட அனுமதிக்கக் கூடாது என்றும் நம்பினார். அதே போல் மதம் அரசியலில் ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும். ஏனெனில், அப்படி கலந்தால் ஒரே தளத்தில் சேர்ந்து வேலை செய்ய முடியாது’.
‘இதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கம் ஒருங்கிணைந்தும் ஒன்றுபட்டும் இருக்க முடிந்தது. அதில் தியாகியானவர்களின் எண்ணிக்கையில் சீக்கியர்கள் முதலிடத்தில் இருந்தனர். ஆனால், இந்துக்களும் இசுலாமியர்களும் பின்தங்கவில்லை. தற்போது, களத்தில் எழுந்துள்ள நமது இந்தியத் தலைவர்கள் சிலர், மதத்தை அரசியலில் இருந்து பிரித்து நிறுத்தச் சொல்கிறார்கள். இதுவே, மதவாத நோயை ஒழித்துக்கட்ட சரியான தீர்வாகும். நாம், இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். மதத்தை அரசியலில் இருந்து பிரித்துவிட்டால், மதம் என்ற கோணத்தில் தனித்து நிற்கும் நாம் அரசியல் விவகாரங்களில் ஒன்றுபட்டு நிற்க முடியும். இந்தியாவின் நலம் நாடுபவர்கள் நான் சொல்லும் தீர்வு பற்றி யோசித்து இந்தியா தள்ளப்படும் பேரழிவுமிக்க பாதையில் இருந்து இந்தியாவைக் காக்க முன்வர வேண்டும்’.
மரண தண்டனை வழங்கப்பட்ட அக்டோபர் 7, 1930 அன்றில் இருந்து, தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்ட மார்ச் 23, 1931 வரையிலான மாதங்களை, அவர் படிப்பதிலும் சிந்திப்பதிலும் செலவழித்தார். அவரது வாழ்க்கையின் இறுதி வருடங்கள், கடைசி தருணங்கள் பற்றிய எல்லா சான்றுகளும், அவரது ஆழமான கடப்பாடும் வலுவான உணர்வுகளும், அவரது அறிவாற்றல் வளர்ச்சியை உந்தித் தள்ளினவே தவிர, முடக்கவில்லை என்பதையும், இந்த இயக்கப்போக்கு எப்போதும் வேகம் இழக்கவில்லை என்பதையும் காட்டுகின்றன.
பிப்ரவரி 2, 1931 தேதியிட்ட, அதே நாளில் சிறையில் இருந்து கடத்தி வரப்பட்ட, ‘இளம்அரசியல் ஊழியர்களுக்கான கடிதம்’ பின்வருமாறு சொல்கிறது: ‘சமரசம் செய்துகொள்வது என்பது உயர்வானதல்ல, அது இழிவானது என நாம் பொதுவாகக் கருதுவது சரியல்ல. அரசியல் போர்த் தந்திரத்தில் சமரசம் தவிர்க்க முடியாதது ஆகும். போராட்டம் வளரும்போது, அவ்வப்போது நாம் ஏந்த வேண்டிய அவசியமான ஆயுதமாக சமரசம் இருக்கும். இயக்கம் என்ற கருத்தையே, நாம் நம்முன் எப்போதும் நிறுத்த வேண்டும். நாம் எப்போதும், எந்த நோக்கத்தை அடைய நாம் போராடுகிறோம் என்பது தொடர்பான தெளிவான பார்வையை கொண்டிருக்க வேண்டும்’.
‘நான் ஒரு பயங்கரவாதிபோல் நடந்துகொண்டதாக பார்க்கும்போது தெரிகிறது. என் சக்திக்குட்பட்ட எல்லா ஆற்றலையும் திரட்டிக்கொண்டு எனது புரட்சிகர வாழ்க்கையின் துவக்க நிலை தவிர, எப்போதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. நான் ஒரு பயங்கரவாதி அல்ல என அறிவிக்கிறேன். அத்தகைய வழிமுறைகள் மூலம் நாம் எதையும் அடைய முடியாது என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்’.
வன்முறை நிராகரிக்கப்படவில்லை. பயங்கரவாதம் நிராகரிக்கப்பட்டது. ‘நமது கட்சிக்கு ஒரு ராணுவப் பிரிவு இருக்க வேண்டும். நான் சொல்வதை தெளிவுபடுத்துகிறேன். நான் ஒரு பயங்கரவாதி என்று சொல்லப்படுகிறது. உண்மையில் நான் லட்சியங்களும் கருத்தியலும் கொண்ட ஒரு புரட்சிக்காரன். தூக்கு தண்டனை கைதியாக இருந்தது, ராம்பிரசாத் பிஸ்மில்லை மாற்றியதுபோல், என்னையும் மாற்றிவிட்டது என்று என் மீது குறை சொல்லப்படலாம். ஆனால் அது உண்மையல்ல. நான் அப்போது இருந்த அதே மனிதன்தான். அதே கருத்துகள்தான் கொண்டிருக்கிறேன். நான் நன்கு யோசித்து, நம் நோக்கங்களுக்கு குண்டுகள் உதவாது என்று முடிவெடுத்தேன். இது இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு அமைப்பின் வரலாற்றாலும் நிரூபிக்கப்படுகிறது. குண்டுகளை வீசுவது பயனற்றது மட்டுமல்ல, பாதகமான விளைவுகள் தரக்கூடியதும் ஆகும். அது சில நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பாடுபடும் மக்களை அணிதிரட்டுவதுதான், நமது முதன்மை குறிக்கோளாகும். சிறப்பு தருணங்களுக்குப் பயன்படுத்த ராணுவப் பிரிவு போருக்கான பொருட்களை சேகரிக்கலாம்’.
‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற பிரசுரத்தில் பகத்சிங் எழுதிய மிகவும் பிரபலமான கருத்துகளில், அந்த நெகிழ வைக்கும் பத்தியில், பகத்சிங்கின் மனம் திறக்கிறது.
‘ஏதோ ஒரு நாள் நானும் கூட, நமது திட்டம் பயனற்றது என்ற முடிவுக்கு வருவேனா என அஞ்சினேன். அது எனது புரட்சிகர வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எனது மனத்தாழ்வாரங்களில் ‘படி’ என்ற குரல் எங்கும் ஒலித்தது. எதிர்தரப்பினர் சொல்லும் வாதங்களை சந்திக்கத் தயாராக, படிக்க வேண்டும். உங்கள் நம்பிக்கை முறைக்குச் சாதகமாக வாதாடத் தயாராக, நீங்கள் படித்தாக வேண்டும். நான் படிக்கத் துவங்கினேன். எனது முந்தைய நம்பிக்கையும் உறுதியான கருத்துகளும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கண்டன. வன்முறை சார்ந்த வழிமுறைகள் மீது இருந்த ஒரு சாகசப் பற்று எம் முன்னோர் மத்தியில் நன்கு வெளிப்பட்டது. அதற்குப் பதிலாக, காத்திரமான கருத்துகளை கொண்டு வந்தோம். இனியும் மூடுண்ட நம்பிக்கைவாதமோ, கண்மூடித்தனமான நம்பிக்கையோ கிடையாது. யதார்த்தவாதம் எங்கள் நம்பிக்கை முறை ஆயிற்று. அத்தியாவசியமான தேவையானபோது மட்டுமே பலத்தை உபயோகிக்கலாம்; எல்லா மக்கள்திரள் இயக்கங்களுக்கும் அஹிம்சை தவிர்க்க முடியாத கொள்கையாகும். வழிமுறைகள் பற்றி சொன்னது போதும். எந்த லட்சியத்துக்காகப் போராடுகிறோம் என்பது பற்றி தெளிவாக கருத்துகள் கொண்டிருப்பதே மிகவும் முக்கியமானது. களப்பணியில் மிக முக்கியமான நடவடிக்கைகள் இல்லாததால், உலகப் புரட்சியின் வெவ்வேறு லட்சியங்களைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அராஜகவாதத்தை முன்னிறுத்திய தலைவரான பகுனினைப் படித்தேன். கம்யூனிசத்தின் தந்தையான மார்க்சை கொஞ்சம் படித்தேன். தமது நாட்டில் வெற்றிகரமாக புரட்சியை முடித்த லெனின், ட்ராட்ஸ்கி போன்ற பலர் எழுதியதில் இருந்து கூடுதலாக படித்தேன்’. பகத்சிங் மார்க்சிய நீரூற்றிலிருந்து ஆழமாகப் பருகியது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. 1951ல் இருந்து பத்தாண்டுகளுக்கு மேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அஜய் குமார் கோஷ÷க்கு பகத்சிங்கை நன்கு தெரியும். அவர்கள், லாகூர் சதி வழக்கில் ஒன்றாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.
1945ல் தனது கூட்டாளி பற்றி அஜய் கோஷ் திட்டவட்டமாக எழுதுகிறார்: ‘பகத்சிங் ஒரு மார்க்சிஸ்டாக மாறினார் என்பது மிகையாக இருக்கும். அடிக்கடி நாங்கள் மேற்கொண்ட படிப்பின் மீதான விவாதங்கள் மற்றும் வெளியில் நடக்கும் நிகழ்வுகளின் தாக்கம் ஆகியவற்றால், மக்கள்திரள் இயக்கங்களின் தேவைகளுக்கு, கோரிக்கைகளுக்கு உட்பட்டு, அதனோடு ஒருங்கிணைந்த, அதன் பிரிக்க முடியாத பகுதியாக மட்டுமே ஆயுத நடவடிக்கைகளின் தேவை இருக்க முடியும் என்று பகத்சிங் அழுத்தம் வைக்கத் துவங்கினார்’.
புலனாய்வுத் துறை, பகத்சிங் குழுவினரின் கருத்தியல் மற்றும் அவர்களுக்கு கம்யூனிஸ்டுகளோடு உள்ள உறவு பற்றி கூராய்வுடன் மதிப்பீடு செய்து, அவர்கள் மார்க்சியத்தை பேரார்வத்துடன் பயின்றனர், சோவியத் ஒன்றியத்தின் மேல் மகத்தான மரியாதை கொண்டிருந்தனர் என்று சொன்னது.
ஆனால், புலனாய்வுத் துறை இயக்குநர் ஜே.எம்.எவார்ட், ‘1917 - 1936 இந்தியாவில் பயங்கரவாதம்’ என்ற தனது ஆய்வு கட்டுரையில் பின்வருமாறு எழுதினார்: ‘பயங்கரவாதிகள் கம்யூனிசக் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக கருத முடியாது. அவர்களது ஆதார நம்பிக்கையே தங்களது சொந்த மேட்டுக்குடி வர்க்கத்தை (பத்ரலோக்) ஒழிப்பதாகும். அவர்கள் கம்யூனிச கோட்பாடுகள், குறிப்பாக, நடவடிக்கைகள் தொடர்பான கோட்பாடுகள், தமது கோட்பாடுகளைப் போலவே இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களது பழைய பயங்கரவாத வழிமுறைகள் மூலம் அல்லாமல் கம்யூனிசத்தின் மூலம் மக்கள் எழுச்சியை நெருங்கிச் செல்ல முடியும் என பொருத்தமில்லாத விதத்தில் நம்புகின்றனர். மறுபக்கம், கம்யூனிஸ்ட் கட்சி மேட்டுக்குடி (பத்ரலோக்) பயங்கரவாதிகளை, அவர்கள் சொல்வதை வைத்து, இப்போதோ பிறகோ ஏற்பார்கள் என நம்பவும் காரணமில்லை. ஆனால், இரண்டு கருத்தோட்டங்களின் இணைப்புக்கு அல்லது, புரட்சிகர லட்சியவாதத்துக்கு கம்யூனிசத்தில் இடமுண்டு’.
அந்த இளம் வயதில், நன்கு கற்க வாய்ப்புகள் பெற்றிருந்த பகத்சிங், அப்போது மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் இறுதியில் தமது லட்சியங்களை அடைய என்ன செய்திருப்பார் என்று ஊகிக்க மட்டுமே முடியும். அவரோடு சில மாதங்கள் மட்டுமே பழக வாய்ப்பு கிடைத்த அவரது எல்லா தோழர்களும், அவரது மன உறுதி, குண இயல்பு பற்றி சான்று கூறுகின்றனர்.