COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, May 9, 2020

பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்

மத்திய சட்ட அவையில் ஜின்னா உரை

ஏ.ஜி.நூரானி

(பகத்சிங் மற்றும் பகத்சிங்கின் தோழர்கள் மீதான வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, சிறையில் அரசியல் சிறைவாசிகள் போல் கவுரவமாக நடத்தப்பட வேண்டும், விசாரணையின் போது, கை விலங்குகள் போடக் கூடாது என அவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் நீதிமன்றத்துக்கு வரவில்லை. குற்றவியல் நடைமுறை சட்டப்படி, குற்றம் சுமத்தப்பட்டவர் இல்லாமல் அவர்களுக்கு எதிரான சாட்சியம் பதிவாகக் கூடாது. இந்த சிக்கலை கடப்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், குற்றம் சுமத்தப்பட்டவர்கள், சிறைவாசத்தின் போது, தாமாகவே விசாரணைக்கு வராமல் இருந்தால், அவர்கள் முன்னிலையில் இல்லாமலேயே, சாட்சியம் பதிவு செய்யலாம் என்று ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வர முயற்சி செய்தது. அதன் மீது அந்த அவையில் இந்திய உறுப்பினர்கள் பலர், எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர். அவற்றில் ஆகச் சிறந்த ஓர் உரையான ஜின்னாவின் உரையில் இருந்து சில பகுதிகள் தரப்பட்டுள்ளன)

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அனுதாபமும் அவர்களை மெச்சிப் புகழ்வதும் இருக்குமானால், அது, அவர்கள் அரசாங்க முறைமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அளவில்தான் என்று நான் சொல்லும்போது, மக்களின் பெரும்பகுதியினர் சார்பாக நான் பேசுவதாக கருதுகிறேன். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை; அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களது நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தந்தோம், பாராட்டினோம் என்று பொருளாகாது....

நான் எதிர்கொள்ளப்போகும் கடைசி பேச்சாளர், பட்டினிப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த மசோதாவை நிறைவேற்றுவதுதான் ஒரே வழி என்று தனது இறுதி குறிப்புகளில் சொன்னபோது, தனது வாதங்களை கைவிட்டுவிட்டார்.
ஒரு மனிதர் அய்ரோப்பிரோ, இந்தியரோ யாராக இருந்தாலும் - எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு. நியோகி முன்வைத்த விவரிப்பை அவர் ஏற்றுக்கொண்டார் - ஒருவர் தொப்பி அணிகிறார் என்றால், இந்த சிறை விதிகளைப் பொறுத்தவரை அவர் அய்ரோப்பியர்தான். அப்படியிருக்க, இந்த சிறைக்குள் நடத்தப்படும் விதம் பொறுத்தவரை, தொப்பிகளும் மேற்கத்திய உடைகளும் அணிந்துகொள்ளும் பகத்சிங்கையும் தத்தையும், நீங்கள் ஏன் அப்படி நடத்தக்கூடாது?

இங்கு படிக்கப்பட்ட அவர்கள் அறிக்கையில் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இதுதான் அவர்கள் சொல்வது:

பகத்சிங் மற்றும் தத் ஆகிய நாங்கள், டில்லி சட்டமன்ற குண்டு வெடிப்பு வழக்கில் 19 மே 1929 அன்று, ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படுவது என்ற தண்டனை பெற்றவர்கள். டில்லி சிறையில் நாங்கள் விசாரணைக் சிறைவாசிகளாக இருந்த வரை நாங்கள் நல்லவிதமாக நடத்தப்பட்டோம்; எங்களுக்கு நல்ல உணவு தரப்பட்டது. ஆனால் டில்லி சிறையில் இருந்து மியான்வலி சிறை மற்றும் லாகூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு,-
கடைசியாக பேசிய மதிப்பிற்குரிய உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் பஞ்சாப் கொடூரமான ஓர் இடம் போல் தெரிகிறது....

மியான் முகமது ஷா நவாஸ் (மேற்கு மத்திய பஞ்சாப்): அங்கெல்லாம் போக வேண்டாம்.

ஜின்னா: நான் போக மாட்டேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்...

சாதாரண குற்றவாளிகள் போல் நாங்கள் நடத்தப்படுகிறோம்.
நிச்சயமாக, அய்யா, பஞ்சாப் அரசாங்கம் ராஜதந்திரத்துடன் செயல்பட்டிருந்தால், பஞ்சாப் அரசாங்கத்துக்கு மூளை இருந்திருந்தால், இந்தப் பிரச்சனைக்கு மிகவும் எளிதாக நீண்ட காலம் முன்பே ஒரு தீர்வு பிறந்திருக்கும். ஆனால், அய்யா, இது ஒரு முக்கிய பிரச்சனை. நான் இதை  மேலும் பரிசீலனை செய்யும்போது, மேலும் பகுப்பாய்வு செய்யும்போது, இந்தப் பிரச்சனை ஒரு போர்ப் பிரகடனம் என்பது தெரிகிறது. பஞ்சாப் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, குற்றம் சுமத்தப்பட்டவர்களை விசாரணைக்குட்படுத்தி, ஒரு நீதித் தீர்ப்பாயத்தில் அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் எண்ணத்தையும் தாண்டி, அரசாங்கம் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க விரும்புகிறது.

அரசாங்கத்துக்கு பின்வரும் மனநிலை இருப்பதாக எனக்குப் படுகிறது. ‘நாங்கள் எல்லா சாத்தியமான வழிகளிலும் எல்லா சாத்தியமான முறைகளிலும் நீங்கள் தூக்கு மேடைக்குச் செல்வதையோ, ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படுவதையோ உறுதி செய்வோம். இடைப்பட்ட காலத்தில் உங்களை கண்ணியமான மனிதர்களாக நடத்த மாட்டோம்’.

‘ஆனால், நான் ஒன்று கேட்கலாமா, நீங்கள் யாரோடு போர் புரிகிறீர்கள்? சில குற்றங்கள் செய்துள்ளதாக நீங்கள் சொல்லியுள்ள இந்த இளைஞர்களிடம் என்ன வசதிகள் உள்ளன? நீங்கள் அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளீர்கள். உரிய விசாரணைக்குப் பிறகு தண்டனை வாங்கித் தர விரும்புகிறீர்கள். ஆனால், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு வாழ்க்கையின் அடிப்படையான சில தேவைகள் தொடர்பான கோரிக்கைகளில், நீங்கள் உடனே விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலை எடுத்து, நிச்சயமாக இப்படி ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் பிறகு, லாகூர் வழக்கு சிறைவாசிகளைப் பொறுத்தவரை, அவர்கள் நிச்சயம் அரசியல் சிறைவாசிகள். அவர்கள் விசாரணை சிறைவாசிகள்’.

லாகூர் சிறைவாசிகளின் அரசியலும் ஜின்னாவின் அரசியலும் இரு வேறு துருவங்களாக இருந்தாலும், ஜின்னாவுக்கு லாகூர் சிறைவாசிகள் மீது இருந்த அனுதாபம் பகிரங்கமானதாக இருந்தது. ஜின்னா, நீங்கள் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்த விரும்புகிறீர்களா அல்லது அவர்களை துன்புறுத்த விரும்புகிறீர்களா என்று கேட்டார். அதன் பின்பு, அவர், மசோதா பற்றி எடுத்துரைத்தார். ‘நான் காண்கிற வரை, இந்த மசோதாவை மூன்று கோணங்களில் இருந்து பார்க்க வேண்டும். முதலாவதாக, குற்றவியல் நீதி பரிபாலன முறை என்பதில் இருந்தும், இரண்டாவதாக மசோதாவின் அரசியல் நோக்குநிலை அல்லது கொள்கையில் இருந்தும், மூன்றாவதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதில் இருந்தும் பார்க்கப்பட வேண்டும். இதற்கு முன் குற்றவியல் நீதி பரிபாலன முறையில் அறியப்படாத ஓர் இயல்பை கோட்பாட்டுரீதியாக அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதை மரியாதைக்குரிய உள்துறை உறுப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளார் என நம்புகிறேன். அய்யா, இந்த மசோதா கொண்டுவரப் பார்க்கிற அத்தகைய கோட்பாட்டை உலகின் எந்த நாகரிக நாட்டின் நீதிபரிபாலன முறையிலும் காண முடியாது என நான் கருதுகிறேன்...’

‘... இந்த மசோதாவின்படி என்ன நடக்கும் என்ற ஒரு சித்திரத்தை தருகிறேன். விசாரணை நடக்கிற மாஜிஸ்ட்ரேட் முன்பு போய், அரசாங்கம் சொல்லும்: ‘நாங்கள் இதோ சட்டமன்றத்தில் இருந்து ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாமாக எடுக்கிற நடவடிக்கைகளால் நீதிமன்றம் முன்பு வர முடியாமல் போனால், நீங்கள் இனிமேல் இந்த சட்டப்படி அவர்கள் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம்’. மாஜிஸ்ட்ரேட் முன்பு விசாரணை ஒருதலைபட்சமாக நடக்கும். வாய்மொழி, எழுத்து மூலமான சாட்சியம் பதிவாகும். ஆனால், அது குறுக்கு விசாரணை என்ற சோதனையை சந்திக்காது. குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் எழுத்துபூர்வ சாட்சியம், அவர் பார்க்காமலே பதிவாகும். குற்றம் சுமத்தப்பட்டவர் இல்லாமலே குற்றம் சுமத்தப்பட்டவரை அடையாளம் காணப் போகிறீர்களா?’....

இந்த மசோதாவின் கீழ் ஒருதலைபட்சமாக பதிவான சாட்சியம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடம் விளக்கம் தருவதற்கு குற்றம் சுமத்தப்பட்டவர் இருக்கமாட்டார். நான் இந்திய அரசாங்கத்தின் சட்ட உறுப்பினரிடம் இது விசாரணையா அல்லது கேலிக்கூத்தா எனக் கேட்கிறேன்.

சர் பிரஜேந்திர மிட்டர் (சட்ட உறுப்பினர்): இது கேலிக் கூத்தல்ல. குற்றம் சுமத்தப்பட்டவர் தேர்வு செய்தால், அவர் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றம் முன்பு செல்லலாம்.

ஜின்னா: மாட்சிமை மிகுந்த சட்ட உறுப்பினர் எனக்கு ஒரு பதில் தந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அதாவது நீங்கள் அவர்களது பட்டினிப் போராட்டத்தை உடைப்பதற்கு உண்மையில் மசோதா கொண்டு வர விரும்புகிறீர்கள். இந்த குறிப்பான வழக்குக்காக நீங்கள் இந்த அவையில் குற்றவியல் நீதிபரிபாலன முறையில் பொதுவான ஒரு கோட்பாடு வகுக்கும் ஒரு சட்டத்தை உங்களுக்கு வழங்கிக் கொள்ளப் பார்க்கிறீர்கள்; அதனை, லாகூர் வழக்கில் பட்டினிப் போராட்டத்தை உடைப்பதற்கு பயன்படுத்தப் பார்க்கிறீர்கள். இந்த மனிதர்கள் உயிர் துறப்பதற்கும் தயாரான உறுதியோடு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இது வேடிக்கை விசயமல்ல. யார் வேண்டுமானாலும் சாகும் வரை பட்டினி இருக்க முடியாது என்பதை மாட்சிமை மிகுந்த சட்ட உறுப்பினர் உணர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சிறிது நேரம் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்துவிடும். அய்யா, எனது மரியாதைக்குரிய நண்பர் திரு.ஜமந்தாஸ் மேத்தா சுட்டிக்காட்டிய அமெரிக்க வழக்கு தவிர, உலகில் வேறு எங்காவது, குற்றம் சுமத்தப்பட்டவர் பட்டினிப் போராட்டம் நடத்துவதை கேள்விப்பட்டுள்ளீர்களா? பட்டினிப் போராட்டம் நடத்துகிற மனிதனுக்கு ஓர் ஆன்மா இருக்கிறது. அவன் அந்த ஆன்மாவால் செலுத்தப்படுகிறான். அவனது லட்சியத்தில் நியாயம் இருக்கிறது என்று அவன் நம்புகிறான். அவன் இரக்கமற்ற, இழிவான, தீய குற்றம் செய்த ஒரு சாதாரண குற்றவாளி அல்ல.

‘அய்யா, நான் பகத்சிங்கின் நடவடிக்கையை ஒப்புக்கொள்ளவில்லை என்று இந்த மன்றத்தில் சொல்கிறேன். சரியாகவோ, தவறாகவோ, இன்றைய இளைய இந்தியா எழுச்சியுற்றுள்ளது. முப்பது கோடி மக்கள் இருக்கும்போது, அவை தவறு என்று நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும், அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள் என்று நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதை நீங்கள் தடுக்க முடியாது. இந்த ஆட்சிமுறையை, இந்த சபிக்கப்பட்ட அரசாங்க ஆட்சி முறையை மக்கள் வெறுக்கிறார்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத தர்க்கவாதியாக நீங்கள் இருக்கலாம். நான் ஓர் அமைதியான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத மனிதனாக, நிதானமாக உரைகள் நிகழ்த்தி, என் கருத்தை அரசாங்கத் தரப்பு ஏற்குமாறு செய்ய, என் கருத்தின் செல்வாக்கை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்யலாம். ஆனால், வெளியே பல்லாயிரம் இளைஞர்கள் இருப்பதை நினைவில் வையுங்கள். இந்த நாட்டில் மட்டும் இது போன்ற நடவடிக்கைகள் நடக்கவில்லை. வேறு பல நாடுகளிலும் நடந்துள்ளன. இளைஞர்கள் அல்ல, வயதில் மூத்தவர்களே, தேச பக்த உந்துதல்களால் இது போன்ற காத்திரமான குற்றங்கள் புரிந்துள்ளனர். அயர்லாந்தின் பிரதமரான திரு.காஸ்கிரேவ் விசயத்தில் என்ன நடந்தது? பதினைந்து நாட்களுக்கு முன்பு அவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மாட்சிமை மிகுந்த அரசாங்கம் அவருக்கு அழைப்பு விடுத்து, நீங்கள் சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று சொல்லவில்லையா? அவர் என்ன இளைஞரா? காலின்ஸ் பற்றி என்ன சொல்லப் போகிறோம்?’

பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மோதிலால் நேருவின் ஒத்திவைப்பு தீர்மானம் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த அமர்வில், ஜின்னா தமது உரையைத் தொடர்ந்தார். ஜின்னா, எழக்கூடிய முரண்கள் பற்றி சொன்னார். ‘குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இல்லாமலே விசாரணை தொடரும். நான் உள்துறை உறுப்பினரைக் கேட்கிறேன். அது போன்ற வழக்கில், தான் சட்டப்படி நியாயப்படி நடப்பதாக எந்த ஒரு நீதிபதியாவது அல்லது ஜுரியாவது கருத முடியுமா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனே, அரசு தரப்பு நீதிமன்றத்தின் முன் சென்று சொல்ல முடியும்: ‘இது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாமாக மேற்கொண்ட ஒரு செயலாகும். அவரோ, அவர்களோ, வர முடியாத நிலையை தாமாக உருவாக்கிக் கொண்டுள்ளதால் நாங்கள் உங்களிடம் ஒருதலைபட்சமாக விசாரணையை தொடருங்கள் என்று கேட்கிறோம்’.’

பிந்தைய நிகழ்வுகள் நீதித்துறையின் மீது ஜின்னா வைத்திருந்த நம்பிக்கையை பொய்யாக்கின: ‘இப்படிப்பட்ட இயல்பு கொண்ட ஒரு விசாரணையை நடத்த, கொஞ்சமாவது நீதி வழங்கும் மனம் கொண்ட, கொஞ்சமாவது நியாய உணர்வு கொண்ட எந்த ஒரு நீதிபதியும் ஒப்புக்கொள்ள மாட்டார், நடுக்கம் இல்லாமல், மனசாட்சி உறுத்தல் இல்லாமல் மரண தண்டனை வழங்கமாட்டார் என்று நான் சொல்கிறேன். இதுவே, இந்த நடைமுறையின் கீழ் நீங்கள் சட்டமாக்க விரும்பும் கேலிக் கூத்து. நான் சொல்கிறேன், மனச்சாட்சியுள்ள ஒரு நீதிபதி இருந்தால், அவர் வலுவானவராக இருந்தால், அவருக்கு நீதிநெறி சார்ந்த மனமிருந்தால், அவர் சுதந்திரமானவராக இருந்தால், உங்களது இந்த சட்டப் பிரிவுக்கு அப்பாலும் அவர் சொல்வார்: ‘உண்மைதான், சட்டம் அமலாக்கப்பட வேண்டும். ஒருதலைபட்சமாக விசாரணை தொடரட்டும் என்று நான் உத்தரவிட வேண்டும்; ஆனால் இது நீதிமறுப்பு என்பதனால் இதனை நான் ஏற்க முடியாது. அடுத்த உத்தரவுகள் வரை வழக்கை ஒத்தி வைக்கிறேன்’.

அரசு தரப்பை மறுக்க, ஜின்னா, இங்கிலாந்தில் பல நூறாண்டுகளில் சட்டம் அடைந்து வந்த மாற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார். நமது குற்றவியல் நீதிபரிபாலன முறையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் மிகவும் புரட்சிகரமான, இது வரை கேள்விப்பட்டிராத, முன்னுதாரணமில்லாத ஒன்று என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ‘ஆம். விசாரணையில்லாமல், விசாரிக்கப்படும் வரை யாருக்கும் தண்டனை வழங்கக் கூடாது என்பதுதான் கோட்பாடு. ஆனால் அது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்விருப்பப்படி மேற்கொண்ட நடவடிக்கை, அவர் அங்கு சென்று தான் சொல்வதும் கேட்கப்பட வேண்டும் என்று வற்புறத்தவில்லை என்றால் அது அவரது குற்றம்’ என்று உள்துறை உறுப்பினர் சொல்வார் என்று எனக்குத் தெரியும். அய்யா, இது புதிய பிரச்சனை அல்ல. இங்கிலாந்தில் இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது; இது தொடர்பான ஒரு நீண்ட வரலாறு, இதற்குப் பின்னால் இருக்கிறது; சிறைவாசி என்ன சொல்கிறார் என்பதை பதிவு செய்வது தொடர்பாக அந்த நாட்களில் மிகவும் கறாரான நடைமுறை பின்பற்றப்பட்டது என்பதை நீஙகள் பார்க்கலாம். மேலும் வன்மத்தின் காரணமாக சிறைவாசி பேச மறுத்தால், அதாவது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாரா இல்லையா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்படும்போது - அவர் தனது தரப்பை சொல்ல வேண்டும் எனும்போது, அவர் வேண்டுமென்றே வாய் திறக்க மறுத்துவிட்டால், அவர் பேச மறுத்துவிடும் பல வழக்குகள் உள்ளன, பழைய சட்டம் என்ன சொல்கிறதென்றால் - இங்கிலாந்து கூட அதில் முன்னே சென்றுவிட்டது - இந்த பிரச்சனையில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டும் அல்லது சிறையில் அடைக்கப்பட வேண்டும்....
அவர்கள் சித்திரவதை செய்தார்கள். எதற்காக சித்திரவதை? அவர் தனது தரப்பை சொல்ல வேண்டும் என்பதற்காக; அவர் இல்லாமலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த மசோதா மூலம் நீங்கள் அதைத்தான் செய்ய விரும்புகிறீர்கள், அதாவது, அவர் இல்லாமலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். பழையச் சட்டம் பிறகு மாற்றப்பட்டது; ஏனெனில், சித்திரவதை செய்யப்பட்டதால், அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டார்கள்; சித்திரவதையின் வடிவம் மிகவும் குரூரமானதாக இருந்தது; ஸ்டீபனின் குற்றவியல் சட்டத்தின் வரலாறு நூலில் இருந்து உங்களுக்கு படித்துக் காட்டுகிறேன்:

கொடுங்குற்றம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டால், நிறைய அறிவுரைகள் சொல்லப்பட்ட பிறகு, விரிவாகச் சொல்வதானால், அவர் தனது தரப்பை சொல்லும் வரை அல்லது உயிர்விடும் வரை, ஆடையற்ற அவர் முதுகில் கடுமையான பளுவை ஏற்றிய பிறகு, அவர் தாங்கக் கூடிய அளவுக்கு அவர் மீது இரும்பை வைத்த பிறகு, இப்படியே தொடர்ந்து செய்து, கெட்டுப்போன ரொட்டியையும் தேங்கியிருக்கும் தண்ணீரையும் ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி கொடுத்த பிறகு,  அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால், அவர் இல்லாமலே அவர்கள் விசாரணையை நடத்தவில்லை.

நான் சொல்லப் போகும் ஒரு சம்பவம் இதுதான். ஒரு வழக்கில்
எட்வர்ட் 1 ஆட்சியின் துவக்க காலத்தில், தங்களை தாங்களே விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள மறுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு திரு.பைக் சில சாட்சியங்கள் முன்வைக்கிறார்.

ஒரு மிக முக்கியமான, புதிய அல்லது இதுவரை கேள்விப்படாத இயல்புடைய ஓர் அடிப்படை கோட்பாட்டுக்கு இந்த அவை ஒப்புதல் தர வேண்டும் என்று, ஏழு நாட்கள் கூட  முன்னறிவிப்பு தராத இந்திய அரசாங்கம், 1883க்குப் பிந்தைய ஸ்டீபனின் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் ஒரு பதிப்பு கூட தனது நூலகத்தில் வைத்திருக்கவில்லை என்பது விசித்திரமான ஒரு விசயமாகும்.

....1883ஆம் ஆண்டு பதிப்பு தவிர, தரமான நூலான, பாடப்புத்தகத்தின் ஒரு பதிப்பு கூட  உங்கள் நூலகத்தில் இல்லை! ஆக, இப்போது, இங்கு, அவை, மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல.
அரசு தரப்கை கேலி செய்வதில் ஜின்னா தாமதம் காட்டவே இல்லை. சட்டம் பற்றி விவாதித்த அவர், லாகூர் சிறைவாசிகள் விசயத்துக்கு மீண்டும் திரும்பி, விசாரணையின் அரசியல் பின்புலத்தை முன்வைத்தார்.

அய்யா, பட்டினிப் போராட்டத்தை விட கொடூரமான சித்திரவதையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சரியாகவோ, தவறாகவோ, இந்த மனிதர்கள் தங்கள் மீதே இந்தத் தண்டனையை செலுத்திக் கொள்கிறார்கள்; இதனால் உங்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது; அதனால்தான் குற்றவியல் நீதிபரிபாலன முறையின் அடிப்படை கோட்பாடுகளை நாங்கள் கைவிட்டுவிட வேண்டும் என்று சொல்கிறீர்களா? இந்த இளைஞர்கள் இந்தப் போக்கை தொடர்ந்து கடைபிடித்தால் - அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்று நான் அறியப் பெற்றேன் -  என்ன நடக்கும்? முடிவே இல்லாமல் தொடரக் கூடிய விசயமா இது? நிச்சயம் இல்லை. இந்த அவையில் நீங்கள் முன்வைத்த விசயத்தில் எனக்கு திருப்தி இல்லை. சிறைவாசிகளில் சிலர் போராட்டம் நடத்தவில்லை என்று தெரிகிறது. அவர்களது விசாரணை தொடர்ந்து நடக்க வேண்டும், தாமதமாகக் கூடாது என்று நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள், கவலைப்படுகிறீர்கள் என்றால், விசாரணையை பிரித்து பிரித்து நடத்துங்கள். உங்களால் முடிந்தால்.... அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபியுங்கள்.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிரான புகாரை நிரூபிக்க 600 சாட்சிகள் அவசியம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அய்யா, இந்தப் புகாரை நிரூபிக்க 600 பேர் சாட்சிகள் என்று சொல்ல வேண்டியிருப்பது ஒரு திகைப்பூட்டும் விசயமல்லவா? நல்லது. அய்யா, அது ஒரு நகைச்சுவை துணுக்கு போல் தெரியலாம்; இப்படிப் பொருள்படும்படி சொல்லப்பட்ட செய்தியை நான் கேலி செய்கிறேன் என்று கூட தெரியலாம்; ஆனால், பார்த்த மாத்திரத்தில் தெரிவது என்னவென்றால், 600 சாட்சிகளின் சாட்சியங்கள் இல்லாமல் ஒரு புகாரை நிரூபிக்க முடியாது என்றால், அது மிகவும் மோசமான ஒரு வழக்கு. எனவே, இந்த வழக்கை பிரித்து பிரித்து நடத்தும் வாய்ப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.

அய்யா, நீண்ட பட்டினிப் போராட்டத்தால் இந்த இளைஞர்கள் ஆகப்பெரிய சாத்தியமான தண்டனையை தங்களுக்கு தாங்களே கொடுத்துக் கொள்ளும்போது, இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் கவலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.... என்னால் முடிந்த அனைத்து அழுத்ததுடனும் சொல்கிறேன். பழிவாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் நியாயமானவர்கள், பெரும்போக்கு கொண்டவர்கள், இவர்களை கண்ணியமாக நடத்தத் தயாராக இருப்பவர்கள் என்று காட்டுங்கள். அவர்கள் விடுவிக்கப்படுவார்களோ, தண்டனை பெறுவார்களோ, எப்படியாயினும், அவர்களை முறையாக நடத்துங்கள். அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள்? எது அவர்களை கவலைக்குள்ளாக்குகிறது? பஞ்சு மெத்தை வேண்டும் என்று கேட்டார்களா? ஒப்பனை மேசைகள் வேண்டும் என்று கேட்டார்களா? கழிப்பறை உபயோகப் பொருட்கள் வேண்டும் என்று கேட்டார்களா? இல்லை அய்யா. குறைந்தபட்ச அத்தியாவசிய தேவைகள், ஓரளவு மேலாக நடத்தப்படுவது.... இவற்றைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், இந்த சிறிய விசயத்துக்கு நீங்கள் ஏன் கண்ணியமாக ஒப்புக்கொள்ளக் கூடாது?

இது இப்படித்தானே நடக்கப் போகிறது? நீங்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற விரும்புகிறீர்கள்; சட்டப் புத்தகத்தில் இந்த மசோதா இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் தங்கள் பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் இல்லாமலேயே விசாரணை நடக்கும் என்று, இந்தக் சிறைவாசிகளுக்கு ஓர் அறிவிப்பாணை தரப் போகிறீர்கள்; இந்த மிரட்டலால், இந்த சிறைவாசிகள் தங்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அவர் முன்னணர்வு சொன்னது, பின்னர் யதார்த்தமானதை நாம் கண்டோம். சட்டம் மாற்றப்பட்டது. ஆனால் அந்த சிறைவாசிகள் அதன் முன் மண்டியிடவில்லை. ஜின்னா நாட்டின் அரசியல் சூழல் பற்றி பேசினா: ‘இந்த மசோதாவுக்கும் இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ள கொள்கைக்கும் ஓர் அரசியல் அம்சம் இருக்கிறது. சட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மரியாதைக்குரிய உள்துறை உறுப்பினர் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன்.
அய்யா, இது எனக்கு ஒரு பழைய பாரசீகக் கதையை நினைவுபடுத்துகிறது. கெட்டுப் போன ரொட்டி தின்றதால் ஒரு மனிதருக்கு வயிற்று வலி வந்தது. அவர் மருத்துவரிடம் போய் தனக்கு வயிற்று வலி என்று சொன்னார். மருத்துவர் சரி என்று சொல்லிவிட்டு உடனடியாக அவரது கண்களுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். நோயாளி, அவரிடம், நான் சொன்ன வயிற்று வலிக்கும் என் கண்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார். உனக்கு கண்கள் சரியாக இருந்திருந்தால் உனக்கு வயிற்று வலி வந்திருக்காது, நீ கெட்டுப் போன ரொட்டியை தின்றிருக்க மாட்டாய் என்று மருத்துவர் சொன்னார். நான் மரியாதைக்குரிய உள்துறை உறுப்பினரைக் கேட்கிறேன். ‘உங்களுக்கு கண்கள் இருக்கிறதா? உங்களுக்கு கண்கள் இருந்திருந்தால் உங்களுக்கு வயிற்று வலி வந்திருக்காது’. இப்போது நீங்கள் கண்களை திறந்து பார்ப்பீர்களா? நீங்கள் இன்னும் சற்று கூடுதல் கற்பனை வளம் கொள்வீர்களா? உங்களிடம் ஏதாவது ராஜதந்திரம் எஞ்சி இருக்கிறதா? உங்களுக்கு அரசியல் ஞானம் இருக்கிறதா? பிரச்சனையின் ஆணி வேரான காரணத்துக்கு இந்த வழியில் உங்களால் தீர்வு காண முடியாது. நீங்கள் தற்காலிகமாக இந்த விசாரணையை வேண்டுமானால் கடந்து போகலாம். நாம் பிரச்சனையின் உண்மை காரணத்தை காண்போம்.

இந்த அரசாங்கம் வழக்குகள் போடுவதன் மூலம் நடக்கிறது. ஜின்னா கேட்டார்: ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் தம் சொந்த மக்கள் மீது வழக்கு தொடுக்கிற நாகரிக அரசாங்கம் உலகில் எங்காவது இன்று இருக்கிறதா? கடந்த ஆறு, எட்டு மாதங்களாக வருகிற நாளேடுகளை படியுங்கள். வங்கத்தில் வழக்குகள், மெட்ராசில் வழக்குகள், பஞ்சாபில் வழக்குகள், நாடெங்கும் வழக்குகள் என்பதை காண்பீர்கள். இப்படியே சென்றால், நீங்கள் ஒரு புதிய துறையை உருவாக்கி இந்த வழக்குகளை கையாள்வதற்கு கூடுதல் உறுப்பினரை நியமிக்க வேண்டியிருக்கும். யாராவது சிறைக்குச் செல்ல விரும்புவார் என நீங்கள் நினைக்கிறீர்களா? அது என்ன, அவ்வளவு எளிதானதா? நீங்கள் சட்டப்படி தேசத் துரோக உரை என்று சொல்வதன் முழு விளைவுகள் அறிந்து, அதாவது, ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரை சிறை தண்டனை என்பதை அறிந்து, சட்டத்தை மீறி அத்தகைய உரையாற்ற யாராவது விரும்புவார்கள் என்று நினைக்கிறீர்களா? நகைச்சுவையாக, கேளிக்கையாக, வேடிக்கையாக இவ்வாறு செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கண்களை நீங்கள் திறந்தால், உங்கள் ஒவ்வொரு கொள்கைக்கு எதிராகவும் உங்கள் ஒவ்வொரு திட்டத்துக்கு எதிராகவும் கடுமையான எதிர்ப்பு, எங்கும் எதிர்ப்பு உள்ளது என்பதை நீங்களே உணரவில்லையா?’
‘அய்யா, இந்த அவையைப் பொறுத்தவரையில் என்ன நடந்துள்ளது? 1924ல் இருந்து அடுத்தடுத்த ஒவ்வோர் அமர்விலும் எழுகிற எதிர்ப்புகள் தொடர்பாக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? ராணுவத்தை இந்தியமயமாக்குவது தொடர்பாக உங்கள் பதில் என்ன? இந்த முக்கிய பிரச்சனையில் ஒரு குழுவை நியமித்தீர்கள். மற்ற எல்லா கேள்விகளையும் விட, நான் இந்த கேள்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறேன். இந்த அவை ஏகமனதாக, ஸ்கீன் குழுவின் ஏகமனதான அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இப்போது பொறுப்புணர்வு என்ற பெயரால் நீங்கள் இந்த அவைக்கு வேண்டுகோள் விடுக்கிறீர்களே, இந்த பொறுப்பான அவை ஏற்றுக்கொண்ட அறிக்கை பற்றி நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் அணுகுமுறை வியப்பளிக்கிறது. ராணுவ செயலாளர், கடந்த அமர்வின்போது இந்த மன்றத்தில் நின்றுகொண்டு சொன்னார்: ‘தகுதி வாய்ந்த 20 நபர்கள் கூட நமக்கு கிடைக்க மாட்டார்கள்’. அய்யா, இந்த கூற்றில் உள்ள, அப்பட்டமான பொய்யே இந்த அரசாங்கத்தை கண்டனம் செய்ய போதுமானது. அரசரின் ராணுவத்தில் சேர்க்க முப்பது கோடி இந்தியர்களில் தகுதியுடைய 20 இளைஞர்கள் கூட உங்களுக்கு கிடைக்கவில்லை, இல்லையா?....

‘உங்கள் சொந்த மக்கள் மீது இரும்புக் கரத்தை ஏவுவது, ஒடுக்குமுறை கொள்கையை கையாள்வது என்பதற்கு பதிலாக, மக்கள் சீற்றத்துக்கும் மக்கள் நடத்துகிற போராட்டத்துக்கும் அடிப்படையான காரணங்கள் என்ன எனக் காண்பது மேலானது என்று உங்களுக்குப் புரியவில்லையா?’

ஜின்னா மீண்டும் மீண்டும் லாகூர் வழக்குக்கு திரும்பி வருகிறார். அவரைப் பொறுத்தவரை, அவரது வாதத்துக்கு உதாரணம் காட்டுவதற்கான ஒரு வெறும் நிகழ்வாக லாகூர் வழக்கை கருதவில்லை. அவர் லாகூர் வழக்கு பற்றி ஆழமாக அக்கறை கொண்டிருந்தார். அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்: ‘இவர்களை கண்ணியமாக நீங்கள் நடத்தினால் உங்கள் பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியே வரலாம். குறைந்தபட்சம் நான் அவ்வாறு நம்புகிறேன். நீங்கள் பிரச்சனையில் இருந்து வெளியே வராவிட்டாலும் குறைந்தபட்சம் மக்களின் பார்வையில் இருந்து மக்கள்மன்ற கருத்தால் விடுவிக்கப்படுவீர்கள். மனிதாபிமானமுள்ள, கண்ணியமான அரசாங்கமாக நடந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்குப் போதுமானது.  இவர்களது குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சியம் உங்களிடம் இருக்குமென்றால், நீங்கள் இவர்களுக்கு எதிரான வழக்கையே திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நான் உங்களை வற்புறுத்தப் போவதில்லை. ஆகவே, முதலில், நல்ல முறையில் நடத்த முயற்சி செய்யுங்கள். அந்த முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெறாவிட்டால், இரண்டாவதாக, நீங்கள் விசாரணையை பிரித்து பிரித்து நடத்துங்கள். யார் விசாரணையை நடத்த முடியுமோ அதை முதலில் நடத்துங்கள். மற்றவற்றை விட்டுவிடுங்கள். அவர்களை கண்ணியமாக நடத்துகிற ஒரு நிலைப்பாடு உங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் அவர்களிடம் தெளிவுபடுத்திய பிறகும் அவர்கள் தங்களை சித்திரவதைப்படுத்திக் கொள்வதை தொடர்வார்களேயானால், நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், அது வெகு நீண்ட காலமோ அல்லது காலவரையில்லாமலோ போகாது என்று என்னால் சொல்ல முடியும்’.

‘நான் இந்த அரசாங்கத்துக்கு கடைசியாக சொல்வது என்னவென்றால், நீங்கள் பிரச்சனைக்கு அடிப்படையான காரணத்தின் மீது கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் அதைக் கூடுதலாகச் செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் சந்திக்கும் சிக்கல்களும் சங்கடங்களும் குறையும். நாட்டின் சுதந்திரத்துக்காக எதிர்த்து நின்று போராடுகிற மனிதர்கள், குடிமக்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு நடத்த, வரி செலுத்துவோரின் பணம் செலவாகாமல் ஆண்டவன் காப்பாற்றட்டும்’. பகத்சிங் மற்றும் பகத்சிங்கின் தோழர்கள் மீது ஜின்னா அதிஉயர்ந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Search