COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 19, 2020

மோசடி அறிவிப்புகளுக்கு எதிரான
மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான
மே 22 எதிர்ப்பு நாள் வெல்லட்டும்


எஸ்.குமாரசாமி


கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாட்டு மக்கள் துன்பத்தின் அடியாழத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி மீட்புத் திட்டம், ஊக்கத் திட்டம் என்று ஒன்றை அறிவித்தார்.


மோடியின் ரூ 20 லட்சம் கோடி அறிவிப்பு

தட்டைத் தட்டுவது, விளக்கு ஏற்றுவது, மலர் தூவுவது எல்லாம் முடிந்த பிறகு, அதிரடியாக வந்தது ரூ 20 லட்சம் கோடி ஊக்கத் திட்ட அறிவிப்பு. கொரோனாவெல்லாம் தாண்டி இந்தியா ஒரு புதுயுகத்தில் நுழைந்து விட்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10% ஊக்கத் திட்டம், வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டு சவால் விட்டு 10% அறிவித்துள்ளார் மோடி என, அன்றைய ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசைகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

13.05.2020 அன்றே தினமலர் முதல் பக்கம், மோடி கம்பீரமாக ஒற்றை விரலை சுட்டிக் காட்டி நிற்கிற படத்துடன், கொட்டை எழுத்துக்களில் மோடி உரை பற்றி கொட்டி முழங்கி மகிழ்ந்தது.
எதிர்பாராத நெருக்கடிதான், ஆனால் பாதுகாப்புடன் மீள்வோம்.
சுயசார்புடன் வீறுகொண்டு எழுவதே ஒரே வழி.
படிப்படியான வளர்ச்சி, படிப்படியான  முன்னேற்றத்துக்கு எல்லாம் நேரம் இல்லை. பகிரங்கமான தடாலடி மாற்றங்களுக்கு தயாராவோம்.
ரூ.20 லட்சம் கோடியுடன் துவங்குவோம் ஆட்டத்தை.
தினமணி 13.05.2020 அன்று தலையங்கத்தில் எழுதியது:
நான்காவது கட்டத்தில், மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் எச்சரிக்கிறார்.
சலுகைகள் அறிவிக்க கோரிய பொருளாதார நிபுணர்களே எதிர்பார்க்காத ரூ.20 லட்சம் கோடி.
நேரடி கோடைமழையில் அடைமழை.
நிதியமைச்சரின் முந்தைய ரூ.1.7 லட்சம் கோடி அறிவிப்பை போல் புள்ளிவிவரக் கணக்காக இருந்துவிடாது  என நம்புவோமாக.
நமது நாட்டு பொருட்களை நாம் வாங்க வேண்டும், சுயசார்பு இந்தியா என மோடி பேசிய விஷயங்கள், இந்தியர்கள் அனைவரின் தேசபக்தி, சுயமரியாதை உணர்வை பலப்படுத்தும்.
20ஆம் நூற்றாண்டில் காந்தி சுயசார்பு கிராமங்கள் என்றார். 21ஆம் நூற்றாண்டில் மோடி சுயசார்பு இந்தியா என்கிறார்.

மோடி என்னதான் சொன்னார்?

நாம் நம்மைக் காத்துக் கொள்வதோடு நில்லாமல், இந்தப் போர் நேரத்திலேயே முன்னேற வேண்டும்.
21ஆம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு என்ற கனவு நனவாக, சுயசார்பே வழியாகும்.
நாம் கொரோனாவிற்கு பிறகு, ஒரு நாளில் இரண்டு லட்சம் பாதுகாப்பு உடைகள், இரண்டு லட்சம் என்95 முகக் கவசங்கள் தயாரிப்பதே நெருக்கடியை சந்தர்ப்பமாக்குவதற்கும் சுயசார்புக்கும் சான்றாக அமையும்.
காச நோய்க்கு எதிரான, ஊட்டச்சத்தின்மைக்கு எதிரான, போலியோவுக்கு எதிரான நமது நடவடிக்கைகள் உலகின் மீது செல்வாக்கு செலுத்தியுள்ளன. சூரிய வெப்ப எரிசக்தி சர்வதேச கூட்டு, புவிவெப்பமயமாதலுக்கு எதிராக உலகுக்கு நாம் அளித்த கொடை. உலகம் மன அழுத்தத்திலிருந்து மீள இந்தியா அளித்துள்ள கொடை யோகா. உலகின் பல்வேறு நாட்டு மக்களை இந்திய மருந்துகள் வாழ வைத்துள்ளன.

ஆத்ம நிர்பார் பாரத் சுயசார்பு இந்தியா அய்ந்து தூண்கள் கொண்டது. 1. பாய்ச்சலில் செல்லும் பொருளாதாரம் 2. தொழில்நுட்பத்தால் செலுத்தப்படும் முறைகள் 3. சுயசார்பு இந்தியாவுடைய ஆற்றலுக்கு ஆதாரமான நம் மக்கள் தொகையின் சேர்க்கை. 4. நம் அடையாளமான உள்கட்டுமானம் 5. தேவை (டிமாண்ட்)
நிலம், தொழிலாளர் உலகம், நிதி ஓட்டம், சட்டம் ஆகியவற்றில் பெரும் பாய்ச்சல் முன்னேற்றங்கள்.
உலக வழங்கல் சங்கிலியில் போட்டியை வளர்த்துக் கொள்ளும் திறமை நமக்கு வேண்டும்.
அமைப்பாக்கப்பட்ட, அமைக்கப்படாத துறைகளில் உள்ள வறியவர்களை, உழைப்பாளிகளை, இடம்பெயரும் தொழிலாளர்களை நாம் அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவோம். 
உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்
கவனம் சிதற விடாதீர்கள் கொரோனா வோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
நான்காவது லாக்டவுன் மிகவும் மாறுபட்டதாக இருக்கும்
கொரோனாவையடுத்து நிதியமைச்சர் மூலம் வெளியிட்ட அறிவிப்புகள், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் எல்லாம் சேர்த்து இப்போது பொருளாதார ஊக்கத் திட்டம் ரூ.20 லட்சம் கோடி அறிவிக்கப்படுகிறது.

மோடி உரையில் சொல்லாதது என்ன?

கருப்பு பணத்தை மீட்டு, ரூ.15 லட்சம் தருவதாக சொன்ன மோடி, 2020ல் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கு எந்த விவரமும் தரவில்லை. நிதியமைச்சர் அறிவித்த ரூ 1.76 லட்சம் கோடி போக, ரிசர்வ் வங்கி அறிவித்தது எவ்வளவு, ரூ 20 லட்சம் கோடியில் மீதம் எவ்வளவு உள்ளது, இந்த தொகைகள் எப்படி எங்கிருந்து வரும் என மோடி எதுவும் சொல்லவில்லை.

கொரோனா கால விபத்தால் மடிந்தவர்கள், தேசப்பிரிவினை காலத்தில் நேர்ந்ததை காட்டிலும் பெரிய அளவிலான கோடிக்கணக்கானவர்களின் கண்ணீர் வழித்தடம் பற்றி எல்லாம் பேசி, மோடி மக்களை சோர்வுற வைக்கவில்லை.

ஐந்து வருடங்களில் 5 டிரில்லியன் டாலர் (350 லட்சம் கோடி) பொருளாதாரம், 2020ல் ரூ.20 லட்சம் கோடி என, ஈர்க்கும் விதம் பேசுவதும், உலகில் இந்தியா உயர்ந்த இடத்திற்கு செல்கிறது என தெம்பும் நம்பிக்கையும் தந்ததும், மோடி பக்தர்களின் தன் நினைப்புக்கு (ஈகோ) ஒத்தடம் தருவதற்காகவே நடந்தது.
2014ல் மோடி மேக் இன் இந்தியா அறிவித்த பிறகும், எந்த உயர் தொழில்நுட்பமும் தேவைப்படாத முகக் கவசம், பாதுகாப்பு உடை ஆகியவற்றைக் கூட, 2020 ஏப்ரல் வரை நாடு ஏன் இறக்குமதி செய்தது என்ற தர்மசங்கடமான கேள்விக்குள் மோடி நுழையவில்லை.

உலகின் பல நாட்டு மக்களை மாத்திரைகள் தந்து காப்பதாகச் சொன்ன மோடி, இந்தியாவின் மருந்து தயாரிக்கும், தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நாசமாக்கப்பட்டது பற்றி, அடிப்படை மருந்துகளை இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வது பற்றி, மருந்துகள், தடுப்பூசிகள் விஷயத்தில் இந்தியா இன்று தனியார் நிறுவனங்களையும் பன்னாட்டு நிறுவனங்களையுமே சார்ந்துள்ளது பற்றி, பொதுத் துறை காலத்து மருந்து, தடுப்பூசி விலைகள் இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது பற்றி, வாயே திறக்கவில்லை.

தமது ஆகஸ்ட் 15 2019 உரையில் மோடி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று சொன்னதற்கு, 31.12.2019ல் நிதியமைச்சர் அது ரூ.108 லட்சம் கோடி முதலீடு மூலம் வரும் என விளக்கம் தந்தார். மத்திய அரசு 39%, மாநில அரசுகள் 39%, தனியார் துறை 22% என ரூ 108 லட்சம் கோடி போடுவார்கள் என சொன்ன திட்டம் என்ன ஆனது என, ரூ.20 லட்சம் கோடி அறிவிக்கும்போது மோடி வாயை திறக்கவில்லை.

வெடிக்காத பிரச்சார பீரங்கியான நிதியமைச்சர் நிர்மலா

மோடியின் மோசடி அறிவிப்புக்கு நாள் கணக்கில் விளக்கம் தரும் பொறுப்பு நிதியமைச்சருக்கு தரப்பட்டது. மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பையும் அவரால் வெளியிட முடியவில்லை. ஒரு மிகப் பெரிய கடன் திருவிழா போல் கடன்கள் வழங்கப்படுவது பற்றி, பழைய பட்ஜெட் திட்டங்களை திரும்ப அறிவிப்பதற்கு மட்டுமே அவரால் முடிந்தது.
எளிதான பண ஓட்டத்துக்கு உதவ ரிசர்வ் வங்கி அறிவித்த தொகை ரூ.8,01,603 கோடி, கடன்கள், பண ஓட்டத்துக்கு உதவும் நடவடிக்கைகள் எனத் தாம் அறிவித்தது  ரூ.1,50,000 கோடி, ரூ 5,54,000 கோடி, ரூ.3,10,000 கோடி, ரூ.48,000 கோடி, ஏழைகளுக்காக ஒதுக்கியது ரூ.1,92,800 கோடி, எல்லாம் சேர்த்து ரூ.20.97 லட்சம் கோடி தாண்டும் என நிர்மலா 17.05.2020 அன்று தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி என மக்களுக்கு நேரடியாக செல்லக் கூடியதை, மோடியும் தாமுமாக ரூ.20 லட்சம் கோடி என  ஊதிப்பெரிதாக்கியதை  ஒப்புக்கொண்டுள்ளார்.

உணவு, உதவித்தொகை, எரிவாயு சிலிண்டர் என மக்களுக்காக ஒதுக்கியுள்ளது ரூ.2 லட்சம் கோடிக்குள்தான் இருக்கும். சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி என அறிவிக்கும் போது, 6.3 கோடி நிறுவனங்களில் 45 இலட்சம் யூனிட்டிற்கு மட்டுமே தந்தால் அது எப்படி சரி என்ற கேள்வி எழுந்துள்ளது. வியாபாரம், தொழில் நடக்கும், பொருட்கள் விற்கும் என்ற நம்பிக்கை வராமல் கடனுக்கு கூட டிமாண்ட் எழுவது கடினம். வட்டி தள்ளுபடி, கடன் தள்ளுபடி தேவைப்படும்போது, மேலும் கடனாளியாவது, கடன் பொறியில் சிக்க  வைக்காதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஆங்கிலம் தெரிந்த இந்தி தெரிந்த, ஆத்ம நிர்பாரை தமிழில், கன்னடத்தில், தெலுங்கில், மலையாளத்தில் மொழி பெயர்த்து சொல்லத் தெரிந்த நிதியமைச்சர், பொருளாதார விசயங்களில் மக்களை ஏமாற்றி விடலாம் என கருதினால், ஏமாற்றாதே, ஏமாறாதே என மக்கள் சொல்வார்கள். அறிவிப்புகளின் போலித் தன்மையை எளிதாக புரிந்துகொள்ள இரண்டு விசயங்கள் போதுமானவை ஆகும்.

1. நிதியமைச்சர் வருங்கால வைப்பு நிதிக்கு தொழிலாளி சம்பளத்தில் 12%, அதற்கு ஈடாக 12% வேலை அளிப்பவரிடம் இருந்து பிடிக்கப்படும் என்பதை, இனி இரு தரப்பினரிடம் இருந்தும் தலா 10% மட்டுமே பிடிக்கப் படும் என அறிவித்தார். இந்த 2% + 2% அதாவது 4% தொகை ரூ.6,750 கோடி வரும் என ரூ.20 லட்சம் கோடியில் கணக்கு காட்டுகிறார். தொழிலாளியின் பணம் 2%, வேலையளிப்பவரின் பணம் 2%, அவர்களிடமே நின்றுவிடுவது, அரசாங்கம் அளிக்கும் பொருளாதார நிவாரணமாக எப்படி ஆகும்? தொழிலாளிக்கு நிர்வாகம் தரும் 2% குறையும் என்பது மட்டுமே கைமேல் கண்ட பலன். இது மக்களுக்குப் புரியாதா?

2. வீட்டுக் கடன் வாங்கும் மத்தியதர பிரிவினருக்கு 2% வட்டித் தள்ளுபடி மானியம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து வருவதுதான் விசயமே. இந்த 2% வட்டி குறைப்பு சலுகையால், நிறைய பேர் கடன் வாங்கி வீடு கட்டுவார்கள், அந்த வீடு கள் கட்ட, ரூ.70,000 கோடி முதலீடு போடப்படும், அதனால், அந்த ரூ.70,000 கோடியை ரூ.20 லட்சம் கோடி ஊக்கத் தொகையில் சேர்க்க வேண்டும் என நிதியமைச்சர் சொல்வது தவறு என்பது மக்களுக்குப் புரியாதா?

நிர்மலா கடைசி வரை ரூ.20 லட்சம் கோடி எங்கிருந்து வரும் எனச் சொல்லவே இல்லை.
எளிதான நிதி ஓட்டத்துக்கு உதவும் லிக்விடிடி வேறு, கையை விட்டு அரசு பணம் செலவழிப்பது, அதாவது, பிஸ்கல் எக்ஸ்பென்டிச்சர் வேறு என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.
ரூ.20 லட்சம் கோடி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% முடியாது என்பது அரசுக்கு முன்னரே தெரியாதா?

15ஆவது நிதிக்குழுவின் தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பி.கே.சிங் ஏற்கனவே சொன்னார்: ‘நமக்கு பிரச்சனைகள் தெரி கின்றன. என்னவானாலும், ஒட்டுமொத்தமான நிதி பண பொருளாதார (மேக்ரோஎகனாமிக்) ஸ்திரமின்மை உருவாக இடம் தர முடியாது. தற்போதைய அரசியல் தலைமை பொறுப்பில்லாமல் பணத்தை வாரி இறைக்கும் சபலத்துக்கு ஆளாகாது’.

06.05.2020 அன்று அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் திரு.கே.வி.சுப்ரமணியம் சொன்னார்: ‘இப்போது நிச்சயமின்மை உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, முதல் காலாண்டில் சுருங்கினாலும், கணக்காண்டில் 2% உயர வாய்ப்புள்ளது. ஊக்கத் திட்டம் விரைவில் வரும்’.
‘தொழில்துறையினர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10% ஊக்கத் திட்டத்துக்கு ஒதுக்கச் சொல்கிறார்கள். இங்கிலாந்து 15%, அய்க்கிய அமெரிக்கா 10% ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தவறான தொகை/எண்கள் (ராங் நம்பர்ஸ்) சொல்லி நாம் தப்பிக்க முடியாது. இங்கிலாந்து 370 பில்லியன் பவுண்ட் ஊக்கத் திட்டம் அறிவித்துள்ளது என்றால், அதில் மிகப்பெரும் பகுதி கடன்கள்தான். அரசு நேரடியாக ஒதுக்கிய பணம் 37 பில்லியன் பவுண்டுதான். ஊக்கத் திட்டம் 15% என வரவே வராது. அதேபோல், அய்க்கிய அமெரிக்க ஊக்கத் திட்டமும் 10% வராது. 6.7%தான் வரும்’.

‘கொள்கை முடிவு எடுக்கும்போது, செலவு பற்றி யோசிக்க எதுவும் இல்லை என நாம் நடிக்க முடியாது. எதுவும் இலவசம் கிடையாது. (பட்ங்ழ்ங் ஐள் சர் ஊழ்ங்ங் கன்ய்ஸ்ரீட்) என்பது பொருளாதாரத்தின் அரிச்சுவடி பாடமாகும். மரத்தில் இருந்து பணம் பறிக்க முடியாது’.

துன்பப்படும் மக்களுக்கு எதுவும் ஒதுக்க முடியாது என்று அரசு தெளிவாக இருந்ததும் ரூ.2 லட்சம் கோடி கூட செலவு வைக்காத ஊக்கத் திட்டத்தை ரூ.20 லட்சம் கோடியாக பெரிதாக்கிக் காட்டியதும், சுப்ரமணியம் பேட்டியை படிக்கும் எவருக்கும் புரியும்.

குதிரை குப்புற தள்ளியதோடு குழியும் பறித்தது

மேக் இன் இந்தியாவில் இருந்து நடந்தே வந்துவிட்டோம் வாக் இன் இந்தியாவுக்கு, ஒரு பெண் சாலையிலே பிரசவித்து பிறந்த குழந்தையை தானே தோளில் சுமந்து கொண்டு நடக்கிறாள். சுயசார்பு இந்தியா என்ற மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகள் சமகால இந்திய சமூக பொருளாதார அரசியல் பற்றிய சரியான சித்திரத்தை முன்வைக்கிறது. துன்பத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுத்து உதவ முடியாது என்ற உறுதியாக இருப்பவர்கள், இந்தியா என்பதற்கான எல்லா அடையாளங்களையும் அழித்துவிட துடிக்கிறார்கள்.

கொரோனா நெருக்கடி, கார்ப்பரேட்டுகளுக்கான வாய்ப்பாக மாற்றப்படுகிறது. கண்ணும்கருத்துமான கார்ப்பரேட் சேவையில் விவசாயம், உணவுப் பாதுகாப்பு என்ற அடிப்படை அம்சங்கள், ஒப்பந்த விவசாயம், பரந்த விரியும் மூலதன ஊடுருவல், அரசு தலையீட்டை முற்றிலும் ஒழித்து, சந்தையின் ஆட்டத்துக்கு களம் அமைப்பது என்ற நடவடிக்கைகளால் ஒழித்துக்கட்டப்பட உள்ளன. தொழிலாளர் சலுகைகள், உரிமைகள், ஊதியம், வேலை நேரம், பாதுகாப்பு சட்டங்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு என்றால், பொதுத்துறை ஒழிப்பு என்று மோடியும் நிர்மலாவும் சொல்கிறார்கள். எல்லா பொதுத்துறை நிறுவனங்களிலும் கட்டாய தனியார்மயம். நிலக்கரி, மின்சாரம், விமான நிலையங்கள், அணுசக்தி, ராணுவம், விண்வெளி என எங்கும் தனியார்மயம். ராணுவத்தில் 49% வரை நேரடி அந்நிய முதலீடு என்பது இனி 74% வரை என உயர்த்தப்படும். தேசப்பாதுகாப்பில் மோடி மெய்சிலிர்க்க வைக்கும் சுயசார்பை கொண்டு வருகிறார்.

மக்கள் கையில் பணம் வேண்டும்
 அது ஒன்றே தீர்வாகும்


மு.க.ஸ்டாலின் துவங்கி ராகுல் காந்தி வரை, மக்களிடம் பணம் போக வேண்டும் என்கிறார்கள். தொழிலதிபர்களான ராகுல் பஜாஜ், அசிம் பிரேம்ஜி, வேணு சீனிவாசன் கூட பொருளாதாரம் பிழைக்க தழைக்க சில மாதங்கள் மக்கள் கைகளுக்கு அரசு நேரடியாக பணம் தர வேண்டும் என்கிறார்கள். இடதுசாரி அறிஞர்கள் பிரபாத் பட்நாயக், ஜெயதி கோஷ், மனித உரிமை செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் இணைந்து மாதம் ரூ.7000 என மூன்று மாதங்கள் பணமும் மாதம் 10 கிலோ உணவு தானியம் என 6 மாதங்கள் 60 கிலோ தானியமும் 20 கோடி குடும்பங்களுக்கு வழங்கப் பட வேண்டும் என எழுதுகிறார்கள். அவர்கள் கணக்குப்படி ஒரு குடும்பத்துக்கு அரசு ரூ.25,000 தர வேண்டும். கிராமப்புற வேலை உறுதித் திட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும், நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என எழுதியவர்கள், நாட்டில் உள்ள மிகப்பெரிய 1% பணக்காரர்களிடம் இருந்து 2% வரியும், வாரிசுக்கு சொத்துரிமை மாறும் போது 33% வரியும் போடலாம் என ஒரு வழியும் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி மே தின அறைகூவலில் இருந்தே, ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என 20 கோடி குடும்பங் களுக்கு தர வேண்டும் என்றும் வசதி படைத்தவர்களிடம் வரி விதித்து உழைப்பவர்கள் பயன்பெற வழி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால், மோடி சொல்லும் சுயசார்பு எத்தகையது? நங்ப்ச் தங்ப்ண்ஹய்ஸ்ரீங் - செல்ஃப் என்றால் அது இந்து ராஷ்டிரா வேண்டுபவர்களையும் ரிலையன்ஸ் என்றால் அது அம்பானி அதானி கார்ப்பரேட் ராஜ்ஜியத்தையும் குறிக்கும்.
மோடி வகைப்பட்ட சுயசார்பு நாட்டுக்கும் மக்களுக்கும் பேராபத்தானது என்பதால் மக்கள் அதனை முறியடித்தாக வேண்டும்.

வினை விதைத்தவர்கள் வினை அறுப்பார்கள்
 
நிதியமைச்சரின் எல்லா அறிவிப்புகளும் வெளியான பிறகு, தினந்தோறும் இடம்பெயர் தொழிலாளர்கள் சாலைகளில் செத்து மடிந்து கொண்டிருக்கும்போது, உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஒருவர் இடம்பெயர் தொழிலாளர்கள் திருடர்கள், கொள்ளையர்கள் போல் சொந்த ஊருக்கு பறந்தோடுவதாக எள்ளி நகையாடினார். சீமாட்டி நிர்மலாவோ, மேட்டுக் குடி ஆணவத்துடன் நாம் பணத்தை ஆடம்பரமாக வாரி இறைக்க முடியாது என்றும் பொறுப்பாகத்தான் செலவழிக்க முடியும் என்றும் தமது அறிவிப்புக்கு காரணம் காட்டினார். கையில் பணம் தந்தால்தான் மக்கள் பயன் பெறுவார்கள் என்பது கிடையாது, வேறு வேறு விதங்களில் மக்களும் பொருளாதாரமும் பயன் பெற முடியும் என்று விளக்கம் தரும் வகையில் ஏதோ சொல்ல முயற்சி செய்து கடைசியில் தங்கள் சித்தாந்தத்துக்கு வந்து நின்றார். தீன்தயாள் உபாத்யாயா காலத்து ஜனசங்கம் முதல் இன்றைய மோடி காலத்து பாஜக வரை ஒரு சித்தாந்தப்படி நடப்பதாகவும் அதன்படி ஒருவருக்கு மீனைத் தருவது எளிய தீர்வு என்றும் ஆனால் நீடித்து நிலைக்கும் தீர்வு மீன் பிடிக்க கற்றுத் தருவதே என்றும் உபதேசம் செய்தார். அரசிடம் எதுவும் கேட்காமல் எதிர்ப்பார்க்காமல் மக்களே மக்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் சுயசார்பு இந்தியாவில் மோடி வகையறா முன்னிறுத்துகிற மக்கள் ஆட்சி.

உங்களில் எவர் உங்கள் பிள்ளை அப்பம் கேட்கும்போது பிள்ளைக்கு கல்லைத் தருவீர்கள் என்று பைபிளில் ஒரு வசனம் உண்டு. நாடாளுபவர்கள் தின்ன கல் தருவதோடு தலையிலும் கல்லைப் போடுவேன் என்கிறார்கள். கொரோனா தடுப்பு, மக்கள் நல்வாழ்க்கை எதற்கும் பொறுப்பெடுக்க மறுத்து கார்ப்பரேட் வளர்ச்சிப் பாதைக்கு பணியாற்றுவது மட்டுமே தங்கள் கடமை என்று இருக்கிறார்கள்.

மோசடி அறிவிப்புகளுக்கு எதிரான, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான மே 22 எதிர்ப்பு நாள் வெல்லட்டும்.

Search