COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 19, 2020

புலம்பெயர் தொழிலாளர்களின்
கண்ணீர் வழித்தடங்கள்

 
ஆர்.வித்யாசாகர்
 
கடந்த நூறாண்டுகால வரலாறு காணாத மானுட துயரம் இந்தியாவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முயற்சிக்கும் வேளையில் அவர்கள் படும் பெரும் துயரங்கள் நாளேடுகளிலும், தொலைக்காட்சியிலும் அன்றாட நிகழ்வாக காட்டப்படுகின்றன.
சுமார் 14 கோடி,  உள்நாட்டிற்குள் புலம்பெயரும்  தொழிலாளர்கள்,  இந்தியாவின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். ஆனால் இவர்கள் அரசு அமைப்புகளின் கண்களுக்கு தெரியாதவர்கள். கரோனா கால ஊரடங்கால் தற்சமயம் இவர்களுடைய அவல  நிலை முதன்முறையாக நாட்டின் அரசியல் தளத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
அரசாங்கங்களால் முழுமையாக கைவிடப்பட்டு, பசி, பட்டினி, இருக்க இடமின்மை போன்ற எந்த துயரங்கள் துரத்தினாலும், தங்களுக்கு  என்ன நேர்ந்தாலும், பல விபத்துகள் நேர்ந்தாலும், தொலை தூரங்களைக் கூட பொருட்படடுத்தாமல், அனைத்து சவால்களையும் எதிர்த்து நின்று, தங்கள் சுய மரியாதையை காப்பாற்றி கொள்ள தங்கள் ஊர்களுக்கே செல்ல வேண்டும் என்று குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் குடும்பம் குடும்பமாக நாட்கணக்கில் நடைபயணமாகவும், லாரிகளிலும், மீன் பிடி படகுகளிலும், சிமெண்ட் கான் கிரீட் கலக்க பயன்படும் இயந்திரங்களுக்குள்ளும், மிதிவண்டிகளிலும், மொபெட்டிகளிலும் சென்று கொண்டிருக்கும் இவர்களது கண்ணீர் வழித்தடங்களில் இவர்கள் சந்திக்கும் கொடுமைகள் ஏராளம். இவை அனைத்தையும் தாண்டி நிற்பது இவர்களுடைய மன உறுதி.
ஜமாலோ மக்டம், தெலுங்கானாவில் தான் வேலை செய்து கொண்டிருந்த மிளகாய் உற்பத்தி நிலையங்களில், ஊரடங்கால் வேலை நிறுத்தப்பட்டதால், உணவிற்கு வழியின்றி, இருப்பிடமும் இன்றி சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள தன் சொந்த ஊருக்கே செல்ல மற்ற தொழிலாளர்களுடன் கால்நடையாகவே புறப்பட்டாள். இந்த 12 வயது பெண் குழந்தை, தன் ஊருக்கு அருகே 14 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது வெய்யிலில் வெகு தூரம் நடந்த காரணத்தால் உடலில் நீர் வற்றிபோய் உயிரிழந்தார். ஜமாலோ கரோனாவால் இறக்கவில்லை. அரசின் அலட்சியத்தால், கல்வி உரிமை சட்டப்படி பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தை, கடும் உழைப்பில் தள்ளப்பட்டு, எந்த ஆதரவும் இன்றி, மருத்துவ உதவியும் இன்றி உயிரை விட்டிருக்கிறார். அரசு விளம்பரப்படுத்தும் எந்த உதவியும் இவளுக்கு போய்ச் சேரவில்லை.
மே 8, நாட்டையே உலுக்கிய ஒரு துயர தினம். மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத் அருகே, வெகுதூரம் நடந்த களைப்பு மிகுதி யால் இரயில் தடத்தில் உறங்கிக்கொண்டிருந்த 16 (20 முதல் 35 வயதுடைய) ஆலைத்  தொழிலாளர்கள், சரக்கு இரயில் இவர்கள் மீது ஏறி உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வேலை இல்லாததால் வாழ வழியின்றி மத்திய பிரதேசத்திலுள்ள தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிய இவர்கள் ஊர் போய்ச் சேரவே இல்லை. தண்டவாளத்தில் இவர்களது ரத்தமும் சதையும் சிதறிக்கிடக்கின்றன. காண்போரையும் கேட்போரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த சம்பவம், புலம் பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கண்ணீர் கதைகளின் ரத்த சாட்சி.
விபத்துகளும், புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இந்த சனிக்கிழமை கூட (16.05.2020) உ.பி.யில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார், உ.பி. மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 50 புலம் பெயர் தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். உணவருந்த தெருவோர கடையில் நிறுத்திய பொது சிமெண்ட் ஏற்றி வந்த மற்றொரு லாரி பின்னாலிருந்து மோதியதில் 24 தொழிலாளர்கள் மருத்துவமனை செல்வதற்கு முன்பே இறந்து விட்டனர். மேலும் பலர் படுகாயமுற்றனர்.
மே 13 அன்று, பஞ்சாபிலிருந்து பீகாருக்கு, டெல்லி - ஷஹரன்பூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது,  உ.பி.யில், அரசு பேருந்து மோதி ஆறு புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அதே நாளில் மத்தியபிரதேச மாநிலத்தில் குணா மாவட்டத்தில், மும்பையிலிருந்து உ.பி. சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அரசு பேருந்து மோதி லாரியில் சென்று கொண்டிருந்த ஒன்பது புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஐம்பது பேர் படுகாயமடைந்தனர்.
மே 9 அன்று, ஐதராபாத்திலிருந்து மாம்பழம் ஏற்றி வந்த லாரியில் பயணம் செய்த 5 புலம் பெயர் தொழிலாளர்கள், மத்திய பிரதேச நரசிங்ப்பூர் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது  விபத்தில் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உ.பி.யில் உள்ள அவர்களது ஊருக்கு பயணப்பட்டனர்.
டெல்லியிலிருந்து, பீகார் சம்பரான் மாவட்டத்திலுள்ள தங்கள் ஊருக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த 26 வயது அன்சாரி என்ற ஒரு தையல் தொழிலாளி, லக்னோ அருகே வேகமாக வந்த ஒரு கார் மோதி இறந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து மத்தியபிரதேஷ் சட்னா நோக்கி கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண் தொழிலாளி வழியிலேயே சாலையில் ஒரு மரத்தடியில் குழந்தையை பெற்றெடுத்தார். வெறும் இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பிறகு மேலும் 150 கிலோ மீட்டர் நடந்து சென்று மத்தியபிரதேஷ் எல்லையை அடைந்தனர். தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்திலிருந்து சட்டிஸ்கர் வரை கால்நடையாகப் புறப்பட்ட கர்ப்பிணி பெண் தொழிலாளி சாலையிலேயே பிரசவிக்க நேரிட்டது.
மகாராஷ்ட்ராவின் புனேவிலிருந்து உ.பி. யில் உள்ள கோசாம்பி மாவட்டத்திற்கு, 28 பேர் கொண்ட ஒரு குடும்பமே மொபெடில் பயணம் செய்ய துவங்கினர். 42 வயதான தேவகி சரோஜ் கூறுகிறார், ‘உங்கள் நம்பர் வரும் வரும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வந்த பாடில்லை. எங்களுக்கு வேலையும் இல்லை வருமானமும் இல்லை. இருக்கும் அரிசி கூட மிகக் குறைவாகி விட்டது. அதனால்தான் நாங்கள் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு விட்டோம்’. மத்தியபிரதேசத்தில் உள்ள இண்டோர் நெடுஞ்சாலையில் சுட்டெரிக்கும்   வெய்யில் தாங்க முடியாமல் ஒரு வேப்பமடியில் இளைப்பாறுகிறார்கள். அரை வயிறு உணவு கூட கிடைக்காத நிலையில் பசியும் வெய்யிலும் வாட்ட பயணித்துக் கொண்டிருக் கின்றனர். (மே 10, 2020). கையில் காசு இல்லா ததால், பசிக்கு வயிர்  நிறையும் என்பதால்,  மலிவு விலையில் கிடைக்கும் அல்லது சில இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் தர்பூசணி பழத்தை மட்டுமே உட்கொண்டு நடைபயணத்தை தொடருவோரும் பலர்.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து பல நாட்களாக கொடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஜான்சி வரை நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு தாய், வெய்யிலிலும், பசியாலும் சோர்ந்து போன தன் குழந்தையை, கால்கள் பூமியில் பட கயிறு கட்டி இழுத்துச் செல்ல, ஒரு கைப்பெட்டியின் மீது சாய்ந்து தூங்கிக்கொண்டே வரும், மனதை உலுக்கும் காட்சி ஊடகங்கள் மூலம் நாடு முழுதும் அறியப்பெற்ற ஓன்றாகி விட்டது.
மேலே குறிப்பிட்ட விபத்துகள் மட்டுமின்றி, சாலை மற்றும் இரயில் விபத்து, மருத்துவ வசதி இன்மை, பசி பட்டினி, காவல்துறை அராஜகம், தற்கொலைகள் போன்றவற்றால் இந்த ஊரடங்கு காலத்தில் இதுவரை 383 பேர் இறந்திருப்பதாக மே 10 அன்று வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இதற்குப் பிறகும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன மரணங்கள்.
பல நகரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள்  ஊர் திரும்பிச் செல்வதற்காக, மற்ற உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்கள் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. காவல் துறை அடக்குமுறையையும் இவர்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசு கூறும் நிவாரணங்கள் மிகப் பெரும்பாலான தொழிலாளர்களை சென்றடையவில்லை. அரசின் அலட்சியமும், இந்தத் தொழிலாளர்கள் மீது அவர்களுக்கிருக்கும் அக்கறை அற்ற தன்மையும்தான்  இதற்கு காரணம். ’சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கான செயல்பாட்டிற்கான கூட்டமைப்பு’, அரசின் நிவாரண உதவிகள் எந்த அளவிற்கு  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சென்றடைந்திருக்கிறது என்று நாட்டின் 27 மாநிலங்களில், 16,863 புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில்  நடத்திய மே 1 ம் தேதி வெளியிட்ட ஒரு மாதிரி  ஆய்வறிக்கை, உணவு/ரேஷன் கிடைப்பது, கையிருப்பின்மை, கூலி கிடைக்காமல் இருப்பது போன்றவற்றால் பெரும்பான்மையோர் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச்  சொல்கிறது.
ஷ்ரமிக் சிறப்பு இரயில்கள் மூலம் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் ஊர் போய்ச் சேர முடியுமா?
ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையில், மே 15 நள்ளிரவு வரை 1074 ‘ஷ்ரமிக் சிறப்பு இரயில்கள்’ இயக்கப்பட்டிருப்பதாகவும், இது வரை ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. சமீபத்திய, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணக்குப்படி கூட 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதன்படி 2 சதவி கிதத்திற்கும் குறைவான புலம் பெயர் தொழிலாளர்களே இதுவரை இரயில் வண்டியில் சென்று இருக்கின்றனர். புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே  ஊர் செல்ல முயற்சிப்பதில்லை ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால் மத்திய  அரசாங்கம், புலம் பெயர் தொழிலாளர்களை நடந்து செல்ல அனுமதிக்க கூடாது என மாநில அரசாங்கங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
கட்டிட வேலைகளும், தொழிற்சாலைகளும் இயங்க ஆரம்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்த உடனேயே, குறைந்த கூலிக்கு ஆட்கள் வேண்டும் என்பதால், புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பிச்செல்லாமல் இருக்க, அறிவித்த சிறப்பு இரயில்களைக்கூட கர்நாடக பாஜக அரசு ரத்து செய்தது. மிகுந்த எதிர்ப்புகளுக்குப் பிறகே மீண்டும் சிறப்பு இரயில்களை  அறிவித்தது. புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் உழைக்கும் மக்கள் மீது, அரசுக்கு காட்டும் அக்கறையின்மைக்கு இதுவே சான்று.
உச்சநீதிமன்றத்தின்  அலட்சியம்
இந்தத் தருணத்தில், புலம்பெயர் தொழிலாளர்களின் அவல  நிலை கண்டு தாமாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உச்சநீதிமன்றம்  முன்வரவில்லை என்பதுடன், இது தொடர்பாக சமூக ஆர்வலர்களால் போடப்பட்ட  பொது நல வழக்குகள், ரிட் மனுக்கள் ஆகியவற்றில் கூட புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவான  நிலை எடுக்கவில்லை.
மார்ச் 31 அன்று புலம் பெயர் தொழிலாளர் நிலை பற்றிய ஒரு பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம், ‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 3 மாதங்களுக்கு தொடரும் என்ற தவறான புரளியால்  புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச்செல்ல பீதியுடன் புறப்பட்டதால்தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது’ என்று ‘தவறான செய்தியின் மீது’ முழு பழியும் போட்டது.
அவுரங்காபாத்தில் இரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 16  தொழிலாளர்கள் உறக்கத்திலேயே சரக்கு ரயிலால் கொல்லப்பட்ட, மூன்று நாட்களுக்கு முன், உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட ஒரு பொது நல வழக்கில், புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தடை அற்ற வசதிகள் செய்து கொடுக்க ஆணையிடும்படி  கோரப்பட்டது. ‘தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கின்றன, எனவே இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்கிறோம்’. என உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான, நீதிபதிகள் கவுல் மற்றும் கவாய் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில், மே 15 அன்று வெளியிட்ட தீர்ப்பில், ‘நாங்கள் அவர்களை எப்படி நிறுத்த முடியும். யார் நடக்கிறார்கள் யார் நடக்கவில்லை என்பது எங்களுக்கு எப்படி தெரியும்’ என்று கூறி புலம் பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். எவ்வளவு பொறுப்பான பதில்??  சாமான்ய மக்களின் நீதி நிலை நாட்டப்பட்டுவிட்டது!
பல மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. மகாராஷ்டிராவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 400 புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க மே 15 அன்று போடப்பட்ட ஆட்கொணர்வு மனு மீது, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும்  ஹேமலதா ஆகியோரை கொண்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற அமர்வு, ‘ஒரு மாத காலமாக புலம் பெயர் தொழிலாளர்களின்  மோசமான நிலை பற்றி வெளி வரும் செய்திகளை பார்த்து யாரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.  இது ஒரு மானுட சோகம். நாடு முழுவ தும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள்  பல மாநிலங்களில் சிக்கித் தவிப்பதும், போதுமான உணவு தரப்படாமல், வேலை இன்றி, இருக்க இடமுமின்றி விடப்பட்டிருக் கின்றனர். பல நாள் காத்திருந்து பிறகு கால் நடையாகவே தங்கள் மாநிலங்களுக்கு  செல்ல துவங்கிவிட்டனர். அதிகாரத்தில் உள்ள அனைத்து துறைகளும் இவர்களை புறக்கணித் திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று தங்கள் ஆணையில் குறிப்பிட்டிருக்கிறது. புலம் பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்று மத்திய அரசாங்கமும், மத்திய மாநில அரசாங்கங்கள் என்னென்ன நிவாரணங்களை  இவர்களுக்காக அறிவித்துள் ளன, அவற்றால் பயன் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றும் மே 22க்குள் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையிடப்பட்டிருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின்
நீண்ட பயணத்தின் வரலாறு

புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலும் வடகிழக்கு, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா, போன்ற மாநிலங்களிருந்து, மேற்கு மற்றும் தெற்கு இந்திய மாநிலங்களுக்கும், டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து செல்கின்றனர். 72 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் காரணமாக, வளர்ச்சி அற்ற, வேலை வாய்ப்புகள் அற்ற பின் தங்கிய மாநிலங்களிலிருந்து மற்ற இடங்களுக்கு புலம் பெயர்வது, 1990 ஆண்டுக்கு பிந்தைய நவ தாராளவாத கொள்கைகளின் விளைவாக பல்கி பெருகி இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் வழித்தடங்களுக்கு உலக வரலாற்றில் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.
அமெரிக்காவிலும், பிற அய்ரோப்பிய நாடுகளிலும் அவர்களுடைய விவசாயம் கொழிக்க, வளர்ச்சியற்ற பகுதிகளிலிருந்து, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, உழைப்புச் சுரண்டலுக்காக வலுக்கட்டாயமாக உழைக்கும் மக்களை வியாபாரப் பொருட்களாக்கி, அடிமைகளாக கடத்திச் சென்றதிலிருந்தே இவர்களது கண்ணீர் வழித்தடங்கள் ஆரம்பித்துவிட்டன.
மனிதனை மனிதன் ஆதிக்கம் செய்ய துவங்கிய காலத்திலிருந்தே அடிமைமுறை வெவ்வேறு வடிவங்களில் இருந்திருப்பினும், 14ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை அடிமை முறை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருந்தது. அடிமைகள் விற்கவும் வாங்கவும் சரக்குகளைப்போல் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சுயமாக எந்த உரிமையும் கிடையாது. கால்நடைகள் போலவே அவர்களும் நடத்தப்பட்டனர். அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். பல போராட்டங்களுக்கு பிறகே அடிமை முறை 19ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. பிந்தைய காலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இவர்களது உழைப்பு சுரண்டல் பெரும் பங்கு வகித்தது.
அடிமை முறையிலிருந்து ஒப்பந்த கூலி முறை
அடிமை முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டவுடன், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கு தங்கள் காலனி  நாடுகளில்  தேயிலை தோட்டங்கள், கரும்பு உற்பத்தி மற்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்ய ஏராளமான உழைப்பு தேவைப்பட்டது. இதற்காக ஒப்பந்த கூலி முறையை கொண்டு வந்தனர். ஒப்பந்த கூலி முறை என்பது, தொழிலாளர்களே விருப்பத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் வரை ஒரு குறிப்பிட்ட கூலிக்கு வேலை செய்வதாக எஸ்டேட் முதலாளியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வேலை செய்வது. இந்த ஒப்பந்தத்தை மீறினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 1834 முதல் 1914 வரை  பிரிட்டனின் காலனி  நாடுகளாகிய பிஜி, மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா, டிரினிடாட், மலேசியா, உகாண்டா, கென்யா, இலங்கை போன்ற 19 நாடுகளுக்கு சுமார் 20 லட்சம் ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனர். சீனா போன்ற நாடுகளிலிருந்தும் இவ்வாறு தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு தருவதாகச் சொன்ன கூலி, மற்ற சலுகைகள் முழுமையாக தரப்பட வில்லை என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் திரும்பியும் வரமுடியாத நிலை. நிலங்களை திருத்துவதிலிருந்து உற்பத்தி வரை பல தொழிலாளர்கள் தங்கள் உயிரையே அந்த மண்ணுக்கு உரமாக்கினர். இவர்களது கடின வாழ்க்கை பற்றிய கதைகள் ஏராளம். புதுமைப் பித்தனின் துன்பக்கேணி சிறுகதை இவர்கள் வாழ்க்கையை மிகச்சரியாக படம் பிடித்துக் காட்டியது. பரதேசி தமிழ் திரைப்படம் ஒப்பந்த கூலிகளின் வாழ்க்கையின் அவலங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். சட்டப்படி இவர்கள் அடிமைகள் இல்லை. சுதந்திரத் தொழிலாளர்கள். தாமாகவே முன்வந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி வேலை செய்ய ஒப்புக் கொண்டவர்கள். ஆனால் வலியோர், ஆதிக்க சக்திகள் ஆதிக்கம் செய்யும் வரை வலுவற்ற இவர்களின் கண்ணீர் வழித்தடங்கள் ஏராளம். நிலப்பிரபுத்துவ முறையோ, முதலாளித்துவ சுரண்டலோ எதுவாக இருந்தாலும், ஆதிக்க சக்திகள் கைகளில் அதிகாரம் இருக்கும்போது,  உழைக்கும் மக்கள் எந்த அதிகாரமுமின்றி பலவீன நிலையில் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
நவீன கால புலம் பெயர்வு
சுமார் 1 கோடி இந்தியர்கள், அய்க்கிய அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிற அய்ரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் அந்தந்த நாட்டு குடிமக்களாகவே மாறிவிட்டனர். இவர்கள் பெரும்பாலும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தகவல் தொடர்பு துறை போன்ற தொழில் நுட்ப துறைகளிலும், வியாபாரம் வர்த்தகம் போன்ற துறைகளிலும் ஈடு பட்டிருப்பவர்கள். தகவல் தொடர்புத் துறை யில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களுக்குப் பிறகு இந்நாடுகளுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் அங்கு வேலை, அதிக வருமானம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அங்கு சென்றவர்கள்.
1970லிருந்து வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட அபரிமிதமான பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி காரணமாக வேறு பல வளரும் நாடு களிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு புலம் பெயர்வது பெரிய அளவில் துவங்கியது. தற்சமயம் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான இந் தியர்கள் பல்வேறு  பணிகளுக்காக, பெரும்பாலும் உடலுழைப்பு பணிகளுக்காக அந்நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் யாரும் அந்நாடுகளில் குடியுரிமை பெற முடியாது. இவர்களில் பெரும்பாலானோருக்கு மிகக் கடினமான வேலை நிலைமைகள் இருக்கின்றன. இவர்களது கண்ணீர் கதைகள் பல.
கரோனா  ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கிக்கிக்கொண்ட இந்திய புலம் பெயர் தொழிலாளர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைத்துவர அவர்களிடம்  விமான டிக்கெட்டிற்கு மோடியால்  பணம் வசூலிக்கப்பட்டது.  இதற்கு நேர்மாறாக வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, 1990ல் குவைத்தின் மீது ஈராக் போர் தொடுத்தபோது உடனடியாக 111000 இந்தியர்களை அங்கிருந்து 488 முறை விமானத்தை இயக்கி மீட்டு  வந்தார். கடுமையான அந்நிய செலாவணி தட்டுப்பாடு இருந்த சமயத்திலும் சுமார் 100 கோடி அமெரிக்கா டாலர் செலவு செய்தார். அதுவும் அவரது சிறுபான்மை ஆட்சியை கலைக்க காவி கும்பல் பாத யாத்திரை நடத்திக்கொண்டிருந்த சமயம். இதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் மக்கள் மீது மோடி எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று!
மோடியின் ஒரே சாதனை, வழக்கமாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஒவ்வொவ்வொன்றிற்கும் புதிய பெயர் சூட்டுவதே. வெளிநாடு வாழ் இந்தியர்களை அவர்கள் பணத்தில் அழைத்து வருவது ‘வந்தே பாரத்’. கரோனா நிவாரணம் என்ற பெயரில் முதலாளித்துவ, தனியார்மய ஆதரவு கொள்கைகளை அறிவிப்பது ‘ஆத்ம நிர்பர் பாரத்’, ஸ்வச் பாரத் மிஷன், சன்சார் ஆதர்ஷ் கிராம் யோஜனா, கரீப் கல்யாண் யோஜனா போன்று என பல. இவற்றால் மக்களுக்கு என்ன பயன் என்பது ஒருவருக்கும் புரியவில்லை. பல வருடங்களாக இது போன்ற பெயரின்றி நடந்து கொண்டிருந்த திட்டங்களுக்கு புதுப் பெயர்கள். பெயரிலேயே புரட்சி செய்யும் சாகசம்.
உள்நாட்டு புலம் பெயர்தல்
இந்தியாவில் 1990ஆம் ஆண்டிற்கு பிறகு, புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த பிறகு, நாட்டின் நகர்ப்புறமயமாதல் விரைவாக நடந்தேறியது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 31 சதவிகிதம் நகர்ப்புறங்களில் வசித்தனர். சில மாநிலங்களில் இது 60 சதவிகிதம் வரை இருந்தது. மாநிலம் விட்டு மாநிலம் மற்றும் மாநிலத்திற்குள்ளேயே புலம் பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.9 கோடியாக இருந்தது. 2017 ஆண்டு இந்திய பொருளாதார அறிக்கையின் படி 2011 முதல் 2016 வரை வருட வருடம் இந்த எண்ணிக்கை 90 லட்சம் என அதிகரித்துக்கொண்டிருந்தது.
கரோனா கால ஊரடங்கு திடீரென எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் அறிவித்ததின் விளைவாக கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களின் உண்மை நிலை தற்சமயம் வெளி வந்திருக்கிறது. இவர்களுடைய வாழ்க்கையின் அவலங்கள் அன்றாடம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. சுரண்டலின் வடிவங்களும் உள்ளடக்கங்களும்  மாறினாலும் அதிகார பலம் கொண்ட வர்க்கங்கள் பலவீனமான உழைக்கும் மக்களை சுரண்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரசின் அணுகுமுறை
மூலதனம் உழைப்பு இரண்டையும் வெவ்வேறு விதமாகவே இந்திய தொழிலாளர் நல சட்டங்கள் அணுகுகின்றன, அவை இந்தியாவின் 90% தொழிலாளர்களின் நலன்களை பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் இந்த நிலையை மாற்றுவதற்கு பதிலாக மாநில அரசாங்கங்களால் இப்போது கொண்டுவரப்படும் அவசரச் சட்டங்கள் தொழிலாளர்கள் மீது பெருந் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும். தொழிலாளர்களுக்கு எந்த விதிகமான பேரம் பேசும் உரிமையும் இருக்கக்கூடாது என்று அரசுகள் விரும்புகின்றன. இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
உ.பி மற்றும் ம.பி மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களுக்கு முழுமையாக விலக்கு அளித்து மசோதா இயற்றப்பட்டிருக்கிறது. வேறு பல மாநிலங்களில் 8 மணி நேர வேலை  நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், தொழிலாளர் களுக்கு, குறிப்பாக அடிமட்டத்திலுள்ள பாதுகாப்பற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசே, தொழிலாளர் நலன்களுக்கு சமாதி கட்டி, அதிக மூலதனத்தை ஈர்க்க திட்டமிடுகிறது. இது மிகவும் ஆபத்தான அரசியல் நகர்த்தலாகும். அரசியல்  அமைப்பு சட்டம் மற்றும் மாநிலங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளும் மீறப்பட்டு தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடிய நடவடிக்கை ஆகும்.
1979 புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இதர 13 தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்து  தொழில் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் வேலை நிலைமைகள் கோட் 2019 என ஒரே சட்டமாக புகுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்த உரிமைகளைக் கூட முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள நாட்டில் அவர்களுடைய உரிமைகளுக்காக தனி சட்டம் ஏதும் இல்லை.
நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடி நிவாரண திட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், இதர ஏழை மக்களுக்கும்  நேரடியாக எந்த அறிவிப்பும் இல்லை.  கரோனாவையும் ஊரடங்கையும் சாக்காக வைத்து பெரும்பான்மை கேந்திர தொழில்களை தனியார்மயமாக்கவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை முழுவதுமாக அழித்தொழிப்பதற்குமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் கார்ப்பரேட் எஜமானர்க ளுக்கு சேவை செய்ய இத்தருணத்தை திறம்பட பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கரோனாவை வைத்து இவர்கள் முதலாளித்துவ நலன்களை, எந்தவித ஜனநாயக விவாதங்களும் இன்றி, நாடாளுமன்றத்தை புறம்தள்ளி எளிமையாக சாதித்துவிட்டனர்.
ஆனால் சொல்லொண்ணா துயரங்களுக்கு  ஆட்பட்டிருக்கும் உழைக்கும் மக்கள் இனி பொறுக்க மாட்டார்கள்.

Search