COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 19, 2020

வேலை நேரத்தை அதிகரிப்பதன்
விளைவுகள் என்ன?


எஸ்கே

கூடுதல் நேரம் வேலை பார்த்து அதே சம்பளம் வாங்கும்போது, அது உண்மையில் சம்பளக் குறைப்பாகும்.


கூலி குறைந்து லாபம் கூடுகிறது. உற்பத்தித் திறனை உயர்த்தி லாபத்தை அதிகரிப்பது ஒப்பீட்டுரீதியான உபரி மதிப்புச் சுரண்டல் என்றும் வேலை நேரத்தை அதிகரித்து லாபத்தை அதிகரிப்பது முழுமுற்றூடான சுரண்டல் என்றும் மார்க்ஸ் எழுதினார். கொரோனாவுக்குப் பிந்தைய புதிய சகஜ நிலை என பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலைமைகளுக்கு கொண்டு செல்லப் பார்க்கிறார்கள். உழைப்பு உருவாக்கும் மதிப்பில் கொரோனாவுக்கு முன்பு முதலாளிக்குக் கிடைத்ததை விட வேலை நேரம் கூட்டுவதால் இப்போது அவருக்கு அதில் கூடுதல் பங்கு கிடைக்கும். தொழிலாளிக்கு குறைவான பங்கே கிடைக்கும். பொருளாதாரம், சமூகம், அரசியல் வலது திசையில் பணக்காரர்களுக்கு, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சாயும். ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடையும்.

வேலை நேரம் அதிகமாக அதிகமாக, மனிதர்கள் தமது வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். பொதி சுமக்கும் மிருகத்துக்கும் கீழான கடையர்களாக்கப்படுகிறார்கள்.

வேலை நேரம் அதிகமாகும்போது, வேலை வாய்ப்புகள் குறையும். மனிதர்கள், வேலைகளைத் தேடி அலைய, வேட்டையாட, போட்டிபோட, சக மனிதர்களுக்கு எதிராகவும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் தமக்கே எதிராகவும் போட்டி போட்டு குறைந்த கூலி பெற்று கூடுதல் உற்பத்தி தந்து வேலை செய்யும் நிலை உருவாகும். மூலதனத் திரட்சிக்கு முன்னிபந்தனையான, நெம்புகோலான, வேலையின்மையும் உபரி மக்கள் தொகையும் பெருகும். வேலை கேட்கிற கைகளின் காடு அடர்த்தியாகி பெருகப்பெருக அந்தக் கைகள் மெலிந்து கொண்டே போகும்.

பிரிக்கால் போன்ற நிர்வாகங்கள் இன்னும் ஒரு படி மேலே போய், வேலை நேரத்ததை கூடுதலாக்குவதுடன் நில்லாமல், சலுகைகளை வெட்டுவதோடு நில்லாமல், சட்டம் தீர்ப்புகள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்ற இறுமாப்புடன், உணவகம் கிடையாது, சாப்பாடு குடிநீர் நீயே கொண்டு வா, சம்பளத்தை வெகுவாக குறைத்துத்தான் தருவேன் என மூர்க்கமாகத் தாக்குகிறது. மற்ற முதலாளிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் போகும்போது, பிரிக்கால் முதலாளிகள், பண்ணையடிமை - எசமானன் என்ற முந்தைய நூற்றாண்டுகளுக்குச் செல்ல தயாராகிவிட்டார்கள்.
கொரோனாவை விடக் கொடியது முதலாளித்துவம்.

மக்களுக்கு எது தந்தாலும் இலவசம் என இழித்தும் பழித்தும் நையாண்டி செய்யும் கார்ப்பரேட்டுகள், எப்போதும் மக்கள் பணம் திரண்டுள்ள கருவூலத்தை, மக்களுக்குரிய இயற்கை வளங்களை, மக்களது உழைப்பை சுரண்டியும் திருடியும் கொழுத்து வருகிறார்கள்.

இவர்களது பேராசை பெருநட்டமாகிவிடும். மக்கள் ஒட்டாண்டிகளானால், வாங்க ஆளில்லாமல் முதலாளித்துவம் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் நிலைமை உருவாகும். நெருக்கடி, நெருக்கடியில் இருந்து மீள முயற்சி, மேலும் தீவிரமான நெருக்கடி என்று மார்க்ஸ் அன்று எச்சரித்தது இன்றும் நடக்கிறது.

Search