COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, May 7, 2020

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்

இந்தியாவின் உழைக்கும் மக்கள், நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என தமது ஊரை, வீட்டை விட்டு பிரிந்து சென்றுதான் பிழைக்கிறார்கள். 200 நாடுகளில் ஒரு கோடியே முப்பது லட்சம் இந்தியர்கள் சென்று பிழைப்பதாகவும் இவர்கள் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வரை அனுப்பியதாகவும் விவரங்கள் சொல்கின்றன. உலகிலேயே இந்தியர்கள்தான் வெளிநாடுகளில் வருவாய் ஈட்டி ஆகக் கூடுதலான தொகையை சொந்த நாட்டுக்கு அனுப்புகிறார்கள். மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் மட்டும் 90 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 22 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று பிழைக்கிறார்கள். சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் மட்டும் சுமார் 4,10,000 பேர். 2015ல் மட்டும் வெளிநாடு சென்று பிழைப்பவர்கள் தமிழ்நாட்டுக்கு ரூ.61,843 கோடி அனுப்பியுள்ளனர்.

இப்போது வெளிநாடுகளில் பணியாற்றுகிற இந்தியர் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

லட்சக்கணக்கானவர்கள் இந்தியா திரும்ப விரும்புகிறார்கள். அவர்களிடம் இந்தியா திரும்ப விமானக் கட்டணம் கொடு, இந்தியா திரும்பிய பிறகு தனிமைப்படுத்தப்படும்போது ஏற்படும் செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று இப்போது இந்த நேரம் சொல்வது எவ்விதத்திலும் நியாயமல்ல. நாட்டுக்கு ஒவ்வோர் ஆண்டும் மிகவும் தேவைப்படுகிற சில லட்சம் கோடி ரூபாயை சம்பாதித்து அனுப்பும் அவர்களை, நெருக்கடி காலத்தில் வட்டிக்காரர்போல் பணம் எடுத்து வை என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

பிற மாநிலத் தொழிலாளர்களின் நிலை என்ன?

லாக் டவுன் 50 நாட்களை நெருங்கும்போது, பிற மாநிலத் தொழிலாளர்கள் மற்ற எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் சொந்த ஊர் போக வேண்டும் என்பதையே முதன்மையாக விரும்புகிறார்கள். நடந்து போக, ரயில் தண்டவாளம் காட்டும் வழியில் போக, சைக்கிளில் நெடுஞ்சாலையில் போக, மூடப்பட்ட லாரிகளில் மறைந்து போக, சிமென்ட் கிரஷ்ஷருக்குள் பெரும் கூட்டமாக மூச்சு முட்ட அடைபட்டுப் போக முயற்சி செய்கிறார்கள். தனிமனித இடைவெளி, வீடு திரும்பும் அவர்களுக்கு கட்டுப்படியாகாது. அவர்களை ரயிலில் ஏற்றி ரயில் கட்டணம், உணவு, தண்ணீர் கட்டணம் வசூல் செய்தார்கள்.

காங்கிரஸ் கட்சி கட்டணத்தை தான் ஏற்கிறேன் என்று சொன்ன பிறகு, ரயில்வே பெரும்பகுதியும் ஒரு பகுதி மாநிலங்களும் ஏற்கும் என்று முடிவு செய்துள்ளார்கள். இது வரை 5% பேர் கூட அனுப்பப்படவில்லை. சொந்த ஊர் செல்ல அவர்கள் தினமும் திரள்வதும் கூடுவதும் சில நேரம் விரைந்து அனுப்புகிறோம் என்று சொல்லப்படுவதை கேட்டுக்கொள்வதும் தடியால் அடிக்கப்பட்டு விரட்டப்படுவதும் நாடெங்கும் நடக்கிறது.

இப்போது வேலை அளிப்பவர்கள், எங்களால் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற, நாங்கள் அழைக்கும்போது நாங்கள் சொல்கிறபடி வேலை செய்ய நடந்துகொள்ள பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களை திரும்ப அனுப்புவது உற்பத்தி மீண்டும் நடப்பதற்கு தடையாக இருக்கும் என்றும் வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.

முதலாளிகளின் இந்த விருப்பத்தின் முன்பு, மத்திய மாநில அரசுகள் தயங்கித் தடுமாறுகின்றன. பிற மாநிலத் தொழிலாளர்கள் ஊர் திரும்பி கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்பதெல்லாம் அவர்களது உண்மையான கவலை என்பதாகத் தெரியவில்லை.
இடம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்கள் விருப்பப்படி உடனடியாக ரயில்களில் அவர்கள் பயணம் செய்வதற்கும், பயண உணவு, குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரயில்களில் தனிமனித இடைவெளிக்கு உரிய ஏற்பாடு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

அவர்கள் வேலை செய்யும் மாநிலங்களில் அவர்களை அப்படியே வைத்திருக்கப் பார்ப்பது சொந்த ஊருக்கு அனுப்பாமல் தட்டிக் கழிப்பது, அரசியல்சாசனம் தடை செய்துள்ள கொத்தடிமை முறையை அமல்படுத்துவதாகும்.

தாமே முன்வந்து (இது சங்கங்களால், சுதந்திர அமைப்புகளால், தனிநபர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்), தற்போதிருக்கிற இடத்திலேயே வேலை செய்கிறேன் என்று சொல்பவர்களுக்கு பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு, நியாயமான சம்பளம் ஆகியவை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

Search