பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்
ஏ.ஜி.நூரானி
ஏ.ஜி.நூரானி
முன்னுரை
பகத்சிங் என்ற மனிதனும் பகத்சிங் என்ற நிகழ்வுப்போக்கும்
வழக்குக்கு ஆதாரமான புகார்
மத்திய சட்ட அவையில் ஜின்னா உரை
பகத்சிங்கின் இறுதி மனு
நீதி விசாரணை விவரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்
முன்னுரை
‘எப்போதெல்லாம்
ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், சுதந்திரத்துக்கும் உரிமைக்கும் எதிராக,
ஆயுதத்தைத் தூக்கினார்களோ, அப்போதெல்லாம், அவர்களுக்கு மிகவும் வசதியான
திறன்வாய்ந்த கருவிகளாக நீதிமன்றங்கள் இருந்ததை வரலாறு கண்டுள்ளது.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை, நீதிக்கும் பயன்படுத்த முடியும். அநீதிக்கும்
பயன்படுத்த முடியும். நியாயமான ஓர் அரசு இருந்தால், இந்த அதிகாரம் நீதியை,
உரிமைகளை அடைய சிறந்த கருவியாக இருக்கும். ஒடுக்குமுறை சர்வாதிகார அரசின்
கைகளில், இந்த அதிகாரம், பழிவாங்குவதற்கும் அநீதிக்குமே கூடுதல்
பொருத்தமானதாக இருக்கும்’.
‘போர்க்களங்களுக்கு
அடுத்து, வரலாற்றின் ஆகமோசமான, அநியாயமான செயல்கள் நீதிமன்றங்களிலேயே
நடந்துள்ளன. புனிதமான மதங்களை நிறுவியவர்களில் இருந்து, அறிவியல் மற்றும்
கண்டுபிடிப்புகளின் முன்னோடிகள் வரை, உண்மைக்காக, உரிமைக்காக போராடிய
எவரும், நீதிமன்றத்தின் முன் குற்றவாளிபோல், நிறுத்தப்படாமல்
விடப்பட்டதில்லை. சந்தேகத்துக்கு இடமின்றி, காலத்தின் ஓட்டம், பல வரலாற்று
அநீதிகளை நினைவில் இருந்தே அகற்றிவிட்டது. அந்தப் படுமோசமான ரோமாபுரியின்
நீதிமன்றங்கள், கிறித்துவுக்குப் பின் வந்த இரண்டாம் நூற்றாண்டு
நீதிமன்றங்கள், மத்தியகால மிகப்பெரிய அநீதிகளை நிகழ்த்திய நீதிமன்றங்கள்,
மதரீதியான சித்திரவதை தண்டனைகளை வழங்கி நிறைவேற்றிய (இன்கிவிசிஷன்)
நீதிமன்றங்கள் இன்றில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’.
‘ஆனால்
அந்த நீதிமன்றங்களை, உந்திச்செலுத்திய உணர்வுகளில் இருந்து நம் காலம்
விடுபட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. அந்த அநீதிகள் இழைக்கப்பட்ட
கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மாபெரும் மானுட அநீதி, சுயநலம்
என்ற ஆபத்தான ரகசியங்கள் உள்ளே உள்ள மனங்களை எவரும் எப்போதும் மாற்ற
முடியுமா?’
‘சட்டம் காக்கும் நீதிமன்றங்கள்
இழைத்துள்ள அநீதிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. வரலாறு அவற்றுக்கு இறுதி
பாட்டை இன்னும் எழுதிவிடவில்லை. இந்தப் பட்டியலில் ஒரு விசித்திரமான
நீதிமன்றம் முன் கள்வர்களோடு நிற்க வேண்டியிருந்த ஏசுநாதர் என்ற ஒரு புனித
ஆளுமையை காண்கிறோம். அந்தப் பட்டியலில், அவர் இருந்த ராஜ்ஜியத்தில் மிகவும்
உண்மையான மனிதராக இருந்ததால், ஒரு கோப்பை விஷம் அருந்துமாறு தண்டனை
வழங்கப்பட்ட சாக்ரடீசை காண்கிறோம். அந்தப் பட்டியலில், உண்மைக்காக உயிர்
தந்த பிளாரன்ஸ் நகரத்தின் கலீலியோவை காண்கிறோம். ஏனெனில், அவர் கண்டறிந்த
விசயங்களும் ஆராய்ச்சிகளும் பொய்யென அன்றைய நீதிமன்றங்களின் கருத்துப்படி
ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை’.
‘அப்படியானால்,
இந்த குற்றவாளிக் கூண்டு, உலகத்தின் ஆகச்சிறந்தவர்களும் மோசமானவர்களும்
நிறுத்தப்பட்ட அற்புதமான இடமல்லவா? குற்றவாளிக் கூண்டின் மகத்தான பொருளுள்ள
வரலாறு பற்றி நான் யோசிக்கும்போது, அதில் நிற்கும் கவுரவம் எனக்குத்
தரப்பட்டது என்று நான் பெருமைப்படுகிறேன். என் ஆன்மா, தானாகவே கடவுளுக்கு
நன்றி சொல்லி கடவுளைப் புகழ்ந்து தலைவணங்குகிறது’.
தேசத்துரோக
வழக்குக்காக இசட்.எ.கான் என்ற கல்கத்தாவின் நான்காவது மாகாண குற்றவியல்
நடுவர் முன் குற்றம் சுமத்தப்பட்டபோது, ஜனவரி 24, 1922ல் மவுலானா
அபுல்கலாம் ஆசாத் உருதுவில் பேசியதன் அழகை வேறெந்த மொழியிலும் கொண்டு
வருவது சாத்தியமல்ல. காந்தி, பிப்ரவரி 1923 யங் இந்தியா பத்திரிகையில்,
‘இந்த உரை ஆயுள்தண்டனைக்குத் தகுதியானது’ என்று எழுதினார்.
அரசியல்
தன்மைவாய்ந்த விசாரணைகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆற்றியவற்றில் இது
ஒரு சிறந்த உரையாக இருக்கும். ‘அரசியல் நீதி’ என்ற நூலில் பேராசிரியர்
கிர்க் மீயர் அரசியல் விசாரணைகளை வகையினங்களாகப் பிரிக்கிறார். ‘அரசியல்
நோக்கத்துக்காக செய்யப்பட்ட ஒரு பொதுவான குற்றம் தொடர்பான விசாரணை,
வெற்றிகரமாக அதனை நடத்துவதில், இறுதியில் கிடைக்கும் அரசியல் ஆதாயங்கள்
கருதி நடத்தப்படலாம்’. ‘ஒரு மாபெரும் அரசியல் விசாரணை, அரசியல் களத்தில்
இருந்து எதிரியை வெளியேற்றும் விதம், எதிரி மீது அந்த ஆட்சி குற்றம்
சுமத்தி நடத்துவதாக இருக்கும்; அதன் விளைவாக நடக்கும் அரசியல் விசாரணையில்
எதிரிக்கு அவப்பெயர் ஏற்படுத்த அவதூறு சொல்வது, பொய் சாட்சி சொல்வது, ஏளனம்
செய்வது என்ற எல்லா ஜித்து வேலைகளும் நடக்கும்’.
அரசியல்
விசாரணைகள், எப்படித் துவக்கப்பட்டு எப்படி நடத்தப்படுகின்றன எனக் காண்பது
சிந்தையைக் கவரும் ஒரு விசயமே ஆகும். அது, பரஸ்பர தர்மசங்கடத்துடன்,
சட்டமும் அரசியலும் சந்தித்துக் கொள்ளும் அந்திப் பொழுதாகும். 1976ல் இந்த
நூலாசிரியர், 1857 முதல் 1946 வரை இந்தியாவில் நடந்த அரசியல் விசாரணைகள்
என்ற நூலை பிரசுரித்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த நூலில் பகத்சிங் வழக்கு
விசாரணை விடுபட்டுவிட்டது. அந்தத் தவறை இந்தப் புத்தகம் சரி செய்கிறது.
வழக்கு விசாரணை நடவடிக்கைகள் பற்றிய வாசிப்பில் புறக்கணிக்க இயலாத,
ஒதுக்கப்பட இயலாத சட்டபூர்வ அரசியல்பூர்வ அம்சங்கள் பலவற்றையும் படிக்க
வேண்டியிருந்தது. இது நிச்சயம் அந்த நீண்ட விசாரணையின் முழுமையான
நடவடிக்கைக் குறிப்பல்ல. எல்லா விசாரணைகளையும் எப்படி காண வேண்டுமோ அதே
அடிப்படையில் இந்த விசாரணையையும் இந்தப் புத்தகம் அதன் அரசியல்
பின்புலத்தோடு காண்கிறது.
வருங்காலத்தில்
எப்போதாவது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் இரண்டு நூற்றாண்டுகள் நீதி பற்றி ஒரு
நிறைவான ஆய்வு வரும் என நம்புவோம். அந்த ஆய்வு, 1775ல் மகாராஜா நந்தகுமாரை
நீதித்துறை படுகொலை செய்ததில் இருந்து, 1945ல் இந்திய தேசிய இராணுவத்தின்
விஷயத்தில் நன்கு உணரப்பட்ட விதத்தில் நியாயமாக நடந்த விசாரணைகள் வரை
இருக்க வேண்டும். களத்திலிருந்து தனது அரசியல் எதிரியை ‘வெளியேற்ற’ ஆட்சி
காட்டிய உறுதிக்கு அக்கம்பக்கமாக நீதிக்கான நெறிமுறைகள் அதிர்ச்சி
தரும்விதம் மீறப்பட்டன. அதற்கேற்ப நீதிபதிகள் உடன்பட்டு ஒத்துபோவது
நடந்தது. இவை எல்லாம் பகத்சிங் விசாரணையில் நடந்தது போல், வேறு எந்த வழக்கு
விசாரணையிலும் நடைபெறவில்லை. இந்த வழக்கு, 6 மாதங்கள் ஆயுட்காலம் என
மனம்போன போக்கில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்டது.
இந்த தீர்ப்பாயத்தை நிறுவிய அவசர சட்டத்தின் ஆயுட்காலமும் 6 மாதங்களே.
மத்திய சட்டமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட வைஸ்ராய் லார்ட் இர்வினால்
இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்
படி இயற்றப்பட்ட மற்ற அவசரச் சட்டங்கள் போல், இந்த அவசர சட்டத்திற்கு
மத்திய சட்டமன்ற ஒப்புதல் தேவையில்லை. அப்படி இருந்தும், லாகூர்
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, இந்த தீர்ப்பாய உறுப்பினராக இருந்த
நீதிபதி ஆகா அய்தர், பொய்யான சாக்குகள் சொல்லப்பட்டு, இந்தத் தீர்ப்பாய
நடவடிக்கையின் பாதி வழியிலேயே வெளியேற்றப்பட்டார்.
உதவி
காவல் கண்காணிப்பாளர் சான்டர்ஸ் பட்டபகலில் கொலை செய்யப்பட்டதற்கான
சாட்சி, இந்த வழக்கில் வியப்புதரும் விதம் படுமட்டமாக இருந்தது.
அப்ரூவர்களை (குற்றத்தை ஒப்பு கொண்டு சாட்சி சொல்பவர்கள்) சட்டப்படி
நீதிமன்ற காவலில் வைப்பதற்கு பதிலாக, வழக்கு காலம் நெடுக அவர்கள் காவல்துறை
காவலிலேயே இருந்ததும் நடந்தது.
ரவுலட் சட்டம்
அமலுக்கு வந்த பிறகு இந்தியாவை வாழ்விடமாகக் கொண்ட, இந்தியர்
விருப்பங்களில் அனுதாபம் கொண்ட ஆங்கிலேயே பாரிஸ்டர் யார்ட்லி நார்ட்டன்
சொன்னார்: ‘குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு உரிய நியாயமான பகிரங்கமான
பாரபட்சமில்லாத விசாரணை என்ற உரிமை எந்த விதத்திலும்
கேள்விக்குள்ளாக்கப்படலாகாது. மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சாட்சிகள் என்ன
சொன்னார்கள் அல்லது என்ன சொல்ல இருக்கிறார்கள் என்பது பற்றி குற்றம்
சுமத்தப்பட்டவர்களுக்கு முன்னரே தெரிவிக்காத விசாரணை, நியாயமான விசாரணை
அல்ல. சிறை வளாகத்தில் நடக்கும் விசாரணை பகிரங்கமான விசாரணை அல்ல.
விசாரணைக்கு முன் சிறப்பு நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் விசாரணை
நியாயமானதல்ல. இந்த ஒவ்வொரு நெறிமுறையும் ஆங்கிலேய சட்டத்தின் கோட்பாடுகளை
அத்துமீறுவதாகும்; ஒவ்வொன்றும் அற உணர்வை கேலிக்குள்ளாக்குவதாகும்.
இந்திய
மக்களின் உரிமைகளை, சுதந்திரங்களை பாதிக்கும் சட்டங்கள் என கல்கத்தா
பாரிஸ்டர் ஒருவர் கொண்டுவந்த தொகுப்புகளின் முன்னுரையில் மேலே குறிப்பிட்ட
வரிகள் இடம்பெற்றன. இவை சிறிய விசயங்கள் அல்ல. பெலிக்ஸ் ப்ராங்க்பர்டர்
என்ற மகத்தான அய்க்கிய அமெரிக்க நீதிபதி குறிப்பிட்டார்: ‘சட்ட நடைமுறைகள்
தொடர்பான பாதுகாப்புகளே, சுதந்திரத்தின் வரலாறு ஆகும்’. பகத்சிங்
விசாரணையில், இந்த ஒவ்வொரு பாதுகாப்பும் மறுக்கப்பட்டது. குற்றம்
சுமத்தப்பட்டவர்கள் மீது ஒரு முறைக்கு மேல் தாக்குதல் நடத்தப்பட்டது.
நீதிமன்ற சூழல் ஒடுக்குவதாகவும் மூச்சுத் திணற வைப்பதாகவும் இருந்தது.
வயதில்,
தமது இருபதுகளின் துவக்கத்தில் இருந்த, கூண்டில் இருந்த புரட்சியாளர்கள்
விசாரணையில் தம் தரப்பு வழக்கறிஞராக யாரை நிறுத்துவது என்பதில்,
துரதிர்ஷ்டவசமாக, ஒன்றுபட்டு இல்லை. என்ன போர் தந்திரத்தை மேற்கொள்ளலாம்
என்பதிலும் அவர்கள் மனதில் ஒரு தெளிவு இல்லை. நன்கு புரியும் விதம், நமது
அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்த நீதிமன்றத்தை பயன்படுத்துவதில் அவர்கள்
தீர்மானமாய் இருந்தனர். ஆனால், அவர்கள் மேற்கொண்ட பட்டினிப்
போராட்டங்களால், அவர்கள் நீதிமன்றம் வர முடியவில்லை, அவர்களில் சிலருக்கு
வாதாடிய வழக்கறிஞர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தவும்
முடியவில்லை.
இந்திய அரசியல் விசாரணைகளில்,
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்ன தற்காப்பு நிலை எடுப்பது என்ற வழிமுறைகள்
பெரிதும் வேறுபட்டன. 1879ல் வாசுதேவ் பல்வந்த் பாட்கே என்ற துணிச்சல்மிக்க
புரட்சியாளனுக்கு ஆஜரான புகழ்மிக்க வழக்கறிஞர் மகாதேவ் சின்மய் ஆப்தே,
குற்றம் சுமத்தப்பட்டவர் மனநிலை பிறழ்ந்தவர் இல்லை என்றாலும், ‘ஒரே ஒரு
குறிப்பிட்ட விசயத்தை மட்டுமே பிடித்தாட்டும் ஒற்றை எண்ணம் கொண்டுள்ளவர்
என்பது வெளிப்படை’ என்றும் ‘அவர் மனநிலை ஆரோக்கியமானது அல்ல’ என்றும்
நிலைப்பாடுகள் எடுத்தார். மகாராணிக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதே
குற்றச்சாட்டு. ஆப்தே தமது கட்சிக்காரருக்கு மரண தண்டனை வராமல்
தவிர்க்கப்படுவதை உறுதி செய்தார். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு, ஆயுள்
முழுவதும் நாடு கடத்தப்படுவது என்ற தண்டனை வழங்கப்பட்டது. அவர்
அந்தமானுக்கு அனுப்பப்படவில்லை. மும்பையில் இருந்து நிர்வகிக்கப்பட்ட
ஏடனுக்கு அனுப்பப்பட்டார். அவர் ஏடன் கோட்டையில் இருந்து தப்பித்து,
பின்னர் பிடிபட்டு, சிறைவாசத்தில் உயிரிழந்தார்.
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவில் 1897ல் பாலகங்காதர திலகருக்கு எதிரான
முதல் தேசத் துரோக வழக்குடன் அரசியல் வழக்கு விசாரணைகள் முனைப்புடன்
துவங்கின. வெற்றி பெற்றவர்கள், வீழ்த்தப்பட்டவர்களை விசாரிக்க ஒரு ராணுவ
ஆணையம் என்ற போலி நீதிமன்றம் கொண்டு, பிரிட்டிஷார், கலகத்துக்குப் பிறகு
1858ல் முகலாயப் பேரரசர் பகதூர் ஷா சாபருக்கு எதிராக நடத்தியதே, கடைசியாக
நடந்த மிகப்பெரிய விசாரணை. விசித்திரமான முறையில், பேரரசர் மீது, ‘அரசுக்கு
எதிராகக் கலகம் புரிந்ததாக’ குற்றம் சுமத்தப்பட்டது.
திலகர்
நீதி விசாரணையில் தேசிய அடிப்படையில்
ஜுரி மாறுபட்ட முடிவுக்கு வந்தனர்.
ஜுரியில் மூன்று இந்தியர்கள், அவர் குற்றம் செய்யவில்லை என்ற முடிவுக்கு
வந்தனர். ஆறு அய்ரோப்பியர்கள் அவர் குற்றம் செய்ததாக முடிவுக்கு வந்தனர்.
அய்ரோப்பிய நீதிபதி, நீதிபதி ஸ்ட்ராக்சே, பெரும்பான்மை முடிவை ஏற்று
திலகருக்கு சிறை தண்டனை வழங்கினார். திலகர் பிரீவி கவுன்சிலுக்கு முறையிட
அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது, அவரது வழக்கறிஞராக
இருந்த எச்.எச்.அஸ்க்வித், பத்தாண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின்
பிரதமரானார்.
1908ல் திலகருக்கு எதிராக,
தேசத்துரோக எழுத்துகள் என்ற இரண்டாவது விசாரணை நடந்தது. அவருக்கு மொத்தமாக
ஆறாண்டுகள் நாடு கடத்தல் தண்டனை வழங்கப்பட்டது. திலகர் மான்ட்லே சிறையில்
தமது தண்டனை காலத்தை கழித்து பின் இந்தியா திரும்பி அரசியலில் மிகப்பெரும்
செல்வாக்கு செலுத்தினார். இந்த வழக்கில்
ஜுரி கவனமாக தேர்வு செய்யப்பட்டனர். ஒன்பது பேரில் ஏழு பேர்
அய்ரோப்பியர்கள். முதல் வழக்குபோல் அல்லாமல், இந்த வழக்கில் திலகர் தாமே
வழக்கை நடத்தினார். இந்தியாவில் உள்ள அய்ரோப்பிய ஊடகங்கள் வரைமுறை இல்லாமல்
எழுதுவதைக் காட்டி, பந்தை மறுபக்கம் உதைக்க முயற்சி செய்தார்.
1920ல்
திலகர் இறந்ததையடுத்து, ஜின்னா அவருக்கு புகழாரம் சூட்டினார்: ‘திலகர் தன்
விடுதலையில் குறியாக இல்லை. மாறாக, ஆங்கிலோ - இந்திய பத்திரிகைகள்,
இந்தியாவையும் இந்திய மக்களையும் அவதூறு செய்வது, எழுத்து மூலம் அவதூறு
செய்வது குற்றம் என்று நிறுவுவதில், அவர்களுக்கு எதிராக அரசு எதுவும்
செய்யவில்லை என்று காட்டுவதில்தான் உறுதியாக இருந்தார். அவருக்கும்
எனக்கும் வழக்கில் என்ன தற்காப்பு நிலை எடுப்பது என்பதில், வழக்கறிஞர்
கட்சிக்காரர் என்ற முறையில் கருத்து வேறுபாடு இருந்தது’. அதனால், ஜின்னா
அந்த வழக்கில் அவருக்காக ஆஜராகவில்லை.
1918ல் ஜின்னா பம்பாய்
உயர்நீதிமன்றத்தில் திலகருக்கு ஆஜராகி, திலகர் ரூ.20,000 நன்னடத்தை
உறுதிப்பத்திரம் தர வேண்டும் என்று போடப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்ட
வழக்கில், வெற்றி தேடித் தந்தார்.
சி.ஆர்.தாஸ், எந்த ஒரு வழக்கறிஞரும் செய்வதுபோல், அரபிந்தோ கோஷ் ஆகியோர் மீதான அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கை நடத்தினார்.
அவரது
கட்சிக்காரருக்கு, அவரது கட்சிக்காரரின் சகோதரர் பரிந்திர குமார் எழுதிய
‘இனிப்புகள் கடிதம்’ இந்த வழக்கில் சாட்சியத்தின் ஒரு முக்கியப் பகுதி
ஆகும்.
வங்க முகாம். அஜித் இடத்திற்கு அருகில்
27.12.1907
அன்பு சகோதரரே,27.12.1907
இதுவே நேரம், அவர்களை நம் மாநாட்டில் சந்திக்க தயவு செய்து முயற்சி செய்யுங்கள். அவசரங்களுக்கு இந்தியா முழுவதும் நாம் இனிப்புகள் தயார் செய்ய வேண்டும். உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
பாசத்துடன் உங்கள்
(ஒப்பம்) பரிந்திரகுமார் கோஷ்
(ஒப்பம்) பரிந்திரகுமார் கோஷ்
அரசு தரப்பு, ‘இனிப்புகள் என்பது குண்டுகளே’ என்றது. இந்தக் கடிதமே
போலியானது என சி.ஆர்.தாஸ் வாதாடினார். அரவிந்தர் விடுதலை செய்யப்பட்டார்
பரிந்தர் நூலிழையில் தூக்கு தண்டனையிலிருந்து தப்பினார்; ஆனால்
தண்டிக்கப்பட்டார். பரிந்தர் தனது வழக்கறிஞர் ஆர்.சி.பேனர்ஜியிடம், அந்தக்
கடிதம் தாம் எழுதியது என்பதையோ, தம்முடையது என்பதையோ மறுக்க வேண்டாம் என
தெரிவித்திருக்கிறார்.
படைவீரர்களை அரசுக்கு
எதிராக திருப்புகிறார்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு, 1921ல் கராச்சியில்
அலி சகோதரர்களும், சாரதாபீட சங்கராச்சாரியாவும், தமது வழக்கை தாமே
நடத்தினர். அவர்கள் வழக்கு நடத்தும்போது, கூடவே குற்றச்சாட்டுகளை கேலியும்
கிண்டலும் செய்தனர்.
இதற்கொப்ப ஒரு நிலைப்பாட்டை, ஜம்மு
காஷ்மீர் அரசின் ஆட்சியாளரான மகாராஜா ஹரி சிங்குக்கு எதிரான, ஷேக் முகமது
அப்துல்லா மீதான தேசத்துரோக வழக்கில் அசப் அலி எடுத்தார். மகாராஜா ஹரி
சிங்கிற்கு அரசின் மீதான ஆட்சியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை அசப் அலி
எடுத்தார். அவரது ஆட்சியுரிமை, அமிர்தசரசில் 06.03.1846ல், மகாராஜா குலாப்
சிங்கும் பிரிட்டிஷ் அரசாங்கமும், 75 லட்ச ரூபாய்க்கு, டோக்ரா தலைவருக்கு
காஷ்மீரை வழங்கியதன் அடிப்படையிலானதாகும். குலாப் சிங் தனக்கு மேலே இருந்த
லாகூர் தர்பாரின் சீக்கிய அரசுக்கு எதிராக, பிரிட்டிஷாருக்கு உதவினர். இது,
‘மனிதர்களை விற்ற ஒரு செயலாகும்’. மகாராஜாவால் நிறுவப்பட்ட ஒரு
நீதிமன்றம், மகாராஜாவை அதிகாரம் இழக்க வைக்காது என்று முழுமையாகத்
தெரிந்தும் அசப் அலி இந்த வாதத்தை எடுத்தார்.
இந்திய
பதிப்பகத் துறை, திலகர் வழக்கு நடவடிக்கை குறிப்புகளை பதிப்பிப்பதை
அடுத்து, மற்ற மகத்தான இந்திய அரசியல் வழக்கு விசாரணைகளை பதிப்பிக்கும் என
நம்புவோம். தேசிய ஆவணக் காப்பகமும் அடுத்து அதனைச் செய்யலாம். பகத்சிங்
விசாரணை குறிப்புகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.
பகத்சிங்
கால அரசியல் வேறு வகைப்பட்டதாகும். ஆனால், நல்ல ஸ்டாலினியபாணியில்
வினோதமாக வரலாற்றை மாற்றி எழுதுவதை நாம் காண்கிறோம். இந்தியா மற்றும்
பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளிலும், இந்திய தேசப் பிரிவினை கோரிய,
அபத்தமான, அரிக்கும் தன்மை வாய்ந்த ‘இரு நாடுகள்’ கருத்தை முன்வைத்த
1939க்கு பின்தான், முகமது அலி ஜின்னாவின் அரசியல் பிறப்பு இருப்பதாகக்
கருதப்படுகிறது. அதிலிருந்து அதற்கு முந்தைய அவரது 30 ஆண்டுகால அரசியல்
வாழ்க்கைக்கு, பின்நோக்கி சாயம் பூசப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்
இல்லாமலேயே விசாரணை நடத்த, அரசு சட்டத்தை கொடூரமாக திருத்தப் பார்த்தபோது,
பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு ஆதரவாக, மத்திய அவையில்
நிகழ்த்தப்பட்ட உரைகளில், ஜின்னாவின் உரையும் மிகவும் சக்திவாய்ந்த,
திறன்வாய்ந்த உரையாகும். லாகூரில், மனித உரிமை ஆர்வலர் அய்.எ.ரஹ்மான்
மற்றும் அவரது கூட்டாளிகள் எழுதியது நீங்கலாக, வேறு எந்த இந்திய அல்லது
பாகிஸ்தான் புத்தகமும் இது பற்றிப் பேசவில்லை.
பழைய
செய்தித் தாள்களையும் ஆவணங்களையும் படிக்கும்போது, மறைந்து சென்ற ஒரு
சகாப்தம் மனதில் நிழலாடுகிறது. இந்த காலத்தில் நினைவுகூர வேண்டிய பல
விசயங்கள் கவனத்தில் வருகின்றன. மத்திய அவை விவாதங்கள், உயர்ந்த தரத்தில்
இருந்தன. அந்த வகை நாடாளுமன்றவாதிகள் இப்போது இல்லை. அப்போதும் இப்போதும்,
லாகூர் அறிவார்ந்த எழுச்சி மற்றும் அரசியல் எதிர்ப்பு மய்யமாக உள்ளது. மற்ற
பல இந்திய நகரங்கள்போல், லாகூரும் அதன் பல்வகை கலாச்சாரத் தன்மையை
இழந்துவிட்டது. ஆனாலும், இன்றும் லாகூரில்தான் மதச்சார்பின்மையை
முன்வைக்கும் சிலர் உள்ளனர். மொரார்ஜி தேசாயும் சரண்சிங்கும் ஓயாமல் உருது,
பாகிஸ்தானிய இயக்க மொழி என்பார்கள். ஆவணங்கள், இன்குலாப் ஜிந்தாபாத் என,
உருது புரட்சியின் மொழியாகவும் வடஇந்திய புரட்சியாளர்களின் மொழியாகவும்
இருந்ததை காட்டுகின்றன.
பகத்சிங்கின் வாழ்வும்
சிந்தனையும், பயங்கரவாதிக்கும் அரசுக்கும் படிப்பினைகள் கொண்டுள்ளன.
பகத்சிங்கின் வாழ்வை பலி தந்து நீதிபதிகளும் அரசியல்வாதிகளும் ஆடிய ஆட்டம்
வருத்தம் தருவதாகும். பகத்சிங் வழக்கு விசாரணை நீதித்துறை நிகழ்த்திய
ஜாலியன்வாலா பாக்.
இது அவ்வளவு நயமாக சொற்களை முன்வைப்பதல்ல என்பது புரிகிறது. ஆனாலும் அது நீதி படுகொலை செய்யப்பட்டதைக் காட்டுகிறது.