COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 8, 2020

பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்

வழக்குக்கு ஆதாரமான புகார்

ஏ.ஜி.நூரானி

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, சிறப்பு நீதிபதி ஆர்.எஸ்.பன்டிட் ஸ்ரீகிஷன் நீதிமன்றத்தில், காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஹேமில்டன் ஹேரிங்டன் தாக்கல் செய்த புகார் பின்வருமாறு:
1. லையல்பூர், ஆர்யசமாஜ் கிராமம், தாப்பர் கத்ரி சாதி, ராம் லால் என்பவரின் மகனான வில்லேஜர் என்கிற சாமி என்கிற தயாள் என்கிற சுக்தேவ்.
2. ஹோஷியார்பூர் மாவட்டம், ஹாஜிபூர் காவல்நிலையம், தரம்பூர் பிராமண சாதியின் ரகுபர் தத்தின் மகனான ராம் சாஸ்திரி என்கிற தியோ தத் ரத்தன் என்கிற கிஷோரி லால் ரத்தன்.
3. சியால்கோட் மாவட்டம், கில்லா சோபா சிங் காவல்நிலையம், லல்லாவின் நந்தலால் பிராமணன் மகனான மாஸ்டர்ஜி என்கிற ஆக்யா ராம்.
4. சியால்கோட் மாவட்டம், சம்பிரியால் காவல்நிலையம், பேல்கானின் கத்ரி சாதியின் ராம் கிஷனின் மகனான தேஸ் ராஜ்.
5. குஜராத்தின் ராம் தத் கத்ரியின் மகனான அம்ரித் லால் என்கிற மாஸ்டர் என்கிற ப்ரேம் தத்.
6. கான்போர் சப்ஜிமண்டி கிராமம், பிராமணர் ஹீரா லால் பான்டேயின் மகனான ஸ்டோன் என்கிற சுரீந்திரநாத் பான்டே.
7. ஹர்தோய், சதார் பஜார், கத்ரி, கபூர் சாதியின் பாபு சாலிக் ராம் மகனான ஹரிஷ் சந்தர் என்கிற ஜெய் தேவ்.
8. ஹர்தோய், கத்ரி சாதி, கபூர் பிரிவின் கன்னயா லால் வர்மா மகனான ராம் நாராயண் என்கிற ஹர் நாராயண் என்கிற பர்பாத் என்கிற சிவ் வர்மா.
9. கான்போர் மாவட்டம், பில்ஹார் காவல்நிலையம், காஜ÷ரி குர்த்தில் வசிக்கும் குர்மி சாதியின் தேஷ் பகத் என்கிற ராம் நாத் என்கிற ராம் லால் என்கிற டாக்டர் பி.எஸ்.நிகாம் என்கிற கயா பிரசாத்.
10. கல்கத்தா, தோஹர் சாலை, எண் 30, பங்கே பெஹாரி தாசின் மகனான ஜதிந்திர நாத் தாஸ்.
11. ஈடா மாவட்டம், ராஜாகா ராம்பூர் காவல்நிலையம், ஷாபூர் தேலாவின் பர்தாப் என்கிற மஹாபீர் சிங்.
12. லாகூர், கதாஸ்ரியனைச் சேர்ந்த, கிஷன் சிங்கின் மகன் பகத் சிங்.
13. வங்கம், பேத்வானின் ஜி.டி.தத் என்பவரின் மகனான மோகன் என்கிற பட்டா என்கிற பதுகேஷ்வர் தத்.
14. கான்போர், டாக்டர் கோஷ் என்பவரின் மகனான நீக்ரோ - ஜெனரல் என்கிற அஜய் குமார் கோஷ்.
15. அலகாபாத், கர்னல் கன்ச் கிராமம், ஹரி நாத் சன்யாலின் மகனான ஜதின் சன்யால் என்கிற சசீந்திரநாத் சன்யால்.
16. கோபிந்த்பூர் காவல்நிலையம், சுரயாவின் சுராஜ் நாத் திவாரி என்பவரின் மகனான கல்கத்தா வித்யா சாகர் கல்லூரி மாணவரான கன்வல் நாத் திவாரி என்கிற கமல்நாத் திரிவேதி.
17. பனாரஸ், பிலோபூர் காவல்நிலையம், பைஜிநாத் துலா, பிராமணர் சீதாராம் என்கிற பைஜ் நாத்தின் மகனான பன்டித்ஜி என்கிற சந்திரசேகர ஆசாத்.
18. கான்போர், கராச்சி கன்ச் கிராமம், மார்கலா குமார் சின்ஹாவின் மகனான பச்சு என்கிற பிஜோய் குமார் சின்ஹா.
19. தற்போது கோரக்பூரில் வசிக்கிற, ஆசாம்கர் மாவட்டம், காமிபூர் காவல்நிலையம், மோங்க்ரன்வானின் ஹர்தோ நாராயண் கயஸ்த் மகனான காளி சரண் என்கிற கைலாஷ் பட்டி.
20. பனாரசின் ராம்குரு என்கிற எம் என்கிற ரகுநாத்.
21. லாகூர், பிராமணர், ராய் சாஹிப் சிங் சரண்தாஸ் மகனான பி.சி.வோரா என்கிற பகவதி சரண்.
22. உ.பி, பனாரஸ், நம்பர் 1 என்கிற பர்தாப் என்கிற, குந்தன் லால்.
23. ஜான்சியின் குன்தாலா என்கிற கலாஷ்.
24. லாகூர், தற்போது வசோவலியில் வசிக்கிற கங்ரா, ஹமீர்பூர் மாவட்டம், நிதன் காவல்நிலையம், ஹீராலால் கத்ரியின் மகன் யஷ்பால்.
25. கான்போர், தானா கோரி கிராமம், பிராமணர், பன்டிட் சுக்பாசி லால் அவஸ்தியின் மகனான சத்முர்த்யால்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 121, 121எ, 122 மற்றும் 123 ஆகியவற்றின் கீழ் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புகார்தாரர் மரியாதையுடன் முன்வைக்கிறார்:
1. மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், மற்றவர்களுடன் சேர்ந்து, லாகூரிலும் பிரிட்டிஷ் இந்தியாவின் மற்ற இடங்களிலும், 1924 முதல் அவர்கள் கைது செய்யப்பட்ட இந்த நேரம் வரை, வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு தருணங்களில், மதிப்பிற்குரிய பேரரசருக்கு எதிராக போர் தொடுக்க, பிரிட்டிஷ் இந்தியாவின் இறையாளுமையை அவரிடம் இருந்து பறிக்க, பிரிட்டிஷ் இந்தியாவில் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள அரசாங்கத்தை குற்றத்தன்மை கொண்ட பலவந்தத்தால் அச்சுறுத்த, இந்த இலக்குக்காகவும் நோக்கத்துக்காகவும் தயாரிப்புகள் செய்ய படையினர், ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை சேகரிக்க சதி செய்தார்கள்.
2. மேலும் பேரரசருக்கு எதிராக போர் தொடுக்கும் சதி ஒன்று இருப்பதை மறைப்பது போர் தொடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தோடு, அல்லது அது போன்ற போர் தொடுக்க உதவியாக இருக்கும் என்று தெரிந்து, அப்படி ஒரு சதி இருப்பதை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.
3. மேலே உள்ள பத்திகள் 1 மற்றும் 2 ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள நோக்கங்களோடு குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன் என்றழைக்கப்படும் கட்சி மற்றும் இந்திய ரிபப்ளிகன் ஆர்மி ஆகியவற்றை உருவாக்கினார்கள்; இந்தியாவில் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள அரசாங்கத்தை பலவந்தமாக தூக்கியெறிந்து அதன் இடத்தில் ஒரு கூட்டு குடியரசு அரசாங்கத்தை நிறுவும் நோக்கத்துடன், லாகூரிலும் பிரிட்டிஷ் இந்தியாவின் மற்ற இடங்களிலும் அவற்றின் கூட்டங்களை நடத்தினார்கள்.
வழிமுறைகள்
4. இந்த நோக்கங்களை அடைய பின்பற்றப்பட வேண்டிய வழிகளாக பின்வரும் அம்சங்கள் உருவாக்கப்பட்டன:
அ. ஆயுதங்கள், படைவீரர்கள், தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களும் தளவாடங்களும் வாங்குவதற்கான நிதி ஆகியவற்றை சேகரிப்பது.
ஆ. பலவந்தமான வழிமுறைகளில், வங்கிகளை, கருவூலங்களை கொள்ளையடிப்பது, நிச்சயம் கொலை செய்வதையும் உள்ளடக்கிய கொள்ளை ஆகியவற்றின் மூலம் இதற்கான நிதியை பெறுவது.
இ. கொலை செய்யவும் அரசாங்கத்தை அச்சுறுத்தவும் வெடிகுண்டுகள் தயாரிப்பது.
ஈ. காவல்துறை அதிகாரிகளை, பிற அதிகாரிகளை, இந்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அக்கறை கொண்டுள்ளவர்களை, சதியின் நோக்கத்தை நிறைவேற்ற தடையாக இருப்பவர்களை, அவர்களது கட்சியால் வெறுக்கப்படுபவர்களை கொலை செய்வது.
உ. ரயில்களை குண்டு வைத்து தகர்ப்பது.
ஊ. தேசவிரோத மற்றும் புரட்சிகர இலக்கியங்களை தயாரிப்பது, வைத்திருப்பது, விநியோகிப்பது.
எ. சட்டபூர்வ காவலில் இருக்கும் குற்றவாளிகளை, மற்றவர்களை விடுவிப்பது.
ஏ. கல்வி பெற்ற இளைஞர்களை சதியில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் மதிமயங்கச் செய்வது.
ஐ. வெளிநாடுகளில் வசிக்கும், இந்தியாவில் புரட்சியை சாதிப்பதில் ஆர்வம் கொண்ட நபர்களிடம் புதுப்பித்தலும் சந்தாவும் பெறுவது.
5. அ. 13.01.1928 அன்று பனாரசில் சிஅய்டி ஆய்வாளர் திரு.பானர்ஜியை கொல்ல முயற்சி நடந்தது.
ஆ. கோரக்பூர் மாவட்டம், புர்ஹல் கன்ச் துணை தபால் நிலையத்தில் ஊழியராக இருந்த, தலைமறைவாக இருக்கிற, காளி சரண் என்கிற கைலாஷ் பட்டி, அவர்களுடைய பொதுவான நோக்கத்தை நிறைவேற்ற கட்சி பயன்படுத்த, 26.06.1928 அன்று ரூ.3,199அய் கையாடினார்.
இ. லாகூரின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்க 04.12.1928 அன்று முயற்சி செய்யப்பட்டது.
ஈ. டிசம்பர் 17, 1928 அன்று, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திரு.சான்டர்ஸ் மற்றும் தலைமை காவலர் சன்னன் சிங் கொல்லப்பட்டனர்.
உ. 08.04.1929 அன்று டில்லி, சட்டமன்ற அவையில் ஒரு குண்டு வீசப்பட்டது; அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது; இதனால் சர் போமன்ஜி தலால் மற்றும் பிறருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது.
ஊ. 07.06.1929 அன்று மாலினாவில் கொள்ளைச் சம்பவம் நடத்தப்பட்டது; இதனால் வீட்டு உரிமையாளர் தன்க் மஹதான் கூரி கொல்லப்பட்டார்.
எ. லாகூர், சஹரன்பூர், கல்கத்தா, ஆக்ரா ஆகிய இடங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மற்றவர்களும் வெடிகுண்டுகள் தயாரித்தனர்; லாகூரிலும் சஹரன்பூரிலும் இருந்த பாக்டரிகள் அதற்குப் பிறகு கைப்பற்றப்பட்டன.
ஏ. இளைஞர்களை மதிமயக்கி, தங்கள் சதியில் இணைத்துகொள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சொன்றார்கள்.
6. பிரிட்டிஷ் இந்தியாவில் மேலே சொல்லப்பட்டுள்ள சதியை நிறைவேற்றுவதற்கான தயாரிப்புகளாக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால் அவை வெற்றி பெறவில்லை.
அ. சைமன் கமிஷன் உறுப்பினர்கள் சென்ற ரயிலை குண்டு வைத்து தகர்ப்பது.
ஆ. ககோரி சதி வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்த ஜகதீஷ் சந்தர் சேட்டர்ஜியையும் அவர்கள் கட்சியின் இன்னொரு குற்றவாளியான சதிந்திர நாத் சன்யாலையும் சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி செய்தது.
7. குற்றம் சாட்டப்பட்டவர்களில் எண் 17 முதல் 25 வரையிலானவர்கள் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள்.
8. குற்றவியல் நடைமுறை விதிகள் பிரிவு 196ன்படி உள்ளூர் அரசாங்கம் பிறப்பித்த ஆணை உரிய விதத்தில் கையொப்பமிடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
9. சதியை நிறைவேற்ற இழைக்கப்பட்ட பிற குற்றங்கள் தொடர்பாக தனித்தனி காவல் சீட்டுகள் இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது புகார் அளிப்பவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றங்களை இழைத்ததற்காக, அல்லது வேறு குற்றங்களை இழைத்ததாக நிரூபிக்கப்படும் குற்றங்களுக்காக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தி ட்ரிப்யூன், ஜுலை 11, 1929. பக்கங்கள் 3 - 4.

Search