COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 1, 2013

பொருளாதாரத்தின் உருட்டித் திரட்டப்பட்ட வடிவமே அரசியல்

ஆட்சிக் காலம் முடிகிற நேரத்தில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று அய்முகூ ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். தொடர்ச்சியான இரண்டு பதவிக் காலங்கள் தவிர, சுதந்திர இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கள் இந்த நிலைமைகளைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். 1947ல் டாலர் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது என்றும் அதை 65 ரூபாயாக உயர்த்தியது காங்கிரசின் சாதனைகளில் ஒன்று என்றும் எதிர்க் குரல்கள் எழுகின்றன.


இந்தியா ஒளிர்கிறது முதல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வரை வளர்ச்சி என்றார்கள். இப்போது ஏற்பட்டுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் வளர்ச்சிக் குறைவை தெளிவாகக் காட்டுகிறது.
2012 - 2013ல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 88 பில்லியன் டாலர். இதை 70 பில்லியன் டாலராகக் குறைக்க சிதம்பரம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். 2015 வரை நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று மெரில் லின்ச் நிறுவனத்தின் இந்திய அதிகாரி சொல்கிறார்.


அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஊக்க நடவடிக்கைகளை நிறுத்துவது போன்ற அமெரிக்காவின் முடிவுகளால் அமெரிக்காவின் பொருளாதாரம் முன்னேறும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு முதலீடு திரும்புகிறது. இதனால் நாட்டில் உள்ள அந்நியச் செலாவணி இருப்பு குறைகிறது.


தங்கம் இறக்குமதி செய்வதால் அந்நியச் செலாவணி குறைகிறது. இதனால் தங்கம் இறக்குமதி தீர்வையை உயர்த்தி அறிவிப்பு வெளியானது. தங்கம் வாங்காதீர்கள் என்று சிதம்பரம் கத்திப் பார்த்தார். ஏப்ரல், மே மாதங்களில் தங்க இறக்குமதி சராசரியை விட 2 முதல் மூன்று மடங்கு அதிகரித்தது. தங்கம் விலையும் அதிகரித்தது. இருப்பில் இருந்த டாலர் வெளியில் ஓடியது.
ரூபாய் மதிப்பு சரிந்து வருவதும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருவதும் நாடு இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிற பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடுகள்.


நாட்டின் மொத்த ஏற்றுமதியை விட இறக்குமதி கூடுதலாக இருக்கும்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இறக்குமதி அதிகரிப்பதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டாலரில் விலை செலுத்த வேண்டியிருப்பதால் இருப்பில் உள்ள அந்நிய நாணயம், அதாவது, டாலர் அளவு குறைகிறது. இதனால் ரூபாய் மதிப்பு விழுகிறது.


இருப்பில் உள்ள டாலர் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்றால் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அல்லது இறக்குமதியை குறைக்க வேண்டும். இந்த இரண்டும் நடக்க வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலும் சில பொருட்களை இறக்குமதிதான் செய்தாக வேண்டும்.


எண்ணெய் இறக்குமதி

நாட்டின் தேவைக்கான எண்ணெய் பொருட்களை அவசியம் இறக்குமதி செய்தாக வேண்டும். எண்ணெய்யை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அதற்கான பணத்தை டாலராக தருகிறோம். அப்படித் தரும்போது நாட்டின் டாலர் இருப்பு குறைகிறது. அப்படியானால் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்ல முடியாது. நமக்கு எண்ணெய் தேவை. இறக்குமதி செய்தாக வேண்டும். அதற்கான அதீத செலவைக் குறைக்க வழிகாண வேண்டும்.


ஈரான் அணுஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளது என்று குற்றம் சாட்டி, அமெரிக்கக் கட்டளைக்கேற்ப, 2010ல் சர்வதேச அணுசக்தி மய்யத்தில், ஈரானுக்கு எதிராக இந்தியா உட்பட்ட நாடுகள் வாக்களித்த பின்னணியில் ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்த எண்ணெய் அளவு பெருமளவு குறைந்துவிட்டது. இந்தியாவுக்கு மட்டுமன்றி, ஈரானுக்கும் இது நட்டம். எண்ணெய் பொருட்களுக்கு இந்தியா இறக்குமதியை நம்பியிருப்பது போல் ஈரான் பல்விதமான பொருட்களுக்கு இறக்குமதியை நம்பியிருக்கிறது. ஈரான் கிழக் காசிய நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறது. 2013ன் முதல் காலாண்டில் அதன் 75% வர்த்தகம் இந்த நாடுகளுடன்தான்.


இந்தியா ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யின் அளவை அதிகரித்தால் தன்னிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான பணத்தை டாலராக அல்லாமல் ரூபாயாகவே பெற்றுக் கொள்வதாகவும் எரிவாயு குழாயை பாகிஸ்தான் வழியாக அல்லாமல் வழி மாற்றித் தருவதாகவும் ஈரான்  சொல்கிறது. எண்ணெய் விலையை இன்னும்  குறைப்பதாகவும், ஈரானில் உள்ள இரண்டு எரி வாயு வயல்களில் எரிவாயு எடுப்பதில் செலவை பங்கிட்டுக் கொள்ளும் ஏற்பாடு செய்வதாகவும் சொல்கிறது.


ஈரானுக்கு தர வேண்டிய ரூபாய், கொல்கத்தாவில் யூகோ வங்கியில் உள்ள ஈரான் கணக்கில் செலுத்தப்படும். உணவுப் பொருட்கள், நுகர்வுப் பொருட்கள், மருந்துப் பொருட் கள், மருத்துவப் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள் ஆகியவற்றை இந்தியாவில் இருந்து வாங்கிக் கொள்கிற ஈரான், அந்த இந்திய ரூபாயை இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு செலுத்துகிறது. இதனால் அந்நியச் செலாவணி இருப்பில் இருந்து டாலர் செலவழிப்பது கட்டுப்படுத்தப்பட்டு நடப்பு கணக்கு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.


இப்போது நெருக்கடி மென்னியைப் பிடிக்கும்போதுதான், அய்க்கிய நாடுகள் விதிகளுக்கு உட்பட்டு, ஈரானுடன் வர்த்தகம் செய்வது பற்றி யோசிப்பதாக சிதம்பரம் ஹீனமாக சொல்லத் துவங்கியிருக்கிறார்.


ஈரானில் கச்சா எண்ணெய் வாங்குவது மட்டுமே மொத்த பிரச்சனைக்கு தீர்வாகி விடாது. ரூபாய் மதிப்பு வீழ்ந்திருப்பதால் எண்ணெய் இறக்குமதிக்குத் தர வேண்டிய பணம் அதிகரிக்கும். இது நடப்புக் கணக்குப் பற்றாக் குறையை அதிகரிக்கவே செய்யும். இந்த அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தி மேம்படுத்தப்பட வேண்டும்.


உள்நாட்டில் தேவைக்கான பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனமான அய்டிஅய்யை மூடிவிட்டு சீன தொலைபேசி உபகரணங்களை இறக்குமதி செய்கிறோம். நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய மின்னணு உபகரணங் களை பெருமளவில் இறக்குமதி செய்கிறோம். நமக்கு மிகவும் அவசியமான வெங்காயத்தை ஏற்றுமதி செய்துவிட்டு தேவையே இல்லாத தங்கத்தை இறக்குமதி செய்கிறோம்.


உள்நாட்டு உற்பத்தி

முதலீட்டுக்கும் உற்பத்திக்கும் இருக்கும் தடைகளை அகற்றுவது அனைத்துக்கும் தீர்வு என்று, உடனடி தேவை உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுப்பது என்று முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும் மிகச் சரியாகவே குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த பரிந்துரை, முடங்கிக் கிடக்கும் திட்டங்களை நிறைவேற்றுவது, புதிய தொழில்கள் துவங்கப்படுவது  ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமான முதலீட்டாளர்கள் நம்பிக்கையை உறுதி செய்வதில் அழுத்தம் வைக்கிறது. அதாவது, தளர்த்தப்பட்ட விதிகள், முதலீட்டாளர்கள் விருப்பம்போல் தொழில் தொடங்க நிலம், கச்சாப்பொருள், மனித உழைப்பு இன்ன பிறவற்றை தங்கு தடையின்றி வழங்குவதை அரசாங்கம் உத்தரவாதப்படுத்துவது ஆகியவற்றில் அழுத்தம் வைக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்கை வளங்களை விருப்பம் போல் கொள்ளயடிக்க அனுமதிப்பதாக இது முடியும்.

பிரதமர் தலைமையிலான முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவைச்; குழு மின்உற்பத்தி, சாலை, துறைமுகம், சிமென்ட் ஆகியவற்றில், 2 லட்சம் கோடி மதிப்பிலான 36 உள்கட்டுமான திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்களில் 28 திட்டங்கள் மின்உற்பத்தி தொடர்பானவை. வனம், சுற்றுச் சூழல் போன்ற அம்சங்களில் ஒப்புதல் கிடைக் காமல் நிற்பவை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மக்கள் வாழ்வுரிமையைப் பறிப் பவை என்பதால் மக்கள் எதிர்ப்புக்கு ஆளானவை.

ரூ.82,000 கோடி மதிப்பிலான 18 திட்டங்கள் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் எரிபொருள் வழங்கல் உடன்பாடு கையொப்பமாகாதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவை. இந்த உடன்பாடுகள், பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி வழங்குவது தொடர்பானவை.


மத்திய பிரதேசத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சாசன் அல்ட்ரா மெகா பவர் ப்ராஜக்ட் மற்றும் ஜார்க்கண்டில் எஸ்ஸôர் நிறுவனத்தின் டோடி மின்உற்பத்தி நிலையம் ஆகியவை தனிபயன்பாட்டுக்கான சுரங்கங்கள் அமைத்துக் கொள்வதில் வனத்துறை ஒப்புதல் பெறுவது பற்றியும் அமைச்சரவைக் குழு விவாதித்துள்ளது.


நிதித்துறையிலும் நிலவர்த்தகத்திலும் முதலீடு குவிந்ததை வேடிக்கைப் பார்த்த சிதம் பரமும் மன்மோகனும் இப்போது எடுத்துள்ள முடிவு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை நாள்போக்கில் சரிபடுத்தலாம். ஆனால், அதன் போக்கில் கோடிக்கணக்கான இந்திய சாமான்ய மக்கள் வளர்ச்சிப் போக்கில் இருந்து வெளியே நிறுத்தப்படுவதை அதிகரிக்கும். விளைவாக சமூகப் பதட்டம் அதிகரிக்கும்.


கடந்த 5 ஆண்டுகளில் விவசாயமல்லாத அமைப்புசாரா துறைகளில் வேலை வாய்ப்பு 23 லட்சம் அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு 0.2% குறைவு. இதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு 5% வளர்ந்துள்ளது. இந்தக் கணக்குப்படி, கிட்டத்தட்ட 3 கோடியே 40 லட்சம் வேலை வாய்ப்புக்கள் குறைந்துள்ளன. அதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு என்ற கோணத்தில் இருந்து முன்வைக்கப்படும் இந்தக் கருத்து கட்டுப்பாடுகள் அகற்றுவதே இதற்கும் தீர்வு என்று வாதிடுகிறது. வந்த 23 லட்சம் வேலைவாய்ப்போ, அல்லது வராமல் போன 3 கோடி வேலைவாய்ப்போ எந்தவிதமான வேலைவாய்ப்பு என்பது முக்கியமான கேள்வி. துரத்தும் உரிமை இருந்தால்தான் தொழில் நடத்துபவர்கள் அமர்த்துவார்கள் என்றால் இதுவும் பதட்டத்தில்தான் முடியும்.
இந்தியாவின் 80% வெளிநாட்டு கடன் தனியார் கார்ப்பரேட்டுகளுடையவை. வெறும் 10 தொழில் நிறுவனங்கள் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் அந்நியக் கடன் பெற்றுள்ளன. இதை திரும்பச் செலுத்த முடியாமல் போனால் ஒவ்வோர் ஆண்டும் இது அதிகரித்துக் குவிந்து திவால் நிலைமைகளைக் கூட கொண்டு வரும். இது தவிர வாராக் கடன்கள் என்று வங்கிகளில் ரூ.4 லட்சம் கோடி பாக்கி வைத்திருக்கின்றன பெரிய தொழில் நிறுவனங்கள். இவ்வளவு வசதிகள் இருந்தும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தியை, ஏற்றுமதிக்கான உற்பத்தியை செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம். இப்போது நெருக்கடி நிலைமையை பயன்படுத்தி அடுத்தச் சுற்றுக் கொள்ளைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகின்றன.


இந்திய ஏற்றுமதி நிலைமைகள்

கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. வருடாந்திர வளர்ச்சி விகிதம் 20%. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் மீதான சார்பு 1999 -2000த்தில் 60% என இருந்தது, இப்போது 40% என குறைந்துள்ளது. 2013 ஜனவரியில் நடந்த ஏற்றுமதி மதிப்பு 25.58 பில்லியன் டாலர். அப்போது ரூபாய் மதிப்பு 53.66. ஜ÷லையில் ஏற்றுமதி மதிப்பு 25.83 பில்லியன் டாலர். ரூபாய் மதிப்பு 60.86. இந்திய ஏற்றுமதியில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தின் பங்கு 18% முதல் 19%. ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டிருந்தாலும் அதை விடக் கூடுதலாக இறக்குமதி அதிகரிப்பது நிலைமை சீரடைவதை தடுக்கிறது.

 ஆனால், இந்தியா செய்கிற மொத்த ஏற்றுமதி உலகில் நடக்கிற ஏற்றுமதிகளுடன் ஒப்பிடுகையில் வெறும் 1.36% மட்டுமே. ஆடை ஏற்றுமதியில் பெரிய அளவில் அந்நியச் செலாவணி நாட்டுக்கு வந்தது. அந்தத் துறையில் இப்போது இந்தியாவை விட பங்களாதேஷ் இரண்டு முதல் மூன்று மடங்கு முன் சென்றுவிட்டது. ரூபாய் மதிப்பு வீழ்ந்ததால் ஆடை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் தள்ளுபடி தர வேண்டியுள்ளது.
செயற்கை கற்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி, தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை உயர்வால் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் அந்த அரங்கிலும் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஏற்றுமதியில் நிலவுகிற கடுமையான சர்வதேச போட்டி என்ற பொருளிலும் இந்திய ஏற்றுமதி ஒரு கட்டத்துக்கு மேல் செல்வதில் சிக்கல் உள்ளது.


வட்டி விகிதம் அதிகரிப்பு

முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்து தப்பிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதை மேலும் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளும் என்பது மார்க்சிய அரிச்சுவடி.. ரிசர்வ் வங்கி அவ்வப்போது எடுக்கும் வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கை பண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதற்கு நேரெதிரான விளைவையே உருவாக்கியுள்ளது. இந்தியச் சந்தையின் பலவீனத்தையே வட்டி விகித அதிகரிப்பு காட்டுவதால் அந்நிய முதலீட்டாளர்கள் எந்த வேகத்தில் உள்ளே நுழைந்தனரோ அதே வேகத்தில் வெளியேறு கின்றனர். 2013 முதல் காலாண்டில் நாட்டுக்குள் வந்த அந்நிய நேரடி முதலீடு 5.39 பில்லியன் டாலர். 2013 ஏப்ரல் முதல் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் ஈக்விடி சந்தையில் இருந்து வெளியே எடுத்துச் சென்ற பணம் 5.7 பில்லியன் டாலர்.

சாமான்ய மக்களுக்கு வட்டிச்சுமை அதிகரிப்பது இதில் உடன் விளைவு. சாமான்ய மக்கள் தாண்டி சிறு முதலீட்டாளர்கள், பெரிய நிறுவனங்கள் கூட வட்டிச் சுமையை சமாளிக்க முடியாமல் உற்பத்தியை முடக்குவது என்ற நிலை ஏற்பட்டு ஏற்கனவே அதிகரித்து இருக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து அந்நிய நாணய இருப்பு குறைய, அதைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பு வீழ்கிறது. இது ஒரு விஷச்சுற்று. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிற உலகில் மூலதன ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது அப்படி தோற்றம் தருவது கூட நல்லதில்லை, அது நம்பிக்கையின்மையை உருவாக்கி முதலீட்டை வெளியேற்றிவிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மிகப் பிரம்மாண்டமான தொகையை பணமாக இருப்பில் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவ னங்களும் நெருக்கடி நிலைமைகளை பயன்படுத்திக் கொண்டு தாங்கள் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியைக் குறைக்க வேண்டும் என்று சொல்லத் துவங்கி விடுகின்றன.

சிதம்பர நடவடிக்கைகள்

நிலைமைகள் இப்படி இருக்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்க சிதம்பரம் அய்ந்து நடவடிக்கைகள் முன்வைக்கிறார்: அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் அந்நியக் கடன்கள் பெறுவது, இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வ முடைய சொத்து மற்றும் ஓய்வூதிய நிதியை ஊக்குவிப்பது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் நிதி திரட்டுவது, வெளிநாடுகளில் இந்திய நிதி நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கான விதிகளை தளர்த்துவது. இந்த நடவடிக்கைகள் எடுத்தால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட அந்நியச் செலாவணி இருப்பில் கைவைக்க வேண்டியதில்லை என்கிறார்.

சிதம்பரம் முன்வைக்கிற நடவடிக்கைகள் அனைத்தும் அந்நியக் கொள்ளைக்கு நாட்டை திறந்து விடுவது, இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களுக்கு அடகு வைப்பது என்ற நவதாராளவாத நாசகரக் கொள்கைகளையே உறுதிப்படுத்தும். பொதுச் செலவினங்களைக்  குறைப்பது, சர்வதேச அளவில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது போன்ற சில துணிச்சலான நடவடிக்கைகள் வேண்டும் என்றும் சில கார்ப்பரேட் ஆதரவுக் குரல்கள் எழுகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 5% குறைந்திருக்கிறது. உண்மைச் சந்தையை ஊதிக்காட்ட ஊகச் சந்தையை பயன்படுத்தியதுதான் பிரச்சனை. இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்த அந்நிய முதலீட்டாளர்கள் காலாகாலத்துக்கும் அதைச் செய்து கொண்டிருப்பார்கள் என்று மெத்தனம் காட்டி உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்காத மன்மோகன், சிதம்பரம், மான்டெக் கூட்டுதான் குற்றவாளி.


பொருளாதாரத்தின் உருட்டித்
திரட்டப்பட்ட வடிவமே அரசியல்


அடுத்த நாட்டுப் பிரச்சனையில் தலையிடுவதில் பெருமகிழ்ச்சி அடையும் அய்க்கிய அமெரிக்கா இன்னும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறது. அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனங்களுக்கு விதிகள், சலுகைக் குறைப்புகள் என்று ஒபாமா சமீபத்தில் அறிவித்தார்.


மே 31 2013 அன்றைய நிலவரப்படி நாட்டில் வசூல் செய்ய வேண்டிய வரி பாக்கி ரூ.5,82,834 கோடி. நீதிமன்றத் தடைகள், வழக்குகள், எங்குள்ளதென்றே தெரியாத சொத்துக் கள் என இந்தத் தொகை முடங்கியுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள கறுப்புப் பணம், கணக்கில் வராத சொத்துக்கள் பற்றி எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கணக்கு சொல்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்படுகிற வரிச்சலுகைகள் ரூ.5 லட்சம் கோடி. இந்தப் பணமெல்லாம் பொதுவில் வர வேண்டும். புழங்க வேண்டும். உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் உழைப்புக்கு உரிய விலை இல்லை என்றாலும் வாழ்வதற்கான விலையாவது தரப்பட வேண்டும். இந்த நிபந்தனை நிறைவேறாதென்றால் உற்பத்தி தானாக நடந்துவிடாது. அது நெருக்கடிக்கு புதிய கிளை நெருக்கடியைத்தான் கொண்டு வரும். பொருளாதாரம் என்றால் வேண்டலும் அளிப்பும் இருக்க வேண்டும். இன்றைய நிலைமைகளில் வேண்டலும் இல்லை. அளிப்பும் இல்லை. அதனால் பெரும்பான்மையினர்க்கான உற்பத்தியே நின்று மிகச்சிறிய பிரிவினர்க்கான உற்பத்தி, அதிலும் சேவைக்கு கூடுதல் அழுத்தம் என்று பொருளுற்பத்தியே முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நெருக்கடியைத்தான் கொண்டுவரும். இது சாமான்ய அறிவுக்குப் படுகிற பொருளாதாரம். இதற்கேற்ப நடந்து கொள்ள சிதம்பரத்துக்கு அய்க்கிய அமெரிக்கக் கட்டளை வேண்டும். சந்தைக்கான உற்பத்திக்குப் பதில் தேவைக்கான உற்பத்தி வேண்டும். இது மார்க்சிய பொருளாதாரம். இப்படிச் செய்ய நாட்டு மக்கள் கட்டளையிட வேண்டும்.

Search