COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 15, 2013

கட்சியை அதன் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல கத்துக்குட்டித்தனத்துக்கும் தற்காலிகவாதத்திற்கும் விடை கொடுப்போம்! கட்சி முழுவதும் ஆழமான கடினமான புரட்சிகர வேலைநடையை பரவச் செய்வோம்!

பகுதி 2

அன்றும் இன்றும்

1902 ரஷ்யா வேறு, 2013 இந்தியா வேறு தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 1902 வேறு 2013 வேறு, இந்தியா வேறு ரஷ்யா வேறு எனச் சொல்வதில் எந்த மேலான அறிவியல் கண்டுபிடிப்பும், நிச்சயம் இல்லை.
அதே நேரம் 1848ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மார்க்சி யத்தின் வர்க்கப் போராட்டம் முதலாளித்துவ நெருக்கடி தொடர்பான கருத்துக்கள் இப்போ தும் பொருத்தமானவையாகவே உள்ளன.

நிதி மூலதன சந்நிதானமான வால்ஸ்ட்ரீட் பெரும் அதிர்வுகளுக்கு ஆளானபோது, 2008ன் இலையுதிர் காலத்தில் டைம்ஸ் ஏடு ஓங்கிக் குரல் எழுப்பியது: “அவர் திரும்ப வந்து விட்டார்”  அவர் என டைம்ஸ் குறிப்பிட்டது மார்க்சைத்தான். 2008ல் நியுயார்க்கிற்கு மார்க்ஸ் திரும்பும்போது, 2013ல் இந்தியாவிற்கு லெனின் திரும்ப முடியாதா?

மார்க்ஸ் லெனின் மாவோ போன்றோர் சொன்ன விசயங்களை அந்த அந்த நாட்டு, அந்த அந்த கால சூழலோடு நிலைமைகளோடு உயிரோட்டமாகப் பொருத்த வேண்டும். 1902 ரஷ்ய மற்றும் 2013 இந்தியச் சூழலில் நிலைமைகளில் என்ன வேறுபாடுகள் என்பவற்றை, நிச்சயம் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.

அய்ரோப்பியக் கண்டத்தின் பெரிய நாடுகள் எனக் காணும்போது, ரஷ்யாவில், முதலாளித்துவம் கடைசியாகத் தான் கால் பதித்தது. 1861ல் ஜார் அரசு பண்ணை அடிமை முறையை ஒழிக்க, முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பாதை திறக்கப்பட்டது. 1890களின் இறுதிப் பகுதியில் தொழிலாளர் வர்க்க எண்ணிக்கையும் தொழிலாளர் போராட்டங்களும் பாய்ச்சலில் முன்னேறின. 1898லேயே முறைப்படி அமைப்பு ரீதியாக, பாட்டாளி வர்க்க இயக்கத்தையும் சோசலிசத்தையும் இணைக்கும் முயற்சி துவங்கியது. 1902லிருந்து 1917 நவம்பர் 7 வரை, அதாவது ரஷ்யாவில் சோசலிசம் வெல்லும் வரை, சோசலிச முகாமில், பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரமான அறுதியிடலுக்கும் முதலாளித்துவத்திற்கு வால்பிடிப்பதற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக நடந்தது.

•    ரஷ்யாவில், கம்யூனிஸ்ட் கட்சி, பிரதானமாக தொழிலாளர்கள் மத்தியிலும், சீருடை அணிந்த விவசாயிகளான போர் வீரர்கள் மத்தியிலுமே பணியாற்றியது. போர் வீரர்கள் மத்தியிலான பணி, முதல் உலகப் போருக்குப் பின்பே தீவிரமடைந்தது.

•    ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி பெறும் வரை அனைவர்க்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவவில்லை.

•    ரஷ்யாவில் தோழர் லெனின் தோழர் ஸ்டாலின் போன்ற புரட்சியாளர்கள், முதன் மையாக தலைமறைவு நிலைமைகளிலேயே செயலாற்றினர்.

•    ரஷ்யாவில், கட்சிகளிடையிலான போட்டி என்பது, அங்கிருந்த நாடாளுமன்ற ஜனநாயக முறையின் முடக்கப்பட்ட குறுகிய நிலைக்கேற்பவே இருந்தது. ஆட்டக்காரர்கள், சுருக்கமாகச் சொன்னால், முதலாளிகளின் கேடட் கட்சி, பாட்டாளி வர்க்கத்தின் சமூக ஜனநாயகக் கட்சி (போல்ஷ்விக்), குட்டி முதலாளித்துவக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (மென்ஷ்விக்) மற்றும் சோசலிச புரட்சியாளர்கள் என்ற நான்கு கட்சிகளாகவே இருந்தனர்.

•    தொழிலாளர் வர்க்கம் மத்தியில், சமூக ஜனநாயகக் கட்சியே செல்வாக்கு செலுத்தியது. 1917 நவம்பர் புரட்சியை ஒட்டியே போல்ஷ்விக் செல்வாக்கு பெரும்பான்மை நிலையைப் பெற்றது.

•    தொழிலாளர் இயக்கத்தை சோசலிசத்தை நோக்கி உணர்வுப்  பூர்வமாகச் செலுத் தாமல், முதலாளித்துவத்திற்கு வால் பிடிக்கிற, தொழிலாளர் இயக்கத்தின் மீது தன்னெழுச்சி யாக முதலாளித்துவக் கருத்துக்கள் செல்வாக்குப் பெற வழிவகுப்பவர்களாக, பொரு ளாதாரவாதிகளாக, மென்ஷ்விக்குகள் விளங்கினார்கள்.

•    தலைமறைவுக் கட்சி, தொழில்முறைப் புரட்சியாளர்கள் அமைப்பு என்ற கருவை மய்யப்படுத்தி, அதன் தலைமையில் பாட்டாளிகளையும், பாட்டாளி வர்க்கத்தின்  தலைமை யில், இதர ஒடுக்கப்படுகிற சுரண்டப்படுகிற வர்க்கங்களையும் திரட்ட வேண்டிய கடமை, கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது

இந்திய நிலைமைகளில்
என்ன மாற்றங்கள் உள்ளன
    
•    இந்தியாவில், அனைவர்க்கும் வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகமுறை, 1950 முதலே செயல்பட்டு வருகிறது. (இது உண்மையில் முதலாளித்துவ சர்வாதிகாரம் தான் என்பது வேறு விசயம்)  
                             
•    இந்தியாவில், கட்சிகளின் செல்வாக்கு எனக் காணும்போது, முதலாளித்துவ அரசியல் கட்சிகளே, கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் காட்டிலும் ஆகக்கூடுதலான செல்வாக்கு பெற்றுள் ளன. (கம்யூனிஸ்ட் இயக்கம் என்பதை மிகப் பரந்த பொதுப் பொருளிலேயே குறிப்பிடு கிறோம்)

•    நாடாளுமன்ற ஜனநாயகம், உழைக்கும் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள், நகர்ப்புற கிராமப்புற மேட்டுக்குடியினர் நலன்களைக் காக்கும் ஆட்சி நடத்த, மத்தியிலும் மாநிலங்களிலும், முதலாளித்துவக் கட்சிகளுக்கு வாய்ப்பு தருகிறது.

•    இ.க.க, இக.க (மா), இக.க. (மாலெ) ஆகிய இயக்கங்கள் அனைத்துமே மிகப் பெரும் அளவுக்கு கிராமப்புறங்களிலும் விவசாய சமூகம் மத்தியிலும் பணியாற்றுகின்றன. இவற்றின் செல்வாக்கு ஆகக் கூடுதலான ஆலைப் பாட்டாளிகளின் மத்தியில் தான் உள்ளது என்று சொல்ல முடியாது.

•    நவதாராளவாத நிகழ்ச்சி நிரல் துவங்கிய பிறகு, அதாவது, உலகமய தனியார்மய தாராளமயக் கொள்கைகள் வேகம் பெற்ற பிறகு, முதலாளித்துவ மறுகட்டமைப்பு, தீவிரம் அடைந்துள்ளது. லாப விகிதங்களைப் பாதுகாக்க, உயர்த்திக் கொள்ள, அமைப்பாக்கப்பட்ட துறை அமைப்புக் குலைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதி, நிரந்தரமற்ற ஒப்பந்த தற்காலிக பயிற்சித் தொழிலாளர்களாகவும் பொருளுற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அமைப்புசாரா தொழிலாளர்களாகவுமே உள்ளனர். ஆக, இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் ஏகப் பெரும்பான்மை, பாட்டாளி வர்க்கத்தின் துவக்க நிலை வர்க்க அமைப்பான தொழிற் சங்கங்களில் கூட, இடம் பெறவில்லை.

மாறுபட்ட நிலைமைகள் கோரும்
மாற்றங்கள் என்ன?

•    தொழில்முறைப் புரட்சியாளர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட இரகசியக் கட்சி என்பது இந்திய நிலைமைகளுக்குப் பொருத்தமானதல்ல. இங்கு, தேவைப்படுவது, ஒரு வெகுமக்கள் போல்ஷ்விக் கட்சியே. இன்றைய நிலைமைகளில் அது வெளிப்படையாக முதலாளித்துவ அரசியலோடு, எங்கும் எதிலும் போட்டியிடுவதாகவே இருந்தாக வேண்டும். கட்சியில் பெருமளவுக்கு பகுதிநேர ஊழியர்களே செயல் வீரர்களே உறுப்பினர்களாக இருப்பார்கள்.

“நேரடியான, பகிரங்கமான, உண்மையிலேயே மக்கள் திரள் தன்மை கொண்ட உண்மையிலேயே புரட்சிகரமான போராட்டம் நடத்த நிலைமைகள் இல்லாதபோதும், புரட்சிகரமான செயல்முறைகளுக்கான அவசியத்தை உடனடியாய் உணர முடியாத மக்கள் மத்தியில், ஒரு புரட்சிகரமல்லாத சூழலில், புரட்சிகரமல்லாத அமைப்புக்களில் ஏன் பிற்போக்கு அமைப்புக்களிலும் கூட, புரட்சியின் நலன்களை, (பிரச்சாரம்  கிளர்ச்சி அமைப்பாக்குதல் மூலம் ) முன் நிறுத்துவது தான், புரட்சியாளர்களாய் இருப்பதுதான், மிக மிகக் கடினமானது, மிக மிக மதிப்பு வாய்ந்ததாகும்.” ஆம், லெனின் இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக்கோளாறு நூலில் சொல்வது போல், இந்தியாவில் புரட்சியாளர்கள், சக்திகளின் சமநிலையை மாற்ற, முதலாளித் துவ அரசியலை பாட்டாளி வர்க்க அரசியல் கொண்டு வெல்ல, நீண்டகாலத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

•    வேகமாகவும் திரள் திரளாகவும் போராட்டங்களில் தாமே எழுபவர்கள் மத்தியில், அரசியல் பணியாற்றுவது என்பதோடு கூட, பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை, நிரந்தரமற்ற தொழிலாளர்களை, தொழிற்சங்கமாக்குவது - வர்க்கப் போராட்ட எல்லைகளுக்குள் கொண்டு வருவது, உழைக்கும் மக்களை அவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளிலேயே அமைப்பாக்குவது, இந்திய நிலைமைகளில் ஒரு மிகவும் முக்கிய அரசியல் கடமையாகும். உணர்வுபூர்வமான பணியாகும். இருக்கின்ற, கிடைத்துள்ள சமூக அடித்தளத்தை, போராட்டங்களில் நம் பின்னால் வந்த மக்களை, சமூக மாற்ற அரசியலுக்கு ஆளாக்குவது போல், நமக்கென, ஒரு நிலையாக நீடிக்கும் சமூக அடித்தளத்தையும், அதாவது தொழிற்சங்கம் போன்ற அமைப்புக்களை உருவாக்குவதும் மிகவும் முக்கிய அரசியல் பணிகளே.

அங்கேயும் இங்கேயும் பொதுவானவை எவை?

•    தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது புரட்சியாளர்களின் அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சியும் தேவை என்பது பொதுவானது.

•    ‘இயக்கம் தான் எல்லாம் இறுதி லட்சியம் ஏதுமில்லை’ எனத் தன்னெழுச்சிக்குத் தலை வணங்குவதற்கு மாறாக, நிகழ்கால இயக்கத்தில் போராட்டத்தில் எதிர்காலக் கடமைகளை நுழைக்கும் கம்யூனிஸ்ட் பணி பொதுவானது.

•    “பக்குவமின்மை” “கத்துக்குட்டித்தனம்” ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவது, தன்னெழுச்சிக்கு எதிராகப் போராடுவது பொதுவானது. (கத்துக்குட்டித்தனம் என்பது தேர்ச்சி நயமின்மை என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது.) என்ன செய்ய வேண்டும் நூலின் பாகம் 4 மற்றும் 5 அமைப்பு விவகாரங்கள் பற்றிப் பேசுகின்றன.

•    “ ‘பக்குவமின்மை’ என்பது நடைமுறை வழிப்பட்ட பயிற்சியின்மைக்கும் மேலான ஒன்றைத் தழுவி நிற்கிறது. அது பொதுவாகப் புரட்சிப் பணியின் குறுகிய பரப்பெல்லையைக் குறிக்கிறது.; இப்படிப்பட்ட குறுகிய நடவடிக்கையின் அடிப்படையில் புரட்சியாளர்களின் ஒரு நல்ல அமைப்பைக் கட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுவதை அது குறிக்கிறது; கடைசியாக, முக்கியமான விசயமும் இதுதான், இந்தக் குறுகிய தன்மையை நியாயப்படுத்தி, அதை ஒரு தனித் ‘தத்துவமாக’ உயர்த்துகிற முயற்சிகளை, அதாவது, இந்தப் பிரச்சனையிலும் தன்னியல்புக்கு அடிபணிவதை அது குறிக்கிறது.” “ நமது பக்குவமின்மை காரணமாக, நாம், ரஷ்யாவில் புரட்சியாளர்களின் கவுரவத்தைத் தாழ்த்தி இருக்கிறோம். அமைப்பு விசயத்தில் நாம் செய்திருக்கும் படுமோசமான கேடு இதுவே. தத்துவ சம்பந்தமான பிரச்சனைகளில் உண்மையின்மை, உறுதியின்மை, குறுகிய பார்வை, தன் சொந்த சோம்பலுக்கு மக்களின் தன்னியல்பைச் சாக்காகச் சொல்வது; மக்களின் தலைவராய் இருப்பதை விட தொழிற்சங்க செயலாளராகத் தெரிவது; எதிரிகளும் கூட மதிக்கத்தக்க விரிவான துணிச்சலான திட்டம் உருவாக்கி அளிக்கத் திறனின்மை; தானே தொழிலாக மேற்கொண்டுள்ள கலையில்- அரசியல் போலீசை எதிர்த்துப் போராடும் கலையில்-அனுபவமின்மை, நயமின்மை; இப்படி உள்ள ஒரு நபர், புரட்சியாளன் அல்ல, படுமோசமான கத்துக் குட்டியே!”
புரட்சி நம்மிடமிருந்து முதலாவதாகக் கோருவது, கிளர்ச்சி செய்வதில் அனுபவம், ஒவ்வொரு கண்டனத்தையும் (கம்யூனிச வழியில்) ஆதரிக்கும் திறமை, தன்னியல்பான இயக்கத்தை நண்பர்களின் தவறுகளிலிருந்தும் எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாத்த படியே வழி நடத்திச் செல்லும் திறமை ஆகியவையே.”

“சீமான்களே, குழுக்களில் பல வகை உண்டு! உண்மை, ‘தேர்ச்சி நயமற்றவர்களைக்’ கொண்டிருக்கும் குழுக்கள் தம் தேர்ச்சிநய மின்மையை உணர்ந்து அதைக் கைவிடாத வரை அரசியல் பணிகளைச் சமாளிக்க முடியாது தான். இது தவிர, இந்த தேர்ச்சி நயமற்றவர்கள், தம் பக்குவமின்மையிலேயே மோகித்துப் போய் விட்டால், ‘நடைமுறை வழிப்பட்ட’ என்ற சொற்களைக் கொட்டை எழுத்தில் தான் போடுவோம் என்று பிடிவாதம் செய்தால், நடைமுறை வழிப்பட்டதாய் இருப்பதற்கு ஒருவருடைய பணிகள் மக்களின் மிகப்பிற்பட்ட பகுதிகளின் அறிவின் தரத்திற்கு தாழ்த்தப்பட வேண்டியதே என்று நினைத்தால், அவர்கள் கதி மோட்சமில்லாத தேர்ச்சி நயமற்றவர்களேயாவர், நிச்சயமாய், அவர்களால், எந்த அரசியல் பணிகளையும் பொதுவாகவே சமாளிக்க முடியாதுதான்.”லெனின் மொழியில், பக்குவமின்மை, கத்துக்குட்டித்தனம், குறுகிய அரசியல் அமைப்பு பணிகளின் பரப்பெல்லை, தன்இயல்புக்கு அடிபணிவது ஆகியவை பற்றியும், இவற்றுக்குள்ள பரஸ்பர தொடர்பு பற்றியும் பார்த்தோம். இவை இந்திய நிலைமைகளில் எப்படி பொருந்துகின்றன என்பதை அடுத்த இதழ்களில் காணலாம்.

Search