COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 15, 2013

இளம் அரசியல் தொண்டர்களுக்கு - பகத்சிங்

அன்பிற்குரிய தோழர்களே.....

........தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு நேர்மையான புரட்சிகரத் தொண்டர் கள்  மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையினையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

 உணர்ச்சிவயப்படுதலை ஒதுக்கித் தள்ளுங்கள். நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய - பொருளாதார சூழ்நிலை களின் மூலமாகவே கொண்டு வரப்படும். இந்த சூழ்நிலைகளால் கொடுக்கப்படும் எந்த வகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்றுதிரட்டுவதும் மிகவும் கடினமானதொரு பணி. அப்பணி, புரட்சிகர தொண் டர்களிடம் இருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத் துகிறேன்.

 நீங்கள் ஒரு வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்பஸ்தராகவோ இருந்தால் தயவுசெய்து நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற் பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறைய பேர் இருக்கின்றனர்.

அவர்கள் பயனற்றவர்கள். நமக்குத் தேவையானவர்கள் - புரட்சியையே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேர புரட்சியாளர்களே. புரட்சியைத் தவிர வேறெந்த இலட்சியமோ வாழ்நாட்பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்......


.......கட்சிக்குத் தேவைப்படுகின்ற தொண்டர்களை இளைஞர் இயக்கத்தின் மூலமாக மட்டுமே கொண்டு வர முடியும். ஆகவே இளைஞர் இயக்கத்தையே நமது செயல் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம். இளைஞர் இயக்கமானது படிப்பு வட்டங்களுக்கும் அரசியல் வகுப்புகளுக்கும், துண்டு பிரசுரங்கள், சிற்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே அரசியல் தொண்டர்களை புதிதாகச் சேர்ப்பதற்கும் அவர்களின் பயிற்சிக்குமான களமாகும்......


...........இத்திசைவழியில் நீங்கள் செயல்பாட்டைத் துவங்கினால் மிகவும் பொறுமை காக்க வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் தேவைப்படலாம். ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாத வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது.

முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும் விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும் வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும்  உங்களது தன்னம்பிக்கையை குலைத்து விடகூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக் கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகரமான மனநிலையைக் கொன்றுவிடக் கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமாக மீண்டு வர வேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.......


......புரட்சி நீடூழி வாழ்க!    

Search